தொடர்கள்
கதை
எல்லாம் எட்டும் - சத்யபாமா ஒப்பிலி 

20241029184322932.png

"எட்டு போடறதுக்கு ஏண்டி இவ்ளோ கஷ்டப்படற?" கை முட்டியில் லேசாக அடித்து, கையை பிடித்து சரோஜா டீச்சர் வரைந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. சரோஜா டீச்சர் கை எழுத்து முத்து முத்தாக இருக்கும். நாங்கள் எல்லோரும் அதை போலவே எழுத வேண்டும் என்று டீச்சருக்கு ஆசை. " எட்டு ரொம்ப அழகான எண். பேனாவை ஒரு புள்ளியில் வைத்து இடது பக்கமாகவோ வலதுபக்கமாகவோ கொண்டு வந்து, பள்ளத்தில் இறங்குவது போல லேசாக இறக்கி ஒரு சின்ன யு டர்ன் போட்டு மெதுவாக மேட்டில் ஏறுவது போல ஏறி ஆரம்பித்த புள்ளியில் வந்து சேர்ந்துடணும்." கையை பிடித்து நிதானமாக சொல்லித் தருவார்.

நான் ஒரு நாள் இரெண்டு சின்ன வட்டத்தை ஒன்றன் கீழ் ஒன்று வரைந்து டீச்சர் இடம் கொண்டு போய் காண்பித்தேன் . இப்படியும் எட்டு போடலாமே என்று, ஏதோ கண்டு பிடித்தது போல் பெருமையாகக் கூறினேன். "போடலாமே, ஆனா பாரு நீயே கீழ் வட்டத்தை கொஞ்சம் பெருசா போட்டுருக்க. செட்டியார் பொம்மை மாதிரி இருக்கு. இப்படி வளைச்சு போட்டா உன் பொம்மை டான்ஸ் ஆடுற மாதிரி அழகா இருக்கும்." நான் போட்டுக் கொண்டு வந்த எட்டுக்கு கண் காது வரைந்து என்னிடம் திருப்பிக் கொடுத்தார்.

எண் எழுத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வம் அலாதியானது. விடைத்தாள் திருத்தித் தரும்போதும் அச்சு பதித்தது போல மதிப்பெண் இருக்கும். மற்றவர்களுக்கு அது ஒரு விஷயமாக இருந்தது இல்லை. அனால் எனக்கு அது ஆச்சர்யம். என் கையெழுத்து மிகவும் மோசம். எனக்கு பொறுமை கிடையாது, இப்பவும் அப்படித்தான். ஒரு புத்தகத்தை எடுத்தால் முடிக்க வேண்டிய பரபரப்பு இருக்கும். என் கை எழுத்தில் இருக்கும் அவசரம் சரோஜா டீச்சருக்குப் பிடிக்காது.

"எங்க போகப்போற? வணங்கி ஒரு வேலைய பண்ணு!" எதுனாலேயோ என் கை எழுத்தை என்னால் திருத்திக் கொள்ளவே முடியவில்லை. ஆறாம் வகுப்பு போன பின் சரோஜா டீச்சர் வகுப்புக்கு வருவதில்லை. ரமணி டீச்சர் தான். அவர்களுக்கு கை எழுத்து ரெண்டாம் பட்சம். "என்ன படம் வரைஞ்சுகிட்டு இருக்க? கணக்குக்கு நேரம் முக்கியம். சீக்கிரமா போட பழகு" . முட்டியில் லேசாக ஸ்கேலினால் தட்டி விட்டு செல்வார். கையெழுத்து பின் தங்கி கணக்கு முன் வந்தது. என் பொறுமை அற்ற தன்மையும் எதையும் நிதானித்து புரிந்துகொள்ளும் அவசியமும் எனக்கு மிகப்பெரிய சவால் தான். ரமணி டீச்சர் கையில் தட்ட தட்ட நிதானம் பழகியது. கை எழுத்து பழகவில்லை.
"பொதுவா பொம்பள பிள்ளைக்கு கை எழுத்து அழகா இருக்கும். நீ ஏன் இப்படி கோழி கிறுக்கற", பக்கத்து வீடு வத்சலா அக்கா கேட்டு இருக்கிறார். " என்ன பண்ணினாலும் மாத்திக்க மாட்டேங்கறாளே!" என் அக்கா வருத்தப் பட்டிருக்கிறாள். என்ன ஆனாலும், கணிதத்தில் வந்த நிதானம் கை எழுத்தில் இல்லை. "இதனாலேயே உனக்கு மார்க் குறைய போகுது பாரு!" வருத்தத்துடன் அம்மா சொல்லுவாள்.

பாட்டி மட்டும், "ஏன் சும்மா ஏதேதோ சொல்றீங்க குழந்தைய! நீ கவலை பாடாதே தங்கம், கை எழுத்து சரி இல்லைன்னா தலை எழுத்து நல்லா இருக்கும்!" "அப்படி எல்லாம் சொல்லாத பாட்டி, சரோஜா டீச்சர் க்கு கை எழுத்து அழகா இருக்கும்" வேகமாக பதில் சொல்லுவேன். கொஞ்ச நாட்களில் என் அப்பா தவறி விட, அம்மா, என்னையும் அக்காவையும் கூட்டிக்கொண்டு பாட்டி ஊருக்கே வந்து விட்டாள். என்னுடைய இப்பொழுதைய இந்த நிமிடத்திற்கும் சரோஜா டீச்சருக்கும் நடுவில் ஒரு இருபத்தைந்து வருடங்கள் இருக்கலாம். அதற்குள் எத்தனையோ நடந்து விட்டது. திடீர் திடீரென்று சரோஜா டீச்சர் நினைவுக்கு வருவாள்.

வரும் போதெல்லாம் எட்டும் கூடவே வரும். மண்ணில் எட்டு வரைந்தது, பனி படர்ந்திருக்கும் கண்ணாடியில் எழுதியது, சைக்கிள் ஒட்டத் தெரிந்தவுடன், எட்டு எட்டாக சுற்றி சுற்றி வந்தது. என்ன ஆயிருக்கும் சரோஜா டீச்சருக்கு? அப்பொழுது அவருக்கு வயது 25 இருக்கலாம். திருமணம் ஆகியிருக்குமா? இப்பொழுது 50 வயது கிட்டத்தட்ட. தன் எழுத்தை போலவே டீச்சரும் அழகாக இருப்பார். "கை எழுத்து நல்லா இல்லைன்னா தலை எழுத்து நல்லா இருக்கும்" என்று என் பாட்டி சொன்னது ஏனோ இன்று ஞாபகம் வந்தது. என்ன சம்மந்தமோ கை எழுத்துக்கும் தலை எழுத்துக்கும். யார் இதெல்லாம் சொல்லி இருப்பார்கள்? யாரோ யாரையோ தேற்றுவதற்காக கற்பிக்கப் பட்டது தானே இவை எல்லாம். 9 வயதில் தந்தையை இழந்து, பாட்டியின் ஆதிக்கத்தில், பயந்தது பயந்து வாழும் அம்மாவை பார்த்து வளர்ந்து, 18 வயதில் யாரையோ நேசித்து பின் ஏமார்ந்து, அடுத்ததுத்து பாட்டியையும் அம்மாவையும் இழந்து, சென்னையில் வந்து குடி ஏறி, எனக்கும் அக்காவிற்கும் இன்னும் திருமணம் ஆகாமல், அதில் ஈடுபாடும் இல்லாமல், பேசிக் கொள்வதே குறைந்து ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னையும் அக்காவையும் நினைத்துப் பார்த்தேன்.

என் கை எழுத்து இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. தலை எழுத்து இந்த நிமிடம் வரை சொல்லிக்கொள்ளும் படியில்லை. என்னை அறியாமல் சிரிப்பு வந்தது. "சரோஜா டீச்சர் நல்லா தான் இருப்பாங்க". எனக்குள் சொல்லிக் கொண்டேன். வீட்டிற்கு வந்த போது அக்கா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். பையை இருக்கையில் வைத்து விட்டு, சோபாவில் அமர்ந்திருந்த அக்காவிடம், "உனக்கு சரோஜா டீச்சர் ஞாபகம் இருக்கா?" என்று கேட்டேன்.
அவள் சட்டென்று, " ஓ இருக்கே! அவளுக்கு கல்யாணம் ஆகி அமெரிக்கால செட்டில் ஆயாச்சு. ரெண்டு பசங்களாம்."
இவளுக்கு மட்டும் எப்படி விஷயம் தெரியுமோ! மனசுக்குள் நினைத்துக் கொண்டு
"ஓ அப்பாடி" என்று மட்டும் சொன்னேன்.
"ஆனா பாவம் !" என்று ஒரு சில வினாடிகளுப்பின் மெதுவாக சொன்னாள்.
என் அறைக்குள் செல்ல எழுந்த நான், அக்காவைப் பார்த்தபடி நின்றேன். ஒரு வினாடிக்குள் ஆயிரம் பயங்கள். இவள் என்ன சொல்லப் போகிறாள்? எதற்கு சரோஜா டீச்சர் பாவம். ஒரு 'ஆனா' இல்லாம இவளால பேசவே முடியாது. காரணம் தெரியாமல் அக்காவின் மேல் கோவம் வந்தது.
"ஏன் பாவம்?"
"எப்படி எழுதுவங்கள்ல! அச்சு பதிச்ச மாதிரி!!"
"ஆமாம்......அதுக்கென்ன இப்போ,,,"
"பாட்டி சொல்லாம விட்டது சரிதானோ என்னவோ!"
"பாட்டி என்ன சொல்லாம விட்டாங்க?"
"அதான் டி கை எழுத்து, தலை எழுத்து,,"
"அக்கா, நீ என்ன சொல்ல போற? எனக்கு தல சுத்துது"
"அவளோட ஒரு பையன் அந்த ஊரு பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டானாம். வத்சலா அக்கா ரொம்ப வருத்தப்பட்டாங்க"
"சரி! அப்பொறம்?"
"அதான் பாவம்! வேறென்ன?"
இறுக்கமாக இருந்த என் முகத்தை பார்த்து இதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பை விட்டு, கட கட என்று சிரித்தாள்.
ஒரு பெருமூச்சுடன் இருக்கையில் உட்கார்ந்தேன்.
"பாட்டி ஏதோ சொல்லிச்சுன்னு எப்போ பாத்தாலும் கவலை படற!. அவங்கயெல்லாம் நல்லாத்தான் இருக்காங்க. போய் படு. நாளைக்கு முக்கியமா ரெண்டு பேர பாக்கப்போறோம்"
யாரென்று கேட்கத் தோணவில்லை எனக்கு. அதை நாளை பார்த்துக் கொள்ளலாம்.
"பாட்டி இன்னொன்னு சொல்லுவாங்க தெரியுமா?' அக்காவின் குரல் கேட்டது.
"எட்டுபடி வெண்கலப்பான மாதிரி முகத்தை வைச்சுக்காதே ன்னு!
அப்படி வைச்சுக்காதே. கொஞ்சம் சிரிச்சுட்டு போய் தூங்கு. நானே ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு தான் சிரிக்கிறேன். நல்லா இருக்கு. நீயும் சிரி."
என் அறையில் வந்து படுக்கையில் அமர்ந்தேன். இன்றைக்கு மனம் கொஞ்சம் தெளிவாக இருந்தது. எங்கேயிருந்து இந்த அமைதி வந்தது என்று தெரியவில்லை. வீட்டில் எதுவும் மாற வில்லை. அக்கா கொஞ்சம் சிரித்தாள். என் தலைக்குள் ஓடிக்கொண்டிருந்த தேவை இல்லாத கவலை, அதைப் பற்றி பேசியவுடன் காணாமல் போய்விட்டதனாலா?

இதைபோல் உப்பு சப்பில்லாத எத்தனை பயங்கள்! அந்த பயங்களை அணுகவே தயக்கமாக இருக்கிறது பெரும்பாலும். எப்போதோ அர்த்தமில்லாத சொல்லப் பட்ட பழமொழி அர்த்தமில்லாமல் என்னுடன் பயணித்திருக்கிறது.
அக்கா சொன்ன எட்டுபடி வெண்கலப்பானை ஞாபகம் வந்தது. லேசாக சிரிப்பு வந்தது. எதனாலோ எங்கள் நடுவில் இருந்த இறுக்கம் தளர்ந்தது போல் தோன்றியது. எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கை திடீரென்று வந்தது. "நாளை யாரை பார்க்கப் போகிறோம் என்ற அடுத்த சிந்தனையில் மூழ்கி கொஞ்சம் கொஞ்சமாய் உறங்கிப் போனேன்.