தொடர்கள்
ஆன்மீகம்
அஷ்ட திக் பாலகர்கள்!! - மீனாசேகர்.

Ashta Thik Balakar!!

பூமியை எட்டுத் திசைகளில் இருந்து நம்மைக் காக்க நியமிக்கப்பட்டவர்கள் தான் அஷ்டதிக் பாலகர்கள். அஷ்டதிக் பாலகர்களில் ‘அஷ்டம்’ என்றால் ‘எட்டு’, ‘திக்’ என்றால் ‘திசை’, ‘பாலகர்கள்’ என்றால் ‘காப்பவர்கள்’ என்பது பொருளாகும்.
நம்மைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் இருந்து கொண்டு, பூமியில் நாம் செய்யும் நல்ல செயல்களையும், தீய செயல்களையும் கண்காணித்துக் கொண்டு இருப்பவர்கள் இந்த அஷ்டதிக் பாலகர்கள் என்கிறது வேதங்கள்.
கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவற்றையே அஷ்டதிக் என்கிறோம். இந்த அஷ்டதிக் அதிபதிகளான இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் பூமியைக் காத்து அருள் புரிகின்றனர்.
அஷ்டதிக்கு பாலகர்களை ‘எண்திசை நாயகர்கள்’ என்றும் அழைக்கிறோம். இவர்களை வணங்கினால், சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.
அஷ்டதிக் பாலகர்களை ஓவியங்களாகவும், சிலைவடிவாகவும் மற்றும் கோபுரங்கள், கோயில் மூலஸ்தான வாயில்கள், கோயில் பிரகார சுவர்கள், கோயில் மேற்கூரைகள் போன்றவற்றில் காணலாம். பண்டைய தமிழர்களின் கட்டிடக் கலைகள், வழிபாட்டு முறைகள், வாழ்வியல் நடைமுறைகள் எல்லாம் இதனையொட்டியே அமைந்திருந்தன என்பதற்கான பல சான்றுகள் கிடைத்துள்ளன.

ஷ்டதிக் பாலகர்கள் போற்றி துதி:
ஈசானியா போற்றி
வளம் தரும் குபேரனே போற்றி
உயிர் காக்கும் வாயு பகவானே போற்றி
பசுமை தரும் வருணனே போற்றி
அருள்மிகு நிருதி பகவானே போற்றி
தருமவான் மிருத்யு போற்றி
சுப அக்னி பகவானே போற்றி
உயர்வைத் தரும் இந்திரனே போற்றி
காக்கும் பிரம்மஸ்தான பகவானே
போற்றி போற்றி போற்றி!!

இந்திரன்: கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுபவர், இந்திரன். இவரே தேவர்கள் அனைவருக்கும் தலைவராக உள்ளார். இவரது மனைவி இந்திராணி. இவரே அஷ்டதிக்கு பாலகர்களின் தலைவராகவும் இருக்கிறார். இவரை வழிபட எல்லா ஐஸ்வர்யங்களையும் வாரிவழங்கி ஆரோக்கியத்தையும் அருளுவார்.
இந்திர காயத்ரி மந்திரம்:
“ஓம் சஹஸ்ர நேத்ராய வித்மஹே வஜ்ர ஹஸ்தாய தீமஹி தந்நோ இந்திர ப்ரசோதயாத்.”

அக்னி: தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுபவர். இவருடைய மனைவியின் பெயர் ஸ்வாஹா தேவி. இவரே நெருப்பிற்கான அதிகாரம் உடையவர். வேள்வியின்போது இடப்படும், நைவேத்தியப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது. இவரை வழிபடத் தேக வனப்பு, பலம், மன அமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.
அக்னி காயத்ரி மந்திரம்:
“ஓம் மஹா ஜ்வாலாய வித்மஹே அக்னி தேவாய தீமஹி தந்நோ அக்னி ப்ரசோதயாத்.”

எமன்: தெற்கு திசையின் காவலராக இருப்பவர் எமதருமன். இவர் தரும தேவன், காலதேவன், எமதர்மராஜா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவரது மனைவி பெயர் குபேர ஜாயை. சூரிய பகவான் மகனான இவர், தேவர்களுள் மிகவும் மதி நுட்பம் மிகுந்தவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபட நம்மைப் பற்றிய தீவினைகள் நீங்கும். தரும சிந்தனைகள் தோன்றும். நோய்கள் அகன்று, ஆயுள் சித்திக்கும்.
எமன் காயத்ரி மந்திரம்:
“ஓம் சூர்ய புத்ராய வித்மஹே மஹாகாளாய தீமஹி தந்நோ யம ப்ரசோதயாத்.”

நிருதி: தென்மேற்கு திசையின் அதிபதி நிருதி. இவரது மனைவி பெயர் கட்கி. இவரை வழிபட எதிரிகள் பயம் நீங்கி வீரம் உண்டாகும்.
நிருதி காயத்ரி மந்திரம்:
“ஓம் நிசாசராய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ நிருதி ப்ரசோதயாத்.”

வருணன்: மேற்கு திசையின் காவலராக இருப்பவர் வருணன். இவரை மழையின் கடவுள் என்று போற்றுகிறார்கள். இவரது மனைவியின் பெயர் வாருணி. இவரை வழிபடத் தேவையான மழை கிடைத்து உணவுப் பஞ்சம் தீரும். இவரை முறைப்படி வழிபட்டு வர… வீடுகளில் கூட தண்ணீர் பிரச்சனை படிப்படியாகக் குறையும். இவரை வணங்கினால் சிறந்த அறிவாற்றலும், உடலில் வலுவும் உண்டாகும்.
வருண காயத்ரி மந்திரம்:
“ஓம் ஜல பிம்பாய வித்மஹே நிலப்புருஷாய தீமஹி தந்நோ வருண ப்ரசோதயாத்.”

வாயு: வடமேற்கு திசையின் காவலர் தான் இந்த வாயு பகவான். இவரது மனைவியின் பெயர் வாயு ஜாயை. இவரை வழிபாடு செய்தால் ஆயுள் விருத்தி கூடும்.
வாயு காயத்ரி மந்திரம்:
“ஓம் தத்புருஷாய வித்மஹே ரகசிய சஞ்சாரய தீமஹி தந்நோ வாயு ப்ரசோதயாத்."

குபேரன்: வடக்கு திசையின் அதிபதியானவர் குபேரன். இவர் செல்வத்திற்கும் அதிபதியாக இருக்கிறார். இவரது மனைவியின் பெயர் சித்திரலேகா என்பதாகும். கலியுகத்தில் இவர் திருமாலுக்கே கடன் கொடுத்தவர் என்றும் கூடச் சொல்லப்படுகிறது. இவரை வழிபாடு செய்வதால், சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும்.
குபேர காயத்ரி மந்திரம்:
“ஓம் யக்க்ஷராஜாய வித்மஹே வைஸ்ரவணாய தீமஹி தந்நோ குபேர ப்ரசோதயாத்.”

ஈசானன்: வடகிழக்குத் திசையின் அதிபதியான ஈசானன், மங்கலத்தின் வடிவமாகப் பாவிக்கப்படுகிறார். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்று ஈசானம் என்பது குறிப்பிடத்தக்கது. ஈசானனின் மனைவி பெயர் ஈசான ஜாயை. இவரை வழிபட அறிவும் ஞானமும் கிடைக்கப்பெறும்.
ஈசான்ய காயத்ரி மந்திரம்:
“ஓம் தத்புருஷாய வித்மஹே சிவ ரூபாய தீமஹி தந்நோ ரூத்ர ப்ரசோதயாத்.”

நாமும் அஷ்டதிக் பாலகர்களை வழிபட்டு எல்லா வளமும், நலமும் பெறுவோம்!!