தொடர்கள்
அரசியல்
உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பாரதிய ஜனதா! !! விகடகவியார்

20231109000837215.jpg

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட 2024 பாராளுமன்ற தேர்தலில் என்ன நடக்கும் என்பதை பூடகமாக சொல்லிவிட்டது.

மத்திய பிரதேசத்தில் ஆளுங்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ராஜஸ்தான் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களின் ஆட்சியை பாரதிய ஜனதா பறித்துக் கொண்டு விட்டது. இப்போது பாரதிய ஜனதா 13 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி மூன்று இடங்களில் மட்டுமே இருக்கிறது. தெலுங்கானாவை பொறுத்தவரை கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி ஆட்சியின் வாரிசு அரசியல் காரணமாக மக்கள் கடும் எதிர்ப்பில் இருந்தார்கள். இந்த வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்து விட்டது. அதேசமயம் ஏற்கனவே கர்நாடகாவில் பாரதிய ஜனதாவிடம் இருந்து ஆட்சியைப் பறித்தது காங்கிரஸ் இப்போது தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. வட இந்தியாவில் பாரதிய ஜனதாவின் கொடி உயரே பறந்தாலும் தென்னிந்தியாவில் அது ஒரு செல்வாக்கு பெற்ற கட்சி என்று அங்கீகாரம் அதற்கு இன்னமும் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.

அதே சமயம் இந்தி பேசும் மாநிலங்களில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு காரணம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான வெங்கடேஷ் பிரசாத் தனது எக்ஸ் தளத்தில் சனாதனத்தை இழிவு படுத்தினால் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்தப் பதிவு பாரதிய ஜனதா முன்னணி என்று தகவல் வெளிவரும்போதே இப்படி ஒரு கருத்தை பதிவு செய்து விட்டார். இந்த கருத்து தான் தேசிய அளவில் பேசும் பொருளாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதாவை சேர்ந்த தலைவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி தொலைக்காட்சிகளில் விவாதங்களில் கலந்து கொண்டு பேசும்போது இந்த வெற்றி பற்றி குறிப்பிடும் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதரத்தை ஒழிப்போம் என்று பேசினார். வட இந்திய மக்கள் அவரின் கருத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பதில் சொல்லி இருக்கிறார்கள். எங்கள் வெற்றிக்கு உதவி செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி என்று குறிப்பிட்டார்கள்.

பிரதமர் மோடி கூட தேர்தல் பிரச்சாரத்தில் திமுக காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி இந்துக்களுக்கு எதிரான கூட்டணி சனாதனத்தை ஒழிக்கும் கூட்டணி என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். ஆனால் அப்போது முதல்வர் ஸ்டாலின் வட இந்தியாவில் கூட திமுகவை பற்றி தான் பேசுகிறார் பிரதமர் என்று குறிப்பிட்டார். ஆனால் பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் கருத்தை இந்துக்களுக்கு எதிராகவும் தங்களுக்கு சாதகமாகவும் பயன்படுத்திக் கொண்டு விட்டார் என்பதை இப்போது திமுக உணர ஆரம்பித்திருக்கிறது.

20231109001048657.jpeg

காங்கிரஸ் கட்சி கூட தேர்தல் தோல்விக்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் சனாதன எதிர்ப்பு பேச்சு தான் என்று வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன கார்கே இந்த தோல்வி தற்காலிகமானது என்று குறிப்பிட்டார். ஆனால் கூட்டணி கட்சித் தலைவர்கள் நிதீஷ்குமார், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சிகளை ஒதுக்கி தனித்துப் போட்டியிட்டதால் இந்த தோல்வி காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்திருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். ஆறாம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்தை காங்கிரஸ் கட்சிக் கூட்டியிருந்தது ஆனால், பெரும்பாலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வர மறுத்ததால் இப்போது அந்த கூட்டம் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இது நடுவே பாராளுமன்றத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

இதன் நடுவே திமுக எம்பி செந்தில்குமார் பசு மூத்திரம் குடிக்கும் மாநிலங்களில் தான் பாரதிய ஜனதா வெற்றி பெற்று இருக்கிறது என்று பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு சர்ச்சையானது. அப்போதே பாரதிய ஜனதா இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. கார்த்திக் சிதம்பரம் திமுக எம்பி செந்தில்குமாரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். அதன் பிறகு வட இந்திய காங்கிரஸ் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். அதன் பிறகு மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் திமுகவை தொடர்பு கொண்டு உடனே பேசியதை தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் திமுக எம்பி செந்தில்குமாரை தொடர்பு கொண்டு ஏற்கனவே இருக்கிற பிரச்சனை போதாதா புதிதாக ஒரு பிரச்சனையை ஏன் கிளப்புகிறீர்கள் உடனே மன்னிப்பு கேளுங்கள் வருத்தம் தெரிவியுங்கள் என்று சொன்னதை தொடர்ந்து மன்னிப்பும் வருத்தமும் கேட்டார் திமுக எம்பி செந்தில்குமார்.

ஐந்து மாநிலங்களில் மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்து வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் மோடியின் செல்வாக்கு மேலும் உயர்ந்து இருக்கிறது என்பது நிருபணம் ஆகிவிட்டது.

20231109001828907.jpeg

குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் பாரதிய ஜனதா வலுவாக இருப்பதை அந்த கட்சி உணர்கிறது. அதே சமயம் தென்னிந்தியாவில் தங்கள் கட்சி பலகீனமாக இருப்பதையும் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறது. பாரதிய ஜனதாவின் கூட்டணி வேண்டவே வேண்டாம் என்று அதிமுக இன்று வரை உறுதியாக இருக்கிறது. பாரதிய ஜனதாவின் வெற்றிக்கு எடப்பாடி வாழ்த்து சொல்லவில்லை.

பாரதிய ஜனதாவின் பார்வை இனிமேல் தென்னிந்தியாவின் பக்கம் திரும்பும் தங்களுக்கு சாதகமான கட்சிகளுடன் பாசத்தைக் காட்டி அரவணைத்துக் கொள்ளும் அது அதிமுகவுக்கும் பொருந்தும்.