தொடர்கள்
பொது
ஒரு கோடி  முறை - டாக்டர் கர்னல் கே எம் ஹரிகிருஷ்ணன்

20240311215601553.jpg


கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமி தனது தந்தையிடம்,

"எனக்கு ராமனை நேரில் பார்க்க வேண்டும்" என்று கேட்டார்.

“நீ ராமன் பெயரை 100 கோடி முறை சொன்னால், அவர் உனக்கு தரிசனம் தருவார்” என்றார் தகப்பனார்.

அவர் உடனடியாக தனது குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்கி, கிட்டத்தட்ட 96 கோடி முறை ராமா நாமத்தை ஜெபித்தார்.

அதற்கான பலன் ஒரு நாள், அவர் திடீரென்று யாரோ கதவைத்தட்டும் சத்தத்தைக் கேட்டார். கதவை திறந்த அவர் அங்கு கண்ட காட்சி!

ராமபிரான் சீதை, ஹனுமார் மற்றும் தனது சகோதரர்களுடனும் வந்து தனது பட்டாபிஷேக தரிசனத்தை தியாகராஜருக்கு வழங்கினார் என்று வரலாறு உண்டு.

20240311215631824.jpeg

[கீதா கோபாலனும் அவருக்கு கிடைத்த வொண்டர் பூக் ஆஃப் ரிகார்ட்ஸ்]

அதுபோன்று, பலர் ஸ்ரீராமஜெயம், நாராயணா என்று இன்றைய காலகட்டத்தில் எழுதுவதில் இணைந்துள்ளனர்.

வேறு பலர் ஆயிரக்கணக்கில் ஸ்லோகங்கள் சொல்வதில் ஈடுபாடு கொள்கிறார்கள்.

அது தான் நாம மகிமை என்பது. நாமத்தின் மகிமை என்பது.

அவர்களை போல் ஒருவர், இன்று நமது கதாநாயகி கீதா கோபாலன் அவர்கள் எவரும் எளிதில் செய்ய முடியாத ஒரு செயலைச் செய்திருக்கிறார்.

அவர் பெருமாள் விஷ்ணுவின் பெயரை ஒரு கோடி முறை பிரார்த்தனை செய்துள்ளார். ஆம், உண்மையிலேயே ஒரு கோடி முறை!

அவர் அதை எப்படி சாதித்தார் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

சமீபத்தில் நடந்த ரஞ்சனி காயத்ரி கச்சேரியில், கீதா கோபாலன் எனக்கு அருகில் அமர்ந்திருந்தார். ராகங்களை பற்றிய உரையாடலில் துவங்கிய நட்பு, என் அதிர்ஷ்டம், மதிப்பிற்குரிய திருமதி கீதாவைப்பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அவரது இந்த அளப்பரிய பணியை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

சிறு வயதிலிருந்தே விஷ்ணு சஹஸ்ரநாமம் , லலிதா சஹஸ்ரநாமம் போன்ற பல ஸ்லோகங்களை ஓத வேண்டும் என்ற பெரும் ஆசை அவருக்கு இருந்தது. திருமணத்திற்குப் பிறகு, அவர் தனது கணவருடன் கீன்யாவில் வசிக்கத் தொடங்கினார்.

Dr(PhD ) கோபாலனுக்கு கீன்யாவில் UN இல் வேலை. (அவர் ஒரு மாலிகுலர் பயாலஜி நிபுணர், ப்ரொபசர்). கோபாலன் தம்பதியர் அங்கு 34 ஆண்டுகள் தங்கியிருந்தனர். அந்த நேரத்தில், கீதா இந்த அறிய பதிவை செய்ய விரும்பினார்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் , லலிதா சஹஸ்ரநாமம் ஆகியவை குழந்தைப் பருவத்திலிருந்தே அவருக்கு மனப்பாடம் ஆயிற்றே. இந்த நல்ல காரியத்தை அவர் கீன்யாவில் உள்ள நூற்றுக்கணக்கான நம் நாட்டு மாணவர்களுக்கு கற்பித்து வந்திருக்கிறார்.

இவ்வாறாக விஷ்ணு சஹஸ்ரநாம பராயணம் ஒரு தரம், இரண்டு தரம் என்று தொடங்கிய பயிற்சி, மேலும் ஒரே நாளில் கிட்டத்தட்ட 30-40 தரங்கள் என பயிற்சியும் முயற்சியும் என விரிந்தது. அதில் மனதார ஈடுபட்ட கீதாவுக்கு இப்படித்தான் ஒரு கோடி முறை விஷ்ணு நாமத்தை சொல்ல முயற்சி செய்யலாமா என்று தோன்றியதாம்.

அப்போது அவர் ஒரு பாங்க்கில் அதிகாரியாக வேலை செய்துகொண்டிருந்தார். இரு குழந்தைகள், மிகவும் பிசியான கணவன், வீட்டு வேலை, போன்ற காரணத்தினால் வேலை ராஜினாமா செய்து விட்டார். கிடைத்த இலவச நேரத்தில் தன் இளம் வயது பயிற்சியான ஸ்லோகங்களை மறுபடியும் சொல்ல துவங்கினார். தினம் குளித்து, விளக்கு ஏற்றி, பிழைகள் வராமல் இருக்க எப்போதும் ஸ்லோக புத்தகத்தை வைத்துக்கொண்டே சொல்லுவாராம்.

விஷ்ணுவின் சஹஸ்ரநாமத்தில், விஷ்ணுவின் 1000 பெயர்கள் இருக்கின்றன.

அவர் அந்த முழு ஸ்லோகத்தை 10,000 முறை கூறியுள்ளார். இவ்வாறாக 1000 x 10,000 = 1 கோடி முறை விஷ்ணுவின் பெயரை மூன்று வருடங்களுக்குள் பாராயணம் செய்து ஒரு மாபெரும் சாதனை செய்திருக்கிறார். இதற்காக சமீபத்தில் அவருக்கு பல விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவருடைய மாணவர்கள் பலர் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்கள். அவரை பாராட்டி புகழ்ந்து எழுதி வருகிறார்கள்.

இதுபோன்ற அசாதாரணமான சாதனையை படைத்த நீங்கள் செயல்படப்போகும் அடுத்த விஷயம் என்ன? என்று அவரிடம் கேட்டேன்.

அவர், "நான் இதுவரை வால்மீகி ராமாயணத்தை கிட்டத்தட்ட 80 முறை படித்துள்ளேன். நான் அதை 108 முறை படிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் படிக்க 4 முதல் 6 வாரங்கள் எடுக்கின்றன. நான் அதை என் வாழ்க்கையில் மிக முக்கியமான குறிக்கோளாக கருதுகிறேன். கடவுள் அதற்கான சக்தியும் திறமையும் எனக்கு அளிப்பாராக" என்று தழ தழக்கும் குரலில் சொன்னார் திருமதி கோபாலன்.