தொடர்கள்
பொது
'மாணிக்' உடன் ஒரு மாமல்லபுர பயணம்!

20180313191604480.jpg

“மகாபலிபுரத்தையே உங்களுக்கெல்லாம் புதிதான முறையில் அறிமுகம் செய்து வைக்கிறேன். நீங்கள் இந்த அனுபவத்தை சந்திக்கத் தயாரா?!” என்று கேட்டார் சமீபத்தில் விகடகவி பத்திரிகை குழுமத்திற்கு அறிமுகமாகியிருந்த நண்பர் மாணிக் ராஜேந்திரன்.

விகடகவியின் வளர்ச்சியில் அக்கறை காட்டி வரும் இவர் வாசகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆக இத்துறையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அனுபவமுடைய பல புதிய குழுக்களை நமக்கு அறிமுகப்படுத்தி வருகிறார். இப்படி வளந்து வரும் தொழில்முனைவோர்க்கு ஆலோசனைகள் தருவது ஒரு புறம்.. இதய டாக்டர்கள் மத்தியில் ஒரு ‘App’ ஏற்படுத்தி எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் விவசாயிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டால் கூட அவரையும் பிரபல இதய நோய் நிபுணரையும் இணைக்கும் உத்தி மறு புறம்.. தவிர, இன்னும் ஒரு பணியாக ஹெரிடேஜ் சுற்றுலாக்கள் நடத்துவது என நாலா திசைகளிலும் பம்பரமாகச் சுற்றுகிறார் இந்த மனிதர்.

20180313191623535.jpg

யார் இந்த மாணிக்கம் ராஜேந்திரன்?

எல்லா பொறியியல் பட்டதாரிகளையும் போல சென்னை அண்ணா பல்கலையில் படித்து, பிறகு ஐ.ஐ.எம். முடித்து அமெரிக்க வேலையில் செட்டில் ஆன வழக்கமான என்ஜினியர்தான்.

“அங்கு ஒரு இருபத்தைந்து வருடங்கள் வாழ்ந்து தேவையான பணம் ஈட்டி மனைவி மக்களை சந்தோஷப்படுத்திய பின்னர் `என் நாட்டிற்கு ஏதாவது செய்வோமே!` என்று எண்ணம் தோன்ற.. குடும்பத்தாரின் மனமார்ந்த ஒப்புதலோடு புறப்பட்டு தமிழகம் வந்தேன். வந்து இறங்கியதுமே மருத்துவத்துறை நண்பர்கள் அவர்களது மருத்துவமனைப் பணிகளுக்கு என்னை அழைக்க அங்கே அவர்களுடன் கொஞ்ச காலம் நிர்வாகப் பணியில் இருந்தேன். அப்போதுதான் இந்தியாவில் மொத்தமே நாலாயிரம் இதய நோய் நிபுணர்கள்தான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். உடனே தோன்றியதுதான் இந்த App ஐடியா. இதன் மூலம் நூற்றுக்கணக்கான இதய நோய் நிபுணர்கள் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். இதனால் நெல்லை கிராமம் ஒன்றில் ஹார்ட் அட்டாக்கிற்காக ஒரு சாதாரண கிளினிக்கில் அட்மிட் ஆகும் விவசாயி கூட சட்டென பெரிய டாக்டரின் ஆலோசனையால் சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைகிறார். அதாவது சிறிய நர்ஸிங்ஹோம்கள், கிளினிக்குகள் இடையே எங்கள் Appஐ பிரபலப்படுத்தியிருக்கிறோம். அவர்கள் ஹார்ட் அட்டாக் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து இந்த Appல் நோயாளியின் ஈ.ஸி.ஜி. ரிப்போர்ட்டை அப்லோட் செய்ய.. உடனே எங்கள் லிங்க்கில் இருக்கும் யாராவது ஒரு இதய நோய் நிபுணர் தன் ஆலோசனையைத் தருகிறார். அந்த இடத்திற்கு அருகேயுள்ளவர்களிடம் பெரும்பாலும் கனெக்ட் செய்துவிடுகிறோம். இது மிகவும் குறைந்த செலவில் செய்யப்படுகிறது என்பதுதான் விசேஷம்!” என்றார்.

20180313191705103.jpg

“சரி சார்.. நாங்கள் உங்கள் மகாபலிபுரம் ஹெரிடேஜ் டூருக்கு ரெடி! அதற்கு முன்பாக அது என்ன ஹெரிடேஜ் சுற்றுலாத்திட்டம்? அதுபற்றி சொல்லுங்களேன்!” என்றோம்.

“நம் பாரம்பரியம் பற்றி நம்மில் பலருக்கும் பெரும்பாலும் தெரிவதில்லை. கோயில்களிலும், கல்வெட்டுக்களிலும் புதைந்துகிடக்கும் ரகசியங்கள் நம் கோயில் சிற்பங்கள்.. அதன் வரலாற்றை நமக்கு புதிய வகையில் அறிமுகப்படுத்தக் கூடியவை. நம் தொல்பொருளியல் வல்லுநர்கள் பல பேர் இதற்காக கடுமையாக உழைத்து நிறைய தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அதனை முறையாக அறிமுகப்படுத்த நம் எல்லா அரசாங்கங்களும் தவறிவிட்டன. என்னைப்போல ஒரு சிலர் இப்போது அப்படிப்பட்ட பாரம்பரிய செழிப்பு மிக்க இடங்களின் குறிப்புக்களை பரிபூரணமாக உணர்ந்து.. கற்று.. மற்றவர்களுக்கு இதுபோன்ற ஹெரிடேஜ் சுற்றுலா மூலம் எடுத்துச் சொல்லி வருகிறோம். இப்போதைக்கு இந்த அறிமுகம் போதும்… நீங்கள் இனி திருமல்லைக்கடல் பயணத்தில் மீதியை உணர்வீர்கள்” என்று அழைத்தார் மாணிக்.

20180313191726638.jpg

மகாபலிபுரத்தின் மறுபெயர் திருமல்லைக் கடலா? ஆஹா பெயரே தித்திக்கிறதே என்கிற ஆனந்தத்தோடு மிகுந்த உற்சாகத்துடன் சென்ற ஞாயிறு காலை 5.30 மணிக்கு அவர் சொன்னபடி ஈ.சி.ஆர். ரோட்டிலுள்ள மருதீஸ்வரர் ஆலய வாசலில் அவரை சந்தித்தோம். நம்மைப்போலவே ஆர்வமுடைய மற்றவர்களும் வந்து சேர.. அங்கிருந்து நான்கு கார்களில் 16 பேராக திருமல்லைக்கடல் நோக்கி பயணம்.

முதல் ஸ்டாப்பிங் மாமல்லபுரத்திற்கு முன்பே உள்ள புலிக்குகை. போகும் வழியில் எல்லாம் திருவிடந்தை ராணுவ எக்ஸ்போவுக்காக பிரும்மாண்ட வாகனங்களில் வந்திறங்கிய பீரங்கி மற்றும் விமான பாகங்களை வாய் பிளந்து பார்த்தவாறே சென்று இறங்கினோம்.

20180313191749494.jpg

புலிக்குகை சிற்பங்கள் ஒவ்வொன்றாக காட்டி.. மிகவும் சுவாரஸ்யமாக `கேள்வி-பதில்` பாணியில் நம்மையும் யோசிக்க வைத்து விடைகள் பெற்று.. மாற்று விடைகள் தந்து.. என சுற்றுலா வர்ணனைகளில் அட்டகாசப்படுத்தினார் மாணிக்.

'இது ஏன் ராஜ மண்டபமாக இருந்திருக்க வேண்டும்?. இங்கு ஏன் சிவன் கோயில்? சற்று தள்ளி ஏன் முருகன் கோயில்? அப்போதைய செங்கல் எப்படி இருக்கிறது பாருங்கள்.. என எல்லாவற்றுக்கும் சரித்திர ஆய்வாளர்கள் தந்த விளக்கங்களை நமக்கு எளிய முறையில் புரியும்படியாக சொல்லிக்கொண்டே போனார். குழுவாக நின்று, வேண்டியமட்டும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு.. அந்த காலை வேளையில் சுறுசுறுப்பாக நடந்து புலிக்குகை டூர் முடித்து மகாபலிபுரத்தினுள் எண்டர் ஆனோம்.

20180313191814566.jpg

மகாபலிபுர சிற்பங்கள் தொடங்குமிடத்தில் உள்ள பெருமாள் கோயில் பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்தி.. அவர்ஆளுக்கொரு இளநீர் வாங்கித்தர உற்சாகமாக உறிஞ்சினோம்.

இதன் பிறகு தொடங்கிவிட்டது மாமல்லபுர சிற்பங்களின் விவரணை. பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாம் வழக்கமாக சென்று பார்த்த மகாபலிபுர சிற்பங்களை இப்போது ஒரு புதிய கண்ணோட்டத்தோடு பார்க்க கற்றுத்தருகிறார் மாணிக். அதிலும் ஏகப்பட்ட சிற்பங்கள் நிறைந்த அந்த ஒற்றைப் பாறையினை இமயமலையின் அப்பட்டமான வார்ப்பு என சொல்லி நம்பத்தகுந்த வகையில் பல்வேறு சான்றுகளையும் மாணிக் விவரித்தது டாப் டக்கர்.

20180313192358415.jpg

அர்ஜுனன் தபஸ் முதல் பள்ளிகொண்ட ரங்கன், பேன் பார்க்கும் குரங்கு, யானைகள், குதிரைகள், சிவனின் பூதகணங்கள் என அவர் ஒவ்வொன்றாக நுணுக்கமாகவே விவரிக்க.. நமக்கு சத்தியமாக மெய் சிலிர்க்கிறது.


இப்படி காலை 5.30க்கு ஆரம்பித்த பயணம், வடித்து வைத்த சிற்பங்களின் அழகான காட்சி தரிசனங்களாலும், அவற்றுக்கு கிடைத்த அரிய விளக்க வர்ணனைகளாலும் நமக்குள் ஒரு புதிய உத்வேகத்தையும், நம் பாரம்பரியம் குறித்து மேலும் தெரிந்துகொள்ள ஆவல் மற்றும் சிந்தனைகளையும் கிளப்பிவிடுவது நிஜம்.

20180313192101994.jpg

அங்கிருந்த நான்கு மணி நேரத்தில் நமக்கு காலைப் பசி கூட சற்று மறந்து போகிறது. பள்ளி, கல்லூரி காலகட்டங்களில் அங்கு சென்று நாம் சாப்பிட்ட எலுமிச்சை, புளி சாத நினைவுகளே மிச்சமிருந்த நமக்கு இப்போதுதான் சிற்பங்கள் மீதும் அதன் வரலாறு மீதும் கவனம் போனது. தாங்க்ஸ் டு மிஸ்டர்.மாணிக்கம். பத்து மணி அளவில் மாமல்லபுரம் ஓட்டலுக்கு வந்தபோது `தோசை மட்டும்தான் இருக்கு!` என்றார்கள். அதையும் உண்டு மகிழ்ச்சியோடு ஹெரிடேஜ் டூர் முடித்தோம்.

இதுபோன்று தமிழகம் முழுக்கவே பல ஹெரிடேஜ் சுற்றுலாக்களை மாணிக் ராஜேந்திரன் நடத்துகிறார். ஆர்வமுடையவர்கள் அவரை இந்த manick@gmail.com ஈ-மெயிலிலும், 95662 80530 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

-சுபா வெங்கட்,

படங்கள்: மேப்ஸ்