கதிரவனே!
காட்டாதே இங்குன் கத்திரி;
ஊர் மீதும்;
ஊர் மாந்தர் மீதும்; நீ -
ஊர்கையில்
உன் வெப்பச் சிறகைக் கத்திரி!
-கவிஞர் வாலி (நூல்: தமிழ்க்கடவுள்)
இன்னும் சில வாரங்களில் கத்தரி வெய்யில் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னதாகவே வெய்யிலின் கொடுமை தாளமுடியாததாக இருக்கிறது. ஐயன் வாலி கூறுவதுபோல் கதிரவனின் வெப்பச் சிறகைக் கதிரவனே வெட்டிக்கொண்டால்தான் உண்டு. இப்போதைக்கு நம் கட்டுரையிலாவது கத்தரி வெய்யிலில் வெய்யிலைக் கத்தரித்துவிட்டுக் கத்தரியை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
பொருள்களை வெட்ட நாம் பயன்படுத்தும் முக்கியமான கருவிகளுள் ஒன்று கத்தரிக்கோல். தடிமன் குறைந்த பொருள்களை வெட்ட நாம் கத்தரிக்கோலைப் பயன்படுத்துகிறோம். கி.மு 1500களில் எகிப்தியர்கள் பொருள்களைக் கத்தரிக்கக் கத்தரிக்கோலைப் பயன்படுத்தியிருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அன்றைய கத்தரிக்கோல்கள் தற்போது நாம் பயன்படுத்தும் X போன்று அமைந்த கத்தரியைப் போல் அல்லாமல், ஸ்ப்ரிங்கோடு (Spring) இணைக்கப்பட்டு நேரடியாக விரல்களால்/ கைகளால் அழுத்திக் கத்தரிக்கும்படியாக இருந்துள்ளன என்று வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், கி.பி இரண்டாம் நூற்றாண்டு அளவில் ரோமானியர்கள்தாம் இப்போது இருப்பதைப் போன்ற ‘Cross Blade’ கத்தரிக்கோல்களை உருவாக்கினர் என்றும், அவர்கள்தாம் முதன்முதலில் முடி வெட்டுவதற்காகக் கத்தரிக்கோலைப் பயன்படுத்தினர் என்றும் வரலாற்றாளர்களால் சொல்லப்படுகிறது. ஆனால், இத்தகவலைக் கேள்விக்குள்ளாக்கும் விதமாக இருக்கப்போகிறது இப்போது நாம் பார்க்கப்போகும் தகவல்.
சோழன் கரிகால் பெருவளத்தான் பெருமைகளைப் பற்றி முடத்தாமக்கண்ணி என்னும் பெண்பாற்புலவர் எழுதிய பொருநராற்றுப்படை என்னும் சங்கநூலில் பின்வரும் வரிகள் கூர்ந்து நோக்கத் தக்கவை.
'...மயிர் குறை கருவி மாண் கடை அன்ன
பூங்குழை ஊசற் பொறை சால் காதின்...' (பொ.ஆ – வரிகள்: 29-30)
சோழன் கரிகால் பெருவளத்தானின் அவையிலுள்ள பாடினியின் (பாட்டு இசைக்கும் பெண்) அழகைப் பற்றிக் கூறும் பாடலில் அமைந்துள்ளன இவ்வரிகள்.
அதாவது, கூந்தல், நெற்றி, விழிகள், இதழ்கள், பற்கள் என ஒவ்வொன்றாக வர்ணித்துக்கொண்டே வரும் புலவர், பாடினியின் காதுகளைச் சொல்லும்போது, 'மயிர் குறை கருவியின் வளைந்த பகுதியைப் போல் இருந்து, பூக்கள் ஊஞ்சல்போலத் தொங்கும்படியான காதுகளை உடையவள்’ என்று சொல்கிறார்.
மயிர் குறை கருவி என்றால் முடியைக் குறைக்கும் (அ) வெட்டும் கருவி என்று நேரடியாகவே பொருள்படுகிறது. ஆக, தமிழர்கள் முடி வெட்டுவதற்கென்று ஒரு கருவி வைத்திருந்தனர் என்பது புலனாகிறது. மேலும், அக்கருவியின் வளைந்த பகுதியை ஒரு பெண்ணின் காதோடு ஒப்பிட்டுக் கூறியமையால் அக்கருவியின் வடிவத்தை நம்மால் யூகிக்கமுடிகிறது. தற்போது பயன்பாட்டிலுள்ள கத்தரிக்கோலின் கைப்பிடி இருக்கும் வடிவத்தைக் காதோடு பொருத்திப் பார்க்கும்போது மயிர்குறை கருவி என்பது கத்தரிக்கோல்தான் என்பது நமக்குத் தெளிவாக விளங்குகிறது.
இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், சோழன் கரிகால் பெருவளத்தான் மற்றும் முடத்தாமக்கண்ணியாரின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு என்று வரலாற்றாளர் நீலகண்ட சாஸ்திரிகளும், செக்கோஸ்லோவாக்கியாவில் பிறந்து இந்திய இலக்கியம் மற்றும் மொழியியல் ஆய்வாளருமாகத் திகழ்ந்த கமில் ஜ்வெலபில் அவர்களும் தெரிவித்துள்ளனர்.
இவற்றை வைத்து, மயிர் குறை கருவி என்னும் கத்தரிக்கோலை முடிவெட்டுவதற்காகத் தமிழர்கள் இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர் என்று நாம் தைரியமாகக் கூறலாம்.
சுமார் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே கத்தரிக்கோலைப் பயன்படுத்திச் சிகையலங்காரம் செய்துகொண்ட தமிழர்களை வரலாற்றில் பதியவைத்த புலவர் முடத்தாமக்கண்ணியார்க்கு ஒரு தமிழ் முத்தம் தந்தோம்.
அவருக்கும் நமக்கும் எப்போதும் ஓர் அலங்காரமாய் விளங்கும் நம் தமிழுக்கு இது நான்காவது முத்தம்.
தொடரும்.
Leave a comment
Upload