தொடர்கள்
தொடர்கள்
தில்லையை நினை,தொல்லையை மற! பகுதி-4 -மதுராந்தகம் முனைவர் என்.பத்ரி

20240201202134614.jpeg

சிதம்பரத்தில் இரண்டு முக்கியமான ஆலயங்கள் உள்ளன. அனைவரும்
அறிந்தது சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயமே. ஆனால் அந்த தில்லை நடராஜர்
ஆலயத்துக்குச் செல்பவர்கள் அந்த ஆலயத்தில் இருந்து அரை கிலோ தொலைவில் உள்ள தில்லை காளியம்மனையும் தரிசிக்காமல் வந்தால் தில்லை நடராஜரை தரிசித்தப் பலன் கிடைக்காது என்று சொல்லப்படுகிறது.

சிதம்பர ஆலயத்தில் இருந்து இடதுபுறமாகச் சென்று முதலில் வரும் இடது
திருப்பத்தில் திரும்பி நேராகச் சென்றால் அந்த சாலையின் இறுதியில் தில்லை காளியம்மன் ஆலயம் உள்ளது. அந்த தில்லை காளியம்மன் வரக் காரணமாக இருந்த இரண்டு முனிவர்களான ‘ஆனந்தீஸ்வரர்’ மற்றும் ‘இளமையாக்கினார்’ போன்றவர்களின் சமாதிகளும் அந்த ஊரில் எங்கோ உள்ளது என்றும், அங்கும் போய் அவர்களை தரிசிப்பது இன்னும் விசேஷம் என்றும் கூறப்படுகிறது..
சில காலத்துக்குப் பின்னால் நடக்க இருந்த ஒரு சம்பவத்தில் பார்வதியே வேறு
அவதாரம் எடுத்து ஒரு அரக்கனை அழிக்க வேண்டும். அந்த அரக்கனை பார்வதியால் மட்டுமே அழிக்க முடியும் என்பது தேவ விதியாக இருந்தது. ஆகவே பார்வதி சிவபெருமானை விட்டு பிரிந்து செல்லவில்லை என்றால் பார்வதி உக்ரக குணத்தைக் கொண்டு அந்த அவதாரத்தை எடுக்க முடியாது. மேலும் பார்வதி முன்னர் ஒரு கட்டத்தில் பெற்றிருந்த சாபத்தினால் சிவபெருமானை பிரிந்து சில காலம் வாழ வேண்டும். இவை அனைத்தையும் அந்த ஈசன் அறிந்திருந்தார். ஆகவே அதற்காக அவர் ஒரு நாடகத்தை நடத்தத் துவங்கினார்.

அதற்கேற்ப ஒரு முறை தேவ லோகத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே ஒரு
வாக்குவாதம் ஏற்படுகின்றது. அது நீ பெரியவனா? இல்லை நான் பெரியவளா? எனத் துவங்கியது சண்டை. சக்தி இல்லையேல் சிவனும் இல்லை என பார்வதி வாதாடும்
நிலைக்குப் போக கோபமுற்ற சிவபெருமான் பார்வதியை கோர உருவம் கொண்ட காளியாக மாறுமாறு சாபம் தந்து விடுகிறார். சிவனை விட்டுப் பிரிய மனமில்லாத பார்வதி அழுது
புலம்பி தன்னை மன்னித்து விடுமாறு அவரை கேட்டுக் கொண்டப் பின் சாப விமோசனம் பெற்று மீண்டும் அவரை எப்படி அடைவது எனக் கேட்க அதற்கு சிவபெருமான் கூறினார்
“இன்னும் சிறிது காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே போர் நடக்க உள்ளது.
அந்த நேரத்தில் நீ இதே காளி உருவில் தேவர்களுக்காக போரிட்டு அசுரர்களை அழிப்பாய்.
அப்போது நீ தில்லை மரங்கள் சூழ்ந்த தில்லைக்கு வந்து என்னை நினைத்து தவம் இருக்க வேண்டும். அப்போது ஒரு கட்டத்தில் உன்னுடன் சேர்ந்து நடனமாடி உன்னை என்னுடன் மீண்டும் அழைத்துக் கொள்வேன்” என்றாராம்.

காலம் ஓடியது. தாரகாசுரன் என்ற அசுரன் தோன்றி தேவர்களை துன்புறுத்தி
வரலானான். தேவர்களும், ரிஷி முனிவர்களும் மும்மூர்த்திகளிடம் சென்று அவன்
தொல்லையிலிருந்து தம்மை காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து சிவபெருமானிடம் ஆலோசனைக் கேட்க, அவர் காளி உருவில் இருந்த பார்வதியை அதற்கு அனுப்பினார்.
காளி உருவில் இருந்த பார்வதி யுத்தகளத்துக்குச் சென்றாள்.
தாரகாசூரனையும் அவன் சேனையும் அழித்தப் பின் வெற்றி அடைந்தாள். ஆனால் அவனை வெற்றி கொண்டபின்னும் அவள் கோபம் அடங்கவில்லை. வெறியாட்டம் போல ஊழித்தாண்டவம் ஆடத் துவங்கினாள்.
அதனால், தாரகாசுரன் அழிந்தாலும் முனிவர்களின் தொல்லை தொடர்ந்தது. அவர்கள் சிவபெருமானிடம் மீண்டும் சென்று வேண்டினார்கள். அனைவரும் சிவபெருமானையே மீண்டும் மீண்டும் தஞ்சம் அடைவது காளிக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவளுக்கு சிவபெருமான் மீது கோபம் ஏற்பட்டது. அவரை விட தானே பெரியவள் என முன்னர் கொண்டு இருந்த எண்ணம் இன்னமும் குறையவில்லை. வெறியும் அடங்கவில்லை.
அவளுடைய உக்ரஹத்தினால் அனைத்து முனிவர்களும், ரிஷிகளும் சொல்லொண்ணத்துயருக்கு ஆளாகினார்கள்.
அந்த நேரத்தில் அங்கிருந்த வியாக்கிரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவர்களின்
வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் அவர்களுக்கு தில்லையில் திருநடனக் காட்சி தந்தார்.
அதை மெச்சி அனைவரும் அமர்ந்து இருந்த வேலையில் காளி சிவனை நடனப் போட்டிக்கு
அழைத்தாள். போட்டியில் யார் தோற்றாலும் அந்த ஊரின் எல்லைக்கு சென்று விட வேண்டும் என்பதுதான் நிபந்தனை. நடனம் துவங்கியது. அனைத்து தேவர்களும் கடவுட்களும் இசை ஒலிகளை எழுப்ப காளி மற்றும் சிவபெருமானின் நடனப் போட்டி தொடர்ந்தது. வெற்றித் தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அனைவரும் திகைத்து நின்றபோது சிவபெருமான்
ஊர்த்துவத் தாண்டவம் என்பதை ஆடிக் காட்டினார். அதில் அவர் தனது காலால் கீழே விழுந்த குண்டலத்தை எடுத்து, காலை மேலே தூக்கி தனது காதில் அணிந்து கொள்ள அதே
ஊர்த்துவத் தாண்டவத்தை பெண்ணான காளியினால் செய்ய முடியாமல் நாணம் தடுத்தது.
பெண்ணினால் எப்படி காலை மேலே தூக்கி ஆடுவது? அதனால் போட்டியில் தோற்றுப் போனாள்.
சிவபெருமான் காலை மேலே தூக்கி ஆடிய ஊர்த்துவத் தாண்டவம் போட்டியில் தோற்று போனதும் அவமானம் அடைந்தவள் ஊர் எல்லைக்குச் சென்று உக்ரஹமாக வட எல்லைக்காளியாக அமர்ந்தாள். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்து போனார்கள். சக்தி இல்லையேல்
சிவனும் இல்லை. இருவரும் இணைந்து இல்லாதவரை பிரபஞ்சம் எப்படி இயங்கும் என கவலைப்பட அனைத்து தேவர்களும், மகாவிஷ்ணுவும் பிரும்மாவும் ஒன்று சேர்ந்து காளியிடம் சென்று அவளை சாந்தமடையுமாறு வேண்டிக் கொண்டனர். பிரும்மா அங்கேயே அமர்ந்து கொண்டு காளியை புகழ்ந்து வேதங்களை ஊதி அவளை பூஜிக்க, அவர் பூஜையை ஏற்றுக் கொண்ட காளி பிரும்மசாமுண்டேஸ்வரி என்ற பெயரால் நான்கு முகம் கொண்ட
சாந்தநாயகி ஆகி அதே இடத்தில் இன்னொரு சன்னதியில் சென்று அமர்ந்தாள்.

-தில்லையின் பெருமை தொடரும்