# இது புதுசு

‘டைகர்’ லெட்சுமணன்
அந்த அப்பார்ட்மெண்டில் வீடு வாங்கிக்கொண்டு குடியேறிய ஒரு நன்நாளில் அவரை முதன்முறையாக பார்த்தேன். நல்ல உயரம், கருத்த நிறம், இடுங்கிய கண்கள், மிஞ்சிய முடிகளுக்கு அடித்திருந்த கருப்புச்சாயம் என எல்லாமும் சேர்ந்து இயக்குனர் மகேந்திரனை நினைவூட்டினார்.
நான் படிகளில் ஏறிவரும் பொழுது, அவர் கீழே இறங்கினார். புன்னகைப்பதா வேண்டாமா என்று எனக்குள் பட்டிமன்றம் நடந்துகொண்டிருந்த நேரத்தில், என்னை ஒரு வெற்றுப்பார்வையுடன் கடந்துபோனார்.
“எதிரே பார்த்தால் சிரிக்கக்கூட மாட்டேங்கிறாரு. என்ன மனுஷனோ...” மனைவியிடம் அங்கலாய்த்தேன்.
“நீங்க கண்டிப்பாக சிரிச்சிருக்க மாட்டிங்கன்னு எனக்கு தெரியும். எந்த அக்கம்பக்கத்து ஆம்பளைங்ககூட பேசியிருக்கீங்க..?” இது தான் சாக்கென்று ‘நச்’ என இடித்தாள்.
அடுத்து வந்த ஒரு வாரத்தில் ஒற்றர் படை வீரனைப் போல் மந்தகாசப் புன்னகையோடு என் முன்னே வந்தவள், “கண்டுபிடிச்சிட்டேன்” என்றாள்.
“என்ன காணாமல் போயிடிச்சு?” வெள்ளேந்தியாய் கேட்டேன்.
“இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. நம்ம ஃப்ளாட்டில் யார் யாரு என்ன வேலை செய்யிறாங்க அப்படிங்கிற விவரத்தை தெரிஞ்சிக்கிட்டேன்னு சொல்ல வந்தேன். அதிலும் நீங்க முதல் நாள் பார்த்த மனிதர் பெரிய்...ய லாயராக்கும்... தெரியுமோ” என்று தன் கண்களை அகல விரித்தாள்.
ஏனோ தெரியவில்லை அந்த நொடியில், ‘சந்திரமுகி’ ஜோதிகாவின் முகம் என் மனதில் தோன்றி மறைந்தது. இதை வெளிப்படையாக சொன்னால் இந்த நாள் இனிய நாளாக இருக்காது என்பதால், லாயர் மேட்டருக்கு தாவினேன்.
“அப்படியா..! எந்த கோர்ட்டில் அட்வகேட்?”
“மதுரை ஹைகோர்ட்டில் கிரிமினல் லாயராம்... இதுக்கு முன்னாடி டெலிபோன் டிபார்ட்மெண்டில் பி.ஆர்.ஓ-வாக இருந்து ரிடையர்ட் ஆனவராம். அதன் பிறகு இந்த தொழிலை கையில் எடுத்து பிரபலமாயிருக்கார். மதுரை உயர்நீதிமன்ற லாயர்கள் மத்தியில் ‘டைகர்’ லெட்சுமணன் அப்படிங்கிற பெயர் ரொம்ப பேமஸாம்.” பிரமிப்பாய் கூறினாள்.
“செய்தி சேகரிப்பதில், பத்திரிக்கைகாரனான என்னையே மிஞ்சிடுவ போ...” எனது வாய் அவளை பாராட்டிக்கொண்டிருந்த வேளையில் மனம் வேறு ஒன்றை தீர்மானித்திருந்தது.
டைகரை நம் மனக்கூண்டிற்குள் அடைத்து நட்பாக்கிவிடவேண்டும்.
அதற்கான சந்தர்ப்பம் வெகுவிரைவிலேயே வாய்த்தது.
அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் சோம்பல் தடவிய எண்ணத்தோடு கண் விழித்தேன். அருகில் படுத்திருந்த மனைவியும் மகனும், இன்னும் நள்ளிரவு தாண்டவில்லை என்கிற நினைப்போடு நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். மணி ஒன்பதை தாண்டி சூரியன் ஜன்னல் கண்ணாடி வழியே ஊடுருவி இருந்தான். தூரத்தில் யாரோ சத்தமாய் பேசுவது துல்லியமாக என் காதில் விழுந்தது. பரபரவென எழுந்து அவிழத் தயாராய் இருந்த கைலியை இறுக்கி கட்டிக்கொண்டு பால்கனியில் நின்று எட்டிப்பார்த்தேன்.
‘டைகர்’ லெட்சுமணன் யாரிடமோ உறுமிக்கொண்டிருந்தார். நான் சட்டையை மாட்டிக்கொண்டு தபதபவென படிகளில் இறங்கினேன்.
“என்ன சார் ஆச்சு?”
“இதோ பாருங்க... பக்கத்து ஃப்ளாட்டிலிருந்து ட்ரைனேஜ் வாட்டர் லீக்காகி நம்ம ஃப்ளாட்டுக்கு முன்னாடி தேங்கி நிக்குது. இதை பல முறை சொல்லிட்டேன். அவுங்க கேட்பதாக இல்லை. இனியும் இது தொடர்ந்தால் கோர்ட்டில் மீட் பண்ணவேண்டி இருக்கும்னு இப்போ தான் கூப்பிட்டு வார்ன் பண்ணினேன். அப்போவாவது இவுங்களுக்கெல்லாம் புத்தி வருதான்னு பார்ப்போம்.” டைகர் கர்ஜித்தது.
“சூப்பர் சார்... பை த பை... அயம் சரவணக்குமார்...” கை நீட்டினேன். ஒருசில நொடிகள் யோசித்தவர் பெரிய மனதுடன் கைகுலுக்கிவிட்டு, கோடி ரூபாய் அள்ளிக்கொடுத்த வள்ளல் போல முகத்தை வைத்துக்கொண்டார்.
“என்ன பண்றீங்க..?”
“பேங்கில் வேலை செய்யிறேன் சார்...”
“அப்படியா..? அப்புறம் எதுக்கு உங்க வண்டியில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கீங்க?”
“ப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட்டாகவும் இருக்கேன். அதான்...” இழுத்தேன்.
“பேங்கில் வேலை பார்த்துக்கிட்டு பிரஸ்ஸுன்னு சொல்லிக்கிறது சட்டப்படி தப்பில்லையா?”
பத்திரிகைக்காரன் என்கிற பதவி பறிபோய்விடுமோ என்கிற பதைபதைப்பில் “சார்... நான் உண்மையான ஜர்னலிஸ்ட்...” என்றேன்.
“நீங்க என்னதான் சொல்லுங்க... சட்டப்படி இது தப்பு. இப்போவெல்லாம் ப்ரிண்டிங் பிரஸ் ஆளுங்க கூட இப்படி ஸ்டிக்கர் ஒட்டிக்கிறாங்க. உலகத்தில் முக்கால்வாசி பேர் ஊரை ஏமாத்திக்கிட்டே இருக்காங்க. சரி விடுங்க நான் யாருன்னு தெரியுமா?”
“தெரியும் சார்... மதுரை ஹைகோர்ட்டில் பிரபலமான கிரிமினல் லாயர். ‘டைகர்’ லெட்சுமணன்னு சொன்னால் அந்த சுத்துவட்டாரத்தில் தெரியாதவுங்களே கிடையாது... சரியா?” நான் சொன்னதும் அவர் முகத்தில் பெருமை பொங்கியது.
“என்னை பத்தி இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கீங்களே... கண்டிப்பா நீங்க ஒரு பத்திரிகையாளர் தான்.” சொல்லிவிட்டு தனது வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
அவரோடு பேசிவிட்ட சந்தோஷத்தில் மனைவியை எழுப்பினேன்.
“ஏய்... புலியோட பேசி ஃப்ரெண்டாயிட்டேன்.” நான் சொல்லச்சொல்ல கண் இமைகளை பிரிக்கமுடியாமல் பிரித்தாள் அவள்.
“என்னங்க வேணும் உங்களுக்கு? நடு ராத்திரியில் எழுப்பி... புலியோட பேசினேன், பூனையோட பேசினேன்னு உயிரை வாங்காமல் படுங்க...” திருவாய் மலர்ந்துவிட்டு தனது கும்ப்கர்ணப்பணியை தொடர ஆரம்பித்தாள்.
அதன் பிறகான நாட்களில் லாயர் என்னை பார்த்ததும் புன்னகைக்க ஆரம்பித்தார். நின்று ‘வேலையெல்லாம் எப்படி போகுது?’ என்பார். ‘எங்கே சார்... பேங்க் முடிஞ்ச கையோட பேட்டி, கட்டுரைன்னு ஒரே பரபரப்பு’ என்பேன். ‘மத்த ரிப்போர்ட்டர் மாதிரி பொய் கலக்காமல் நியாயமா, நேர்மையா எழுதுங்க...’ என்றபடி நகர்வார்.
நாளுக்கு நாள் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் என்னுள் கூடிக்கொண்டே போனது. வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட், ஷூ சகிதம் அவர் வெளியில் நடந்து போகும் கம்பீரம் இருக்கிறதே அப்பப்பா...
‘மாதத்தின் பாதி நாட்களை மதுரையிலும் மீதியை சென்னையிலும் கழித்துக்கொண்டிருக்கிறேன்’ என்று ஒருமுறை அவர் சொன்னபொழுது, அவருடைய உண்மையான கடும் உழைப்பு என்னை அசத்தியது. எழுபதை தாண்டிய இந்த வயதிலும் அவரது ஓட்டம் என்னை வியக்க வைத்தது.
ஒரு கட்டத்தில் அவரை ரோல் மாடலாகவே நினைக்க ஆரம்பித்தேன். ‘ஏதோ ஒரு பேட்டியை எடுத்துட்டு, இன்னைக்கு எழுதலாம்... நாளைக்கு எழுதலாம்னு தள்ளிப்போடுறியே, உனக்கெல்லாம் வெட்கமாக இல்லை? அந்த மனுஷனை பார்த்து கத்துக்கோடா’ என எனக்குள் இருக்கும் என்னைப்போல் ஒருவன் வெளியே வந்து காறித்துப்பிவிட்டு மீண்டும் உள்ளே போனான்.
கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாக லாயரை காணவில்லை. அடுத்த நாள் கண்ணில் பட்டார்.
“என்ன சார்... மதுரைக்கு போயிருந்தீங்களா? ஆளையே பார்க்க முடியலை?”
“ஆமாங்க... அழகிரி மேல் இருந்த கேஸ்களுக்கு நான்தான் ஆஜராகணும்னு கேட்டுக்கிட்டாங்க. நான் இருக்கிற பிஸியில் என்னால் முடியாதுன்னு சொல்லிட்டேன். அப்புறம் அவரே என் ஆபீஸுக்கு நேரில் வந்து ரொம்ப ரெக்வெஸ்ட் பண்ணின பிறகு வேறு வழியில்லாமல் ஒத்துக்க வேண்டியதாயிடிச்சு.” லாயர் சர்வசாதாரணமாய் சொல்ல, எனக்குள் தூங்கிக்கொண்டிருந்த ‘பிரஸ்’காரன் விழித்துக்கொண்டான்.
“சார்... அழகிரிகிட்டே ஒரு பேட்டி வேணும். எப்படியாவது அப்பாயின்மென்ட் வாங்கிக்கொடுங்களேன் ப்ளீஸ்...” கெஞ்சாத குறையாய் கேட்டேன்.
“நாளைக்கு திரும்பவும் மதுரை புறப்பட்றேன். அப்போ பார்க்கலாம்...” விலகினார்.
வங்கி விஷயமாய் அடுத்த இரண்டு நாட்கள் நானும் வெளியூர் செல்லவேண்டி இருந்தது.
“ராத்திரியில் தனியாக படுத்துக்காதே. லாயர் இல்லாததால் அந்த அம்மாவை துணைக்கு கூப்பிட்டுக்க...” என் மனைவியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டேன்.
இரண்டு நாட்களில் என் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பியிருந்தேன். மனைவியின் முகம் உம்மென்று இருந்தது.
“என்ன... எனக்கு தெரிஞ்சு இந்த வாய் ஓய்வெடுத்ததாக எந்த சரித்திர, பூளோக புத்தகத்திலும் எழுதலையே...”
அவள் மவுனமாய் நிமிர்ந்து என்னை பார்த்தாள்.
“ஏங்க... நாம ஏமாந்துட்டோம்ங்க...” பரிதாபமாய் சொன்னாள்.
“நாமன்னு பன்மையில் சொல்லக்கூடாது. நான்னு ஒருமையில் சொல்லு ஒத்துக்கிறேன். பதினைந்து வருஷம் கழிச்சு இப்போவாவது புரிஞ்சுதே.”
“எப்பவும் உங்களுக்கு கிண்டல் தானா..? என்ன ஆச்சு தெரியுமா? லாயர் பொண்டாட்டி நேத்து ராத்திரி எல்லா உண்மையையும் போட்டு உடைச்சிட்டாங்க...”
நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.
“என்ன உண்மை?”
“அவர் உண்மையில் லாயரே இல்லையாம். எல்லோர்கிட்டேயும் மதுரை கோர்ட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு, தாம்பரத்தில் இருக்கிற சின்ன வீட்டுக்கு போயிடுவாராம். ‘அந்த வீட்டுக்கு’ ஒரு வளர்ந்த பெண்ணும் பையனும் இருக்காங்களாம். ‘இதை யார்கிட்டேயாவது சொல்லி அழணும்னு தோணிச்சு’ன்னு நேத்து அந்த அம்மா ரொம்ப கதறிக்கதறி அழுதாங்க...” அவள் சொல்லச்சொல்ல என் மனதில் இருந்த இரட்டை கோபுரத்தை யாரோ ப்ளேன் வைத்து தகர்த்தார்கள்.
‘அடப்பாவி... ஒரு பத்திரிகையாளராக இருந்தும் ஏமாந்துட்டோமே...’ எனக்கே என் மேல் கோபம் வந்தது.
டுபாக்கூர் லாயரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டது என்கிற விஷயம் எனக்கு தெரிந்ததை அவர் மோப்பம் பிடித்துவிட்டாரோ என்னவோ, அதன்பிறகு அவர் என்னிடம் பேசவேயில்லை. அடுத்த சில மாதங்களில் குடும்பத்தை காலி செய்துகொண்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.
ஆனால்கூட இப்பகுதி மக்கள் அவரை லாயர் என்றே இன்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இன்னமும் மெட்ரோ வாட்டருக்கு போன் செய்யும்பொழுது கூட, ‘லாயர் ஃப்ளாட்டிலிருந்து பேசுறேன்’ என சொன்னால் மட்டுமே லாரி சீக்கிரம் வருகிறது என்றால் பாருங்களேன்.
(இன்னும் வருவார்கள்)

Leave a comment
Upload