தொடர்கள்
தொடர்கள்
வாருங்கள் இலக்கியப்பக்கம்- - ஹரிகி

அர்த்தம் சொல்

20180313235309147.jpg

மிகப்பல மேதைகளுடைய இளம்பருவ நிகழ்ச்சிகள் நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. அப்படியொரு மேதையைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம். இந்த மாதம் ஆறாம் தேதி (ஏப்ரல் 6) அன்று இவருடைய 203ம் பிறந்தநாள் வந்தது. மிகப்பெரிய தமிழறிஞரான இவரைப் பற்றி யாரும் பேசத்தான் காணோம். இந்த ஏப்ரல் மாதத்தில் நம்முடைய கவனத்தைக் கவர ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்தபடியே இருந்ததனால்தான் இப்படி விட்டுப்போயிற்றா என்றால் அப்படியும் இல்லை. மற்ற சமயங்களிலும் இவரை எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறோம் என்பதே ஐயத்துக்குரிய ஒன்று. ஆம். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைத்தான் குறிப்பிடுகிறேன். தமிழ்த்தாத்தா உ வே சாமிநாதையருடைய குருநாதர்.

இவருக்குப் பதினைந்து வயதுகூட ஆகியிராத சமயம் அது. கல்வியில் மிகுந்த ஈடுபாடுடையவராக இருந்தார். தந்தை சிதம்பரம் பிள்ளையவர்கள் கணக்காயராக இருந்தார். என்னவோ ஏதோ என்று நினைத்துவிடாதீர்கள். கணக்காயர் என்றால் திண்ணைப் பள்ளிக்கூடத்து ஆசிரியர் என்று பொருள். சங்க காலத்து நக்கீரரின் தந்தையும் இப்படிக் கணக்காயராக இருந்தவர்தான். ‘மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரன்’ என்பது நக்கீரருக்கு வழங்கிவரும் பெயர்.

மிகச் சிறிய வயதிலேயே பெரும்புலமையை அடைந்தவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள். சிறு வயதில் தண்டியலங்காரம் கற்க விரும்பினார். அப்போதெல்லாம் புத்தகங்கள் ஓலைச்சுவடியின் வடிவத்தில் இருக்கும். ஒவ்வொரு முறையும் கையால் பிரதியெடுத்துக்கொண்டால்தான் ஒரு புத்தகத்துக்கு இன்னொரு படி (Copy) கிடைக்கும் என்பதால் புத்தகங்கள் கிடைப்பதே அரிதான ஒன்று. அந்தச் சமயத்தில் தண்டியலங்காரச் சுவடியை வைத்திருந்த ஒருவருடைய அபிமானத்தைப் பெற்று அவரிடமிருந்து இந்நூலைக் கற்றுக் கொள்வதற்காகவே அவர்பின்னால் சில மாதங்கள் திரிந்து, சுருட்டுப் பிடிக்கும் வழக்கமுள்ள அவருக்குப் புகையிலையைத் திரித்து சுருட்டாக்கிக் கொடுத்து உபசாரங்களெல்லாம் செய்து தண்டியலங்காரத்தில் பயிற்சிபெற்றார். நாம் இப்போது பார்க்கப் போவது இதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒன்று.

சிறுவயதில் பாடல்களைப் புனையத் தொடங்கினார் மகாவித்துவான் அவர்கள். பின்னாளில் ஒரு லட்சம் பாடல்களைப் புனைந்திருந்த காரணத்தால் இவருக்குப் பத்துக் கம்பன் என்ற பெயரும் உண்டு. அந்த நாளில் இப்படிப்பட்டவர்களை ஊக்குவிப்பவர்களும் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். இல்லையென்று சொல்லவில்லை. இவர் புனையும் ஒவ்வொரு வெண்பாவுக்கும் ‘ஒரு பணம்’ சன்மானமாக வழங்குவார்கள். ஒரு பணம் என்றால் இரண்டணா. பன்னிரண்டு தம்பிடி. இப்படிப் பெற்ற சன்மானத்தைக் கொண்டு “வேண்டுவனவற்றை மளிகைக் கடையில் வாங்கிக்கொண்டு சென்று தந்தையாரை மகிழ்விப்பார்” என்று உ வே சாமிநாதையர் அவர்கள் எழுதுகிறார்கள்.

ஒருமுறை திரிசிராபுரம் மலையாண்டியா பிள்ளை என்பவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் ஆற்றலை எல்லோரும் அறியுமாறு வெளிப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார். முருங்கைப் பேட்டை என்ற ஊரிலிருந்த ஒரு மிராசுதாரரிடம் இவரை அழைத்துச் சென்றார். அங்கே இருந்தவர்களில் ஒருவர் பதின்மூன்று, பதினான்கு வயதே ஆகியிருந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளைவர்களிடம் ஒரு பாடலைச் சொல்லி ‘அப்பா இப்பாட்டுக்கு அர்த்தம் சொல்’ என்று பொருள் கேட்டார்.

பிள்ளையவர்களும் அதன் பொருளை மிக அழகாக எடுத்துச் சொன்னார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அந்த மிராசுதாரர், ‘இப்பாட்டுக்(கு) அருத்தஞ் சொல்’ என்பதையே ஈற்றடியாக வைத்து ஒரு வெண்பா பாடு பார்ப்போம்’ என்று அவரை ஒரு வெண்பா இயற்றச் சொன்னார். சிரமமே இதுதான். மிகப்பெரிய தனவந்தர்களுக்கு ஆதரிக்கும் குணமிருக்கும். சிலருக்கே வெண்பா முதலான பாடல்வகைகளில் பயிற்சியிருக்கும். இந்த மிராசுதாரர் நல்லவர் என்றாலும், பொதுவாக இப்படிப்பட்டவர்களிடம் ஒருவகையான திமிர் இருக்கும். அப்படி ஒருவரிடம் ஆசுகவி காளமேகம் அகப்பட்டுக்கொண்ட கதையை இன்னொரு நாள் பார்ப்போம். இப்போது நம் கதைக்குத் திரும்புவோம்.

‘இப்பாட்டுக்(கு) அருத்தஞ் சொல்’ என்பதை வெண்பாவின் இலக்கணப்படி ஈற்றடியாக (இறுதி அடியாக) அமைக்க முடியாது. ஆகவே சிறுவராயிருந்த பிள்ளையவர்கள், ‘தூயவிப் பாட்டுக்(கு) அருத்தஞ் சொல்’ (தூயவிப்பாட் டுக்கருத்தஞ் சொல்) என்று அமைத்துக்கொண்டு பின்வரும் வெண்பாவைக் கண நேரத்தில் புனைந்தார். பாடலை அதன் இலக்கண அமைப்புப்படி முதலில் பார்ப்போம். அதன்பின்னர் பிரித்துப் பொருள் காண்போம்.

ஒண்கமலம் வாழ்ந்தன்ன மாகி உரலணைந்து

தண்கயநீர்த் தூங்கித் தகுமேறூர்ந் – தெண்கதிரின்

மேயவிதத் தான்மூவ ராகும். விளம்பியதென்?

தூயவிப்பாட் டுக்கருத்தஞ் சொல்.

மிராசுதாரர், ‘இந்தப் பாட்டுக்கு அர்த்தம் சொல்’ என்று ‘பாட்டுக்குப் பொருள் சொல்’ என்பதுபோலப் பாடச் சொன்னார். அதன் தொனிப்பொருளை மாற்றி, ‘நான் இயற்றியிருக்கிறேனே, இந்தப் பாட்டுக்கு அர்த்தம், ‘சொல்’ என்பதாகும்’ என்று பாடலை அமைத்தார் பிள்ளை வயதுப் பிள்ளையவர்கள். ‘சொல்’ என்றால் ‘நெல்’ என்றும் ஒரு பொருள் இருக்கிறது. அரிதான இந்தப் பொருளையும் அந்த வயதிலேயே அறிந்திருந்திருக்கிறார். ‘நான் எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு அர்த்தம் நெல்’ என்று பாட்டை அமைத்திருக்கிறார்.

ஒரு பாடலை சிலேடையாக அமைக்கும்போது ‘இதனால், இதனால்’ என்று மூன்று காரணங்களைச் சொல்லி இந்தக் காரணங்களால் இது இதற்கு நேர் என்று பாடலை அமைப்பது விதிமுறைப்படியானது. நமக்குத் தெரிந்திருக்கும் எல்லாச் சிலேடைப் பாடல்களும் இந்த விதிக்குப் பொருந்தி அமைந்திருப்பவையே.

பிள்ளையவர்கள் பாடிய பாடலில், ‘மும்மூர்த்திகளும் நெல்லும் சமம்’ என்று பொருள் அமைந்திருக்கிறது. சிலேடையின் முதற்பகுதியில் ‘ஒண்கமலம் வாழ்ந்து அன்னமாகி’ என்பது பிரமனுக்கும் நெல்லுக்கும் உள்ள ஒற்றுமையைக் குறிக்கிறது. பிரமன், தாமரையைப் பீடமாகக் கொண்டவன்; அன்னத்தை வாகனமாகக் கொண்டவன். ஆகவே பிரமன் தாமரையில் அமர்ந்து அன்னத்தை வாகனமாக்கிக்கொள்கிறார். நெல், தாமரைகள் நிறைந்த வயலில் தோன்றுகிறது; அன்னம் (உணவு) ஆகிறது.

அடுத்து ‘உரலணைந்து தண்கயநீர்த் தூங்கி’ என்பது திருமாலைக் குறிக்கும். கிருஷ்ணாவதாரத்தில் யசோதை, கண்ணனை உரலிலே கட்டிப்போட்டார். எனவே ‘உரலணைந்து’. ‘கயம்’ என்றால் இங்கே கடல் என்று பொருள். திருமால் கடலில் அறிதுயில் கொண்டிருக்கிறார்; உரலிலே கட்டப்பட்டார். நெல்லோ, உரலை அடைந்து குத்தப்படுகிறது. கயம் என்றால் நீர்நிலை என்றும் பொருள். நெல், நீர் நிறைந்திருக்கும் வயலிலே விளைகிறது. எனவே திருமாலும் நெல்லும் சமமாகின்றனர்.

அடுத்தது சிவனுக்கும் நெல்லுக்கும் சிலேடை. ‘தகும் ஏறு ஊர்ந்து, தெண்கதிரின் மேய விதத்தான்’. சிவன் ஏறு (நந்தி) ஊர்கிறார்; நெல் வண்டியில் ஏற்றப்படும்போது ஏறு ஊர்கிறது. ‘தெண்கதிரின் மேய விதத்தான்’ தெளிவான கதிரைக் கொண்டிருக்கும் தன்மையால் என்று பொருள். சிவனிடத்திலே பிறைச் சந்திரன் (கதிர்) இருக்கிறது; நெல்லின் கொத்துக்குக் கதிர் என்று பெயர். ஆகவே நெல் சிவனுக்கும் சமமாகிறது. பிரமனுக்கும் திருமாலுக்கும் சிவனுக்கும் சமமாக ஒன்று இருக்கிறது. அதைத்தான் இந்தப் பாட்டிலே குறித்திருக்கிறேன். ‘இந்தப் பாட்டுக்கு அர்த்தம் சொல்—அதாவது நெல்’ என்று பாடிய மிகவும் இளவயதினாரான பிள்ளையவர்களின் ஆற்றலை வியந்து மிராசுதாரர் இந்தப் பாடலுக்காக ஒரு வண்டி நெல்லைப் பரிசாகக் கொடுத்தார் என்று தமிழ்த்தாத்தா உ வே சாமிநாதையர் அவர்கள் குறிப்பிடுகிறார்.

மிகப் பெரிய புலவராக இருந்து ‘மகாவித்துவான்’ என்ற பட்டப்பெயரால் குறிப்பிடப்படும் பிள்ளையவர்கள் கல்வியாகிய நிதியைத் தன்னிடம் குவித்து வைத்துக்கொண்டு தன் மாணவர்களுக்குத் தமிழ்க் கல்வியையும் தனக்கு மற்றவர்கள் அளித்த அத்தனை நிதியையும் வழங்கியபடி வாழ்ந்தவர். மரணப் படுக்கையிலும் பாடம் சொன்னவர். இப்படி மரணத் தறுவாயிலும் பொருள்சொல்லி விளக்கிய நிகழ்ச்சியொன்றை இன்னொருநாள் பார்ப்போம்.

(தொடரும்)