

நான் பொம்மை அல்ல..
-------------------------------
நான்...பத்து வயது சிறுமி
பொம்மைகள் பிடிக்கும்,
அவற்றுக்கு
அழகழகாய் அலங்காரம்
செய்யப் பிடிக்கும்.
அம்மா, அப்பாவைவிட
பாட்டிக்கு மிகவும்
செல்லம் நான்.
பாட்டி...
முடங்கிக் கிடப்பாள்,
முடியாதவள்.
பகலும் அவளுக்கு மங்கல்தான்.
குரல் மட்டும் எட்டு ஊருக்கு...
ஒருநாள்..
ஒன்றுவிட்ட உறவென்று
சொல்லிக் கொண்டு
மாமன் ஒருவன் வந்தான்
பலகாரங்கள், பட்சணங்கள்,
மற்றும்...
எனக்குப் பிடித்த பொம்மைகளோடு...
சிரிக்க சிரிக்கப் பேசினான்,
"கண்ணூ..செல்லம்.. வாடி!"
தூக்கி வைத்துக்
கொஞ்சினான்..
அவனோடு
பொம்மை விளையாட்டு...
கதை கேட்டு...
ஓடிப் பிடித்து...
கண்ணாமூச்சி...
ஒருமுறை வந்தான்,
இருமுறை வந்தான்,
பின்.. அடிக்கடி வந்தான்.
நோட்டம் விட்டான்
திருட....
பொருளை அல்ல.
பின்னொருநாள்
பாட்டியும், நானும்
தனித்திருந்த பொழுதில்,
உள்ளே வந்தான்,
எப்போதும் போல...அல்ல!
மடியமர்த்தினான்
என்னை,
கண்களால் தேடினான்,
கைகளால் விளையாடினான்.
கூசியது,
என்னவென்று புரியவில்லை,
விலக நினைத்தேன்,
இழுத்து வைத்து
முத்தமிட்டான்,
"பயந்திட்டியா?..
ச்சும்மா...
இதுவும் வெளையாட்டுதான்"
மீண்டும் துழாவினான்
வலித்தது..
இம்முறை வலிந்து,
விலகி ஓடினேன்..
கதவின் பின் ஒடுங்கினேன்..
பாட்டி குரல் கொடுத்தாள், "யாரது..?"
"பாட்டீ..." சத்தமாக அழுதேன்,
கண்களை உருட்டி,
கைகாட்டி மிரட்டினான்
"வாடீ..!" அடிக்குரலால்
அதட்டினான்.
"ம்ஹூம்.."
திட்டிக் கொண்டே
வெளியேறினான்.
கதவை அடித்து சாத்தினேன்,
"பயம்மா... இருக்கு..பாட்டீ"
மடியில் படுத்து அழுதேன்..
வலித்தது...
உடல் நடுங்கியது..
அடுத்த முறை
வந்தான், இன்னும் இயல்பாக..
அதே கொஞ்சல்..
அதே குழைவு..
அப்பா இருந்தார்.
"மாமா ஆசையா கூப்பிடறாருல்ல..
போ.. கண்ணு!"
மறுத்து, அப்பாவின் பின் பதுங்கினேன்.
இழுத்து அவனிடம் விட்டார்,
போடா கண்ணூ..
நம்ம மாமாதானே?
ஆசையா பொம்மை வாங்கியாந்திருக்காரு பாரு..வாங்கிக்கோ!"
திமிறி, விலகினேன்,
சத்தமாகச் சொன்னேன்,
"எனக்கு இந்த
பொம்மையும் பிடிக்கல..
அவரையும் பிடிக்கல...
தூ...."
ஓடிப் போய் பாட்டி மடியில்
அமர்ந்து முறைத்தேன்.
"மூடு சரியில்ல போலருக்கு...
குழந்தைதானே...
நான் அப்பறம் வரேன்"
அடிக்கண்ணால் மிரட்டியபடியே
ஒழிந்து போனான்.

Leave a comment
Upload