தொடர்கள்
பொது
77 வயதில் எழுத்துச் சாதனை - பி.என்.எஸ். பாண்டியன்

20180313183422262.jpeg

- பி.என்.எஸ்.பாண்டியன்

4 மொழிகளில் முத்தெடுக்கும் முத்து மீனாட்சி

மொழியை கையாள்வது எழுத்தாளருக்கு ஒரு வரம். பல மொழிகளில் தம்மை வளர்த்தெடுத்துக் கொண்ட எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர், வரங்களை வரிசையாகப் பெற்றவர் என்று தானே அர்த்தம்!. அப்படிப்பட்ட எழுத்தாளுமை பெற்றவர் தான் முத்து மீனாட்சி.

தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பு ஆளுமைக்கான விருதினை சமீபத்தில் பெற்றிருப்பவர்தான் இவர். 77 வயதிலும் எழுத்துலகில் அவர் செய்த இமாலய சாதனைக்காக தமிழக அரசின் அங்கீகாரம் தான் இந்த விருது. இவருடைய இன்னொரு சிறப்பு என்னவென்றால் 64 வயதில் சமஸ்கிருதத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர் என்பது தான். விகடகவிக்காக நாம் அவரிடம் நடத்திய நேர்காணல் இதோ:-

2018031318344456.jpeg

தமிழக அரசின் விருதினை பெற்றிருக்கிறீர்கள். இந்த தருணத்தில் எதனை நினைவுகூற விரும்புகிறீர்கள்?

நான் ஒரு எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக உருவெடுப்பதற்கு என் கணவரும் எழுத்தாளருமான காசிபன் முக்கிய காரணம். இந்நேரத்தில் என்னை நான் செடியாக பாவித்துக் கொள்கிறேன். என் கணவர் என் ஆணிவேருக்கு நீர் ஊற்றினார். என் மகள் வழக்கறிஞர் ஹன்சா என் எழுத்துப்பணிக்கு உரம் போட்டார். என் மகளும், என் மருமகளும் நான் தழைத்து வளர பாதுகாத்தவர்கள். இவர்கள் நால்வரையும் தான் இத்தருணத்தில் நினைவுகூருகிறேன். இவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.

20180313183503875.jpeg

உங்களின் எழுத்துப்பணி எப்போது தொடங்கியது?

நான் 1942ல் திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் பிறந்தேன். அப்பாவின் பணிக்காக நாங்கள் குடும்பத்துடன் நாக்பூர் சென்று குடியேறினோம். 10 ஆம் வகுப்பு வரை படித்தேன். சுருக்கெழுத்து கற்றேன். இதன் தொடர்ச்சியாக அம்மாநில அரசில் சுருக்கெழுத்தாளராகப் பணியில் சேர்ந்தேன். அதன்பிறகு 2 வருடங்கள் கழித்துத் திருமணம் நடந்தது. கணவர் பெயர் ஷ்யாமலம் என்கிற காசிபன். அவரும் எழுத்தாளர் தான். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தொடக்கியவர்களில் ஒருவர். எல்.ஐ.சி. யில் பணியாற்றினார்.

திருமணத்திற்கு பிறகு ஹிந்தியில் எம்.ஏ., பி.எட் படித்தேன். பின்னர் 17 ஆண்டுகள் ஆசிரியையாக பணியாற்றினேன். திருமணத்திற்கு பிறகு நான் ஒரு கதை எழுதினேன். அதாவது ஒரு கணவன் தன் மனைவியை எதற்கெடுத்தாலும் அடிப்பான். அதுதான் கதை. அந்த கதையை மங்கையர் மலர் பிரசுரித்தது. கதையின் பெயர் ‘அடி’.

கதை வெளிவந்தவுடன் என் கணவரிடத்தில் அதை காட்டுவதற்கு எனக்கு பயம் வந்துவிட்டது. மனதை தேற்றிக் கொண்டு, அவரை தாஜா செய்து விவரத்தைச் சொல்லி கதையை படிக்கச் சொல்லி இதழினைக் கொடுத்தேன். அவர் படித்துப்பார்த்து வியந்தார். நானும் அப்பாடா.. தப்பித்தோம் என்று நினைத்தேன். என் எழுத்தை அவர் சிலாகித்தார். தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தினார். என் இயற்பெயர் வசந்தா. என் கணவர் பெயரினை சேர்ந்து வசந்த ஸ்யாமலம் என்ற பெயரில் அந்த கதையை எழுதினேன். இதற்கு முன்னதாகவே, கோதாவர் பெர்லேகர் என்ற முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னோடி ஒருவரின் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தேன். இப்படியாகத்தான் என் எழுத்துப் பணி தொடங்கியது. என்னுடைய நிறையக் கதைகள் பிரபல இதழ்களில் வெளியாகி உள்ளன.

2018031318352733.jpeg

உங்கள் மொழிபெயர்ப்புப் பணியைப் பற்றி?

எனது கணவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ரொம்பவே ஆக்டிவாக இருந்தவர். அவர் வழிகாட்டுதலின் பேரில் பல கட்டுரைகளை மொழிபெயர்ப்புச் செய்துள்ளேன். அவருடைய நண்பர்களும் என்னை ஊக்கப்படுத்தினர். என்னுடைய இயற்பெயரில் இருந்து கொஞ்சம் மாறி, என் பாட்டியின் பெயரான முத்துமீனாட்சி என்ற பெயரை எனது எழுத்துப்பணிக்கான பெயராக சூட்டிக்கொண்டேன். நிறைய இந்தியில் எழுதினேன். இந்தியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து கதைகளை எழுதியுள்ளேன். அவை தாமரை, செம்மலர் போன்ற இதழ்களில் வெளியாகி இருக்கின்றன.

தமிழில் இருந்து நல்ல கதைகளை ஹிந்திக்கு கொண்டு சென்றேன். அவை, சரிதா, காதம்பரி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. பிரேம்சந்த், யஷ்பால், வியேகி ஹரி ஆகிய பிரபல எழுத்தாளர்களின் கதைகளை தொகுத்துள்ளேன். இந்தியில் இருந்து ஜகதா என்ற கதையை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துள்ளேன். அதைப்போன்று போன்சாயின் நிழல்கள் என்ற செம்பை முருகானந்தத்தின் கதையை இந்தியில் மொழிபெயர்த்தேன். சமூக அறிஞர் ராகுல சாங்கிருத்தியாயனின் , ‘வால்கா முதல் கங்கைவரை’ காவியத்தை தமிழில் மொழிபெயர்த்ததைச் சிறந்ததாக கருதுகிறேன். இதனை என்.சி.பி.எச் நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர். இதைப்போன்று ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் ஞானக்சிங் எழுதிய, ‘ஆதம்கோர்’ என்ற புதினத்தை ‘நரபட்சிணி’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.

2018031318354917.jpeg

60 வயதுக்கு மேல் சமஸ்கிருதம் படிக்கச் சென்றது ஏன்? அதுவும் எம்.ஏ. படித்து பட்டம் பெற்ற அனுபவம் குறித்து?

வேலையில் இருந்து ரிடையர்டு ஆகிவிட்டேன். மொழிபெயர்ப்புப் பணிகளை செய்யத் தொடங்கினேன். சமஸ்கிருதம் எனக்கு தெரியும். ஆனால், சமஸ்கிருதத்தில் இருந்து படைப்புகளை மொழிபெயர்க்கக் கூடுதலாக தெரிந்திருக்க வேண்டும். இதற்காக எம்.ஏ. சமஸ்கிருதம் படிக்க விரும்பி நாக்பூரில் உள்ள கவிகுரு காளிதாஸ் பல்கலைக்கழகத்தில், முழுநேர மாணவியாக சேந்தேன். கல்லூரிக்கு சென்று முதல்நாள் வகுப்பிற்கு நுழைய வகுப்பறையை தேடினேன். என் வகுப்பறை இருந்தது ஆறாவது மாடியில். என்ன செய்வது என்றே தெரியவில்லை. திக்கி திணறி ஆறாவது மாடி ஏறி, வகுப்பறைக்குள் நுழைந்தேன். அங்கிருந்த மாணவ, மாணவிகள் என்னை ஆசிரியை என நினைத்து எழுந்து நின்று வணக்கம் செலுத்தினர். நானும் பதில் வணக்கம் செலுத்தி, நானும் மாணவிதான் என்று கூறி அவர்களுடன் வகுப்பில் உட்கார்ந்து கொண்டேன். என் வயது காரணமாக வாரம் ஒருநாள் மட்டும் வகுப்புக்கு வர அனுமதி கிடைத்தது. மற்ற நேரங்களில் வீட்டில் இருந்தே படித்தேன். வகுப்புகள் மராட்டிய மொழியில்தான் எடுத்தனர். நான் அதை வீட்டில் ஒருவரை வைத்து இந்தியில் மொழிமாற்றம் செய்து முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன்.

20180313183610418.jpeg

பெற்ற விருதுகள்- பரிசுகள் பற்றி?

நிறைய பரிசுகள் பெற்றிருக்கிறேன். நல்லி குப்புசாமி செட்டியார் வழங்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான ‘திசைஎட்டும்’ விருதினை பெற்றிருக்கிறேன். ஷப்னா ஆஸ்மி பவுண்டேஷன் சார்பில் சிறந்த பெண்மணிக்கான விருதும் கிடைத்துள்ளது. தற்போது தமிழக அரசும் விருது கொடுத்துள்ளது. நிறைய வாசகர்கள் என் பணியை பாராட்டும் போது அது எனக்கு ஊக்கமளித்திருக்கிறது.

20180313183638586.jpeg

எழுத்துத்துறையில் சாதனையாக எதனை கருதுகிறீர்கள்?

வித்யாதானம் என்பது மகத்தானது. ஒருவர் கற்ற கல்வியை மற்றவருக்கு போதிப்பதுதான் சிறந்தது. இதனைதான் நான் சாதனையாகச் செய்ய நினைக்கிறேன். என்னுடைய எழுத்துப்பணிகளுக்கு உடனிருந்து உற்சாகப்படுத்துபவர், ஊக்கப்படுத்துபவர் எனது கணவர். நானும் அவரும் சேர்ந்து தமிழில் உள்ள நல்ல படைப்புக்களை ஆங்கிலத்திலும், இந்தியிலும் கொண்டு செல்ல முடிவு செய்து பணியாற்றி வருகிறோம்.

20180313183704467.jpeg

இளம் படைப்பாளர்களின் படைப்புக்களை மொழிமாற்றம் செய்ய விரும்புகிறேன். தரமான தமிழ் படைப்புக்கள் வேறு தளத்தில் சென்று சேர என்னால் ஆன உதவிகளை செய்வேன். நல்ல படைப்புகளை மொழிபெயர்ப்பதை தான் என் சாதனையாக கருதுகிறேன்.

20180313183730244.jpeg

உள்ளத்தில் உயர்வான எண்ணங்களை தேக்கி வைத்து, எழுத்துலகில் சாதனை படைக்கும் முத்து மீனாட்சிக்கு நம் விகடகவியின் சார்பில் முத்தான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.