தொடர்கள்
வலையங்கம்
பொறுப்பு வேண்டாமா

20250708191230623.jpeg

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்து மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. தேர்தல் கமிஷன் ஓட்டுத் திருட்டில் ஈடுபடுகிறது எங்களிடம் 100% ஆதாரம் இருக்கிறது அதை வெளியிடும்போது இங்க மிகப்பெரிய அணுகுண்டு வெடிக்கும். அப்போது தேர்தல் கமிஷன் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் என்கிறார்.

தேர்தல் ஆணையத்தின் மீது புகார் என்பது புதிதல்ல. குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் எல்லா தொகுதியிலும் பாஜக வென்றது முறைகேடு என்கிறார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி எல்லா இடத்திலும் பாராளுமன்ற தேர்தலில் வென்றது. அப்போது அதற்கு என்ன பெயர் சொல்வார் ராகுல் காந்தி என்ற கேள்வி எழுகிறது. ராகுல் காந்தி பாமரன் அல்ல. ஒரு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் என்பதை அவருக்கு அடிக்கடி யாராவது நினைவு படுத்த வேண்டும் போல் தெரிகிறது. அவரிடம் ஆதாரம் இருக்கிறது என்றால் அதை உரிய அமைப்பின் முன் வைத்து நடவடிக்கை எடுக்க சொல்ல வேண்டும் .இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அங்கு ஆதாரங்களை தர வேண்டும். அதை விட்டுவிட்டு அணுகுண்டு வெடிக்கும் ஒருத்தரும் தப்ப முடியாது என்பதெல்லாம் அரசியலாக தான் பார்க்க வேண்டி இருக்கிறது.

ராகுல் காந்தி இப்படி ஏதாவது ஏடாகூடமாக சொல்வது வழக்கமான ஒன்று என்று ஆகிவிட்டது. இப்படித்தான் 2000 சதுர கிலோ மீட்டர் இடத்தை சீனா கைப்பற்றி விட்டது என்று அவர் பேசிய அவதூறு வழக்கில் இதற்கு என்ன ஆதாரம் உண்மையான இந்தியர் யாரும் இப்படி பேசி இருக்க மாட்டார்கள் என்று உச்ச நீதிமன்றம் தனது கண்டனத்தை ராகுல் காந்தி மீது பதிவு செய்திருக்கிறது. இனியாவது பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக அரசியல் தலைவராக அவர் நடந்து கொள்ளட்டும்.