தொடர்கள்
பொது
நோக்க நோக்க க(கி)ளியாட்டம்!...

20180313161118542.jpg

படங்கள் கட்டுரை ; முத்ரா.

காக்கை குருவி எங்கள் ஜாதி –நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்

நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை

நோக்க நோக்க களியாட்டம்…

இயற்கையை நேசித்த பாரதியின் பாடல் வரிகள். இதைப் படிக்க படிக்க ஆனந்தம். ஆனால் நம் சென்னை மாநகரில் இயற்கையை நோக்க நோக்க களியாட்டத்துடன் இருக்கத்தான் முடியுமா? முடியும் என்கிறார் கேமரா ஹவுஸ் சேகர். ராயப்பேட்டை மணிக்கூண்டின் எதிரில் உள்ள பாரதி சாலையில் இருக்கிறது இவரது வீடு. இவரைத் தேடி, இவர் தங்களுக்காக அமுது படைப்பார் என்று நம்பி கிட்டத்தட்ட இரண்டாயிரம் பச்சைக்கிளிகள் (கோடை காலமாதலால் எண்ணம் குறைவு, மழைக்காலங்களில் இந்த எண்ணிக்கை நான்காயிரத்துக்கும் அதிகமாக இருக்கலாம், பச்சைக்கிளிகள் தவிர புறாக்கள் சில நூறு, காக்கை, சிட்டுக்குருவிகள் சில )இவரது வீட்டின் மொட்டை மாடிக்கு வருகின்றன. தினமும் இரண்டு மூட்டை அரிசியை (25 கிலோ அளவுள்ளது ஒரு மூட்டை) நன்றாக கழுவி அலசி, சிறிது நேரம் ஊறவைத்து இந்தப் பறவைகளுக்கு உணவளித்து வருகின்றார். சென்னையின் பறவை மனிதர். இன்று உலகலாவிய சுற்றுலாப்பயணிகள் சென்னை வரும் பொழுது இவரது வீட்டுக்கு வந்து காலையும், மாலையும் இந்தப் பறவைகளை தரிசிக்காமல் செல்வதில்லை. அந்த வகையில் இவரது வீடு இப்பொழுது சுற்றுலாத்தளமாகவும் உள்ளது. ஒரு மாலை வேளை மூன்று மணியளவில் விகடகவிக்காக அவர் அளித்த நேர்காணல்.

20180313161143296.jpg

"நாள் தோறும் நீங்கள் இந்தக் கிளிகளுக்கு உணவளித்து வருகிறீர்கள்? இது எப்பொழுது தொடங்கியது?"

"2004 சுனாமி வந்த நாள், அன்று ஆரம்பித்தது. இங்கிருந்து பக்கத்திலேதானே கடற்கரை ஊரே ஒரே அலங்கோலமாக இருக்கிறது. சுனாமி என்ற வார்த்தையே நமக்கு தெரியாது, காலையில் சில பேர் ஒடி வந்து கடல் ஊருக்குள்ளே வந்துடுச்சுனு சொல்லி பீதியை கிளப்பினார்கள். சரி, இந்த உலகத்துக்கு என்ன உண்டோ அதுதான் நமக்குனு நினைச்சிட்டு இருந்தேன். அப்போ இதே மொட்டை மாடியிலே ‘கீ..கீ..’ சத்தம் கேட்டுது. ஒரு ஐந்து அல்லது ஆறு கிளிகள் இருக்கும். பார்க்கும் போழுதே தெரிகின்றது. அவங்களுக்கு நல்ல பசி. அப்போ வீட்டில் இருந்த அரிசியை கொஞ்சம் எடுத்து வெச்சேன். இப்படி ஆரம்பித்தது. ஆறு பேர், பத்து, இருபது, ஐம்பது, நூறு, இப்போ கிட்டத்தட்ட இரண்டாயிரம் வரை எண்ணிக்கை, இதே மழைக்காலமாகவோ, அல்லது மழை பெய்து கொண்டு இருந்தாலோ ஐயாயிரத்துக்கும் மேல் வருவாங்க.கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக இந்தப் பணி இறையருளால் தொடர்கின்றது. இந்தப் பதினைந்து வருடங்களில் நான் கூட சில வேளைகளில் சாப்பிடாம இருந்திருக்கேன். ஆனால் இவங்களுக்கு உணவு படைக்காமல் இருந்ததில்லை."

20180313161203961.jpg

"என்ன சார் கிளிகளை அவங்க இவங்கனு மரியாதையோடு கூப்பிடறீங்க?"

"என்ன தவறு சார், அவங்க நம்பள விட எந்த விதத்திலே குறைந்துபோய் விட்டாங்க. பார்த்தால் நம்பை விட மேலானவங்க சார். புறம் பேசுவதில்லை, பொய் சொல்வதில்லை, அடுத்த உயிர்களுக்கு இடைஞ்சல் செய்வதில்லை, அதனாலே நான் அவங்களை மரியாதையோட தான் கூப்பிட்டு பழகிட்டேன்."

20180313161225550.jpg

"இப்படி ஒரு பரபரப்பான சிட்டியிலே இது சாத்தியமா சார்?"

"உலகத்திலே இது போல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான கிளிகள் கூடும் இடம் இது ஒன்றுதான். வேறெங்கும் இல்லை என்பதே உண்மை."

2018031316125989.jpg

"இவங்களுக்கான உணவை எப்படி தயார் செய்கிறீர்கள்?"

"வெறும் அரிசிதான் . காலையிலே ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திடுவேன். ஒரு மூட்டை அரிசியை தண்ணீரில் அலசி இரண்டு மூன்று பக்கெட்டுகளில் எடுத்துக் கொள்வேன். தண்ணீரில் அலசியதால் ஒரு அரைமணி நேரத்தில் கால்பதம் அது ஊறி கொஞ்சம் பெரிதாக ஆகிவிடும். ஐந்தேமுக்காலுக்கெல்லாம் இந்த மரச்சட்டங்களை மொட்டை மாடி சுவற்றில் சாற்றி வைத்து ஒரு கைப்பிடி அளவு என்று வரிசையாக வைத்துக்கொண்டே வருவேன். ஒரு வரிசைக்கு கிட்டத்தட்ட நூறு கைப்பிடி தனித்தனியாக வைத்துக்கொண்டே வருவேன். இப்படி கிட்டடத்தட்ட பத்து, பதினைந்து வரிசை. வெச்சிட்டு நான் அங்கேயே இருக்கமாட்டேன். வீட்டின் கதவை அடைத்துவிட்டு கீழே போய் நின்று கொள்வேன். அங்கொன்றும், இங்கொன்றுமாக வர ஆரம்பிப்பாங்க, பக்கத்திலே இருக்கும் ஆலமரம், மொட்டை மாடி இப்படி பல இடங்களில் இருந்து பார்ப்பாங்க, இதோ இந்த மொட்டை மாடிக்கு பக்கத்தில் இருக்கிறதே அந்த கேபிள் டிவி கேபிள், அதிலே வரிசையாக வந்து உட்கார்ந்துக்குவாங்க. ரொம்ப கவனமாக சுற்றுப்புறத்தை நோட்டம் விடுவாங்க, வேவு எல்லாம் கூட பார்ப்பாங்க, மனிதர்களால் தங்களுக்கு தொல்லை இல்லை என்பதை அந்தக் கூட்டத்திலே உள்ள தலைவர் போன்ற ஒருவர் சரி பார்த்து முதலில் கீழே இறங்கி உட்காருவார். சொல்லிவைத்தது போல மொத்தப் பேரும் வந்துடுவாங்க, கீச்..கீ..கீச்சுன்னு ஒரே சத்தமாக இருக்கும். ஒரு இருவது நிமிடத்தில் முதல் தொகுதி முடிந்திடும். அடுத்த தொகுதி சிறிது நேர்திலே வருவாங்க. அவங்களும் சாப்பிட்டு திருப்தியா போவாங்க, இவங்களுக்கு இடையில் சில நூறு புறாக்களும் வருவாங்க, காக்கா, குருவிகள் எல்லாம் கூட வருவாங்க, மன நிறைவோட சாப்பிட்டுப்போவாங்க. காலையிலே ஆறேமுக்காலுக்குள்ளே சாப்பாட்டை முடிச்சிட்டுக் கிளம்பிடுவாங்க. மாலையிலே மூணு மணிக்கு நான் அரிசியை தயார் செய்வேன். நான்கு மணிக்கெல்லாம் கடை விரிப்பேன். ஐந்து மணி சுமாருக்கு வர ஆரம்பிப்பாங்க, ஆறரை மணிக்கெல்லாம் கூடு போய்ச் சேர்ந்துடுவாங்க."

20180313161324148.jpg

"இந்தக் கிளிகளோட வாழ்க்கை முறை எப்படிசார்?"

"பொதுவாகவே கிளிகள் வனப்பறவை சார். இதை வீட்டில் வளர்க்க முடியாது. கூடாது என்பதே உண்மை. முப்பது வருடங்கள் உயிரோட இருப்பாங்க, சாதாரணமாக மரங்களில்தான் வாழ்வார்கள். சென்னையின் சூழலை பொறுத்து இவர்கள் மிகப்பெரிய கட்டிடங்களில் மேல் தளத்தில் இருக்கக்கூடும். ஆனால் இங்கு வருபவர்கள் ‘அலெக்ஸ்ஸாண்டிரியா’ என்ற இனத்தைச் சேர்ந்தவங்க. இங்கே வருகிறவங்க, நம்ப ராஜ்பவனில் உள்ள மான்கள் பார்க் ஏரியா வனப்பகுதி, அப்புறம் இங்கே பக்கத்திலே இருக்கும் ஒரு முஸ்லிம் இடுகாடு (ஒரு ஆறரை ஏக்கர் காடு போன்று பல வகை மரங்கள் இருக்கும்), பெசன்ட் நகரில் கலாஷேத்ரா வனப்பகுதி, அதன் அருகில் இருக்கும் தியோசபிகல் சொசைட்டி வனப்பகுதி, இங்கிருந்தெல்லாம் வருவாங்க. பொதுவாக முட்டை போடும் காலங்களில் கிளிகள் மரப்பொந்துகளில் செட்டில் ஆகி இருப்பாங்க. ஒரு முட்டை தான் போடுவாங்க. ரொம்ப அதிசயமா இரண்டு முட்டை போடுவாங்க. அதை பெண் கிளி அடைகாப்பாங்க, ஆண் கிளி பாதுகாப்பாங்க, முட்டை பொறிஞ்சதும் இரண்டு பேரும் அதை பாதுகாப்பாங்க, ரெக்கை முளைச்சதும் இங்கே கூட்டிட்டு வருவாங்க, இதே மாதிரி வனங்களிலும் இரைதேடச் சொல்லிக்கொடுப்பாங்க. இதுதான் அவங்களோட வாழ்க்கை முறை. ரொம்ப உயரத்திலே பறப்பாங்க, ரொம்ப வேகமாவும் பறப்பாங்க. இதுதான் அவங்களோட வாழ்க்கை முறை. இப்போ நான் இங்கே அங்களுக்காக உணவை தயார் படுத்தி வைக்கிறேன். நீங்க இங்கே இருந்து என்னை படம் புடிக்கீறீங்க, பக்கத்திலே இருக்கீங்க, ஒரு ஆள் கூட கீழே இறங்க மாட்டாங்க. நான் மட்டும் இருந்தால் தைரியமாக தோளில் கூட வந்து உட்காருவாங்க. வேற யாரு இருந்தாலும் வரமாட்டாங்க. இவங்களுக்கு குளிர் காலம் விருப்பமானது. வெயில் பிடிக்கவே பிடிக்காது. இதுதான் அங்களோட சைக்காலஜி. அதுவும் மழைக்காலம்னா இதோ போல நான் மூன்று மடங்கு உணவு தாயார் செய்ய வேண்டும். மழைக்காலத்திலே அவங்களுக்கு உணவு கிடைக்காது."

20180313161349531.jpg

"பொதுவாக கிளிகள் பேசும்னு சொல்லுவாங்க, நீங்க இவங்களோட பேசுவீங்களா?"

மெலிதாக சிரிக்கிறார். "சார் நான்தான் ஏற்கனவே சொன்னேனே இது வனப்பறவை. ஆனால் மனிதர்கள் மாதிரி பேசும் சக்தி உண்டு. அதை பேச வைக்க இப்போ சென்னையில் டிரைனர் எல்லாம் கூட இருக்கிறாங்க. ஆனால் அவங்க இவங்களை உணவில்லாமல் பட்டினி போட்டு சித்திரவதை செய்து, பேசினால் தான் சாப்பாடு என்ற நிலையை உண்டு பண்ணி பேச வைப்பாங்க. இதுக்கு ஆயிரக்கணக்கிலே பீஸ் வாங்கிக்கிறாங்க. எத்தனை பெரிய பாவம் சார். இவங்களை நாம வீட்டிலே வளர்க்கவே முடியாது. கூடாது. அப்படியே வளர்த்தாலும் சட்டப்படியும் தவறு. ஒரு சில பேர் பணக்காரங்க, இந்த பார்ம் ஹவுஸ் வைத்திருக்கிறவங்க இவங்க எல்லாம் யாருக்கும் தெரியாமல் வளர்க்கிறாங்க என்பதே உண்மை. அப்புறம் இந்த ஜோதிடக்காரங்க, அவங்க பண்ற கொடுமை அதுக்கு மேலே சார். அவங்க கூண்டுக்குள்ளே வைத்திருக்கும் கிளிக்கு உணவே கொடுக்க மாட்டாங்க, வெறும் நெல் மணிகளை காட்டியே நாள் முழுதும் வதைப்பாங்க. ராத்திரிக்கு உசிரோட கிளி இருக்கனுமேங்கிறதுக்காக ஏதாவது கொடுப்பாங்க. அவங்க பிழைப்பே கிளையை வைத்து நடக்கிறப்போ, அவங்க எப்படி நம்ப எதிர் காலத்தைச் சொல் முடியும்? இதை எல்லோரும் புரிஞ்சுக்கணும்."

20180313161418318.jpg

"வளர்க்க கூடாதுனு சொல்றீங்க, ஆனால் இங்கே சில கூண்டுகளில் கிளிகளை நீங்களே வளர்கிறீர்களே, அது தப்பில்லையா சார்?"

"நல்லாக் கேட்டீங்க சார், அது எல்லாம் நான் வளர்க்கவில்லை. உங்க மாதிரி பத்திகைகாரங்க கிட்டே கிளியை வீட்டில் வளர்ப்பது தவறுனு சொல்கிறேன். அதைக் கேட்டு இரக்க மனமுள்ள சிலர் ‘நாங்க இத்தனை நாளும் தெரியாமல் தப்பு பண்ணிட்டோம், கிளியோட இறக்கையை வெட்டி கூண்டில் அடைச்சு வளர்த்து வந்தோம். இதை எப்படியாவது நீங்க கிளிக்கூட்டத்தோட சேர்த்துவிடுங்க’னு சொல்லி பல பேர் கொண்டு வந்து கொடுக்கிறாங்க, வனத்துறையிலிருந்தும் சில பேர் கொண்டு வந்து கொடுக்கிறாங்க, நான் அவங்களைப் பரிசோதிச்சு உணவளிச்சு, இதிலே இன்னொரு கொடுமை சார், இது பறவை, பறப்பது இயல்பு, ஆனால் இவங்க ரெக்கையை வெட்டிவிட்டு இருப்பாங்க, இவங்களோட ரெக்கைகளில் ஆரம்பமும், முடிவும் மிக நுட்பமானது. அதைக்கொண்டுதான் இவங்க பறப்பது, அந்த இடத்திலே வெட்டு விழுந்தால் திருப்பி வளர வருஷக்கணக்கிலே ஆகும். இதுவரை நான் சுமார் நூறு கிளிகளுக்கு மேல் ரெக்கை வளர்ந்ததும் இந்தக் கூட்டத்திலே பறக்க விட்டு இருக்கிறேன்."

"வெளிநாடுகளில் இருந்து நிறைய சுற்றுலாப்பயணிகள் உங்கள் இடத்துக்கு வந்து பார்வையிடும் அனுவபம் பற்றி…"

"நிறைய நாடுகளில் இருந்து வருகிறார்கள். குறிப்பாக என்னால் மறக்க முடியாத சம்பவம் ஜெர்மெனியில் இருந்து இரண்டு பேரூந்துகளில் ஒரு எண்பது பேர் வந்து இறங்கினார்கள். வந்தவர்கள் அத்தனை பேரும் என்னுடன் செல்பி எடுத்துக்கொண்டார்கள். நான் ஏதோ மிகப்பெரிய சேவை செய்வதாகச் சொன்னார்கள்."

"நீங்கள் ஒரு கைப்பிடி அரிசியாக வைத்துக்கொண்டே போகின்றீர்கள். உணவு வைப்பதில் ஒரு ஒழுங்கு மிளிர்கின்றது இதன் அடிப்படைக் காரணம் என்ன?"

"சார் நான் அடிப்படையில் ஒரு காமிரா டெக்னீஷியன், சொந்த ஊர் தர்மபுரி. அங்குள்ள அதியமான் மேல் நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை படிச்சேன். அதுக்கு மேல் படிப்பில்லை. வசதி குறைவெல்லாம் இல்லை. அப்பா ஒரு விவசாயி. அவரது ரைஸ் மில்லைப் பாத்துக்கணும், மாடுகளை பராமரிக்கணும். ஆட்கள் இல்லாததால் நான் பள்ளியை தொடர முடியவில்லை. அப்போவே உயிர்களிடம் அன்பாக இருப்பதை கற்றுக்கொண்டவன் நான். வயல்வெளியில் இருக்கும் மோட்டார் ரிப்பேர் ஆனால் நானே பிரிச்சுப் போட்டு பாத்துடுவேன். அப்படி டெக்னிக்கல் மைண்ட் எனக்குள்ளே இருக்கிறதை அறிந்தேன். பின்னாளில் பிழைப்பு தேடி சென்னை வந்த பொழுது எலெக்ட்ரிக்கல் டிப்பளமோ பண்ணினேன். அப்போ பிரபலமாக இருந்த டிவி, விசிஆர், ரிப்பேர் பார்க்க கத்துக்கொடுத்தாங்க. அப்போ டிப்ளமோ கிளாசில் ஆசிரியர் ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டே போவார்கள். அதை நான் எளிமைப் படுத்தி தமிழில் குறிப்புகளாக எழுதி வைத்துக்கொண்டே படித்தேன். இரண்டாம் ஆண்டில் இருந்தே சம்பாதிக்க ஆரம்பித்தேன். வெளியில் வந்ததும் பார்த்தால் தெருவுக்கு நான்கு மெக்கானிக் இருக்கிறார்கள். சரி வேறு என்ன தொழில் செய்யலாம் என்று யோசிட்தேன். யாரும் பெரிய போட்டியில்லாத தொழிலாகச் செய்ய வேண்டும்.

20180313161442492.jpg

இந்த காமிரா மெக்கானிக் வேலை அதிக போட்டியில்லைனு தெரிஞ்சுது. சென்னை முழுக்க தேடினாலும் இரண்டு பேர் இருந்தாங்க. நான் தைரியமாக கேமிரா மெக்கானிக்னு போர்ட் போட்டு இங்கே உட்கார்ந்துட்டேன். எனக்கு கேமிரா பற்றி ஒன்றும் தெரியாது. (இவர் இப்போது உலகில் உள்ள எந்த காமிராவையும் பிரித்து மாட்டுவதில் நிபுணர், அத்துடன் காமிரா லென்ஸ் ரிப்பேரிலும் எக்ஸ்பர்ட்) நானே எனக்கு குரு. நமக்குத்தான் டெக்கினக்கல் மைண்ட் ஆச்சே. அதுவும் படித்தது எலெக்ட்ரானிக் டிப்பளமோ. ஆரம்பத்தில் ஓரிரு வேலைகள் மட்டுமே வந்தன. என்னை நம்பி காமிராவைக் கொடுப்பவரிடம் அத்தனை சின்சியராக, தெளிவாக, பொறுமையாக வேலைகளை முடித்துக் கொடுப்பேன். அப்பொழுது இந்த பொறுமையும் ஒழங்கையும் கற்றுக்கொண்டேன். எண்பதுகளில் எலெக்ட்ரானிக் சமாச்சாரங்களை அனலாக் காமிராக்களுடன் இணைத்தார்கள். இப்படி வந்த வரவுதான் மினொல்ட்டா XE, கெனான் AEI, யாசிகா எலெக்ட்ரோ 35 ஆகியவை. இந்தக் காமிராக்களை சென்னையில் ரிப்பேர் பார்க்க ஆள் இல்லை. பழைய ஆட்களுக்கு எலெக்ட்ரானிக் புதுசு. ஆனால் நான் படித்திருந்தேன். என் காட்டில் மழை,படு பிஸியான நாட்கள், காமிராத்துறையிலும் யாரும் செய்யாததை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து விண்ட்டேஜ் காமிரா கண்காட்சிகளை நடத்த ஆரம்பித்தேன். சாதாரணமாகத்தான் தொடங்கினேன். தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேல் நடத்தினேன். இப்பொழுது என்னிடம் உலகில் வெளியான அத்தனை காமிராக்களும் பிரபலங்கள் பயன்படுத்திய காமிராக்களும் உள்ளன. அவற்றின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல். கண்காட்சியை பார்த்து பிரபல காமிராமேன்கள் பாலு மகேந்திரா, பி.ஸ்ரீ. ஸ்ரீராம் போன்றோர் நட்பானார்கள். ஆனால் என்ன? வருடம் தோறும் எனக்கு கண்காட்சிக்கு ரூ 50,000 செலவானது மிச்சம். அதன் பிறகு நிறுத்திவிட்டேன்."

20180313161504105.jpg

"இப்பொழுது கிளிகளுக்கு உணவிட ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகின்றது?"

"நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ரூ 2000 செலவாகின்றது. எனக்கு அத்தனை வருமானம் இல்லை. ஆனாலும் நல்ல உள்ளங்களின் உதவியால் தொடர்ந்து செய்ய முடிகின்றது. தொடரந்து காமிரா மெக்கானிக் வேலையும் செய்துவருகின்றேன். என் வேலை என்பது காலை பத்து மணி முதல் மாலை மூன்று மணி வரைதான் . பிறகு இவங்களை பார்க்க நேரம் சரியாக இருக்கிறது."

உணவை வைத்து முடித்த சேகர் நாமை மூன்றாவது மாடிக்கு அழைத்துச் சென்று அங்கு உள்ள ஜன்னல் வழியாக படம் பிடிக்க வசதி கொடுத்துவிட்டு ‘படம் எடுத்துவிட்டாலும் உடனே வெளியில் வந்துடாதீங்க, பாவம் பயப்படுவாங்க, ஒரு முக்கால் மணி நேரம் கழிந்ததும் அனைவரும் போனதும் வெளியில் வாங்க’ என்கிறார்.

அவர் குறிப்பிட்ட இடத்தில் இருந்து படம்பிடித்தோம். நாம் கண்ட காட்சி அடடா, நோக்க, நோக்க களியாட்டந்தான்.

அவர் குறிப்பிட்டது போல் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிளிகள் ஒரு முக்கால் மணி நேரம் அழகாக உணவருந்தி மனம் நிறைய சேகருக்கு நன்றி தெரிவித்து புறப்பட, நாம் அவருடைய சேவையை விகடகவி சார்பாக பாராட்டி விடை பெற்றோம். சேகரை தொடர்பு கொள்ள முகவரி: சேகர் கேமிரா ஹவுஸ், பாரதி சாலை, ராயப்பேட்டை. சென்னை. செல் போன் எண் - 94444 64967.