தொடர்கள்
தொடர்கள்
சந்திப்போம் பிரிவோம் - 4 அமெரிக்க அனுபவங்கள் - பொன் ஐஸ்வர்யா

20240310175938430.jpg

1960-70களில் நிலவுக்கு சென்று வந்த அப்பலோ விண்கலங்களை நாம் மறந்திருக்க முடியாது.

அந்த புகழ் பெற்ற அப்பலோ லூனார் மிஷன் சென்டர் தற்போது காட்சியகமாக அமைக்கப் பட்டிருக்கிறது. அப்பலோ- 1 முதல் அப்பலோ -17 வரையிலான பயணங்கள் அனைத்தும் இந்த மையத்தில் இருந்துதான் புறப்பட்டுச் சென்றன என்று உணரும் போது உடல் சிலிர்ப்பதை தவிர்க்க முடியவில்லை.

அமெரிக்கா 1960களில் நிலவில் கால் பதித்து வெற்றிகரமாய் பூமிக்கு திரும்ப வேண்டும் என்பது அப்போதைய ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியின் கனவு/கட்டளை. அதனை செயலாக்க அமெரிக்க விஞ்ஞானிகள் அயராது உழைத்து 1961 முதல் 1972 வரை அடுத்தடுத்து பதினேழு மிஷன்களை உருவாக்கிய கதையை எடுத்த எடுப்பிலேயே நமக்கு அரைவட்ட பெருந்திரையில் ஆவணப்படமாய் விளக்கி விடுகிறார்கள்.

20240310180030889.jpg

1968ல் முதல் முயற்சியாய் மூன்று வீரர்களோடு புறப்பட்ட அப்பலோ-1 ஏவுதளத்திலேயே எரிந்து சாம்பலாய் போனது. மனம் தளராது தொடர்ந்து பல முயற்சிகள் செய்து அப்பலோ-7ல் மூன்று விண்வெளி வீரர்களை மீண்டும் அனுப்பிய போது அது பூமியை வலம் வந்து வெற்றிகரமாய் தரையிறங்கியது. அடுத்து சென்ற அப்பல்லோ-8 அமெரிக்காலிருந்து நிலவை நெருங்கிய முதல் பயணமாகும். நிலவில் தரையிறங்காமல் மேலாக பத்து முறை வட்டமிட்டு பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி வந்து இறங்கியது.

20240310180143641.jpg

அப்பலோ-8 சந்திரனுக்கு செலுத்திய 1968 காலத்து கட்டுப்பாட்டு அறை, அப்போது உபயோகப்படுத்திய அனைத்து டெர்மினல்கள், ஹெட்செட்டுகள், விஞ்ஞானிகள் அணிந்திருந்த ஓவர் கோட்டுகள் எல்லாம் அப்படியே இன்றும் வைக்கப்பட்டு இருக்கிறது. பார்வையாளர்களை உள்ளே அழைத்துச் சென்று முதல் வெற்றிப் பயணத்தின் நீண்ட பதிவை மீண்டும் லைவாக நிகழ்த்திக் காட்டுகிறார்கள்.

வெளியே அப்பலோ ராக்கெட்டின் முழு அனாட்டமியையும் பிரித்து காட்சிக்கு வைத்திருக்கின்றனர். அப்பலோ 9 மற்றும் அப்பல்லோ 10 இரண்டும் பூமியில் இருந்து நிலவு வரை சென்று இறங்குவதற்கான சாத்தியக் கூறுகளை தூரத்திலிருந்து நோட்டமிட்டு திரும்பி வந்தவைதான்.

அதற்குப் பின் சென்ற அப்பலோ-11 தான் நிலவில் விண்வெளி வீரர்களை தரையிறக்கி வரலாறு படைத்தது. 1969 ஜூலை இருபதாம் தேதி அன்று மனிதகுலமே எழுந்து நின்று ஆர்ப்பரித்து நின்றது நினைவிருக்கலாம். அந்த காட்சிகள் மூன் தியேட்டரில் கண்முன்னே தத்ரூபமாக காட்டப் படுகிறன. லூனார் மாடுல் (Lunar Module) கடைசி நொடியில் நிலவில் தள்ளாடித் தரை இறங்குவதும், ஐயா நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்ததும் வயர்லெஸ்ஸில் ”இந்த சிறிய காலடி மனித குலத்தின் மாபெரும் பாய்ச்சல்" என்று பூமிக்கு செய்தி சொல்வதும், அமெரிக்கக் கொடியை நிலவில் பெருமிதமாய் நடுவதும், இருபத்தொரு மணி நேரம் தங்கி இருந்து விட்டு லூனார் மாடுலில் அமர்ந்து விர்ரென்று புறப்பட்டு மேல் எழும்பி தாய் ராக்கெட்டுக்கு திரும்பி வருவதுமாய் அனைத்துக் காட்சிகளும் நிஜமாய் நடப்பது போலவே நிகழ்த்தப் படுகின்றன.

விண்வெளி வீரர்கள் அணிந்திருந்த உடைகள் நிலவின் மண்புழுதியோடு அப்படியே காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. நிலவிலிருந்து அவர்களை மீண்டும் பூமிக்கு சுமந்து வந்த கூம்பு வடிவிலான கேப்சூல், நிலவிலிருந்து கொண்டு வந்த மண்பாறைகள், பயன்படுத்திய அவசரகால மாற்றுத் திட்டக் கையேடுகள், விண்கலத்தில் உபயோகித்த ஆதிகால கீபோர்டுகள் , லூனார் மாடுல் காக்பிட் (Cockpit) என்று நிறைய விஷயங்கள் உள்ளன.

2024031018030069.jpg

ப்பலோ - 11ஐத் தொடர்ந்து அப்பலோ-12, 14, 15, 16, 17 என மேலும் ஐந்து முறை அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவுக்கு போவதும் வருவதுமாய் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டது எல்லாம் வரலாறு. இடையில் அப்பல்லோ-13 மட்டும் கொஞ்சம் மக்கர் பண்ணி நிலவில் தரையிறங்காமல் டிமிக்கி கொடுத்து விட்டு பூமிக்கு தப்பித்து வந்து விட்டது. கடைசியாக 1972ல் சென்ற அப்பலோ-17 ஜீப் போன்ற வாகனத்தைக் கொண்டு போய், நிலவின் தரையில் நீண்ட தூரம் ஹாயாக கார் ஓட்டி சுற்றி நம்மூர் நிலவுப்பாட்டியைத் தேடி இருக்கிறார்கள். அந்த நான்கு சக்கர வாகன மாதிரியும் இங்கே பார்வைக்கு உள்ளது.

2024031018033212.jpg

மொத்தம் ஆறு பயணங்களில் பன்னிரண்டு விண்வெளி வீரர்கள் நிலவில் காலாற நடந்திருக்கின்றனர். சுமார் நானூறு கிலோவுக்கு மேலாக நிலவு மண் மாதிரிகளை சேகரித்து வந்துள்ளனர். திரும்பிய இடமெல்லாம் இது போன்ற சுவாரசியமான பொருட்கள், தகவல்கள், புகைப்படஙகள் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. நிலவுக்குச் சென்று வந்த விண்வெளி வீரர்கள் தங்கள் அனுபவங்களை விர்ச்சுவல் ரியாலிட்டியில் (VR) நேரில் நின்று பேசிக் காட்டுகிறார்கள். இப்படியாய் இரண்டு மணி நேரத்தில் நிலவுக்கே சென்று திரும்பிய உணர்வு ஏற்பட்டு விடுகிறது.

இனி தொடர்ந்து ஸ்பேஸ் ஷட்டில், சர்வதேச விண்வெளி நிலையம், எலன் மஸ்கின் ஸ்பேஸ்-X பற்றியெல்லாம் பேசுவோம்…

தொடரும்