தொடர்கள்
ஆன்மீகம்
சித்திரையே, நல்ல முத்திரை பதிக்க வருக!! - ஆரூர் சுந்தரசேகர்.

Welcome to Chitra! Come to make a good mark in life!!


"கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி" என்ற பெருமைக்குரியது தமிழினம். ஒவ்வொரு வருடமும் தமிழில் சித்திரை முதலாம் நாள் வருடப்பிறப்பாகக் கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர்.
சித்திரை மாதப் பிறப்பு என்பது மங்களங்களின் பிறப்பாகக் கருதப்படுகிறது. அதனால் தான் இந்த நாளில் பஞ்சாங்கம் படிக்கும் வழக்கத்தில் உள்ளது. பிறக்கும் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துத் தெரிந்து, அதற்கு ஏற்ப தங்களின் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதும், பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதும் தமிழர்களிடம் தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்து வரும் பழக்கமாக உள்ளது.
சித்திரை மாத பிறப்பை, தமிழ்ப் புத்தாண்டு, தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை பிறப்பு, சித்திரை விஷூ, சித்திரைக் கனி, சங்கராந்தி எனப் பல பெயர்களால் தென்னிந்தியாவில் கொண்டாடப்படுகிறது. மேலும் நம் அனைவரின் புதிய எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கையையும் மனதில் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புது வருடம் வரவேற்கப்படுகிறது.
தமிழக மக்கள் மட்டுமின்றி இந்தியாவிலுள்ள கேரள மக்கள் விஷு என்றும், அசாம் மக்கள் பிஹு என்றும், பஞ்சாப் மக்கள் வைஷாகி என்றும், மேற்கு வங்க மக்கள் பொஹெலா பொய்ஷாக் என்றும் ஒடிசா மக்கள் மகா விஷுபா சங்கராந்தி என்றும் கொண்டாடுகிறார்கள். இவர்களோடு மணிப்பூர், திரிபுரா,பிஹார், உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மக்களும் புத்தாண்டை பல்வேறு பெயர்கள் இட்டு அழைத்து, கொண்டாடுகின்றனர். பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

சங்க காலத்தில் சித்திரை:
சித்திரை முதல் நாளை பிரம்மதேவன் படைத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அகத்தியரின் பன்னீராயிரம், மற்றும் புட்ப விதி முதலான நூல்கள் சித்திரை மாதம் தான் முதல் மாதம் என்று சொல்கின்றன. சங்க இலக்கியமான நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடையில் சூரியன் மேஷம் (சித்திரையில்) தொடங்கி அடுத்தடுத்த 11 ராசிகளுக்கும் பயணப்படுவதாக எழுதியுள்ளார்.

சித்தர்களின் சித்திரை:
தமிழ் நாட்டைப் பொருத்தமட்டும், சித்திரையை ‘முதல் மாதம்’ என்றும், பங்குனியைக் ‘கடை மாதம்’ என்றும் சித்தர்களின் ஏட்டுச் சுவடிகளில் எழுதியிருக்கிறார்கள். அதேபோல சித்திரையில் சூரியன் சஞ்சரிக்கும் மேஷ ராசியைத் ‘தலை’ என்றும், ‘தலை ராசி’ என்றும் குறிப்புகள் உள்ளன.
இடைக்காட்டுச் சித்தர் சித்திரை மாதம் தொடங்கியே வருடத்தைக் கணக்கிட்டுள்ளார். அதன் அடிபடையிலேயே மாத பலன்களையும், வருட பலன்களையும் எழுதி வைத்துள்ளார். அவற்றை நாம் இன்று வரை பின் பற்றி வருகிறோம்.

Welcome to Chitra! Come to make a good mark in life!!

அறிவியலும் ஆன்மீகமும்:
ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் கணக்கிடப்பட்டதாகும். அதாவது பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரியன் மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் ஒரே சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.
சூரியன் கிழக்கில் பிரவேசிக்கும் தினத்தையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. மங்களகரமான குரோதி வருடத் தமிழ்ப் புத்தாண்டு வருடப் பிறப்பு 14-04-2024 சித்திரை திங்கள் 01 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும். சோபகிருது ஆண்டு பங்குனி மாதம் 31ம் நாள் சனிக்கிழமை இரவு மணி 8.10 க்கு ஸ்திர துலா லக்கினத்தில் சனி ஓரையில் முடிவடைந்த பிறகு, தமிழ் (ஸ்ரீ க்ரோதி நாம சம்வத்சரம்) புத்தாண்டான குரோதி பிறக்கிறது.

தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாள்:
சித்திரை மாதம் பிறப்பதற்கு முந்தைய நாள் இரவு பூஜை அறையைத் தூய்மை செய்து கோலமிட்டு அதன் மேல் ஒரு மனையை வைத்து அதற்கும் அழகிய கோலமிட்டு அதில் ஒரு நிலைக் கண்ணாடியை வைத்து அதற்கு முன்பாக தட்டில் பணம், காசுகள், நகைகள், அரிசி, பருப்பு மற்றும் பலவகையான பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து காலையில் தூங்கி எழும்போது அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பார்கள் இது காலம்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் செல்வம், மற்றும் மகிழ்ச்சி சேரும் என்று நம்பப்படுகிறது.

Welcome to Chitra! Come to make a good mark in life!!


சித்திரை புதுவருடமன்று புதுப் பஞ்சாங்கம் வாங்கி அதற்குச் சந்தனம், குங்குமம் இட்டு, பூஜையில் வைத்துப் பூஜிக்க வேண்டும். பின்னர் புது வருடப் பஞ்சாங்கத்தை வீட்டில் உள்ள பெரிவர்கள் வாயால் பஞ்சாங்கப் பலனைக் கேட்பதும், தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது. இதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம். சில தோஷங்களையும் நீக்கிக் கொள்ளலாம்.

இனிப்பும் கசப்பும், இன்பமும், துன்பமும்...
சித்திரை பிறப்பன்று வீடுகளில் மதிய விருந்தில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி, வடை பருப்பு, பாயசம் போன்றவை கட்டாயம் இடம்பெற்றிருக்கும். இன்பமும் துன்பமும் கலந்து வருவதே வாழ்க்கை என்ற தத்துவத்தை உணர்த்தவே சமையலில் வேப்பம் பூவும், பாயசமும் சரி விகிதமாகப் பரிமாறப்படுவதாக ஐதீகம். இந்த நாளில் பிறருக்கு தானம் செய்வதாலும் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தமிழ்ப் புத்தாண்டு அன்று சில கிராமங்களில் பாரம்பரியத்தை நினைவுகூரும் பொருட்டு, கோயில்களில் சிறப்புப் பூஜை நடைபெற்று மக்கள் பொங்கல் வைத்தும் வழிபடுவார்கள்.

அன்னதானம் வழங்கலாம்:
மங்களத்தின் பிறப்பாகக் கருதப்படும் தமிழ்ப் புத்தாண்டில் உப்பு, மஞ்சள், அரிசி, கற்கண்டு ஆகியவற்றை வாங்கி வீட்டில் வைப்பது மகாலட்சுமியின் அனுகூலத்திற்கு வழிவகை செய்யும். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை, கோதுமை பொருட்கள் கொடுப்பது நல்லது. ஏழை-எளியோருக்கு அன்னதானம் வழங்குதல் கூடுதல் சிறப்பு ஆகும்.

“சித்திரையே வருக! வாழ்கையில் நல்ல முத்திரை பதிக்க வருக!!” என்று உளம் மகிழ அனைவரும் வரவேற்கும் இப்புத்தாண்டில், (குரோதி) இறை வழிபாடு, தான தர்மம், ஆசி பெறுதல் போன்றவற்றைக் கடைப்பிடித்து சித்திரை மாதத்தை நாமும் மகிழ்ச்சியுடன் வரவேற்று, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வோம்!!!