விகடகவி இதழின் எட்டாவது பிறந்த நாள் சிறப்புடன் கொண்டாடப்படும் வேளையில் கவியரசு கண்ணதாசனை நினைவு கூர்வது பொருத்தமானது .
அவர் தம் தாய் தந்தையருக்கு எட்டாவது பிள்ளை .
இந்த எட்டாவது பிள்ளை ,எட்டாத உயர்வுகள் இல்லை.
சிறுகூடல் பட்டி தந்த இந்த பெருங்கவிஞனுக்கு அறிமுகம் தேவையில்லை.
புகழ் தோன்ற பிறந்து , மறைந்த பின்னும் இன்னும் மங்காத புகழோடு வாழும் மகா கவிஞர் அவர் . பாரதிக்குப் பின் இறவாப்புகழ் பெற்ற கவிதைகளாலும் , திரை இசைப் பாடல்களாலும் தமிழ் மக்களின் மனதில் அரியணை போட்டு அமர்ந்திருப்பவர் .கண்ணதாசனே .
அவருக்கு முன்னரும் , சமகாலத்திலும் , அவர் மறைந்த பின்னரும் திரைப்பட பாடலாசிரியர்கள் பலர் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி , இசையுடன் நாம் கேட்டு வருகிறோம் .அவற்றுள் தனித்துவம் மிக்க பாடல்களை கண்ணதாசன் நமக்குத் தந்துள்ளார் .
இலக்கிய நயம் மிக்க பாடல்களை திரைத்துறைக்கு தந்து தமிழன்னையை சினிமாவுக்கு கை பிடித்து அழைத்து வந்தவர் கண்ணதாசன் .சொல்நயமும் ,பொருள்நயமும் ,இசை யோடு சேர, ரசிகர்களுக்கு அறுசுவை விருந்தாக்கினார் .
அறுபதுகளில் ,எழுபதுகளில் பிரபலமான அப்பாடல்கள் அடுத்தடுத்த தலைமுறைகளைக் கடந்து இன்று மழலைகளின் உதடுகளில் உயிர் பெற்று இருக்கின்றன.
கவியரசரின் பாடல்களில் ஒவ்வொருவருக்கும் பிடித்த பாடல் என்று ஒரு நூறு பாடல்களாவது இருக்கும் எனக்குப் பிடித்த பாடல்கள் என்று ஒரு பிளே லிஸ்ட் உண்டு. அவற்றுள் எட்டு பாடல்களைப் பற்றி இப்போது பேச விரும்புகிறேன்.
முதல் பாடல் :
இந்தப்பாடல் வெளியாகி 66 ஆண்டுகள் ஆகிறது .இன்னும் 66 ஆண்டுகள் ஆனாலும் இப்பாடல் மக்கள் வாழ்வில் இருக்கும். அண்ணன் ,தங்கை பாசத்தைப் போற்றிய பாசமலர் பாடலின் 'மலர்ந்தும் மலராத' பாடல் அது.
சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
கதை சொல்லவா..
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா.
உள்ளத்தின் மெல்லிய உணர்வுகளை மீட்டுவதில் இப்பாடலுக்கு ஈடு ,இணை எதுவும் இல்லை .
. இரண்டாம் பாடல்
கொடி மலர் படத்தில் பி.பி.எஸ் பாடும் இந்தப் பாடல் காதலன் காதலியை வர்ணித்துப் பாடும் பாடல் .எம் .எஸ்.வி யின் இசையில் உருவான ஒரு கந்தர்வ கானம் இது .
"முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில் பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும் – பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும்"
பாடலின் பல்லவி நினைவுக்கு வருகிறதா ?
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்…
இருள் சூழ்ந்த இரவில் ,கண்களை மூடிக் கொண்டே இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள் . சின்னக்குரலில் பாடிப் பாருங்கள் .சொர்க்கத்தின் படிகளில் நிற்பதை உணர்வீர்கள் .
மூன்றாம் பாடல்
எட்டுத்தொகை நூல்களுள் அகப்பொருள் பாடும் பாடும் நூல்களுள் முக்கியமானவை அகநாநூறு , கலித்தொகை , குறுந்தொகை ,நற்றிணை .இந்த இலக்கியங்கள் காட்டும் காட்சிகளை ,எளியவரிடம் எடுத்துச் சென்றது கவியரசரின் கவித்திறம் .
இந்நூல்கள் சொல்லும் "தூது' என்னும் பொருளில் பல பாடல்களில் காண்கிறோம் .
"தூது செல்ல ஒரு தோழி இல்லையென்று
துயர் கொண்டாயோ தலைவி?" என்ற பாடல் தலைவனிடம் தூது செல்லும் தோழியின் பாடல் .
"அன்று சென்றவனை இன்றும் காணவில்லை என்ன செய்வதடி தோழி?" என்று அலைபாய்ந்துக் கொண்டிருப்பவளுக்கு ஆறுதல் தருவதாக அமைந்த பாடல்.
பாடலின் இறுதி அடிகளில்
முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்
மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி
முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்த்தை
மெளனத்தில் அறிந்தாள் தோழி
காவிரிக்கரையின் ஓரத்தில் எவ்விதம்
காத்திருந்தாள் அந்த தலைவி
காவிய நாயகன் காதலன் வணிகன்
கோவலன் என்பாள் மனைவி
என்று முடித்து கோவலன் மனைவி மாதவிக்கு இந்த பச்சை விளக்குப் பட பாட்டில் இருக்கை தந்து அதனை இணையற்ற இலக்கிய தரத்துக்கு உயர்த்தி விட்டார் கவியரசு.
நான்காம் பாடல்
இது ஒரு தாலாட்டுப் பாடல் ."மலர்ந்தும் மலராத" மென்சோகம் ததும்பும் பாடல் என்றால் , கொஞ்சும் தமிழ்ச் சொற்களைத் கோர்த்து , இன்னிசையுடன் பாடப்படும் இந்தப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில்
பாலூற்றும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே
தென்னாடன் குல மகளே
ஒரு குழவிக்கு எழுதிய பாடலா இது ? இல்லை .இப்பாடல் தமிழ்த்தாயைத் தொட்டிலில் இட்டு தாலாட்டும் பாடல் . போல அல்லவா இருக்கிறது
"நீராடும் கடலுடுத்த " பாடலின் சாயலில் இருப்பது போலவே தோன்றும் பாடல்.
இலக்கியத் தரம் கொண்ட பாடல்கள் வரிசை இன்னும் முடியவில்லை .
கண்ணதாசனின் கடலில் மூழ்கினால் எடுக்க எடுக்க நல்முத்துக்கள் கைகளில் தவழும். இவற்றில் எட்டு முத்துக்களை மட்டும் சொல்ல வந்தேன்.
கட்டுரையின் நீளம் கருதி மேலும் நான்கு முத்துக்களைப் பற்றி அடுத்த இதழில் பேசுவேன்.
தொடரும்
Leave a comment
Upload