தொடர்கள்
கதை
வயது என்(ண்)பது... மாலதி ராஜா

20240320085630692.jpeg

Photo credit: Igor Perlin.

அந்த வீட்டின் கூடம் மூன்று ஸ்நேகிதிகளின் சிரிப்பால் கல கலத்துக் கொண்டிருந்தது.

"உனக்கு வாட்ஸப் அனுப்பினேனே , எப்படியிருந்தது ?" மீனா கேட்க,

"ரொம்ப அழகா இருந்தது. என் ஃ பிரெண்ட்ஸ் குரூப் க்கு forward பண்ணிட்டேன்." facebook, instagram லயும் போட்டாச்சு " என்றாள் கோமதி .

"மங்கை, நீ facebook ல இருக்கயா ?" என்றாள் கோமதி.

"இருக்கேனே! ஆனா ரொம்ப ஆக்ட்டிவ் கிடையாது".

பப்பி சமையல் அறை உள்ளே இருந்து எட்டிப் பார்த்தாள். ரகசியமாக தன் அம்மாவிடம் சென்று.
"என்னம்மா நடக்குது இங்க?" என்று கேட்டாள்.
"ஷ் ஷ் ஷ் .. சத்தம் போடாம பேசறதை கேளு " என்றாள் ராதிகா.
ஹாலில் மங்கை மீனாவிடம் அவள் பிராயணத்தைப் பற்றி கேட்டுக்கொண்டிருந்தாள்.
" எப்படி திடீர்னு பிளான் போட்டீங்க ரெண்டு பேரும்? டிக்கெட் கிடைச்சுதா?
"IRCTC app ல தத்கால்ல டிக்கெட் போட்டேன். ஒரு பிரச்னையும் இல்லை. நீயும் டவுன்லோட் பண்ணிக்கோ அத. நாம யாரையும் நம்ப வேண்டாம்."
மங்கை சரி என்பது போல் தலை ஆட்டினாள்.
" சரி திடீர்னு வந்துருக்கீங்க ரெண்டு பேரும். ராதிகா கிட்ட சொல்லி ஏதாவது சாப்பாடு செய்ய சொல்றேன் என்று மங்கை எழுந்தாள்.
மீனா உடனே, " யாருக்கும் எந்த கஷ்டமும் வேண்டாம். நாம ஸ்விக்கி பண்ணிடலாம். பப்பியை கூப்பிடு. அவளுக்கு என்ன வேணும்னு கேளு" என்று மீனா, தன் போனில் ஸ்விக்கி யை தேடினாள்.

"இது ரொம்ப டூ மச் மா ! என்னால முடியல. ரொம்ப பந்தாவா இருக்கே. நாங்க செய்யறதெல்லாம் அவங்க செஞ்சுகிட்டு!" பப்பி அவர்கள் கவனிக்கும் முன்னால் தன ரூமுக்கு சென்றுவிடலாமென்று தயங்கி தயங்கி வெளியே வந்தாள்.
" எங்கடி போற. உனக்கு என்ன வேணும்னு சொல்லிட்டு போ" மங்கை அவளை நிறுத்திக் கேட்டாள்.
பப்பி தயங்கி தயங்கி "எனக்கும் இட்லி யே சொல்லுங்க" என்றாள்.
மீனா அவளைப் பார்த்து, "நாங்க பன்னீர் பட்டர் மசாலா, நான் தான் சாப்பிடப்போறோம். உனக்கு இட்லி போதுமா? அம்மாக்கு?
என்றாள்.
பப்பி கோவமாக சமையல் அறையைப் பார்த்துக் கொண்டே, அம்மாக்கு ரவா உப்மா" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
"ஏய்,பப்பி இரு இரு, உனக்கு ஒரு handbag வாங்கினேன். பிடிச்சுருக்கா பாரு என்று கோமதி ஒரு பையை நீட்டினாள்.
"நல்ல இருக்குன்னா சொல்லு, உங்கம்மாக்கும் ஒன்னு வாங்கிடறேன். அமேசான் ல தான் ஆர்டர் பண்ணினேன்." ஒன்றும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே தலை ஆட்டிவிட்டு பப்பி உள்ளே சென்றாள்.
"மங்கை என் போன்ல சார்ஜ் இல்ல, நீ i phone வைச்சுருக்கயா? என்று மீனா கேட்க, இல்லையே என்கிட்டே android போன் தான். பப்பி கிட்ட கேட்டு வாங்கித்தரேன் என்று எழுந்து ரூமுக்குச் சென்றாள் மங்கை.
ரூமுக்குள் நுழைந்த உடனே பப்பி தன்னிடம் இருந்த சார்ஜரை எடுத்துக் குடுத்து,
"இவங்கெல்லாம் எப்போ கிளம்பறாங்க?" என்று ரகசியமாக கேட்டாள்.
"நாங்க மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போறோம், திருப்பி என்ன கொண்டுவந்து விட்டுட்டு போவாங்க! ஏன் ?" கேட்டுவிட்டு பதில் எதிர் பார்க்காமல் ஹாலுக்கு வந்தாள்.

"மங்கை கால் கொஞ்சம் வலி இருக்கோ, விந்தி விந்தி நடக்கறயே ? என்று கேட்டு விட்டு பதிலுக்கு எதிர்பாராமல், "கொஞ்ச நஞ்ச வேலையா! பதினாறு வயசுல கல்யாணம் ஆச்சா உனக்கு? என்று கேட்டாள் மீனா .
"ஆமாம். நம்ம எல்லாருக்குமே அப்படித்தானே! உனக்கும் என்ன! சம்சாரி குடும்பம் தானே! கோமதிக்கு கேக்கவே வேண்டாம். இன்னும் அப்படித் தான் இருக்கா." என்று பதில் சொன்னாள் மங்கை.
"என்ன செய்ய சொல்லு! எதிலிருந்து தப்பிக்க முடியும்? போற போக்கிலே போகவேண்டியது தான்." சிரித்துக்கொண்டே பதில் சொன்னால் கோமதி.
"நம்ம ஊருக்கு போனயா இப்போ, மங்கை அடிக்கடி போறா தெரியும். நீ? மீனாவைப் பார்த்து கோமதி கேட்டாள்.
"மூணு வருஷத்துக்கு முன்னாடி போனேன். நிறைய மாறி போச்சே."
"அப்போ எல்லாம், ஒண்ணா சேந்து தானே குளிக்கப்போவோம் குளத்துக்கு. உங்கண்ணா ரொம்ப கேலி பண்ணுவாண்டி மங்கை", சிரித்துக்கொண்டே மீனா கூற, "தேவை இல்லாததையெல்லாம், ஞாபகம் வைச்சுக்கோ" என்று மங்கையும் சிரித்துக் கொண்டே பதில் கூறினாள்.
உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த பப்பி க்கு அவர்கள் பேச்சில் இப்போது ஆர்வம் வந்தது. மெதுவாக வெளியே வந்து அவர்களை பார்த்தாள்.
கிட்டத்தட்ட எண்பதை நெருங்கும் மூன்று தோழிகள். பதினாறு வயதில் திருமணம். எத்தனையோ கஷ்டங்கள், பாடுகள், சந்தோஷங்கள். அனைத்தையும் நீஞ்சி கடந்து தங்களை காலத்துக்கேற்ப மாற்றிக் கொண்டு. ஆச்சர்யமாக இருந்தது பப்பிக்கு. மெதுவாக தன் பாட்டி அருகே வந்து உட்கார்ந்து கொண்டு, கோவிலுக்கு போகலையா? கார் புக் பண்ணட்டுமா என்றாள்.
"வேண்டாம்டா செல்லம். நான் ஓலா போட்டுக்கறேன். சாப்டுட்டு போகலாம். நீ வரையா?" என்று கேட்டாள் கோமதி.
"எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க பாத்து போயிட்டு வாங்க என்றாள்.
சாப்பாடு வந்ததும் அனைவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். இட்லி, உப்மா, நான், பன்னீர் பட்டர் மசாலா எல்லாம் எல்லாருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் போது பப்பி கேட்டாள், " இத்தனை வருஷத்துல உங்களுக்கு எதையாவது மிஸ் பண்ணிட்டோம்ன்னு தோணுதா?"
"எங்களுக்கு சாய்ஸ் கிடையாதே. இதை காட்டிலும் இது பெட்டெர் னு யோசிக்க. யாரோ போட்டு குடுத்த ரோடு. எந்த கேள்வியும் கேக்காம எங்க பயணம். ஆனா குறையோ வருத்தமோ இல்ல. கத்துக்கணும்னு ஆர்வம் மட்டும் எங்களுக்கு உண்டு. சின்ன வயசுலேர்ந்தே அப்படித்தான். மங்கை ரொம்ப அழகா பாடுவா. அந்த காலத்துலயே எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணினவ. கல்யாணம் ஆனதுக்கப்போறம் கோவில்ல பாடறதோட சரி. இப்போ தான் எங்க குரூப் ல அவளை டெய்லி ஒரு பாட்டு பாட சொல்லி அனுப்ப சொல்றோம். நாங்க எல்லாரும் கத்துக்கறோம். கோமதி, அழகா கோலம் போடுவா. பெயிண்டிங் மாதிரி இருக்கும். இப்போவும் அப்படித்தான் போடறா. facebook ல அப்லோட் பண்றாளே.!'

"நீ மட்டும் என்ன, உன் சமையல் குறிப்பு தான் இப்போ ட்ரெண்டிங்" சிரித்துக்கொண்டே மீனாவைப் பார்த்து கோமதி கூறினாள்.


பப்பிக்கு ஆச்சர்யமாக இருந்தது. சற்று முன் அவர்கள் பேசிய போது தனக்கு ஏன் கோவம் வந்தது என்று யோசித்துப் பார்த்தாள். வயசானவங்க டெக்னாலஜி பேசினா நமக்கு பிடிக்கறதில்ல. அவங்க வயசுக்கு என்ன பேசணும்னு நம்மளே முடிவு செஞ்சுடறோம் .

கொஞ்சம் குற்றவுணர்வு தலை தூக்கியது பப்பிக்கு. அதை ஈடு கட்ட, நான் வரேன் உங்களோட கோவிலுக்கு என்றாள். ஜீன்ஸ் பேண்டுடன் கிளப்ப இருந்தவளை கூப்பிட்டு," தாவணி போட்டுண்டு வாயேன். தலையை வாரிக்கோ . சின்னதா பொட்டு வைச்சுக்கோ என்று மங்கை பாட்டி சொன்னபோது ஏனோ மறுக்கத் தோணவில்லை பப்பிக்கு.