
பாத்திரம் அறிதலும்.. பிச்சை புகினும்..
“என்ன பண்றதுன்னே தெரியலை சார்..” கைகளைப் பிசைந்தபடியே கலக்கத்துடன் சொன்னார் காளியப்பன்.
பிரமிட் சாய்மிரா திரைப்பட நிறுவனத்தில் பிரசிடெண்ட் ஆக நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன் அப்போது. துபாயில் தான் ஒரு நட்சத்திர கலைவிழா நடத்த இருப்பதாகவும், அதற்கு பிரமிட் சாய்மிராவின் கூட்டணி கிடைக்குமா எனக் கேட்பதற்காகவும் என்னைத் தேடி வந்து பேசினார் காளியப்பன்.
ஏ.ஆர்.ரகுமானின் முதன்முதல் லைவ் நிகழ்ச்சியை அவர்தான் துபாயில் நடத்தினார் பல வருடங்களுக்கு முன்னர். அந்த அனுபவம்.. ப்ளஸ் எனக்கு நன்கு பரிச்சயமான மூத்த ஊடகவியலாளர் கே.பி.சுனிலின் நண்பர் என்ற அடையாளம்.. இரண்டும் இருந்ததால் அவர் மீது நம்பிக்கை இருந்தது.
நான்கைந்து சந்திப்புகளுக்குப் பின்னர் கொஞ்சம் நண்பராகவும் ஆனார்.
அதன் பின்னர் நடந்த ஒரு சந்திப்பின்போதுதான் மேலே குறிப்பிட்ட கைகளைப் பிசைந்து கலங்கி நின்ற தர்மசங்கடம்.
விதி வலியதுதானே.. என் வாயைப் பிடுங்கியது!
“என்னாச்சு சார்? ஏன் இப்படி கலங்கிப் போய் நிற்கறீங்க?” என்றேன் பதறிப்போன மனதுக்காரனாக.
அதற்கு முந்தைய சந்திப்பின்போதே துபாய் கலைநிகழ்ச்சி தள்ளிப்போகிறது என்பதையும், சும்மா இருக்க மனமில்லாமல் தன் நண்பர் ஒருவருடன் கூட்டாகச் சேர்ந்து ஒரு ஹோட்டல் ஆரம்பிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் காளியப்பன். ஹோட்டலுக்காக சாலிகிராமத்தில் இடம் பார்த்து, ஆவன செய்யும் பணிகளிலும் மும்முரமாக இருந்தார்.
ஹோட்டல் தொழில் மீது எனக்கு எப்போதும் காதலுண்டு. பள்ளிக்காலங்களில், கோடை விடுமுறைகளின்போது எனது தாய்மாமா ஒருவர் சிபாரிசால், திண்டுக்கல்லில் அவரது சகலை நடத்திய ஹோட்டல் ஒன்றில் நான் தற்காலிக வேலைக்காரனாக பணிக்குச் சேர்ந்து விடுவேன். பல வருடங்கள் அந்தப் பணி புரிந்திருக்கிறேன்.
முதலாளியின் சொந்தக்காரன் என்பதால் கல்லாவில் உட்கார்ந்து பணம் வாங்கிப் போடுவேன். பெரும்பாலான நேரங்களில் பில் போடும் நபராவேன். பரபரப்பான நேரங்களில் சப்ளை பாய் ஆவேன். ஆசைக்காக அடிக்கடி சமையல் கட்டில் புகுந்து தோசை, புரோட்டா போடுவதும் உண்டு.
எதிர்காலத்தில் நிச்சயம் ஒரு ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என அரை டிராயர் காலத்திலேயே சபதம் எடுத்துக் கொண்டேன்.
சபதமும் அது தொடர்பான சபலமும் குரங்கு போல ஜம்ப் அடித்து என் மனதில் உட்கார்ந்து கொண்டது!
“என் ஃப்ரண்டு ஒருத்தர் பண உதவி செய்றதா சொன்னார். அவரை நம்பித்தான் ஹோட்டல் ஆரம்பிக்கும் வேலைகளில் இறங்கினேன் சார். இப்ப.. பாதிக்கிணறு தாண்டியாச்சு. இதுக்கும் மேல என்னால இன்வெஸ்ட் பண்ண முடியாதுன்னு கைவிரிச்சுட்டார் அவர். என்ன பண்றதுன்னே தெரியலை சார்..” என்றார் காளியப்பன்.
பார்க்கப் பரிதாபமாக இருந்தது. விட்டால் அழுதுவிடுவார் போல இருந்தது.
“நீங்க கலங்காதிங்க காளியப்பன். என்கிட்ட இருக்குற சேமிப்பு பெரிசா இருக்காது. என்ன இருக்குதோ அதை உங்களுக்குத் தர்றேன். முடிஞ்சா என்னையும் ஒரு பார்ட்னரா உங்க ஹோட்டல் ப்ராஜக்டில் சேர்த்துக்கங்க. இல்லைன்னாலும் பரவாயில்லை.. ரெண்டு மூனு மாசத்துல என் பணத்தைத் திருப்பிக் கொடுங்க.. போதும்..” என்றேன்.
இதுதான் நான். கரடு முரடு போல கறாராகப் பேசினாலும், சட்டென ஒரு கட்டத்தில் சாய்ந்து விடுவேன்!
அடுத்த ஒரு சில மணிகளில்.. ஒரு சில லட்சங்களை என்னிடம் வாங்கிக்கொண்டு, அதற்கு ஈடாக காலில் விழாத குறையில் எனக்கு நிறைய நன்றிகள் சொன்னார் காளியப்பன். தன் பார்ட்னரிடம் சம்மதம் பெற்று, என்னை தொழிலில் பார்ட்னராக சேர்த்துக் கொள்வதாகச் சொல்லி விட்டுப் போனார்.
அந்த நிமிடத்திலேயே செம குஷியானேன். கவுண்டமணி என் மனக்குரலில் குடியேறிக் கூவினார்..
‘இந்தச் சென்னை மா..நகரத்திலே.. அதுவும் சினிமாக்காரனெல்லாம் குடியிருக்கும் சாலிக்கிராமத்திலே.. எப்ப்பேர்ப்பட்ட ஒரு ஹோட்டல். அதுக்கு நானும் ஒரு பார்ட்னர்!’
அடுத்த நாளே சாலிக்கிராமம் சென்றேன். ஜரூராக நடந்து கொண்டிருந்த ஹோட்டல் பணிகளைப் பார்வையிட்டேன். தனது நண்பர் என்னையும் ப்ராஜக்டில் பார்ட்னராகச் சேர்த்துக் கொள்ளச் சம்மதித்து விட்டார் என்ற சந்தோஷச் செய்தியைச் சொன்னார் காளியப்பன்.
என்னை பள்ளிப்பருவத்தில் ஹோட்டல் பணிக்குச் சேர்த்துவிட்ட தாய்மாமாவின் மகன் வெங்கி கேட்டரிங் படித்து விட்டு வேலை தேடி சென்னைக்கு வந்தான். ‘இந்தச் சென்னை மா.. நகரத்திலே..’ குஷியில் இருந்த நான் அவனிடம், “நம்ப ஹோட்டல் இருக்குடா. என்னத்துக்கு வெளியே வேற இடத்துல வேலை தேடணும்?” என்றேன்.
காளியப்பனிடம் வெங்கியை ஒப்படைத்தேன். சிறப்பாகவும் பொறுப்பாகவும் செயல்பட்டான் அவன். சிறப்பாக.. காளியப்பனுக்கு எல்லா பணிகளிலும் பக்க பலமாக இருந்தான். பொறுப்பாக.. அவ்வப்போது எனக்கு என்ன நடக்கிறது என அப்டேட் கொடுத்துக் கொண்டே இருந்தான்.
ஹோட்டல் திறப்பு விழாவுக்கு தேதி குறித்தார் காளியப்பன். செம வேகத்தில் வேலைகள் நடந்தன.
திடுதிப்பென காய்ச்சல் வந்து படுத்து விட்டேன் நான்.
“எலிக்காய்ச்சல் மாதிரி தெரியுது சார் இது” என நண்பர் ஒருவர் கிலி கூட்டினார். “டேஞ்சரான வியாதி அது. அசந்துட்டா ஆளையே காலி பண்ணிடும்” என்றார். அவரே என்னைக் கூட்டிக்கொண்டு போய் புரசைவாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் படுக்க வைத்தார்.
நான் ஆஸ்பிடலில் அட்மிட் ஆன சேதி கேட்டு பதறிப்போய் பார்க்க வந்தார் அன்புத் தோழி ஒருவர். நலம் விசாரித்து விட்டுப் போகும்போது, “திடீர் செலவுக்கு இதை வச்சுக்கங்க” என ஒரு கவரை என் கையில் திணித்து விட்டுப் போனார்.
தோழி வெளியேறிய அதே நொடியில் காளியப்பன் வந்தார். கூடவே அவரது மனைவியும் குழந்தையும்!
“என்ன பண்றதுன்னே தெரியலை சார்..” என மறுபடியும் கைகளைப் பிசைந்தபடியே கலங்க ஆரம்பித்தார் காளியப்பன்.
“இந்த நேரத்துல நீங்க வேற உடம்பு சரியில்லாம படுத்துட்டீங்க. நாளைக்குத்தான் சார் ஹோட்டல் திறப்பு விழா. எல்லா செலவுகளையும் சமாளிச்சுட்டேன். சப்ளை சாமான்கள் வாங்குறதுக்கு மட்டும் பணமில்லை. ரெண்டு இடத்துல சொல்லி வச்சிருந்தேன். ரெண்டு பேரும் கைவிரிச்சுட்டாங்க கடைசி நேரத்துல..” என்றார். சொன்னபோதே அழுதுவிட்டார்.
அவர் அழுது நிறுத்தவும், அவரது மனைவி அழ ஆரம்பித்தார். மலங்க மலங்க அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தது அவர்கள் குழந்தை.
தோழி கொடுத்துச் சென்ற கவரை அப்படியே எடுத்து காளியப்பனிடம் கொடுத்தேன். பிரித்துப்பார்த்து பணத்தை எண்ணியவர், “தெய்வம் சார் நீங்க” என்றபடியே கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“எவ்வளவு தேவையோ.. எவ்வளவு பணம் இப்போ இருந்தா என் மானம் மரியாதையெல்லாம் கப்பலேறாம நாளைக்கு இன்விடேஷன் அடிச்சுக் கொடுத்தபடி ஹோட்டலை திறக்க முடியுமோ, அவ்வளவு பணம் நீங்க கொடுத்திருக்கீங்க சார். தெய்வச் செயல் சார் இது!” என்றார்.
“காலாகாலத்துக்கும் நீங்க செய்யும் உதவியை மறக்க மாட்டோம் சார்” என்று கும்பிட்டார் அவரது மனைவி.
ஆஸ்பிடலில் கிடந்ததால் ஹோட்டல் திறப்பு விழாவுக்கு என்னால் போக இயலவில்லை. ஜாம் ஜாமென நடந்ததாக வெங்கி தகவல் சொன்னான்.
காளியப்பனும் அவர் மனைவியும் போன் போட்டு மாறி மாறி நன்றி சொன்னார்கள்.
ஏற்கெனவே என்னிடம் முதல் முறை பணம் வாங்கும்போது கடன் பத்திரம் எழுதிக் கொடுத்திருந்தார் காளியப்பன். ஹோட்டல் திறந்த ஒரு சில நாட்களில் பார்ட்னர்ஷிப் பத்திரம் எழுதிக் கொடுத்தார். கூடவே, “பாதுகாப்புக்காக வச்சுக்கங்க” என நான்கு காசோலைகளும் கொடுத்தார்.
உடல் நலம் சீரானதும் ஒரு முறை குடும்பத்துடன் ஹோட்டலுக்குச் சென்றேன்.
“உங்க கைராசி சார்.. தொழில் அமோகமா நடக்குது” என்றார் காளியப்பன்.
பணியாளர்களையெல்லாம் அழைத்து, “சார் என்னோட பார்ட்னர். நான் இல்லாதப்ப வந்தாலும் நல்லா கவனிக்கணும்” என்றார். எல்லோரும் பயபக்தியுடன் என்னைப் பார்த்தார்கள்.
நல்ல சாப்பாடு போட்டு கவனித்து அனுப்பினார் காளியப்பன்.
தொழில் சிறப்பாக போய்க் கொண்டிருந்ததால் அதில் பிசியானார் காளியப்பன். அடிக்கடி அவரைப் பார்க்க முடியவில்லை. இடையில் ஓரிரு முறை துபாய்க்கு போய் வந்தார். கலைவிழா ஏற்பாடுகளுக்காக என காரணம் சொன்னார்.
ஒரு முறை துபாயில் இருந்தே பேசினார்.. “சார்.. வியாபாரம் நல்லா இருக்குது. நீங்க கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்துடலாம்னு நினைக்கிறேன். என் செக்குகள் உங்ககிட்ட இருக்குல்ல... அதை மாசம் ஒரு செக்கா பிரிச்சுப் போட்டு உங்க பணத்தை எடுத்துக்கங்க. ஆனாலும் நீங்க செஞ்ச உதவிக்காக என்னிக்குமே நீங்க என் ஹோட்டல்ல பார்ட்னர்தான். உங்க முதலீட்டை நான் திருப்பிக் கொடுத்துட்டாலும் லாபத்துல உங்க ஷேர் எப்பவும் உங்களுக்குத்தான்” என்றார்.
இந்தக் கலிகாலத்தில் இப்படியும் நல்ல மனிதர்களா என வியந்து நெகிழ்ந்தேன்.
காளியப்பன் சொன்ன தேதியில் முதல் செக்கை வங்கியில் போட்டேன். புறமுதுகிட்டு திரும்பி வந்தது செக்!
காளியப்பனுக்கு போன் போட்டேன். தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே இருந்தார் நாள் முழுக்க!
வெங்கிக்கு போன் போட்டேன். தயங்கித் தயங்கி பேச ஆரம்பித்தான் அவன்.
“நானே இன்னிக்கு உங்களை நேர்ல பார்த்து பேச நினைச்சிருந்தேன். இங்கே எல்லாமே தப்பா நடக்க ஆரம்பிச்சிருக்கு. ஹோட்டல்ல நல்ல வருமானம்தான். ஆனா.. வருமானத்தையெல்லாம் எடுத்துக்கிட்டு துபாய் போயிடுறார். மொத்தத்தையும் செலவழிச்சுட்டு வர்றார். சொன்ன தேதியில யாருக்கும் பணம் செட்டில் செய்றதில்லை. நாளுக்கு நாள் கடன் கூடிக்கிட்டே போகுது” என்றான் வெங்கி.
“இப்போ எங்கே இருக்கார் காளியப்பன்?”
“துபாய்ல!” என்றான் வெங்கி.
திரும்பி வந்ததும் தகவல் சொல்லச் சொல்லிவிட்டு, போனை வைத்தேன்.
திரும்பி வந்த செக்கை திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே இருந்தேன் நான். துபாய் போன காளியப்பன் வரவும் இல்லை. தினமும் வசூலாகும் பணத்தில் பாதியை காளியப்பனின் மனைவி வந்து வாங்கிக் கொண்டு போய்விடுவதாகவும், மீதியை வைத்துக்கொண்டு அடுத்த நாள் தேவைகளுக்காக சரக்குகள் வாங்கிச் சமாளிப்பதாகவும் சொன்னான் வெங்கி.
வரட்டும் அந்த காளியப்பன் என காத்திருந்தேன். இருந்தாலும் அவர் மீது நன்மதிப்பு குறையவில்லை. ஏதோ ஒரு சிக்கலில் இருப்பார் போலும் என எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.
அடுத்த சில நாட்கள் கழித்து ஒரு நாள் வெங்கி போன் செய்து காளியப்பன் வந்து விட்டதாக தெரிவித்தான்.
போன் செய்தேன். வெறும் ட்ரிங்.. ட்ரிங்தான் ஒலித்துக் கொண்டே இருந்தது. காளியப்பன் போனை எடுக்கவில்லை.
நேரில் சென்று எதிரே நின்றேன்.
“சார்.. என்ன சார் திடீர்னு? எப்படி இருக்கீங்க சார்?” என்று செயற்கை ஆச்சரியத்துடன் வரவேற்றார்.
“போன் அடிச்சேன். எடுக்கலியே நீங்க?”
“அச்சச்சோ.. அது உங்க நம்பரா! போன் ஒண்ணு புதுசா வாங்கினேன். இன்னும் நம்பரையெல்லாம் இதுக்கு மாத்தலை சார். உங்க நம்பர்னு தெரியாமப் போயிடுச்சு” என உச்சுக்கொட்டினார். அப்பாவியாக நம்பினேன்.
“செக்கைப் போட்டு பணத்தை எடுத்துக்கச் சொன்னீங்கள்ல..”
“ஆமா சார். நான் உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நாலா பிரிச்சு, நாலு செக்லயும் ஃபில் பண்ணிக்கங்க. மாசாமாசம் செக்கை டெபாசிட் பண்ணி பணம் எடுத்துக்கங்க” என்றார் சீரியஸ் முகத்துடன்.
“முதல் செக் உங்க அக்கவுண்ட்ல பணமில்லைன்னு திரும்பி வந்துடுச்சு.. தெரியுமா?” என்று கேட்டேன்.
“அப்படியா..” என அசால்ட்டாக கேட்டார். “சரி பரவாயில்லை, அதே செக்கை திரும்பவும் ப்ரசண்ட் பண்ணுங்க சார். பாஸாகிடும்” என்றார்.
அலட்சியமாக உச்சரிக்கப்பட்ட அந்த ‘சரி, பரவாயில்லை’யில்.. அந்த நொடியில் தெரிந்தது அதுவரை தெரியாத அவரது சுயரூபம். கெட்ட பய சார் இந்தக் காளி என அசரீரி ஒலித்தது! முன்பே ஒலிச்சுத் தொலைஞ்சிருக்கக்கூடாதா?!
அடுத்த நாளே திரும்பவும் அந்த செக்கை டெபாசிட் செய்தேன். இரண்டு நாட்களில் அதுவும் புறமுதுகிட்டு திரும்பி வந்தது.
காளியப்பனுக்கு போன் செய்து.. ‘ட்ரிங் ட்ரிங்’கை நெடுநேரம் கேட்டுச் சலித்து, நேரில் போனேன் ஹோட்டலுக்கு.
கதவு இழுத்துப் பூட்டப்பட்டிருந்தது!
வெங்கிக்கு போன் போட்டேன். “நான் உங்களுக்கு போன் செஞ்சேன் காலைலயே. நீங்க எடுக்கலை” என்றான். சில நிமிடங்களில் எங்கிருந்தோ ஓடி வந்தான்.
“தெரியலைடா, உன் அழைப்பை காலையில் எப்படியோ மிஸ் பண்ணி இருக்கேன். என்னாச்சு?” என்றேன்.
“காளியப்பன் தன் குடும்பத்தோட தலைமறைவாகிட்டார்” என்று இடி இடித்தான் வெங்கி.
“ஹோட்டல் வருமானத்தையெல்லாம் எடுத்துக்கிட்டு, துபாய் போய் தாம் தூம்னு செலவு பண்ணி இருக்கார். உங்ககிட்ட மட்டுமில்ல, அஞ்சு பத்து கைமாத்து வாங்கிய ஆட்களுக்குக் கூட ஒரு நயா பைசா திருப்பிக் கொடுக்கலை. உங்களை மாதிரியே அவருக்கு பணம் கொடுத்து உதவி செஞ்சாருல்ல.. அந்த பார்ட்னர் இன்னிக்கு காலைல கடைக்கு வந்து கச்சா முச்சானு சத்தம் போட்டப்பத்தான் என்ன நடந்திருக்குன்னு எங்களுக்கெல்லாம் முழுசா புரிஞ்சது. அவருக்கு செக் கொடுத்திருந்தாராம் காளியப்பன். செக் எல்லாமே பவுன்ஸ் ஆகிடுச்சாம்! பெரிய தகராறு நடந்தது காலைல!”
வியர்த்து விறுவிறுத்து நின்றிருந்தேன் நான். வெங்கி தொடர்ந்தான்..
“சாயந்திரம் வாங்க.. நிச்சயம் உங்களுக்கு ஒரு தொகை தர்றேன்னு சொல்லி அவரை திருப்பி அனுப்பினார் காளியப்பன். அவர் போனதும், ‘கடையை இழுத்துப் பூட்டிட்டு எல்லோரும் கிளம்புங்க. கொஞ்ச நாள் கழிச்சு நானே எல்லோருக்கும் போன் பண்றேன். அப்போ வந்தா போதும்’னு சொல்லிட்டு போயிட்டார். கடையைப் பூட்டிட்டு சாவியைக் கொடுக்க அவர் வீட்டுக்குப் போனேன். குடும்பத்தோட கிளம்பி வெளியூர் போயிட்டார்னு பக்கத்து வீட்ல சொன்னாங்க..”
நொந்த குமாரனாக அப்படியே தெருவோரம் உட்கார்ந்தேன். நாயாய் பேயாய் நான் உழைத்துச் சேர்த்த பணம் நாய்களுக்கும் பேய்களுக்குமா போய்ச் சேரவேண்டும்!
திரும்பத் திரும்ப காளியப்பனுக்கு போன் செய்துகொண்டே இருந்தேன். நாள் கணக்காக.. வாரக்கணக்காக.. மாதக்கணக்காக! சில நேரம் மணி அடிக்கும். யாரும் எடுத்துப் பேச மாட்டார்கள். பல நேரம் ஸ்விட்ச்டு ஆஃப் நிலையிலேயே இருக்கும். மிச்ச நேரமெல்லாம்.. வெறும் பீப் பீப் தான்!
எனக்கிருந்த அலுவலக பணிப் பரபரப்பில் வேறெதுவும் செய்ய முடியவில்லை.
ஹோட்டலுக்கு அருகிலேயே இருந்த ஒரு சினிமா கம்பெனியில் தானாகவே வேலைக்குச் சேர்ந்தான் வெங்கி.
“காளியப்பன் வீட்லயும், ஹோட்டல்லயும் ஒரு கண்ணு வச்சுக்க. எப்பவாச்சும் சிக்கினார்னா எனக்கு உடனடியா தகவல் கொடு” என்று அவனிடம் சொல்லி வைத்திருந்தேன்.
வக்கீல் ஒருவரைச் சந்தித்து செக் மோசடி வழக்குப் பதிவு செய்யச் சொன்னேன். கோர்ட்டுக்கும் மாதாமாதம் போய்வந்தேன்.
ஆறேழு மாதங்கள் கழித்து ஒரு நாள். போனில் அலறினான் வெங்கி.
“பாவா.. காளியப்பனை ஏரியாவில் பார்த்தேன். பைக்ல போய்ட்டு இருந்தார். அவருக்குத் தெரியாம பின்னாடியே போய் அவர் குடியிருக்கும் புது வீட்டைக் கண்டு பிடிச்சுட்டேன். நீங்க கிளம்பி வாங்க. கூட்டிட்டுப் போறேன்” என்றான்.
அன்று அலுவலகத்தில் மிக முக்கியமான வேலை ஒன்று என் தலைக்கு மேல் இருந்தது. அதை முடித்துக் கொடுக்காமல் வெளியேற முடியாது.
வெங்கியிடம் மூன்று மணி நேரம் அவகாசம் கேட்டு, தயாராக இருக்கச் சொல்லி, அலுவலக வேலைகளில் மும்முரமாக மூழ்கினேன்.
வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு வெளியேற நினைத்த நொடியில் மறுபடியும் வெங்கியே அலறினான்..
“பாவா.. வராதீங்க!”
“என்னாச்சுடா?”
“என் கண்ல இன்னிக்கு தட்டுப்பட்ட மாதிரி அந்த பார்ட்னரோட ஆட்கள் கண்லயும் சிக்கியிருக்கார் காளியப்பன். பைக்ல மனைவி, குழந்தையோட போய்ட்டு இருந்த காளியப்பனை மடக்கிப் பிடிச்சுட்டாங்க அவங்க. ‘வாங்க.. உட்காந்து பேசலாம்’னு எல்லோரையும் பார்ட்னரோட வீட்டுக்கே கூட்டிட்டு போயிருக்கார் காளியப்பன். அங்கே போனதும், ‘என் வொய்ஃப், குழந்தை ரெண்டு பேரும் இங்கேயே இருக்கட்டும். நான் போய் நகையை அடகு வச்சு கொஞ்சம் பணம் எடுத்துட்டு வரேன்’னு சொல்லிட்டு போயிருக்கார். அவர் பணத்தோட வருவார்னு எல்லோரும் காத்திட்டு இருந்திருக்காங்க. ஆனா.. அரை மணி நேரத்துல போலீஸ் படையோட திரும்ப வந்திருக்கார். ‘கந்து வட்டிக் கொடுமை. கொடுத்த கடனை நிறைய வட்டி சேர்த்து திரும்ப கேட்டு அடாவடி பண்றாங்க. என் மனைவியையும் குழந்தையையும் தூக்கிட்டுப் போயிட்டாங்க’ன்னு போலீஸ்ல புகார் கொடுத்திருக்கார் காளியப்பன். ஏதோ கொஞ்சத்துக்கு கொஞ்சமாச்சும் கொடுத்த பணம் திரும்ப வந்துடும்ங்குற நப்பாசையில, தன் கோபத்தையெல்லாம் மறைச்சுட்டு காத்திருந்த பார்ட்னரையும் அவர் ஆபிஸ் ஆட்களையும் அடிச்சு அள்ளிக்கிட்டு போயிட்டாங்க போலீஸ்காரங்க.. எதையும் விசாரிக்காம..”
அய்யய்யோ என்றிருந்தது எனக்கு! அவ்வளவு நயவஞ்சகனுக்கா நான் உதவி செய்திருக்கிறேன்!
ஒரு டம்ளர் ஐஸ் வாட்டர் குடித்துவிட்டு ஏஸி குளிரை அதிகப்படுத்தினேன். வேறென்ன செய்வது அந்த நேரம்!
யோசித்துக் கொண்டிருந்தபோது இண்டர்காமில் அழைத்தார் அலுவலகத்தின் நிர்வாக இயக்குநர்.
நான் முடித்துக் கொடுத்திருந்த ஃபைலில் நிறைய திருத்தங்கள் செய்யச் சொன்னார். “உடனடி கவனம். ஃபைல் இன்னிக்கே வேணும். நாளை காலைல இயர்லி மார்னிங் டெல்லிக்கு ஃப்ளைட். கையோட எடுத்துப் போகணும்” என்றார்.
கவலையை ஓரமாக வைத்துவிட்டு, கடமையில் கவனமானேன்.
வீட்டுக்குப் போகும்போது நள்ளிரவாகி இருந்தது. காளியப்பன் செய்த நம்பிக்கை மோசடியையும், நான் உழைத்துச் சேர்த்திருந்த பணம் மொத்தத்தையும் இழந்து மோசம் போனதையும் நினைக்க நினைக்க ஆத்திரமும் அழுகையுமாக மாறிமாறி வந்தது. தூக்கம் வரவில்லை.
காலையில் முதல் காரியமாக போலீஸ் கமிஷனர் ஆபிஸ் போக வேண்டும். உண்மைகளை எடுத்துச் சொல்லி, அந்த அப்பாவி பார்ட்னரைக் காப்பாற்ற வேண்டும். ஒரு வகையில் பார்த்தால் என்னைப் போலத்தானே அவரும். நண்பர் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கிறாரே என கலக்கமுற்று உதவிக்கு ஓடி வந்தவர்.
அப்போது காளியப்பன் மீது அரெஸ்ட் வாரண்ட் கொடுக்கப்பட்டிருந்தது நான் போட்டிருந்த்த வழக்கில். வழக்கு விஷயத்தையும் போலீஸாரிடம் சொல்லி, காளியப்பனைப் பிடித்து கோர்ட்டில் நிறுத்த வேண்டும்.
விடிந்தது. வெங்கியே சங்கு ஊதினான்.
“நேத்து நைட்டே காளியப்பன் வீட்டுக்கு வந்துட்டார். போலீஸ்காரங்களை நல்லா கவனிச்சிருப்பார்னு நினைக்கிறேன். பார்ட்னரை ரொம்ப அசிங்கப்படுத்திட்டாங்களாம் ஸ்டேஷன்ல. இன்னிக்கு காலைலதான் எழுதி வாங்கிக்கிட்டு அனுப்பினாங்களாம். இனிமே கொடுத்த காசைக்கேட்டு காளியப்பனை தொந்தரவு செய்ய மாட்டேன். அவரா கொடுக்குறப்ப வாங்கிப்பேன்னு எழுதிக் கொடுத்துட்டு வீட்டுக்கு வந்திருக்கார் அவர். காளியப்பனுக்கு சிபாரிசு செஞ்சு மேலிடத்தில் இருந்தும் ப்ரஷர் வந்ததாம்!”
“சரி இப்போ காளியப்பன் எங்கேடா?”
“அதைச் சொல்லத்தான் போன் செஞ்சேன். நேத்து ராத்திரி.. ஓவர் ஸ்பீடு பைக் டிரைவ்.. முன்னாடி போன பஸ்ல முட்டி மோதி ஸ்பாட்லயே செத்துட்டார் காளியப்பன்!”
‘என்ன பண்றதுன்னே தெரியலை சார்’ என்று கூறிக்கொண்டு யாரேனும் இப்போது என் எதிரே வந்து நின்றால், என்ன பண்ணுவது என்று கற்றுக் கொள்ள நான் தொலைத்தது பல லட்சம் ரூபாய்கள்!
இருந்தபோதிலும்.. பாத்திரம் அறிந்து பிச்சையிடும் சாமர்த்தியத்தை நான் இன்னும் முழுதாகக் கற்றுக் கொண்டபாடில்லைதான்! என்றாலும் படிப்பவர்களுக்கு உபயோகப்படுமே என்பதால் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
வெங்கிக்கு வழி காட்டிய வகையில்தான் லேசாக எனக்குப் பெருமை. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, அடுத்த வாரம் நந்தனத்தில் சொந்தமாக வெங்கிஸ் பிரியாணி என ஒரு பெரிய ஹோட்டல் திறக்கப் போகிறான் அவன்!
-
போலாம் ரைட்!
பிறிதொரு சந்தர்ப்பம் வாக்கையில் மீண்டும் சந்திப்போம் விகடகவி வாசகர்களே!
-
அழியா அன்புடன்..
ஜி.கௌதம்
GGowtham@GGowtham.com

Leave a comment
Upload