தொடர்கள்
கல்வி
திறக்கும் கதவுகள் , ஐஐடி மெட்ராஸ் - மரியா சிவானந்தம்

20250804214459274.jpg

"ஐஐடி மெட்ராஸ் " என்னும் பெருமை மிக்க உயர் கல்வி நிறுவனம், முன்னேறத் துடிக்கும் மாணவர்களின் கனவுக் கோட்டையாக இதுவரை இருந்து வந்துள்ளது. அதன் கதவுகள் இனி எளிய மக்களுக்கும் திறக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் ஐஐடி/ என் ஐடி யில் சேர விரும்புகிறவர் JEE (Joint Entrance Examination) கூட்டுத் தேர்வினை எழுத வேண்டும், அந்த தேர்வில் பெறும் ரேங்கின் அடிப்படையில் அவர்களுக்கு அட்மிசன் கிடைக்கும் என்பது நாம் அறிந்ததே.

மிகக்கடினமான இந்த நுழைவுத் தேர்வுக்கு, நீண்ட , ஆழமான தயாரிப்பும், வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது. எனவே ப்ளஸ் 2 முடிக்கும் முன்பே இதற்கான பயிற்சி மையங்களில் சேர்ந்து மாணவர் தயார் செய்வார்கள். இப்பயிற்சி மையங்களில் அதிகமான கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதால், எளிய மக்களுக்கு இது எட்டா கனவாகவே இருந்து வந்துள்ளது .

'ஐஐடி மெட்ராஸ்' கேன்டீனில் பாத்திரம் தேய்க்கும் பணியைச் செய்து வரும் கலைச்செல்விக்கு அந்த இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. அரசு பள்ளிகளில் படித்து ஐஐடியில் தேர்வாகியவர்களில் அவர் மகன் கௌரி சங்கரும் ஒருவர் என்ற செய்தியைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்துப் போனார் அவர்.

"அனைவருக்கும் ஐஐடி" என்னும் சிறப்புத் திட்டத்தின் வழியாக மாணவர்கள் பொறியியலில் தொலைதூரக் கல்வி கற்க வழி செய்யப்பட்டுள்ளது, சிறப்பு நுழைவுத் தேர்வு மூலம் இந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

சென்னையில் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்வை எழுத அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது , அதில் சேர்ந்து படித்த கௌரி சங்கருக்கும் , அவரைப் போலவே படித்து தேர்ச்சி பெற்ற 28 அரசுப்பள்ளி மாண்வர்களுக்கும் ஐஐடியில் படிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

20250804214534347.jpg

இவர்கள் இணைய வழியில் BS (Data Science),BS (Electronic systems) ஆகிய படிப்பினைத் தொடர்வார்கள். இது பொறியியல் படிப்புக்கு இணையானது . தவிர டிப்ளமோ படிப்புகளும் உண்டு. ஐஐடி இணைய தளத்தில் லாகின் செய்து இவர்கள் தங்கள் பாடங்களைக் கற்க முடியும். ஐஐடியில் நேரில் தேர்வு எழுதி முடிக்க வேண்டும் . தொலைதூரக்கல்வி போலவே விதிகள் இந்த மாணவர்க்கு உண்டு . அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 75% பயிற்சி கட்டணத்தை அரசே செலுத்துகிறது. பட்டியல் இன மாணவர் என்றால், மீதி 25% கட்டணத்தை ஆதிதிராவிட நலத்துறை செலுத்தும்.

கௌரிசங்கர் போன்ற எளிய மாணவர்களுக்கு ஐஐடியின் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி. அவர் பிறந்த உடனே கௌரிசங்கரின் தந்தை இறந்து விட, அவரது தாய் தனியாளாக அவரையும், அவர் அண்ணனையும் மிகுந்த சிரமத்துக்கிடையே ஆளாக்கி வருகிறார். வீட்டு வேலை செய்து பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்.

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் கலைச்செல்வி, ஐஐடி கேன்டினில் பாத்திரம் கழுவ அமர்த்தப்பட்டார். அதே கல்வி நிறுவனத்தில் அவர் மகன் இனி படிக்கச் செல்வதில் தாய்க்கும் பெருமை, மகனுக்கும் பெருமை.

கல்வி ஒன்றே எளிய மக்களுக்கு வெளிச்சத்தைக் கொணரும் வரம்.

அந்த வரம் அவர்களுக்குக் கிடைத்து விட்டது, திறக்கப்பட்ட ஐஐடியின் கதவுகளின் வழியாக.