தொடர்கள்
கவர் ஸ்டோரி
அப்பாவி உயிர்கள் - அமோனியா பயங்கரம் - ப. ஒப்பிலி

20260527073330359.jpeg

கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்டம் மஞ்சன்காரனை கிராமத்தில் செயல்படும் பீட்டர் அண்ட் பால் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் நடந்த அமோனியா வாயு கசிவில் இதுவரை பத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து தமிழக அரசின் தொழிற்சாலை ஆய்வு முறை சரியாக இயங்காததாலே ஏற்பட்டதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தொழிற்சாலை பாதுகாப்பு ஆய்வுகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அரசாணை வெளியிட்டு தொழிற்சாலை ஆய்வு முறையை (Tamil Nadu Central Inspection System) உருவாக்கியது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து உள்ளிட்ட தொழிற்சாலை விபத்துகளின் பின்னணியில், இந்த இணையதளம் பெரும்பாலும் செயல்படாத நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு தொழிலாளர் ஆய்வுத் துறையின் மத்திய ஆய்வு முறை (TN CIS) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான விவரங்கள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கவில்லை. ஆய்வுகள் எப்போது நடத்தப்பட்டது, எந்த தொழிற்சாலைகள் ஆய்வு செய்யப்பட்டன, விதிமீறல்கள் கண்டறியப்பட்டனவா, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன போன்ற தகவல்கள் இணையதளத்தில் வெளிப்படையாக இல்லை.

கடந்த 2020 அக்டோபரில் தொழில்துறை துறை வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் (Directorate of Industrial Safety and Health), தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தொழிலாளர் துறை மற்றும் கொதிகலன் இயக்ககம் ஆகியவற்றின் ஆய்வுகளை ஒருங்கிணைத்து TN CIS உருவாக்கப்பட்டது. ஆய்வு அட்டவணைகள், ஆய்வாளர்கள் ஒதுக்கீடு மற்றும் ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டது. மேலும், மாநில அளவிலான ஆய்வுக் குழு அமைத்து இந்த முறையை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டது.

ஆனால், தற்போது DISH இணையதளம் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் ஆய்வுகளின் சில அடிப்படை புள்ளி விவரங்களை மட்டுமே வழங்குகிறது. ஆய்வு அறிக்கைகள், விதிமீறல்கள் மற்றும் சரி செய்யப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழுமையான தகவல்கள் பொது மக்களுக்கு கிடைக்கவில்லை.

கர்நாடகாவின் தொழிற்சாலை ஆய்வு இணையதளம் போன்ற சில மாநிலங்கள் ஆய்வு செய்யப்பட்ட தொழிற்சாலைகளின் பெயர்கள், ஆய்வு நிலை, ஆபத்து வகைகள் மற்றும் அறிக்கைகள் உள்ளிட்ட தகவல்களை வெளிப்படையாக வெளியிடுகின்றன. மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களிலும் இது போன்ற அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன.

மஞ்சக்காரனையில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் ஒடிசா, அசாம், ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் இருந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அபாயகரமான ரசாயனங்களை கையாளும் தொழிற்சாலைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் தினசரி கண்காணிப்பு மேற்கொண்டு, தலைமையகத்திற்கு அறிக்கைகள் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலை பாதுகாப்பு ஆய்வுகள் வெளிப்படையாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்பட்டிருந்தால், இதுபோன்ற விபத்துகளை தவிர்த்திருக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.