தொடர்கள்
பொது
அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட சூரிய கிரகணம் - சரளா ஜெயப்ரகாஷ்

20240312134010986.jpg

அமெரிக்காவில் கடந்த திங்களன்று(9/4/24) தோன்றிய முழு சூரிய கிரகணத்தை,நிறைய மக்கள் கண்டு மகிழ்ந்தார்கள். இந்த அனுபவத்தை பெரிதும் கொண்டாடினார்கள்.

பூமிக்கு அருகே சூரியன் வரும்போது,இவற்றின் இடையே நிலவு கடக்கும்போது மற்றும் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் இணையும் சமயம் முழு சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. சூரிய வெளிச்சத்தை நிலவு முழுமையாக மறைக்கும் போது, முழு சூரிய கிரகணமும், சில இடங்களில் பகுதி அளவு மறைக்கும் போது பகுதி சூரிய கிரகணமும் ஏற்படுகின்றது. இந்த சூரிய கிரகணம் எப்போதும் அமாவாசை அன்று மட்டுமே நிகழும்.

சூரியனை நேரடியாக காண்பது கண்களுக்கு தீங்கை ஏற்படுத்தும் என்பதால் உரிய பாதுகாப்பு கருவிகளுடன் மட்டுமே சூரிய கிரகணத்தை காண இயலும்.முழுமையான சூரிய கிரகணம் உச்சநிலையை அடையும் போது மட்டுமே நம் கண்களால் காணலாம்.

இங்கு மக்கள் முழு சூரிய கிரகணத்தை பார்த்து மிகவும் பரவசமானார்கள். நான் போன வாரம் சூரிய கிரகணத்தைப் பற்றி ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னுடைய சிறு வயதில் 1980ல் ஒரு முழு சூரிய கிரகணம் தென்னிந்தியாவில் ஏற்பட்டது. அன்று அரசாங்கம் அனைவரையும் வீட்டினுள்தான் இருக்க வேண்டும் என உத்தரவு போட்டு, சூரிய கிரகணம் ஏற்படும் பகுதிகள் முழுவதும் ஊரடங்கி இருந்தது.அப்போது தொலைக்காட்சியில் தமிழ்ப்படம் ஒளிபரப்பப்பட்டது. வீட்டில் ஜன்னல் வழியாக கூட வெளிச்சம் உள்ளே வரக்கூடாது என இரண்டு திரைச் சிலைகளை போட்டு இறுக்கி கட்டி, வெளிச்சம் வரும் பகுதி அனைத்தையும் மூடி வைத்தார்கள்.அண்டை வீட்டார்கள் மற்றும் உறவினர்கள் ஐம்பது பேருடன் வீட்டின் கூடத்தில் உட்கார்ந்து படம் பார்த்தேன்.அன்று சில மக்கள் ஆர்வமிகுதியால் வீட்டின் மாடியில் இருந்து சூரிய கிரகணத்தைப் பார்த்ததால் கண்பார்வையை பறிகொடுத்த விபரங்கள் செய்திகளின் வழியாக பின்னர் தெரிய வந்தது.இவை எனக்கு ஞாபகம் வந்தது.

அமெரிக்காவில் சூரிய கிரகணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எல்லோரும் இதைப்பற்றியே பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.என் மகளின் அலுவலகத்தில் அனைத்து கூட்டங்களும்(Meetings) ரத்து செய்யப்பட்டது.அலுவலகத்தினர் முழு சூரிய கிரகணம் பார்க்க, அது தெரியும் இடத்திற்கு காரில் பயணம் செய்துப் போகவும், தங்கவும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்கள் என அறிந்து கொண்டேன்.ஓட்டல் கட்டணம் சிறப்பு நிகழ்வுகளுக்கு இருப்பதைவிட மிக அதிகமாக இருந்தன.அதுவும் கிடைக்காமல் அனைத்து அறைகளும் முன்பதிவாகி விட்டிருந்தன.ஒதுக்குப்புற பகுதியில்(remote areas) இருந்த ஓட்டலில், நிர்வாகம் கட்டணத்தை குறைத்து,வருகையாளர்கள் வர Special viewing events ஏற்பாடு செய்திருந்தார்கள்.வருகையாளர்கள் ஓட்டலின் மாடியில் மற்றும் வெளியே தோட்டத்தில் சூரிய கிரகணத்தை பார்க்க,சிறப்பான உணவு உண்ண என அவர்கள் மகிழ்ச்சியாக கண்டுகளிக்க தேவையான அனைத்து வசதிகளையும் Eclipse themed packages என நிர்ணயித்து,பார்வையாளர்களை கவரும் விதத்தில் சிறப்பாக வைத்திருந்தார்கள்.சில இடங்களில் மக்கள் சூரிய கிரகணத்தை பார்க்க,observatories வைத்திருந்தார்கள்.

உறவினரின் ஆறு வயது மகள் பள்ளியில் சூரிய கிரகணம் பார்க்க பிரத்யேகமான கண்ணாடி கொடுக்கிறார்கள் என்று சொன்னாள். நம் ஊரில்,என்னுடைய சிறிய வயதில் சூரிய கிரகணம் என்றால் சூரியனை பார்க்க கூடாது என்று விடுமுறை விட்டுவிடுவார்கள்,ஆனால் இங்கு சிறு பிள்ளைகளுக்கு கூட பள்ளி விடுமுறை விடவில்லை.பள்ளியில் ஒரு வாரமாக சூரிய கிரகணத்தை craft work மூலம் பிள்ளைகளுக்கு விவரித்திருக்கிறார்கள் அதனை முதலாம் வகுப்பு படிக்கும் சிறு பிள்ளை விளக்குவதை நான் மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தேன்.புத்தகத்தில் இருக்கும் பாடங்கள் மட்டுமல்லாமல் இப்படி பொதுவான விஷயங்களையும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது வரவேற்கத்தகுந்த விஷயமாக இருக்கின்றது.

20240312134223118.jpg 20240312134307136.jpg

கேள்விப்பட்ட விவரங்கள் அனைத்தும் கொடுத்த சுவாரசியத்தில் நான் என் வீட்டினருடன் ஞாயிறன்று கண்ணாடி வாங்க ஒவ்வொரு இடமாக போனேன்.இங்கு நூலகம்,பள்ளிகள்,பெரிய கடைகள் மற்றும் பொது இடங்களில் விநியோகம் செய்யப்பட்டு கொண்டு இருந்தது.கண்ணாடி எங்கும் கிடைக்கவில்லை;அனைத்தும் காலியாகிவிட்டது.

2024031213442745.jpg

ஏப்ரல் எட்டாம் தேதி திங்களன்று நாடே அல்லோலகலப்பட்டது.கிரகணம் பார்ப்பதை தவறு விடக்கூடாது என்ற எண்ணம் எனக்கு வந்தது.அன்று வீட்டில் அனைவரிடமும் மதிய உணவை 12:30 மணிக்கு சாப்பிட வந்து விட வேண்டும்;அதற்கு பிறகு சாப்பிட வந்தால் ஐந்து மணி வரை சாப்பாடு கிடையாது என கட்டளை இட்டு,பசி இல்லாமல் இருந்தவர்களை வலுக்கட்டாயமாக 12.30 மணிக்கு சாப்பிட வைத்து, சமையலறையில் இருக்கும் வேலைகளை அவசர அவசரமாக முடித்தேன். நாங்கள் இருந்த இடத்தில் மதியம் இரண்டரை மணிக்கு கிரகணம் ஆரம்பிக்கின்றது. நானும்,என் மகளும் ஒரு மணிக்கு கண்ணாடி வாங்க பொதுமக்கள் பூங்காவிற்கு போனோம்.அங்கு போனவுடன் இன்னும் எனக்கு வியப்பாக இருந்தது. கடற்கரைக்குச் சென்றது போல இருந்தது.கடற்கரையில் உபயோகப்படுத்தும் beach chair போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். போர்வையை புல்தரையில் விரித்து, அதில் உட்கார்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும் இருந்தார்கள். தண்ணீர்,காபி,சாப்பாடு என அனைத்தும் வீட்டிலிருந்து எடுத்து வந்து, உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.அங்கு ஒரு booth இருந்தது.கண்ணாடிகளை இலவசமாக மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.இந்த கண்ணாடி அட்டையால் ஆனது.கண் பார்க்கும் இடத்தில் கண்களுக்கு பாதுகாப்பான பொருட்களால் ஆன Film இருந்தது.இது ISO ஆல் அங்கீகரிக்கப்பட்டது.எங்களுக்கு கண்ணாடி கிடைத்தது.இங்கே தேவை அதிகமாக இருந்ததால், குடும்பத்தினரில் இரண்டு பேருக்கு ஒன்று என கொடுத்தார்கள். இதனை வாங்கிக் கொண்டு வரும் வழி எல்லாம் மக்கள் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் பார்பிக்யூ(barbeque) வைத்து சமைத்துக் கொண்டிருந்தார்கள். நண்பர்களுடன் சூரிய கிரகணத்தை பார்க்க பார்ட்டி நடந்து கொண்டிருந்தது.decorations போட்டிருந்தார்கள்.பக்கத்து வீட்டிலும் Eclipse watch party நடந்து கொண்டிருந்தது. எல்லோரும் Potluck lunch எடுத்துக்கொண்டு போனார்கள். பிள்ளைகளுக்கு craft work activities வைத்திருந்தார்கள்.

இங்கு மக்கள் வீட்டில்,விழாவிற்கு தொடர்புடைய பொருட்கள் மற்றும் வடிவங்களை வைத்து அலங்காரம் செய்வது, பருவத்திற்கு ஏற்ற காய்கறிகளை சமைப்பது ,உடைகளை அணிவது ஆகியன அமெரிக்க மக்களின் பண்டிகை கால கொண்டாட்டங்களில் இருக்கும். அதுபோல இப்போது சூரிய கிரகணம் சம்பந்தமான விவரங்களையும் வடிவங்களையும், பொருட்களையும் அலங்காரமாக தொங்கவிடுவது, அந்த வடிவங்கள் இருக்கும்படியான அணிகலன்களையும் உடைகளையும் அணிந்து கொள்வது என குதூகலமாக சூரிய கிரகணத்தை கொண்டாடினார்கள்.

20240312134544784.jpg

கண்ணாடி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். கண்ணாடி கிடைக்காதவர்கள் கிரகணத்தைப் பார்க்க box pinhole projector தயார் செய்து, அது வழியாக கிரகணத்தை பார்ப்பது கண்ணிற்கு பாதுகாப்பு என நாசா அறிவித்திருந்தது. தொலைக்காட்சி செய்திகளில் எப்படி தயார் செய்வது என காண்பித்தார்கள். அப்போது இதனை நான் பார்த்து செய்ய ஆரம்பித்தேன்.செவ்வக வடிவில் உள்ள cereal அட்டைப்பெட்டியின் அடிப்பக்க அளவிற்கு வெள்ளை பேப்பரை வெட்டி, அதன் உட்பக்கத்தில் உட்கார வைத்தேன்.அதேபோல அளவு உள்ள மேல் பகுதியில்,நடுப்பகுதியை மட்டும் விட்டுவிட்டு, இடது பக்கமும் வலது பக்கமும் ஒரு சிறிய செவ்வக அளவிற்கு வெட்டி எடுத்துக் கொள்ளவும்.இடது பக்கத்தை அப்படியே திறந்த வெளியாக விட்டுவிட்டு,வலது பக்க வாயில் Aluminium foil ஒட்டி விடவும்.அதற்கு நடுவே குண்டூசியால் ஒரு சிறிய துளை குத்தி விடவும். நம் தலைக்கு பின் பக்கமாக சூரியன் இருக்கும்படியாக நின்று கொண்டு,இந்த அட்டைப்பெட்டியில் இடது பக்க வாய் வழியாக நாம் கவனித்தால், குண்டூசி குத்தின துளை வழியாக சூரியக்கதிர்கள் பாய்ந்து, வெள்ளை பேப்பரில் சூரிய கிரகணத்தின் பிம்பம் தெரியும்.சாதாரணமாக நல்ல வெயில் நேரத்தில் அடர்ந்த இலைகள் உள்ள மரத்தடியில் பெரிய மரத்தின் அடியில் நிற்கும்போது, இலைகளுக்கு நடுவே உள்ள இடைவெளி வழியாக சூரிய கதிர்கள் பாய்ந்து,கீழே இருக்கும் தரையில் வட்டமாக ஒளிரும் சூரியனை நாம் பார்த்திருப்போம்.அதே கோட்பாடு தான் என புரிந்தது.பள்ளியில் படித்த இயற்பியல் ஞாபகம் வந்தது.

2024031213465140.jpg

நாங்கள் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் சூரிய கிரகண நேரம் வந்தது. ஒரே கண்ணாடியை வைத்து வீட்டில் நாங்கள் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் வீட்டிற்கு வெளியே வந்து சூரியனை பார்த்தோம்.பிறை நிலா வடிவம் வந்தது.என் வாழ்க்கையில் நான் பார்த்த முதல் சூரிய கிரகணம் என்ற மகிழ்ச்சியை கொடுத்தது.நாங்கள் இருக்கும் இடத்தில் Partial solar eclipse தான் தெரிந்தது.அட்டைப்பெட்டியின் வழியாக பார்த்த போது,அமாவாசைக்கு அடுத்த இரண்டு நாட்களில் தெரியும் பிறை நிலா போல தெரிந்தது. பிசிக்ஸ் பிராக்டிகல் எக்ஸாம் ரிசல்ட் வந்தது போல எனக்கு சந்தோஷமாக இருந்தது.

நிலா நீள்வட்ட பாதையில் சுற்றி வரும்போது, சில இடங்களில் நிலா சூரியனை பகுதி அளவு மட்டும் மறைப்பதால், பிறை நிலவாக சூரியன் காட்சியளிக்கின்றது. அந்த இடத்தில் சூரியனின் அளவைவிட நிலவின் அளவு சிறிதாக இருப்பதால் பகுதி அளவு மட்டும் சூரியனை மறைக்கிறது. இதுதான் ‘Partial solar eclipse’ என்று அழைக்கப்படுகிறது.

சில இடங்களில் நிலா சூரியனை விட அளவில் சிறியதாக இருப்பதால் முழுமையாக மறைக்காமல் இருக்கும், அங்கு ஒளிரும் நெருப்பு வளையம் போல சூரியன் காட்சியளிக்கும் இது வளைய சூரிய கிரகணம் (Annular solar eclipse) என்று அழைக்கப்படுகிறது.அப்பகுதிகளில் சூரியன் முழுவதுமாக மறையாது.

நாங்கள் இருக்கும் பாஸ்டன்(Boston)நகரத்தில் மதியம் 3.30 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்பட்டது. அந்தி சாயும் நேரத்திற்கு சற்று முன்பாக இருப்பது போல வானம் காட்சியளித்தது.பறவைகள் அந்தி சாயும் நேரம் வந்துவிட்டதாக, குழப்பத்துடன் இங்கும் அங்குமாக சத்தம் போட்டு, தங்கள் இருப்பிடம் தேடி பறந்து கொண்டிருந்தது இரவில் கேட்கும் பூச்சிகளின் சத்தம் கேட்டது.சட்டென்று சுற்றுப்புற சூழ்நிலை முன்பு இருந்ததை விட குளுமை ஆயிற்று. இந்த மாற்றங்கள் எனக்கு வினோதமாக இருந்தது.நாசா, சூரிய கிரகணம் பூமியில் உயிரினங்களை எப்படி பாதிக்கின்றது என கிரகணம் நடக்கும்போது ஆராய்ச்சி நடத்தினார்கள்.

நானும் முழு சூரிய கிரகணம் ஏற்பட்ட இடத்திற்கு பயணம் செய்திருக்கலாம் என்ற உணர்வு, அங்கு கூடி இருந்த மக்களின் செயல்களை பார்த்து டிவியில் பார்த்தபோது எனக்கு தோன்றியது.அந்த இடத்தில் சுற்றிலும் மக்கள் திரண்டு இருக்க,அந்த “திக் திக்” நிமிடங்கள் வந்தன. சூரியன் முழுவதுமாக மறைந்து, நல்ல மதிய வேளையில் சுற்றுப்புறம் முழுவதும் இருட்டாகியது.வேறு ஒரு கிரகத்திற்கு வந்தது போல ஒரு உணர்வால் மக்கள் பரவசம் ஆனார்கள்.முழு சூரிய கிரகணம் ஏற்பட்ட பல இடங்களில், மக்கள் திருமணமும் திருமணஉறுதி செய்யும் நிகழ்வையும் நடத்தினார்கள்.300 தம்பதிகள் ஆர்கன்சாஸ்(Arkansas) மாநிலத்தில்,மக்கள் கூட்டத்தின் நடுவில் திருமணம் செய்து கொண்டார்கள்.அவர்களின் திருமணம் சிறப்பான நிகழ்வாக இருக்க கருதி,முழு சூரிய கிரகணம் அன்று இப்படி செய்து கொண்டார்கள்.

20240312134803583.jpg 20240312134912865.jpg

இங்கு முற்றிலும் இருட்டாகிய சில நிமிடங்கள் கழித்து நிலா விலக ஆரம்பித்தவுடன், மக்களால் சூரியனின் வெளிப்புற ஒளி வட்டத்தை (Sun’s corona) பார்க்க முடிந்தது. அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் சூரியனின் கொரோனா பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு இந்த நிகழ்வு மிகவும் உதவியாக இருக்கும். இதற்குப் பிறகு சூரியன் வைர மோதிரம் போல காட்சி அளித்தது. இந்த நேரத்தில் தம்பதிகள் மோதிரத்தை மாற்றிக் கொண்டனர்.

20240312135030878.jpg

அமெரிக்காவில் தெற்கு மேற்கிலிருந்து வடக்குக் கிழக்கு வரை இந்த சூரிய கிரகணம் இருந்தது. இந்தப் பாதையில் பல முக்கியமான நகரங்கள் இருந்ததால்,பல்லாயிரக்கணக்கான மக்களால் இந்த சூரிய கிரகணம் பார்க்கப்பட்டது.இது அரிய நிகழ்ச்சியாக கருதப்படுகின்றது.சமீப காலங்களில் முழுமையான சூரிய கிரகணம் பார்க்க முடியாத இடங்களில்தான் நடந்திருக்கின்றது. இதுபோல நிறைய பெரு நகரங்களில் பார்க்க நேரிடவில்லை.அதனால் இந்த சூரிய கிரகணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அமெரிக்காவில் பெருநகரங்களில் இந்த நிகழ்வு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.திருவிழா போல கடைகள்,சாப்பாட்டு வண்டிகள் மற்றும் பல செயல்பாடுகள்(activities) இருந்தன.அந்த இடங்களில் வியாபாரமும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.மக்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கு கட்டணமாக 100$, ஓட்டல் அறைக்கு 500 $ என அதிகப்படியான பணத்தை கொடுக்கும் தேவை இருந்தது.

இந்த இடங்களில் சூரிய கிரகணம் முடிந்து,மக்கள் வீட்டிற்கு திரும்பும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, எங்கள் ஊருக்கு மூணு மணி நேர பயணத்தில் வர வேண்டியவர்கள் எட்டு மணி நேரம் கழித்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மொத்தத்தில் அமெரிக்க மக்கள் சூரிய கிரகணத்தை பெரிய வைபவமாக கொண்டாடினார்கள்.குழந்தைகளுக்கு அதனை பற்றிய அறிவியல் விளக்கத்தை அவர்களுக்கு புரியும் வகையில் விளக்கி,அறிவியல் மேல் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இயற்கையை நேசிக்கவும் சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்கிறார்கள்.

அமெரிக்க மக்கள் இயற்கையை எப்படி நேசிக்கிறார்கள் என்பதனை நான் நன்கு தெரிந்து கொண்டேன்.