தொடர்கள்
ஆன்மீகம்
மேன்மை தரும் ஆண்டார்குப்பம் முருகன் கோயில்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Andarkuppam Murugan Temple which gives Superiority!!

தப்பாமல் இப்பூர்வ மேற்குத் தரங்கள்
தெற்காகும் இப்பாரில் கீர்த்திக்கிசைந்த
தச்சூர் வடக்காகும் மார்க்கத்தமர்ந்த ...... பெருமாளே.

அருணகிரிநாதர் 'தச்சூர் வடக்காகும் மார்க்கத்து அமர்ந்த பெருமாளே' என்று ' இத்தல முருகப் பெருமானைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டுச்சாலையிலிருந்து பொன்னேரி செல்லும் வழியில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில்
ஆண்டார்குப்பம் பகுதியில் பழமை வாய்ந்ததோடு மட்டுமல்லாது மகிமையும் வாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணியன் சுவாமி திருக்கோயில் அமைந்திருக்கிறது. இங்குள்ள முருகன் குழந்தையாகவும், இளைஞராகவும், முதியவராகவும் மூன்று விதமான வடிவங்களில் அதிகார தோரணை கொண்ட வடிவத்தில் நமக்குக் காட்சி தருகிறார்.
அருணகிரிநாதர் தவிர பாம்பன் ஸ்வாமிகள், கிருபானந்த வாரியார் ஆகியோரும் இந்தத் தலத்து முருகனைப் போற்றி வழிபட்டுள்ளார்கள்.
ஆண்டிக்கோல சிறுவனாக வந்து முருகன் அருள்புரிந்த தலமென்பதால் ஊர், ‘ஆண்டியர்குப்பம்’ என்றழைக்கப்பட்டு, ‘ஆண்டார்குப்பம்’ என மருவியது. ஆளும் கோலத்தில் முருகன் இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.

Andarkuppam Murugan Temple which gives Superiority!!

ஸ்தல புராணம்:
ஒருமுறை படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிடம் முருகன் பிரணவத்தின் பொருளைக் கேட்க அதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் பிரம்மதேவன் திணறியதும், அதனால் கோபம் கொண்டு முருகப்பெருமான் பிரம்மனின் தலையில் குட்டி அவரைச் சிறை வைத்தார். இங்கே பிரணவத்தின் வடிவமான முருகன் பிரம்மாவை விடவும் உயர்ந்தவராக இருக்கிறார்.
பிரம்மனிடம் கேள்வி கேட்ட அதிகாரத் தோரணையுடன் இடுப்பில் கரங்களை வைத்தபடி அதிகார முருகனாக பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். எனவே, இங்கு வந்து அவரைத் தரிசிக்கும் அன்பர்களுக்கு அதிகாரம் மிகுந்த பதவிகள் வாய்க்கும், ஏற்கெனவே பதவியில் உள்ளோருக்குப் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
அதேபோல், சம்வர்த்தனர் என்ற பக்தருக்காகவே இங்கே பாலநதியை உண்டாக்கி, முருகன் கோயில் கொண்டார் என்றும் ஸ்தலபுராணம் கூறுகின்றது. மற்றும், தனது படை வெல்வதற்கு அருளாசி வழங்கியதால் கிட்டிய வெற்றியின் நன்றிக் கடனாகச் சுல்தான் ஒருவர் வழங்கிய நிலத்தில் கட்டப்பட்ட முருகன் கோயில் இது என்ற வரலாறு உண்டு.

Andarkuppam Murugan Temple which gives Superiority!!

ஸ்தல அமைப்பு:
பொன்னேரியிலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த முருகன் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஐந்து நிலை இராஜ கோபுரத்துடன் அமைந்துள்ள இந்த கோயிலின் நுழைவாயிலுக்கு அருகில் வலது பக்கத்தில் வேம்படி விநாயகர் சந்நிதி மற்றும் பாதாள கங்கை அம்மன் சந்நிதியை தரிசித்துவிட்டு உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், மயில் மற்றும் சிம்ம வாகனத்தைக் கடந்து அழகிய தூண் சிற்பங்களுடன் கூடிய 16 கால் மண்டபம். ஶ்ரீ பிரசன்ன விநாயகர் – ஸ்ரீ காசிவிஸ்வநாதர், ஶ்ரீ விசாலாட்சி ஆகியோருக்கு நடுவே கோயிலின் மூலவரான பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கி வேலும், மயிலும், வள்ளி தெய்வானை இல்லாமல் தனித்து அருளும் அதிகார முருகனாக அருள்பாலிக்கின்றார்.
இதைத்தவிர,உற்சவர் வள்ளி தேவசேனா சண்முகர், நடராஜர் ஆகியோருக்கு தனி சந்நிதிகள் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் சம்வர்த்தன முனிவர் சந்நிதியும், சண்டிகேஸ்வரர், நவகிரக சந்நிதியும் அமைந்துள்ளது. கொடிமரத்துக்கு அருகில் பிரம்மா சங்கிலியால் கட்டி சிறைவைக்கப்பட்ட கருங்கல் இன்றும் அப்படியே உள்ளது. இந்த நிகழ்வுகள் கோயில் தூணில் செதுக்கப்பட்டுள்ளது.

Andarkuppam Murugan Temple which gives Superiority!!

ஸ்தல தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம்
ஸ்தல விருட்சம் : சரக்கொன்றை மரம்

ஸ்தல சிறப்பு:
அலங்கார கோலத்தில் மூலவர் முருகப்பெருமானைத் தரிசிக்கும்போது, காலை வேளையில் பாலனாகவும், நண்பகலில் வாலிபனாகவும் மாலையில் வயோதிகனாகவும் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.
தனது திருக்கரங்களை இடுப்பில் வைத்தபடி, அதிகாரத் தோரணையில் அருளும் முருகப்பெருமானின் தரிசனம் மற்றொரு சிறப்பு அம்சம்.

20240129225152180.jpeg

திருவிழாக்கள்:
தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, ஆடிவெள்ளி, விநாயக சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், தை கிருத்திகை, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், போன்ற திருவிழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும்.

Andarkuppam Murugan Temple which gives Superiority!!

இத்திருதலத்தில் பிரதான திருவிழாவாக சித்திரை பிரம்மோற்ஸவம் 12 நாட்கள் நடைபெறுகின்றது. முருகப்பெருமான் மயில் வாகனத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பது சிறப்பானது. இந்த உற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு தெய்வானை திருமணம் , ஆறாம் நாள் இரவு விசித்திரமான
காட்சிதரும் யானையில் பவனி, ஒன்பதாம் நாள் இரவு வள்ளி திருமணம், பத்தாம் நாள் காலை தீர்த்தவாரி உற்சவம் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றது.

Andarkuppam Murugan Temple which gives Superiority!!

பிரார்த்தனை, நேர்த்திக்கடன் :
இந்தக் கோயிலுக்குத் தொடர்ச்சியாக மூன்று வெள்ளி அல்லது செவ்வாய்க் கிழமைகளில் இங்கு வந்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் அதிகாரம் மிக்க பதவிகளும், பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பரணி நட்சத்திர நாளில் இக்கோயிலுக்கு வந்து, அன்றிரவு அபிஷேக, ஆராதனைகளைத் தரிசித்து, அங்கேயே தங்கி மறுநாள் கிருத்திகை வழிபாட்டினை செய்வதால் நம் சிக்கலான வாழ்க்கைப் பிரச்சினைகள் அனைத்தும் உடனடியாக நீங்கும் என்பதும் ஐதீகம்.
கார்த்திகை நட்சத்திர நாளிலும் சஷ்டி திதியிலும் இங்கு வந்து வணங்கி வழிபட்டால், கல்யாண வரம் கைகூடும் என்பது நிச்சயம்.
இந்த கோயிலில் வேண்டுதல் வைக்கும் பக்தர்கள் பாலாபிஷேகம் மற்றும் சந்தனக் காப்பு செய்து தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினசரி காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் கோவில் நடை திறந்திருக்கும்.

கோயிலுக்குச் செல்லும் வழி:
சென்னை நகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் பொன்னேரிக்கு செல்லும் வழியில் உள்ள திருத்தலம். செங்குன்றத்தில் (Red Hills) இருந்து 10 கி.மீ. பயண தூரத்திலும் இத்தலத்தை அடையலாம். ஆவடி, கும்மிடிப்பூண்டி, சென்னை, திருவள்ளூர் எனச் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆண்டார்குப்பம் வரப் பேருந்து வசதிகள் உள்ளது.

மேன்மை தந்தருளும் ஆண்டார்குப்பம் முருகப்பெருமானைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!

Andarkuppam Murugan Temple which gives Superiority!!

https://youtu.be/kV-_n8rcrug?si=mi3qaDVBUhrb-Xrz

https://youtu.be/40iep6j_G1A