தொடர்கள்
கவர் ஸ்டோரி
கண்டேன் ராமனை ! விகடகவி அயோத்தி விசிட் ! - ராம்.

20240202042437642.jpeg

பெரிய பெரிய பத்திரிகைகள் கூட இப்படி ஒரு தில்லான விஷயத்தை செய்வதற்கு தயங்கும்.

சனிக்கிழமை காலை விகடகவி அட்டைப் பட கட்டுரை அயோத்தி விசிட் என்று முடிவு செய்து விட்டோம்.

ஆனால் வெள்ளிக்கிழமை மாலை தரிசனம் முடித்து விட்டு அடுத்த நாள் காலை அதை அட்டைப்பட கட்டுரையாக்க முடிவு செய்வதற்கு ஆசிரியர் குழுவின் முடிவு மட்டும் போதாது. அந்த பால ராமனின் ஆசியும் மிக அவசியம்.

விமானம் தாமதமாகக் கூடும், வேறு ஏதேனும் தடங்கல் வரக் கூடும்.

எப்படியோ அயோத்தியாவில் விகடகவி.

அயோத்தி நகரம் அதை நகரம் என்று சொல்வது கூட பொறுத்தமாக இருக்காது. ஒரு சின்ன டவுன் என்று சொல்லலாம்.

20240202041249448.jpeg

விமான நிலயமே இன்னும் முற்றுப் பெறாமல் இருக்கிறது. ஏராளமான வேலைகள் இன்னமும் பாக்கி. எங்களை ஏர்போர்ட்டிலிருந்து கூப்பிட வந்த அனூப் சொல்கையில் சுமார் ஏழெட்டு கிராமங்களை விமான நிலையமாக்கப் போகிறார்கள் என்றார்.

இந்த ஏர்போர்ட் வரும் கூட்டத்திற்கு சத்தியமாக தாங்காது.

இந்த திடீர் கூட்டத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு விமானநிலயத்தில் அடாவடி நடக்கிறது.

தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு செல்ல ஆயிரம் ரூபாய் வரை கேட்கிறார்கள் நீங்கள் தங்கியிருக்கும் இடத்தைப் பொறுத்து.

பட்ஜெட் ஹோட்டல்கள் இருக்கிறது. ஆனால் எல்லாமே அவர்கள் போடும் பட்ஜெட்டில் தான் இயங்குகிறது. மக்கள் அனைவருக்கும் ராமர் கோவில் திறந்து விட்டவுடன் ஒரு அவசர கதியில் பணம் பண்ண விருப்பம் இருப்பதாகத் தான் தோன்றுகிறது.

ராமர் கோவிலைப் பொறுத்தவரை கூட்டம் அமோகமாகத்தான் இருக்கிறது.

இந்த கோவிலில் இருக்கும் இடத்திற்கு அருகே கடைகள், கடைகள், கடைகள்.....

உள்ளூர் வாசிகள் ஏக உற்சாகத்தில் இருக்கிறார்கள். வியாபாரம் கணக்கு செய்ய முடியாத அளவிற்கு அதிகமாகியிருக்கிறது.

(கோவிலுக்கு செல்லும் வழியில்..)

நாட்டின் பல பகுதிகளிலிருந்து, வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

நீங்கள் அயோத்திக்கு வர திட்டமிட்டால் கொஞ்சம் சுமாராக இருக்கும் ஹோட்டலாக இருந்தாலும் ராம ஜென்ம பூமிக்கு 2 கி.மீ சுற்றளவில் இருப்பது போல தேர்வு செய்து கொள்ளவும்.

மேலும், வலைதளத்தில் இருக்கும் படங்கள் நம்மை ஏதோ பெரிய ஹோட்டல் இது என்று எண்ண வைக்கும். தங்கள் வீடுகளையே ஹோட்டலாக மாற்றியிருக்கிறார்கள். ஒரு நாள் தங்கி ராமனை தரிசனம் செய்வதற்கு இது போதுமானது தான்.

தரிசனம் செய்வதற்கு ஆர்த்தி சேவா, சுகம் தர்ஷன் என்று இரண்டு விதமான சேவைகளுக்கு இணையத்தில் பதிவு செய்ய வழி வகை இருக்கிறது.

https://online.srjbtkshetra.org/#/login

என்ற வலைதளத்தில் மூன்று நாட்கள் முன்பு வரை மட்டும் பதிவு செய்ய முடிகிறது. பொறுங்கள். அவசரப் பட வேண்டாம்.

இந்த தரிசனம் புக் செய்தால் எப்படி போய் கியூ வரிசையில் நிற்க வேண்டும், எங்கு போய் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரு பலகையோ அல்லது, யாரேனும் உதவியோ செய்ய ஆள் கிடையாது. குத்து மதிப்பாக நின்று இரண்டாவது முறைதான் தெரிந்து கொள்ள முடிகிறது. இங்கிருக்கும் போலீஸுக்கு இது பற்றிய எந்த விபரமும் இல்லை.

ஆக, ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரங்கள் காத்திருப்பதற்கு தயாரகத் தான் வர வேண்டும்.

20240202042256599.jpeg

கோவிலுக்குள் செல்ல ஏகப்பட்ட செக்யூரிட்டி சோதனைகள் இருக்கிறது.

பர்ஸ் தவிர வேறு எந்த பொருளையும் ஹோட்டலில் விட்டு விட்டு வரவும். செருப்பு வைக்க இடம் இருக்கிறது. மொபைல் போன் இவற்றையெல்லாம் லாக்கரில் வைத்து விட்டு தான் உள்ளே செல்ல வேண்டும். இதற்கே ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. இதையெல்லாம் தவிர்க்க பர்ஸ் தவிர வேறு எதுவும் கோவிலுக்கு கொண்டு வராமல் இருப்பது உத்தமம்.

20240202060136198.jpeg

சின்ன சின்ன அறிவிப்புகள் ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி தமிழில் எழுதியிருக்கிறார்கள்.

ஹனுமன் கர்ஹி என்ற இடத்தில் ஒரு கோவில் இருக்கிறது.அங்கு தரிசனம் முடித்து விட்டு பால ராமனைக் காணும அவசரம் அனைவருக்கும். வந்தோமா சுவாமி தரிசனம் செய்தோமா என்றில்லாமல், ஏகப்பட்ட சோதனைக்கு உள்ளாகி ஒரு வழியாக கியூ வரிசையில் சேர்ந்து விட்டால், உத்தரவாதமாக ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்து விடலாம்.

ஒரு சில டிப்ஸ். கியூ மூன்று விதமாக செல்கிறது. இதில் நடுவில் செல்லும் கியூ வரிசை சாலச் சிறந்தது. ஏனென்றால் ராமனை கண்குளிர தூரத்திலிருந்தே தரிசனம் செய்து கொண்டே செல்லலாம். அருகே திருப்பதி போலத் தான். ஜரிகண்டி ஜரிகண்டி தான்.

இருந்தாலும் அந்த கியூ வரிசை நீண்டு செல்ல, ஜெய் ஶ்ரீராம், ஜெய் ஜெய் ஶ்ரீராம் கோவிலுக்குள் அதிர, அந்த பால ராமனைப் பார்க்கையில், எண்ணூறு வருட காத்திருப்பும், இதற்காக இழந்த லட்சக்கணக்கான உயிர்களும் நினைவுக்கு வருகின்றன.

குழந்தை ராமன் கம்பீரமாக புன்னகையுடன் நிற்கிறான். கீழே பழைய விக்ரஹம் கண்ணுக்கு தெரியாத அளவு, கூட்டம், மலர்கள்.

உள்ளே நெருங்க நெருங்க நெட்டித் தள்ளுகிறார்கள். வயதானவர்கள், முடியாதவர்கள்,பலஹீனமானவர்கள் என்ற எந்த பேதமும் பாகுபாடும் இல்லை.

இன்னொரு விஷயம் உள்ளே இருக்கும் காவலர்கள். பிரஹாரத்தில் இருக்கும் சிலர் ஷூ அணியாமல் பணிபுரிகிறார்கள். மேலும் பலர் ஷூ கால்களோடு. என்ன காரணமோ தெரியவில்லை.

ஒரு சிலர் கைகளில் செல் ஃபோன் இருக்கிறது. சுவாமி அருகே செல்ஃபி எடுக்க கூடாது என்பதையும் மீறி எடுக்கிறார்கள்.

சும்மா சொல்லக் கூடாது. கோவிலுக்குள் இருக்கும் போலீஸ்காரர்கள் அத்தனை கடுகடுப்புடன் யாரையும் நடத்தவில்லை. கொஞ்சம் சாஃப்டாகத்தான் அணுகுகிறார்கள்.

நாங்கள் புக் செய்த சுகம் தர்ஷன் என்ற கியூ வரிசை வேறு ஒரு பக்கத்திலிருந்து வருகிறது. ஆனால் அதைப் பற்றிய ஒரு அறிவு யாருக்கும் இல்லை.

ஒரு வழியாக உள்ளே நுழைந்து ராமன் அருகில் சென்றதும் இந்த டிக்கட்டை காட்டி கொஞ்சம் அந்த வி.ஐ.பி வரிசையில் அனுமதித்தார் ஒரு காவலர். ஆனால் இதை நம்பாதீர்கள்.

அது அந்த அலுவலரையும், அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது.

கொஞ்சம் கூட்டத்தினிடையே சமாளிக்க முடியும் என்று தெம்பு இருந்தால் அதிகபட்சம் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் தரிசனம் பார்த்து விட்டு வரலாம்.

அக்மார்க் ஆன்மீக அனுபவம் உத்திரவாதம்.

அந்த கூட்டம், அந்த சிலிர்ப்பு, அந்த ராம கோஷம், அந்த பிரம்மாண்டம், கண்களை விட்டு அகலாது.

கோவிலுக்கு உள்ளே நிற்கும் ரவி குமார் சிங் என்ற காவலரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். தமிழ் பத்திரிகை. இங்கே சிலர் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். மொபைலே கொண்டு வர அனுமதிக்கவில்லையே நாங்கள் எப்படி எடுத்துக் கொள்வது என்று குறைப்பட்டுக் கொள்ள.., நான் இருக்கிறேன் வாருங்கள் எடுத்து உங்களுக்கு வாட்சப் அனுப்புகிறேன் என்றார்.

20240202044358549.jpeg

(புகைபட உபயம் : காவவர் ரவிகுமார் சிங்)

அயோத்திக்கு செல்கிறேன் என்றவுடன் என்னிடம் பலர் கேட்ட கேள்வி இதுதான். கூட்டமாக இருக்கிறதாமே...

திருப்பதிக்கும், சபரிமலைக்கும் சென்றவர்களுக்கு இது கூட்டமே கிடையாது. இங்கிருப்பவர்களுக்கு இந்த கூட்டத்தை எப்படி வரிசைப்படுத்துவது, சமாளிப்பது என்று புரியவில்லை அவ்வளவு தான்.

வயதானவர்களுக்கு வீல் சேர் இருக்கிறது. ஆனால் ஒரு மாதிரி குண்ட்சாவாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு தள்ளுகிறார்கள். பார்ப்பதற்கு பயமாகத்தான் இருக்கிறது.

இப்போதே வரலாமா ?? தாராளமாக வரலாம். ஆனால் கோவில் இன்னமும் முழுமை பெறவில்லை. அடுத்த ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்குள் அயோத்தி அனுபவம் இன்னமும் அற்புதமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

கோவில் சுற்றுப்புறங்களில் சுத்தம் சுகாதாரத்திற்கும் இன்னமும் இந்த சின்ன ஊர் ஏகத்திற்கும் மெனக்கெட வேண்டும்.

உணவு தெருவோரங்களில் தவிர்ப்பது நலம். நல்ல ஹோட்டல் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. கொஞ்சம் தொலைவில் ஆரா என்ற உணவகத்தை தேடிப் பிடித்தோம். விலை அதிகம்.

மற்றபடி, அயோத்தியை சுற்றிலும், பல ஊர்கள் இருக்கின்றன.அயோத்தியிலேயே, பரத குண்ட், தசரதர் கோவில், இப்படி பல விஷயங்கள் இருக்கின்றன.

மாலை ஆறரை மணிக்கு சரயு நதி ஆரத்தி இருக்கிறது. இதையெல்லாம் கொஞ்சம் திட்டமிட்டு வருவது நல்லது.

இரண்டு இரவுகளாவது தேவை.

(எத்தனை முறை இராமயணத்தில் படித்திருப்போம். அந்த சரயு நதி இங்கே..)

நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

ஜெய் ஶ்ரீ ராம்.

20240202055714796.jpeg