தொடர்கள்
follow-up
நெகிழி Vs மஞ்சப்பை -ப ஒப்பிலி  

சென்னை: மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் இரு வாரங்களுக்கு முன் தானியங்கி முறையில் துணி பைகள் விநியோகம் செய்யும் இரண்டாவது இயந்திரத்தை சென்னை நீலாங்கரை கடற்கரையில் தொடங்கியது. அதே விழாவில் இரண்டாவது மஞ்சப்பை படை அணியையும் துவக்கியது. முதல் மஞ்சப்பை விநியோகம் செய்யும் இயந்திரம் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் கடந்த வருடம் நிறுவப்பட்டது.

மஞ்சப்பை படை அணியை பற்றி மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் செயலாளர் சுப்ரியா சாஹு கூறுகையில் இந்த அணியில் உள்ளவர்கள் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படும் பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உதவுவார்கள். மேலும் மாசு கட்டுப்பாட்டு மற்றும் சுற்று சூழல் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்துவார்கள், என்றார் அவர்.

நிறுவப்பட்ட ஓராண்டிற்குள் இந்த படை இது வரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் செய்யும் பன்னிரண்டு தொழிற்சாலைகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க உதவியுள்ளனர். மேலும் எழுபது கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விநியோகம் செய்வதை கண்டறிந்து அவற்றில் பதினைந்து கடைகளை உடனடியாக மூடி சீல் வைக்க உதவி உள்ளனர். இது தவிர எழுவது குடோன்களில் பிளாஸ்டிக் பைகள் மறைத்து வைத்திருந்ததையும் இந்த படை கண்டறிந்து அவற்றிற்கு சீல் வைக்க உதவினார்கள், என்கிறார் சுப்ரியா சாஹு.

20240229155241229.jpg

இது தவிர பிளாஸ்டிக் பைகளால் சுற்று சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இவர்களின் முக்கிய பணியாகும். கடந்த ஒரு வருடத்தில் இந்த படையினர் சென்னையில் முன்னூறுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீலாங்கரை மையத்தின் மற்றொரு சிறப்பு இது கடல் ஆமைகள் கண்காணிப்பு மையமாகவும் செயல் படும். இந்த மையத்தின் மிக அருகில் தான் மாநில வன துறையின் கடல் ஆமைகள் குஞ்சு பொரிக்கும் ஹேச்சரி (Hatchery) செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் டிசம்பர் 2021 முதல் ஒரு முறை பயன்படும் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க தடை செய்யப்பட்டது. இந்த மூன்று வருடங்களில் இதுவரை அதிகாரிகள் ஆறு லட்சம் முறை ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளின் போது கிட்டத்தட்ட அறுநூற்று எழுபது டன் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படும் பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்த குற்றத்திற்காக அபராத தொகையாக ரூபாய் 8.3 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளை அடுத்து மக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரை நீலாங்கரை தான். எனவே இங்கு ஒரு மஞ்சள் பை விநியோகம் செய்யும் மையத்தை நிறுவினோம். மேலும் பொது மக்கள் கடற்கரைக்கு வரும் பொழுது கடற்கறையை மாசு படுத்தாமல் இருக்க வேண்டும் என்கிற மற்றொரு நோக்கமும் இந்த மையத்தின் மூலம் மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த மையத்தை இங்கு நிறுவியதாக கூறினார் சுப்ரியா சாஹு.