தொடர்கள்
தொடர்கள்
நான் ஒரு ரசிகன் (21) - மதன்

2018031318243245.jpg

இது ப்ளேடு விஷயம்!


பூமியில் மனிதன் தோன்றியவுடனேயே ‘கண்டுபிடிப்புகள்’ ஆரம்பமாகிவிட்டன. நெருப்பு - ஒரு கண்டுபிடிப்புதான். அதை அணையாமல் காப்பதும் ‘கண்டுபிடிப்பு’தான்!

டிஸ்கவரி - இன்வென்ஷன் என்று இரண்டு உண்டு. இருப்பதைக் கண்டுபிடிப்பது டிஸ்கவரி. ஏற்கெனவே இருந்த அமெரிக்காவை கொலம்பஸ் ‘டிஸ்கவர்’ செய்தார். புதுசாக ஒன்றைத் தயாரிப்பது இன்வென்ஷன். உதாரணம்: சக்கரம். இன்னோவேஷன் என்று மூன்றாவதாக ஒன்று உண்டு - இருப்பதில் அதிசயமான மாற்றங்கள் செய்வது! பட்டையாக இருந்த சக்கரத்தின் நடுப்பகுதியை வெட்டியெடுத்துவிட்டு அதில் குறுக்குச் சட்டங்களை (Spokes) மனிதன் பொருத்தினான். அதுதான் இன்னோவேஷன்!

கண்டுபிடிக்கும் ஆர்வம் எல்லோருடைய ஆழ்மனதிலும் உண்டு. சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்துக் கதை’களில் ஒரு சிறுகதையில் (ஏறக்குறைய ஜீனியஸ்) துரைசாமி என்று ஒரு கேரக்டர் வருவார். திருவல்லிக்கேணியிலும் அதேமாதிரி ஒரு கேரக்டரைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். ரங்காச்சாரி என்கிற அவர், என் நண்பனின் தாத்தா. அவர் அறை முழுக்க டிராயிங் புத்தகங்கள். லியனார்டோ டாவின்சியின் ‘ஸ்கெட்ச் புக்’ போல அதில் பக்கம் பக்கமாக ஏராளமான கண்டுபிடிப்புகளை வரைந்து வைத்திருப்பார். ‘கவர்ன்மென்ட்டுக்கு இதையெல்லாம் அனுப்புங்களேன் தாத்தா’ என்றால், ‘கிழிச்சானுங்க!... அப்புறம் தன்னுது என்பான்கள். இதை யூஸ் பண்ணா காருக்கு பெட்ரோலே வேணாம்டா!’ என்பார்.

20180313182458890.jpg

நான் என் ‘கண்டுபிடிப்பு’களைக் கார்ட்டூனாக வரைந்தேன். ஒரு கார்ட்டூனில் ‘பொல்யூஷனை’த் தடுக்க பஸ்ஸின் புகைபோக்கிகளை (Exhaust) மேலே கூரைக்குக் கொண்டு செல்லலாம் (ரெயில் இன்ஜினில் இருப்பதுபோல) என்பதாக நான் வரைய, தமிழ்நாடு போக்குவரத்தில் சில பஸ்களில் அதேமாதிரி புகைபோக்கிகளைப் பொருத்தினார்கள். ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும், தமாஷுக்காக வரைந்த கார்ட்டூனை சீரியஸாக எடுத்துக் கொண்டு விட்டார்களே என்று தர்மசங்கடமாகவும் இருந்தது. மேலே புகையைக் கொண்டு சென்று வெளியே தள்ள உந்துசக்தி வேண்டும். இல்லாவிடில் புவிஈர்ப்பு சக்தி அதனைக் கீழே இழுக்கும். இந்த அடிப்படை விஷயம் மிக மோசமாக பௌதிகம் படித்த எனக்கே தெரியும். எப்படி அதைக் கோட்டை விட்டார்கள் என்று தெரியவில்லை. மொத்தத்தில், அது ஒர்க்அவுட் ஆகவில்லை.

கார், ப்ளேன், ரேடியோ, கம்ப்யூட்டர் போன்ற பெரிய விஷயங்களைக் கண்டுபிடித்தவர்களைப் பற்றித்தான் எல்லோருக்கும் தெரிகிறது. வாழ்க்கையில் குட்டிக் குட்டி விஷயங்கள் எத்தனை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது! அவற்றைப் பற்றியும் பாடப்புத்தகங்களில் சில பக்கங்களாவது ஒதுக்காதது குறித்து எனக்கு வருத்தம் உண்டு. அமெரிக்காவில் துரைசாமி, ரெங்காச்சாரி போன்றவர்கள் பல்லாயிரக்கணக்கில் உண்டு. அவர்களுக்காகவே 1985-ம் ஆண்டிலிருந்து ‘தேசிய கண்டுபிடிப்புகள் போட்டி’ ஒன்றை நடத்துகிறார்கள். முதல் வருஷமே அதில் கலந்து கொண்டவர்கள் 80,000 பேர்! 'innovation'தான் நிறைய. ஒரு உதாரணம், டார்ச்லைட் பொருத்தப்பட்ட குடை! இரவில், மழையில் நடந்து போகும்போது வசதியாகத்தான் இருக்கும். போட்டியில் கலந்து கொண்டு இதை வரைந்து அனுப்பியவர் கேட்டீஹார்டிங் என்கிற ஐந்து வயதான சிறுமி. (அந்தப் படம் இல்லை. ஆகவே நானே கற்பனை செய்து வரைந்திருக்கிறேன்!)

20180313182520786.jpg

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜட்டியில் நாடாதான் இருந்தது. 1820-ல் பிரிட்டிஷ்காரர் தாமஸ் ஹாங்காக் என்பவர் ‘எலாஸ்டிக்’ கண்டுபிடித்தார். அதிலிருந்து ஜட்டியின் சரித்திரமே மாறிவிட்டது!

பண்டைய கிரேக்கர்கள்தான் முதலில் துணி அவிழாமல் சேர்த்துப் பிடிக்க வசதியாக ‘சேஃப்டி பின்’னைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் அதற்கு வைத்த பெயர் ஃபியூலா. பிறகு அது மறக்கப்பட்டு, 1849-ல் வால்ட்டர் ஹண்ட் என்னும் அமெரிக்கரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது! அதுதான் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் சேஃப்டி பின்! இதெல்லாம் எவ்வளவு பேருக்குத் தெரியும்?

அமெரிக்காவில் வில்கான்ஸின் மாநிலத்தில் பிறந்தவர் கிங்.ஸி.ஜில்லெட். ஒரு தீ விபத்தில் அவருடைய தந்தை வைத்திருந்த கடை சாம்பலாகி, குடும்பம் ஏழ்மைக்குள் விழுந்தது. மகன் ஜில்லெட் ஒரு விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்குச் சேர்ந்தார். அலைச்சலான வேலை. இதற்கு நடுவிலும் அந்த இளைஞருக்குப் புதுப்புது ஐடியாக்கள் தோன்றிக் கொண்டேயிருந்தது. தன் நண்பர் வில்லியம் பெயின்ட்டர் என்பவரிடம் அதையெல்லாம் சொல்வார் ஜில்லெட். ‘நிறைய யோசித்துக் குழப்பிக் கொள்ளாதே. ஏதாவது ஒன்றைப் பற்றித் தீர்க்கமாக யோசி!’ என்றார் பெய்ன்டர். (பெய்ன்டர்தான் மது புட்டிகளில் உபயோகப்படுத்தப்படும் ‘கார்க்’ இணைத்த மூடியைக் கண்டுபிடித்தவர்.)

20180313182541882.jpg

1895-ல் ஒரு நாள் ஜில்லெட் ரேஸரை (கத்தி!) உபயோகித்து ஷேவ் பண்ணிக் கொண்டிருந்தபோது அதன் முனை மழுங்கிப் போயிருந்தது. உடனே நாவிதர் கடைக்குச் சென்று சாணை தீட்ட வேண்டி வந்தது. அப்போதுதான் ‘இன்றைய ரேஸரு’க்கான ஐடியா பளீரென்று ஜில்லெட் மூளையில் உதித்தது. உடனே மனைவியிடம் ஓடிச் சென்று, ‘ஃபர்ஸ்ட் க்ளாஸ் ஐடியா தோன்றியிருக்கிறது. இனிமேல் நாம் வசதியாக வாழலாம்’ என்றார் ஜில்லெட் உற்சாகமாக. ஆஃப்டர் ஆல் ‘ரேஸர்’ என்பது என்ன? கத்தியை விடக் கூர்மையான ஓரப்பகுதி! அதைத் தயாரிக்க முடியாதா? இரும்புத் தகடுகளை வாங்கிக் கொண்டு பல தொழிற்சாலைகளுக்கு ஓடினார் ஜில்லெட். ‘அந்த அளவு கூர்மையை தகட்டில் ஏற்படுத்த முடியாது. தகடு தாங்காது!’ என்று சொல்லிவிட்டார்கள். ஜில்லெட் தளரவில்லை. பழைய கடிகாரங்களுக்குள்ளே சுருளாக ‘ஸ்பிரிங்’ இருப்பதைப் பார்த்திருப்பீகள். அதைப் பிரித்து அங்குல நீளத்துக்கு வெட்டி எடுத்து, ஓரத்தைக் கூர்மைப்படுத்தி எசகுபிசகாக பிளேடையும், அதைப் பொருத்தி வைக்க ரேஸர் கைப்பிடியையும் தயாரித்தார் ஜில்லெட். ரேஸர் தயாரிப்புக்காக சிறு தொழிற்கூடம் நிறுவ முதலீடு தேவைப்பட்டது. யாருமே உதவ முன்வரவில்லை. ஆறு ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு 1901-ல் நண்பர்கள் கூடி ஐந்தாயிரம் டாலர்களைத் திரட்டி அவரிடம் தந்தார்கள். எம்.ஐ.டி.யில் படித்துப் பட்டம் பெற்ற நிக்கல்ஸன் என்பவர் இரும்புத் தகடின் ஓரங்களை மேலும் கூர்மையாக்க வழிமுறைகளை ஜில்லெட்டுக்குச் சொல்லிக் கொடுத்தார். ரேஸர்கள் கச்சிதமாகத் தயாரிக்கப்பட வேண்டும் என்கிற பிடிவாதத்தால் மேலும் இரண்டாண்டுகள் ஓடின. தொழிற்கூடத்தை நடத்த முடியாமல் கடன் தொல்லை. ஜில்லெட் கவலையில் ஆழ்ந்தார். முனை மழுங்கிய ரேஸர்களை வெறுத்த ஜான் ஜாய்ஸ் என்கிற செல்வந்தர், ஜில்லெட் முயற்சி பற்றிக் கேள்விப்பட்டு, அவரைச் சந்தித்து, ‘இது மிக முக்கியமான கண்டுபிடிப்பு’ என்று சொல்லித் தேவையான பண உதவியும் செய்தார்.

1903-ம் ஆண்டு ப்ளேடு பொருத்தப்பட்ட ரேஸர்கள் விற்பனைக்கு வந்தன. ஜில்லெட் நகத்தைக் கடித்துக் கொண்டு பரபரப்புடன் காத்திருக்க, முதல் ஆண்டு 51 ரேஸர்களும் 168 பிளேடுகளும் விற்பனையானது. ஜில்லெட் சற்று அப்செட் ஆனார். ‘பொறுமையாக இரு’ என்றார் ஜான்ஜாய்ஸ். ஒரே ஆண்டு! சரேலென்று விற்பனை மேலே கிளம்பியது. இரண்டாம் ஆண்டு விற்பனையான ரேஸர்கள் 90,844. ப்ளேடுகள் - ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம்! இப்போதும் ஜில்லெட் கம்பெனி உண்டு. அவர் பெயரில் ப்ளேடும் உண்டு!