தொடர்கள்
கவிதை
ஞானக்கூச்சல்… - ராகவன் ஸாம்யெல்

20240312075159622.jpeg

அறையின் உள் அமைப்பை மாற்றுகிறேன்
படுக்கைத் தலைப்பை பக்கவாட்டமாக திருப்புகிறேன்
தலையை வேறு திசையில் வைத்து உறங்கப்போகிறேன்
முன்பிருந்த புத்தகவரிசையை
ஒழுங்காக அகரவரிசைப்படி அடுக்க முயல்கிறேன்
இயற்(ல்) கனம் காரணமாக
மறுபடி குலைத்து அடுக்குகிறேன்
புத்தகவரிசை தரையிலா, தலையிலா?
படுக்கையில் புணர்ந்து கிடந்த புத்தகத்தை
கலைக்காமல் விடுகிறேன்,
மல்லாந்து பிரிபிரியாய் காற்றில் பறக்கும் பக்கங்கள்
இழைஇழையாய் நீவி திரும்ப வாசிக்க.
எழுத்து மேசையை மாற்றி
ஜன்னலை ஒட்டி நகர்த்துகிறேன்
ஜன்னல் கதவை ஒருச்சாய்த்து திறந்து வைக்கிறேன்
புத்தனின் மீது கொஞ்சம் வெளிச்சம் விழுகிறது இப்போது
திரையை முற்றிலும் விலக்குகிறேன்
பேனாக்களின் முனைகளில் குன்றிமணியாய்
சமைந்த மசிப்பிசுக்கை அழுந்த துடைக்கிறேன்
எழுதாமல் விட்டிருந்த பக்கங்களில்
நிரப்ப கொறித்ததில் மீதியை கொட்டுகிறேன்
அப்படியே எழுது கனினியை திறந்து வைக்கிறேன்
காற்று தட்டச்ச கவிதை விழட்டும்
ஓட்டுத்துளையில் உள்புகும் ஒளியென
துளை எத்தகையதாயினும் ஒளி, வட்டமே!
சல்லாத்துணி தூசியில் படிந்திருந்த
உன் பாதச்சுவடுகளை பிரதியெடுத்து
புத்தகவரிசையில் செருகிவிடுகிறேன்
பொருந்தாமல் துருத்துகிறது எனினும்.
குப்பைத்தொட்டியில் கிடக்கும்
பிசுக்கைத் தேய்த்து கழுவ முற்படுகிறேன்
பிற அழுக்கை ஒரே இடத்தில் சேர்க்கிறேன்
கொஞ்சம் நகர்ந்து கொள்
நான் சுத்தக்கிறுக்கில் களைவதில்
நீயும் இருந்து தொலைக்கப்போகிறாய்!