
சங்கத்தமிழ் இலக்கியத்தில் குறுந்தொகைக்கு மிக முக்கியமான இடமுண்டு.
மனித உணர்வுகளை, பிரமிப்பூட்டும் உவமைகளால் கோர்த்து இயற்றப்பட்ட பாடல்கள் நிறைந்தது குறுந்தொகை.
அந்நாளைய வாழ்க்கைக்கு வெகுஅருகாமையில் இருந்து வர்ணித்தது போல் அமைந்தவை அவை . அக உணர்வுகளை மிக நுணுக்கமாக படம் பிடித்த பாடல்கள்.
பாடல்கள் நான்கு முதல் எட்டு அடிகளில் அமைந்திருப்பதால், இந்தத் தொகுப்புக்கு குறுந்தொகை எனப் பெயர் வந்தது. சில பாடல்களை இயற்றிய புலவர்களின் பெயர் அறியப்படாததால், அந்தப் பாடலில் உள்ள ஒரு முக்கிய வாக்கியத்தை அல்லது சொல்லை புலவர் பெயராக இட்டு வழங்கும் மரபு அமைந்தது.
இன்றைய பாடலை இயற்றியவர் வெண்கொற்றனார். இந்தப் புலவர் இயற்றிய ஒரே ஒரு பாடலாக இது குறுந்தொகையில் இடம் பெற்று இருக்கிறது.
கூதிர் காலமென அழைக்கப்படும் குளிர் காலத்தில், பனிக்காற்று வீசுகின்ற நள்ளிரவு நேரம் அது. தலைவியும் தலைவனுடனான பிரிவாற்றாமை தாளாது கண்ணுறங்க முடியாமல் தவிக்கின்றாள். உறக்கமின்மையால் அவளுடைய கண்களும் சிவந்து கண்ணீர் குளம் கட்டியிருக்கின்றன. தலைவிக்கு ஆதரவாக, அவளுடைய உற்ற தோழியும் அருகே இருக்கிறாள். தோழியிடம் தலைவி தன்னுடைய நிலையைச் சொல்லிப் புலம்புவதாக இப் பாடல் விரிகின்றது.
‘தோழி! வாடைக்காற்று வீசுகின்ற இந்த இரவில், அந்த எருது தன் முகத்தில் மொய்க்கும் ஈக்களை அகற்ற வேண்டி தலையை அசைக்கின்றது. அப்படி அசைக்கும் போது எருதின் கழுத்தில் கட்டப்பட்ட மணியும் ஓசை எழுப்புகிறது. அந்த ஓசை எனது துயரத்தை மேலும் கூட்டும் வகையாக அல்லவா இருக்கிறது?
தூக்கம் தொலைத்த இந்த நள்ளிரவில், என்னைப் போல் இந்த எருதின் கொடிய மணி ஓசையை கேட்டு விழித்திருப்பவர்கள் வேறு யாரும் இருப்பார்களோ என்ன?
பாடல்
சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து
ஆனுளம் புலம்புதொ றுளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.
அருஞ்சொற்பொருள்;
சிறைபனி உடைந்த- கண்களில் தளும்பி நிற்கும் கண்ணீர் உடைந்து வழிய
சேயரி மழைக்கண் - (சே + அரி) செவ்வரியோடிய கலங்கிய கண்கள்
பொறையரு நோயொடு- பொறுத்தற்கு அரிய( இயலாத) பிரிவின் நோயால்
புலம்பலைக் கலங்கி - வருத்தும் தனிமையில் கலங்கி
பிறருங் கேட்குநர் உளர்கொல் -(எருதின் மணி ஓசையை) கேட்கும் பிறரும் உண்டோ?
உறைசிறந்து -பனித்துளிகள் அதிகம் விழ
ஊதை தூற்றும்- வாடை காற்று
கூதிர் யாமத்து- கூதிர் காலத்தின் நள்ளிரவில்
ஆனுளம் பு -(ஆன்- எருது; உளம்பு -ஈ)
உலம்புதொ றுளம்பும்( உலம்பு- ஒலிப்பது ; உளம்பு -அசைத்தல்)
நா நவில் - மணியின் நாக்கு எழுப்பும் ஒலி
கொடுமணி - கொடிய இரக்கமில்லாத மணி
நல்கூர் குரலே- மெல்லிய ஒலி
அடுத்த வாரம் இன்னுமொரு பாடலைப் பற்றி சிந்திப்போம்.

Leave a comment
Upload