டிகிரி முடித்ததும், எந்த வேலைக்கும் போகாமல் அந்தக் கிராமத்தைச் சுற்றி வரும் பொலிக்காளையாக இருந்தான் .விக்னேஷ்.
அவன் பொழுது போக்குக் காலையில் டிஃபன் சாப்பிட்டு விட்டு , அம்மாவிடம் கெஞ்சி நூறு ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு, அரச மரத்தடியில் சீட்டு விளையாடுவது. பின் அரட்டை. வண்டி எடுத்துகிட்டு டவுன் போய்ச் சுத்துவது .
“ஏண்டா இப்படிப் பொறுப்பில்லாமல் சுத்திக்கிட்டு இருக்கியே? வேலை வெட்டிக்கு போகவேண்டாமா? “ என்று அப்பா ஒரு முறை கேட்டபோது
“இத பாரு !.! இப்ப காசு கொடுப்பியா இல்லையா?” எப்ப வேலை பார்க்கணும்னு எனக்குத் தெரியும்” என்று சண்டை போடுவான்.
“போடா தண்டச் சோறு” என்று அவனை விரட்டி அடிப்பார்.
“ நான் கண்டிப்புடன் இருக்கும் போது ,நீ செல்லம் கொடுத்து அவனைக் கெடுக்கிறே?”
“அவனுக்குக் கிரக நேரம் சரியில்லைன்னு ஜோசியர் சொல்லியிருக்காரு. போகப் போகச் சரியாயிடுமாங்க”.
“போடி நீயும் உன் ஜோசியமும்”
அந்த வாரம் வந்திருக்கும் புதுப் படத்துக்கு நண்பர்களைக் கூட்டி செல்கிறேன் என்று சவால் விட்டவன், பணம் இல்லாமல் தவித்தான்.
என்ன செய்யலாம்?.யார்கிட்ட கேட்பது. இது தன்மான பிரச்சனை. நண்பர்களைக் கட்டாயம் அழைச்சிட்டு போகணும். ஆயிரம் ரூபாய் வேணுமே”.
.நிறையப் பேர்களிடம் கடன் வாங்கியாச்சு.திரும்பக் கேட்டா அடிக்க வருவாங்க .”
அவனுக்குப் பெரியப்பா ஞாபகம் வந்தது .
சில சமயம் பெரியப்பா பெரியம்மாவின் கத்தலுக்குப் பயந்து பணம் கொடுக்கமாட்டார். அவங்க. கொஞ்சம் கெடுபிடி.
அவங்க இல்லாத நேரம் தான் போகணும்.
கடவுளை வேண்டிகிட்டே போன விக்னேஷ் பத்து வீடு தள்ளி உள்ள அவங்க வீட்டை நெருங்கும் போது, பெரியம்மா கையில் கூடையுடன் வேலைக்கார பொண்ணுடன் கடைத்தெருவுக்குப் போனது தெரிந்தது.
திண்ணையில் உக்கார்ந்து பேப்பர் படிச்சுகிட்டு இருந்தவரிடம்
“பெரிப்பா பெரிப்பா”? தலையைச் சொரிந்து நின்னப்ப, பெரியம்மா போன திசையைப் பார்த்துவிட்டு ,” காரணம் சொன்னவுடன் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து அனுப்பினார்.
அவரும் நமக்குத் தான் பிள்ளை குட்டி கிடையாது போகட்டும் தம்பி பிள்ளை தானே என்று கேட்கும் போதெல்லாம் கொடுத்து விடுவார்.
“நண்பர்களிடம் எங்க அப்பா கொடுக்காட்டி போனாலும், எங்க பெரியப்பா இருக்கிற வரைக்கும் எனக்கு கவலையில்லை” என்று சவுடால் விட்டான்.
பத்து நாள் கழித்து“அடுத்த வாரம் நண்பனின் கல்யாணத்துக்கு வெளியூர் போகணும் 2000 ஆயிரம் கொடுங்க பெரியப்பா” கேட்கலாம் என்று நினைத்தபடியே பெரியப்பா வீட்டுக்குப் போன போது
ஆட்டோவில்,அப்பொழுது தான் பெரியப்பாவும் பெரியம்மாவும் டவுன் ஆஸ்பத்திரியில் இருந்து வந்துள்ளார்கள் என்று தெரிந்தது.
“பெரியம்மாவின் இரண்டு கிட்னியும் ஃபை லியர் ஆச்சு. அது மாதிரி லிவரும் கெட்டு இருக்கு.டயலசிஸ் பண்ணனும் இல்லாட்டி ,யாராவது டோனட் பண்ணனும்ன்னு டாக்டர் சொல்றாரு விக்னேஷ்” என்றார் பெரியப்பா.
"எனக்கு ஒரு உதவி செய்யேன். "
“என்ன செய்யணும் சொல்லுங்க பெரிப்பா?”.
பெரியம்மாவுக்கு உன் கிட்னி பொருத்தலாம் .இரத்த சம்பந்த உறவா இருக்கிறதினாலே பொருந்தும் ரூபாய் இரண்டு லட்சம் தரேன்” அப்படியே உன் லிவரிலுருந்து கொஞ்சம் எடுத்து பெரியம்மாவுக்குப் பொறுத்தலாம். பிரச்சனை எதுவும் வராது. என்ன சொல்ற? மொத்தமா நாலு லட்சம்.
“ஐயையோ அதெல்லாம் தரமுடியாது. பயமா இருக்கு. சாரி பெரியப்பா.
“ ஒனக்கு நல்ல எண்ணமில்லை? சில பேர் பிறருக்கு தன் உறுப்புகள் சிலவற்றைத் தானமாகக் கொடுப்பார்கள் .ஆனா நீ உன் உடம்பு நோக கூடாது. உன் உடம்பில் கீறல் இருக்கக்கூடாது .என்று எண்ணுகிற வர்க்கம்”.
உன்னிடம் பல லட்சம்பெறுமான உடல் உறுப்புகள் இருந்தும், அதனைத் தர மனம் இல்லாமல் மறுத்துவிட்டு, என்னிடம் பணம் கொடு என்கிறாயே?” வெக்கமா இல்லை.” ஒன்னு உறுப்பு தானம் பண்ணனும் இல்லைன்னா உடல் உழைப்பாவது பண்ணனும்.
“பத்து வருஷம் முன்பு நம்ம கிராமத்திலிருந்து பக்கத்து ஊருக்கு வாழை லோட் சுமந்து வந்த லாரி கவிழ்ந்து நிறையப் பேர் இறந்து போனப்ப, மேலதெரு சுகன்யாவுக்கு விபத்து ஏற்பட்டு, இரண்டு கால்களை இழந்த போதும், தன் கைகளை மூலதனமாக வைச்சுப் பெட்டிக்கடை வைச்சு பீடி சுத்தி ஒரு நாளைக்கு முன்னூறு சம்பாதிக்குது. நீ அஞ்சுக்கும் பத்துக்கும் இன்னிக்கும் கை நீட்டி நிக்கற ?
பெரியப்பா முதல் முறையாக இப்படித் திட்டியது, கோபமா பேசியது அறிவுரை சொன்னது தன்னைச் செம்மட்டியால் அடித்தது போன்ற உணர்வில் வெளியேறினான்.
உடலின் மதிப்பை உணர்ந்தவன் அம்மாவிடம், சென்னைக்குப் போய் என் பிரென்ட் ரூமில் தங்கி வேலை தேட போறேன். அப்பாகிட்ட சொல்லிடு?” பெரியப்பா ஒரு உதவி கேட்டு நான் மறுத்துட்டேன். அவரை நேர்ல பாக்கறதுக்கே எனக்கு வெக்கமா இருக்கு. என்று ஊரை விட்டு போனான்.
பெரியப்பாவும் பெரியம்மாவும் அம்மா அப்பாவுடன் பேசித்தான் அப்படி ஒரு நாடகம் போட்டு அவனை பொறுப்பானவனாக மாற்றினார்கள் என்பது பஸ் ஏறும் வரைக்கும் அவனுக்குத் தெரியப் போவதில்லை.
Leave a comment
Upload