தொடர்கள்
வரலாறு
ககன்யான் ! விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள் - மாலா ஶ்ரீ

20240202053052507.jpeg

இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’வில் மிகக் குறைந்த செலவில் பல்வேறு சிக்கலான திட்டங்களைக்கூட வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன்மூலம் நிலவின் தெற்கு பகுதியில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, ககன்யான் திட்டத்தில் இந்தியா தீவிரமாக களமிறங்கியுள்ளது. இத்திட்டத்துக்காக இஸ்ரோ நீண்ட காலமாக வேலை செய்து வந்தபோதும், தற்போது இத்திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு முதன்முதலாகச் செல்லும் 4 வீரர்களை கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.

அதன்படி, கேரளாவை சேர்ந்த குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், தமிழகத்தைச் சேர்ந்த குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாணடர் சுபான்ஷு சுக்லா ஆகிய 4 பேரும் ககன்யான் திட்டத்தின்கீழ் முதன்முறையாக விண்வெளிக்கு செல்லத் தேர்வு செய்யப்பட்டவர்கள் எனக் குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்துக்காக கடந்த 2019-ம் ஆண்டு இந்திய விமானப் படையைச் சேர்ந்த வீரர்களை அனுப்பலாம் என்று இஸ்ரோ முடிவு செய்தது. ‘இந்தியாவின் முதல் விண்வெளி மிஷனுக்கு இந்திய விமான படை விமானிகள் சரியாக இருப்பார்கள்’ என்று இஸ்ரோ திட்டமிட்டது. ‘திடீரென எதாவது தவறு நடந்தால் என்ன செய்யலாம் என்பதை நொடியில் முடிவெடுப்பார்கள் என்பதால், அவர்கள் சரியாக இருப்பார்கள்’ என்று இஸ்ரோ 4 விமானப் படை விமானிகளைத் தேர்வு செய்யத் தீர்மானித்தது. மேலும், அவர்களுக்கு அதிவேகத்தில் போர் விமானங்களை இயக்கும் அனுபவம் பிளஸ்பாயிண்டாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து, இந்திய விமான படையைச் சேர்ந்த பல்வேறு விமானிகள், விண்வெளி வீரர்களாக மாற பதிவு செய்தனர். அவர்களுக்கு முதல்கட்டமாக பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. முதல் கட்ட பரிசோதனையில் 12 பேர் தேர்வாகினர். அவர்களை இந்திய விமானப் படையின்கீழ் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஏரோஸ்பேஸ் மெடிசின் தேர்வு செய்திருந்தது.

அந்த 12 பேருக்கும் பல்வேறு தொடர் தேர்வுகள் நடத்தப்பட்டதில், ஐஏஎம் மற்றும் இஸ்ரோ இணைந்து, இறுதிக்கட்டமாக கடந்த 2020-ம் ஆண்டிலேயே மேற்கண்ட 4 பேரை ககன்யான் திட்டத்தின்கீழ் முதன்முறையாக விண்வெளிக்கு செல்ல தேர்வு செய்துள்ளனர். எனினும், அதை இஸ்ரோ வெளிப்படையாக அறிவிக்கவில்லை. மேற்கண்ட 4 பேரும் கடந்த 2020-ம் ஆண்டிலேயே விண்வெளி பயிற்சிக்காக ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இடையே கொரோனா தொற்று பரவல் காரணமாக, அவர்களின் பயிற்சி தாமதமானது. பின்னர், அந்த 4 பேரும் இந்தியாவில் பல்வேறு கடும் பயிற்சிகளை மேற்கொண்டனர். இதற்காக கடலுக்கு அடியில் சென்றும் பயிற்சி பெற்றனர். தனது மிஷனுக்காக, இவர்களுக்கு சிமுலேட்டர்கள் மூலமாகவும் இஸ்ரோ பயிற்சி அளித்தது. இது ஒரு பக்கம் செல்ல, அவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருக்க, கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டனர்.

அதேபோல் இஸ்ரோ தரப்பிலும் தொடர்ச்சியாக பல்வேறு ராக்கெட்களை ககன்யான் திட்டத்தின் பரிசோதனை முயற்சியாக அனுப்பியது எனக் குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட 4 பேரும் விரைவில் ஆய்வு மேற்கொள்ள விண்வெளிக்கு செல்லலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

20240202054347661.jpeg

இதற்கிடையே கேரளாவை சேர்ந்த குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் நடிகை லீனாவை கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட தகவல், கடந்த சில நாட்களுக்கு முன் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.