தொடர்கள்
பொது
சநாதன தர்மம் "வர்ணாசிரமம் இன்றும் நமக்குப் பலன் தருமா?" - ஆர் சங்கரன்

20240312114704492.jpg

வர்ணாசிரமம் இன்றும் நமக்குப் பலன் தருமா? என்று பீடிகையோடு நம்மிடையே இணைகிறர் நமது சங்கரன்.

நமது பாரதம் பதினொன்று பன்னிரண்டாவது நூற்றாண்டு வரை தனது சிறப்பைச் செல்வச் செழிப்பை வளமையை வாணிகத்தை உள்நாட்டு நிர்வாகத்தை விடாமல் வைத்திருந்ததற்கு அடிப்படைக் காரணம் அது வர்ணாசிரம தர்மங்களைக் கடைப்பிடித்ததுதான். மேலே கண்டவாறு, அதாவது, எல்லாவற்றையும் பணத்தில் எடைபோடும் பழக்கம் பெண்மையயும் அந்த விதத்தில் எடைபோட்டு அவளுக்கு பண சுதந்திரத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டதுதான் காலத்தின் கோலம்! எந்த வர்ணமும் ஏற்றத்தாழ்வைச் சந்திக்கவில்லை, ஒரு உடலில் எவ்வாறு எல்லா உறுப்புகளும் அந்தந்த இடத்தில் இருந்து அந்தந்தச் செயல்களைச் செய்கின்றனவோ அதுபோல மக்கள் எல்லாரும் நாடு என்ற உடலின் அங்கங்களாக எந்த பாகுபாடும் இல்லாது வாழ்ந்தனர்.

கலாசாரத்தில் பின் தங்கிய அந்நியர் படையெடுப்பால் சிதறிப்போன பாரத சமுதாயம் தனது தர்மங்களை விடுத்து மறந்து வாழத் தொடங்கியவுடன் அவர்களது தனித் தன்மையும் சிறப்பும் அழியத் தொடங்கியது.

அடுத்து வந்த அந்நியர்கள் இந்த அழிவை மேலும் துரிதப்படுத்தி பண்டைய நாகரீகம் இழிவானது என்ற பொய்ப் ப்ரசாரத்தையும் பரப்பினார்கள். நானூறு ஆன்டுகளுக்கும் மேலாக உயிர்வாழ்வதே பெரும் சாதனை என்று தன்னிலை மறந்த பாரத மக்கள் அந்த பொய்ப் ப்ரசாரத்தை இன்று வரை நம்பி வருகிறார்கள்.

நிற்க.

என்றால் வர்ணாசிரமம் இன்றும் நமக்குப் பலன் தருமா? இன்றைய காலகட்டத்தில் அந்த தர்மங்களை இன்றும் செயல்படுத்த முடியுமா? இந்தக் கேள்விகள் எல்லார் மனத்திலும் உண்டு. இவற்றிற்கு ஒற்றைச் சொல்லில் முடியாது என்ற விடையைச் சொல்லி, இந்த வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படைக் கொள்கைகளை நன்மைகளை மறைக்கிறது இன்றைய உலகம்.

ஆயிரம் ஆண்டுகளகப் படையெடுப்புகளையும் கலாசாரத் தாக்குதல்களையும் இயற்கைப் பேரிடர்களையும் சந்தித்த பாரதம் இன்றும் தனது தொன்மையான கலாசாரத்தின் வேர்களைப் பாதுகாத்து வருவதை எவராலும் சகிக்க முடியவில்லை. அதன் வெளிப்பாடே இந்தத் தாக்குதல்.

வர்ணம் ஆசிரமம் என்பவை இரண்டு கோட்பாடுகள் என்று பார்த்தோம்.

ஆசிரமத்தின் கோட்பாடுகள் இன்றும் எந்த நாட்டிற்கும் நன்மை செய்பவை.

இளமையில் கல் என்ற ஔவையின் வாக்குதான் முதல் ஆசிரமம். அதில் கல்வி என்பதைத் தவிர காதல், வீரம், அரசியல் என்பவை எல்லாம் இருக்கக் கூடாது என்பதே சொல்லப் பட்டது. கற்கும்போதே சம்பாதிப்பது என்ற எண்ணம் வந்துவிட்டால் அந்த கல்வியின் தரம் மிகவும் குறைந்து போகிறது. அறிவின் மேம்பாடு என்ற நிலையிலிருந்து பணம் சேர்க்கும் ஒரு முறையாக மட்டும் இன்றைய கல்வி மாறிவிட்டது.

அடுத்தது இல்லறம்.

‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது’

இது வள்ளுவனின் வாக்குதால் அதன் வழிகாட்டும் கொள்கை. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றும் இல்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று இல்லறத்தவர்கள் இருந்தால்தான் எந்த நாடும் அமதியுடனும் வளத்துடனும் இருக்கும்.

தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்பவரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும் என்று குறள் அறுதியிட்டுச் சொல்லும். ஆக அறத்தைக் காப்பது, அவ்வழியில் நடப்பது, அவ்வழியில் மற்றவரை நடத்துவம் என்று இல்லறம் இருக்க வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க வழியில்லை.

உலகியலை ஒதுக்கிப் பொதுநலமும் ஆன்மநலமும் நாடும் வானப்ரஸ்தம் என்ற நிலை இன்று உலகில் இல்லை. சாகும் வரை சம்பாதிக்க வேண்டும் பதவி வேண்டும் பட்டங்கள் வேண்டும் என்று தேவைகளைக் கூட்டிக் கொண்டுபோகும் நிலை மாறி 60-65 வயதிற்கு மேல் தேவைகளைக் குறைத்துக் கொள்ளும் அறிஞர்கள் இருப்பதே அந்த நாட்டின் பெரும் சொத்து. வரலாற்றைச் சரியாகப் புரிந்துகொண்டு தம் அனுபவத்தின் கூர்மையால் வருங்காலத்திற்கு நல்வழி காட்டும் இவர்களை நாம் இன்று காணமுடிவதில்லை.

இதில் சிலர் முழுவதும் உலகைத் துறந்து துறவியாக இருந்து விருப்பு வெறுப்பு அற்ற வழிகாட்டிகளாக இருப்பது மற்ற மூன்று ஆசிரமத்திற்கும் கலங்கரை விளக்கமாக இருக்கும்.

இதுவும் முடியும் என்று மனதில் தைரியத்தைக் கொடுப்பதோடு உலகமே குடும்பம், எல்லாரும் நன்றாக இருக்கவேண்டும் என்ற பொதுக் கண்ணோட்டத்தையும் இவர்கள் தருகின்றனர். இன்று அந்த நிலையில் உள்ளவரைக் கைவிரல்களால் எண்ணிவிடலாம்.

இவ்விதம் இல்லாமல் மக்கள் எந்த வயதிலும் எந்த நிலையிலும் எதுவும் செய்யலாம் என்று இருப்பதால் குழப்பமும் நிலையற்ற தன்மையும் நிலவுகிறது.

மொட்டு மலராகி மலர் காயாகிக் காய் பழமாவதுதான் இயற்கை.

ஒரு காய் ‘இல்லை இல்லை நான் மீண்டும் மொட்டுபோல் இருந்து இன்புற வேன்டும்’ திரும்பினால் உலகம் ஸ்தம்பித்து விடும். பிஞ்சு காயாகின் கனிந்தால்தான் பலனும் சுவையும். அது நேரே கனிந்தால் அதனை வெம்பியது என்று ஒதுக்குவோம். அதுபோல் மாங்காய் மாங்கனியாகவும் பலாக்காய் பலாப்பழமாகவும் ஆவதுதான் இயற்கை. இவ்விரண்டும் மற்றொன்று போல இருக்க நினைத்தால் உலகம் தலைபுரண்டு விடும்.

ஆக ஆசிரம தர்மத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் இன்றும் பயன்படுபவை. அவற்றை சட்டம் மூலம் திணிக்க முடியாது. மெல்ல மெல்ல மக்கள் அவற்றைத் தம் வாழ்க்கையில் இணைத்துக் கொண்டு அடுத்தடுத்த தலைமுறைகளை செம்மைப் படுத்தினால் எந்த நாடும், குறிப்பாக பாரத நாடு மேன்மை அடையும். அது மற்றவர்க்குப் புதிதாகக் கற்க வேண்டிது, நமக்கோ மறந்ததை நினைவு கூர வேண்டியது மட்டும்தான்.

20-25 வயதுவரை கல்வி: அந்த வயதில் வேறு கவனச் சிதறல்கள் இருக்கக் கூடாது. அதன்பின்னர் இல்லறம். அந்த வாழ்க்கை 60-65 வரை தொடரும். செல்வம் சேர்ப்பதும், இன்பம் அனுபவிப்பதும், மக்கள் நண்பர் சுற்றம் என்று வாழ்க்கையின் வட்டத்தைப் பெரிதும் அனுபவிப்பதும், பதவி புகழ் என்பவற்றைப் பெறுவதும் இந்த 40-45 வருட காலத்தில் காணவேண்டியது. ஆனால் அது அறவழியில் இருக்க வேண்டும். மற்றவரைப் பார்த்துப் பொறாமை கொள்ளாமல் தனது திறமை, ஆற்றல் இவற்றின் வழி சிறக்க வாழ்வது நல்ல இல்லறம். இது நாட்டின் சட்டம், ஒழுங்கும் பொருளாதாரம், கலை, இலக்கியம் என்ற எல்லாத் துறைகளுக்கும் ஆதாரமாக இருக்கும்.

பொதுவாக இந்தக் காலத்தில் 60-65 வயது என்பது பணி ஓய்வு பெறும் வயதாக அமைகிறது. அந்த நிலையில் குடும்பத்தின் பொறுப்புகள் வெகுவாக முடிந்திருக்கின்றன. அந்த வயதில் நான், எனக்கு என்ற எண்ணம் மறைந்து இந்த சமுதாயத்திற்கு இந்த நாட்டிற்கு நலமான பணிகளை ஒரு தொண்டு மனப்பான்மையுடன் செய்ய வேண்டும். அது மற்ற இரு ஆசிரமங்களுக்கும் ஒரு வழிகாட்டியாகவும் தவறு செய்தால் சுட்டிக் காட்டும் சக்தியாகவும் இருக்கும்.

துறவறம் என்பது மிகச் சிலராலேயே இயல்வதாகும். ஒரு பலாமரத்தின் ஆயுளில் ஆயிரக் கணக்கான விதைகள் ஏற்பட்டாலும் அதில் சிலதே மீண்டும் மரமாக முளைக்கின்றன. அந்தச் சில மரமாவதற்காகவே பல்லாயிர்ம் விதைகள் தோன்றுகின்றன. அதுபோல உண்மையான சில துறவிகள் இருந்தாலே அந்த சமுதாயம், அந்த நாடு பெரும் சிறப்பை அடையும்.

ஆசிரம தர்மத்தின் கோட்பாடுகள் என்றும் எல்லாவருக்கும் பொருந்தும், பலன் தரும் என்பது இங்கே சுருக்கமாகச் சொல்லப் பட்டது. வர்ணதர்மத்தின் நிலையை வரும் வாரத்தில் காண்போமே என்று விடை பெற்றார் சங்கரன்.