சங்கநாதம்" (சங்கு + நாதம்) என்பது சங்கின் ஓசையைக் குறிக்கும், கோயில்களில் வழிபாட்டு நேரங்களிலும், சுப நிகழ்வுகளிலும், அரசு விழாக்களிலும் மற்றும் போரின் வெற்றி முழக்கமாகச் சங்கநாதம் எழுப்பும் மரபு இருந்திருக்கிறது.
பாற்கடலைக் கடைந்த பொழுது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று. மஹாவிஷ்ணு, இந்தச் சங்கு உதயம் ஆனதும் அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார். சங்கானது ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்து வீட்டில் நாம் பூஜை செய்யச் சுபிட்சம் உண்டாகும்.
பாஞ்சஜன்யம், சங்குகளில் முதன்மையானதாகவும், வடிவில்
மிகப்பெரிதாகவும், பாலைப் போன்று வெண்ணிறமும், பௌர்ணமி நிலவைப்போலப் பிரகாசமுமானது. இதனைச் சங்குகளின் அரசன் என்றும் அழைக்கப்படுகிறது.
'பிரணவம்' மந்திரமான 'ஓம்' என்ற ஓசையை வெளிப்படுத்தும் இயற்கை வாத்தியமாகச் சங்கு இருக்கிறது. அதிலும் பிரணவ ஒலியை, அட்சரம் பிசகாமல் ஒலிப்பது பாஞ்சஜன்ய சங்கு மட்டுமே.
பாஞ்சஜன்ய சங்கின் உள்ளே நான்கு சங்கங்கள் இருக்கும். மொத்தத்தில் ஐந்து சங்குகள் அதனால் பாஞ்சஜன்யம் என்பார்கள்.
பாஞ்சஜன்யம் என்பது கடலில் கிடைக்கும் ஒரு சங்கு வகை தான். ஆனால் இந்த சங்கு எளிதாகக் கிடைப்பது அரிது. ஆயிரம் சிப்பிகள் சேருமிடத்தில் ஒரு இடம்புரி சங்கு கிடைக்குமாம். ஆயிரம் இடம்புரி சங்குகள் விளையும் இடத்தில் ஒரே ஒரு வலம்புரிச் சங்கு கிடைக்குமாம். வலம்புரிச் சங்குகள் ஆயிரக் கணக்கில் எங்கு இருக்கிறதோ அங்கே அரிதான சலஞ்சலம் என்ற சங்கு கிடைக்குமாம். சலஞ்சலம் சங்கு பல்லாயிரக் கணக்கில் உற்பத்தியாகுமிடத்தில் அரிதினும் அரிதான பாஞ்சஜன்ய சங்கு கிடைக்கும்.
ஸ்ரீ மகாவிஷ்ணு தனது கரத்தில் வைத்திருந்த சங்கிற்கு பாஞ்சஜன்யம் என்பது பெயர். மகாலட்சுமியின் அம்சமான இந்த வலம்புரி மகத்தான சக்தி படைத்தது.
விஷ்ணோர் முகோத்தா நில பூரிதஸ்ய
யஸ்ய த்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
சங்கம் ஸதா(அ)ஹம் ச்ரணம் ப்ரபத்யே
இந்த சுலோகம் விஷ்ணு பகவானின் பாஞ்சஜன்யம் எனும் சங்கின் பெருமையைப் போற்றுகிறது. மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய் வழியே வெளிவரும் காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும் தன் கம்பீர ஓசையால் அசுரர்களுக்கு ஒலி அச்சத்தைக் கொடுக்கக் கூடியதும், வெண்மை வண்ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை வணங்குகின்றேன்! எப்போதும் சரணடைகின்றேன்! என்பதே இதன் பொருளாகும்
பாஞ்சஜன்யம் சங்கு:
கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்த சாந்தீபனி முனிவருக்குக் குருதட்சிணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது அவரும், அவருடைய மனைவியும், “பஞ்சஜனன் என்ற கடல் அரக்கன் அவர்களது ஒரே மகனைக் கடத்திக் கொண்டு போய்க் கடற்பாதாள அறையில் இருந்து அவனை மீட்டுத் தருவதையே” குருதட்சிணையாகக் கேட்டனர்.
கிருஷ்ணரும் பலராமரும் கடல் ராஜாவை அழைத்து வழிகேட்டுச் சென்று அரக்கனை எதிர்த்துப் போரிட்டுச் சாம்பலாக்கி விட்டு, குரு மகனை மீட்டுத் தந்தனர். பஞ்சஜனனின் சாம்பலே ஒன்று திரண்டு சங்காகியதால்-சங்கிற்குப் பாஞ்சஜன்யம் என்ற பெயர் ஏற்பட்டது. இதை வெற்றியின் சின்னமாகக் கிருஷ்ண பரமாத்மா தன் கையில் எடுத்துக் கொண்டு ஊதத் தொடங்கினார்.
ஶ்ரீ கிருஷ்ணனைப் போன்று பஞ்சபாண்டவர்களில் ஐவருமே ஒவ்வொரு விதமான சங்கை வைத்திருந்ததாகப் பாகவதம் கூறுகிறது. தருமருடைய சங்கு அனந்த விஜயம், அர்ஜுனனுடைய தேவதத்தம், பீமனுடையது மகாசங்கம். நகுலனுடையது சுகோஷம். மகாதேவனுடையது மணி புஷ்பகம்.
வைணவ ஆகமங்களில் ஒன்றான வைகானஸ (விகனஸ) ஆகமத்தில், ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரியச் சங்குகள் பற்றிக் குறிப்புகள் இருக்கின்றன. திருப்பதி பெருமாளுக்கு-மணி சங்கும், ரங்கநாதருக்கு-துவரி சங்கும், அனந்த பத்மநாப சுவாமிக்கு-பாருத சங்கும், பார்த்தசாரதி பெருமாளுக்கு- வைபவ சங்கும், சுதர்ஸன ஆழ்வாருக்கு-பார் சங்கும், சவுரி ராஜப் பெருமாளுக்குத் துயிலா சங்கும், கலிய பெருமாளுக்கு- வெண் சங்கும், ஸ்ரீ நாராயண மூர்த்திக்கு-பூமா சங்கும் இருப்பதாக வைகானஸ ஆகமம் குறிப்பிடுகிறது.
படத்தில் உள்ள அபூர்வமான பாஞ்சஜன்ய சங்கின் (சங்கு உள்ளே நான்கு சங்குகள் இருக்கின்றன) நுனியிலும் அடியிலும் விளிம்பிலும் தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. சங்கின் நுனியில் ரத்தினங்கள் கொண்டு அழகு படுத்தப்பட்டுள்ளது.
திருத்தலைச்சங்க நாண்மதியம்:
ஶ்ரீமஹா விஷ்ணு இவ்வுலக உயிர்களைக் காக்கும் பொருட்டு மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருத்தலைச்சங்க நாண்மதியம் தற்போது தலைச்சங்காடு என்னும் திருத்தலத்தில் உள்ள சங்கவனநாதர் என்னும் நாமம் தரித்த சிவபெருமானைப் பூஜை செய்ய, அவருக்கு பாஞ்சஜன்யத்தை ஆயுதமாகச் சிவபெருமான் அளித்ததாக ஸ்தல வரலாறுகள் தெரிவிக்கின்றன. பாஞ்சஜன்யத்தை பெற்ற நாண் மதியப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தாயார் தலைச்சங்க நாச்சியாருடன் அருள் பாலித்து வருகிறார். இதனால் இங்குள்ள சிவனுக்குச் சௌந்தர நாயகி உடனுறை சங்காரன்யேஸ்வரர் என்கிற திருநாமமும் உண்டு.
தலைச்சங்காட்டில் அருகருகே உள்ள இவ்வாலயங்களுக்கு முறையே திருமங்கையாழ்வார் மங்களா சாசனம் செய்தும், ஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்களும் பாடியுள்ளனர்.
மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் பாஞ்சஜன்ய சங்கு:
இந்த அபூர்வமான பாஞ்சஜன்ய சங்கு மைசூரில் உள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி தேவி கோயிலில் அன்னையின் அபிஷேகத்திற்காகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கு மைசூர் சமஸ்தான மன்னர்களால் மைசூர் சாமுண்டீஸ்வரி அன்னைக்குக் காணிக்கையாக வழங்கப்பட்டது.
பாஞ்சஜன்ய காயத்ரி:
ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே பவமானாய தீமஹி
தந்நஸ் சங்க: ப்ரசோதயாத்
Leave a comment
Upload