தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை 37 ஓடிய கால்கள் நிற்பதில்லை மூத்த பத்திரிகையாளர் ஆர் நடராஜன்

20250813013007456.jpeg

இதுதான் உன் வேலை என்று சொல்லப்பட்டால் அதைச் செய்வது கடமை. அதைத் தாண்டியும் அதிகப்பிரசங்கித்தனமாக இல்லாமல் கூடுதலாக ஏதாவது செய்து பழகியவன் அவன். அது நிருபர் பொறுப்பில் கைகொடுத்தது. நிருபர் பதவியைத் துறந்து அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்க செய்தி மடலின் ஆசிரியரானபோது பிற மூன்று மொழி ஆசிரியர்களைவிட அதிகமாக, வேகமாக அவன் பணி செய்தான்.

அமெரிக்க செய்தி மடல் என்பது மாதம் இருமுறை வெளிவரும் ஒரு சிறிய பத்திரிகை. ஆங்கில மொழி அறிவு இருந்தால்தான் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அமெரிக்க செய்தி மடலை ஆசிரியராக இருந்து நடத்த முடியும். அவனால் அதை வெகு சிறப்பாகச் செய்ய முடிந்தது. காரணம், அதற்கு முன்பு அவன் பெற்றிருந்த மொழிபெயர்ப்பு அனுபவம். வெய்யிலிலும், மழையிலும் அலைந்து திரிந்து வேகமாக வேலை செய்து பழகிய அவனுக்கு அமெரிக்க தூதரகத்தில் குளிர்சாதன அறையில் 8 மணிநேரம் உட்கார்ந்து இருப்பதும்,

கொஞ்சமாக வேலை செய்வதும், சனி ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சும்மா இருப்பதும் பிடிக்கவில்லை. அது அவன் இயல்புக்கு ஒத்துவரவில்லை. அதனால் விடுமுறை நாட்களில் வீட்டில் தங்கியதில்லை. நண்பர்களைப் பார்க்க வெளியே சென்று விடுவான். அலுவலக நாட்களிலும் அப்போதைய USIS Director மெரில் மில்லரின் அனுமதியைப் பெற்று கோவை மதுரை என்றபடி வெளியூர்களுக்குச் சென்று இந்திய அமெரிக்க உறவுக்கான புதிய செய்திகள் கொண்ட கட்டுரைகளை அமெரிக்க செய்தி மடலுக்காக எழுதினான். மதுரைப் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க மாணவர்கள் தமிழ் கற்றுக் கொண்டிருந்தது, ஸ்ரீவில்லிப்புத்தூரில் மல்பெரி வளர்ப்புக்காக ஃபோர்டு ஃபவுண்டேஷன் செய்து வந்த நிதி உதவி, கோவையில் E.LG.I. நிறுவனம், அமெரிக்காவின் சல்ஹேர் நிறுவனத்துடன் இணைந்து Screw Compressors தயாரித்து வந்தது பற்றியும் வேறுசில இந்திய அமெரிக்க உறவு பற்றிய கட்டுரைகளையும் எழுதி வந்தான். பிறமொழி அமெரிக்க செய்தி மடல்களை விட இவனது பத்திரிகை வித்தியாசமாக இருந்தது. அது அமெரிக்க அரசாங்க செய்தித்துறையின் பாராட்டைப் பெற்றது-.

அமெரிக்கத் தூதர் ஹாரிபர்ன்ஸ், சென்னையில் ரோட்டரி சங்க விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார். அவரது ஆங்கில பேச்சின் பிரதி அன்று காலை சென்னையில் USIS அலுவலகத்திற்கு கிடைத்தது. மதியம் 12.45 மணிக்கு உணவு இடைவேளையில் வீட்டுக்குச் செல்வதற்கு முன்பாக அந்த பேச்சுக்கு தமிழாக்கம் வேண்டுமா என்று டைரக்டரை கேட்டான் அவன். வேண்டாம் என்றார். எனவே, மதிய உணவிற்காக வீட்டுக்குச் சென்று 1.45 மணிக்கு அலுவலகம் திரும்பினான். அப்போது டைரக்டர் சொன்னார், ‘தமிழாக்கம் இருந்தால் பரவாயில்லையே’. அவன் அவரிடம் நீங்கள் உரிய நேரம் தரவில்லை. சொற்பொழிவு நீளமானது என்று எதுவும் சொல்லவில்லை. தூதரின் பேச்சை மொழிபெயர்க்க ஆரம்பித்தான். அருகில் இருந்த அவனது டைப்பிஸ்ட் கோமதி அவனது வேகத்திற்கு ஈடுகொடுத்து டைப் அடித்தார். அப்போது கம்ப்யூட்டர் கிடையாது. எலெக்ட்ரிக் டைப்ரைட்டர். ஸ்டென்சில் பேப்பர் என்கிற மெலிதான மெழுகுத்தாளில் டைப் அடிக்க வேண்டும். அதன் கீழே உள்ள கார்பனில் விழும் எழுத்துக்களைப் பார்த்து பிழைகளை மெழுகுத்தாளில் மெழுகு ஒட்டி திருத்த வேண்டும். அதன் பிறகே அந்த மெழுகுத்தாள் ‘ரோணியோ’ என்கிற சாதனத்தில் பொருத்தப்பட்டு பிரதிகள் எடுக்கப்படும். ஒரு Relay Race போல அவன் எழுத, கோமதி டைப் அடிக்க, சேவியர் என்ற ஊழியர் தரைத்தளத்திற்கு ரோணியோ பிரதிகளை எடுக்க ஓட, 24 பக்கங்கள் கொண்ட அந்த பேச்சு மொழிபெயர்க்கப்பட்டு, டைப் செய்யப்பட்டு, 20 பிரதிகள் தயாராகின. எல்லாம் 2 மணி நேரத்தில் முடிந்துவிட்டது.

கம்ப்யூட்டரோ, ஜெராக்ஸ் மிஷினோ வராத காலத்தில் அந்த வேகம் ஒரு சாதனைதான். அதைப் பார்த்து வியந்த USIS டைரக்டர் மெரில் மில்லர் கேட்டார், ‘இரண்டு மணி நேரத்தில் 16 பக்க ஆங்கில பேச்சை மொழிபெயர்த்து, டைப் செய்து, 20 பிரதிகள் எடுத்து கொடுத்து இருக்கிறீர்களே? எனக்கு ஆச்சரியம் தாளவில்லை’ என்றார். இது ஒரு மனிதர் செய்யும் வேலைதானா. அவன் சொன்னான், ‘நிருபராக இருந்தபோது வேகமாக வேலை செய்யப் பழகினேன், அது இப்போது கைகொடுத்தது’ என்றான்.

அதே காலகட்டத்தில் ராஜிவ் காந்தி வாஷிங்டன் நகரில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவின் பிரதி வாஷிங்டன் அமெரிக்க செய்தித்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து வந்தது. அப்போது அமெரிக்காவில் பகல் நேரம், இந்தியாவில் மணி இரவு 9.30. USIS வெளியிட்டு வந்த அமெரிக்க செய்திமடலின் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள ஆசிரியர்கள் இரவு நேர பணிக்காக கூடுதல் ஊதியத்துடன் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஒரு மணிநேரத்திற்கு இவ்வளவு ரூபாய் என்றபடி. இரவு முழுவதும், பிறரைப்போல அவன் இழுத்து இழுத்து அதிகாலை வரை வேலை செய்திருந்தால் கூடுதல் ஊதியம் பெற்றிருக்க முடியும். அவன் அப்படிச் செய்ய விரும்பவில்லை. கையில் ஆங்கிலக் கட்டுரை வந்தவுடன் மொழிபெயர்க்க ஆரம்பித்தான். டைப்பிஸ்ட்டும் வேகமாக டைப் அடித்துக் கொடுத்தார்.

இரவு 11 மணிக்குள் மொழிபெயர்ப்பை செய்து முடித்து ஸ்டென்சில் பிரதிகள் எடுத்து ஒவ்வொரு பத்திரிகைக்கும் என்று தனித்தனியாக கவரில் போட்டு சில முக்கிய பத்திரிகை அலுவலகங்களில் நள்ளிரவுக்கு முன்னதாக கொடுத்தான். மறுநாள் காலை எல்லா முக்கிய பத்திரிகைகளும் பிரதமர் ராஜீவ் காந்தியின் சொற்பொழிவை முழுமையாக வெளியிட்டன. தான் செய்த வேலைக்கு பலன் இருக்க வேண்டும், அது ஊதியத்தில் மட்டும் இல்லை என்பது அவன் எண்ணம். மேலதிகாரியின் பாராட்டு ஊதியத்தை விட மேலானது என்ற எண்ணம் அவனுக்கு எப்போதுமே உண்டு. நாளிதழ்களில் தன் பணி வெளிப்பட வேண்டும் என்பதற்காக விரைந்து செயல்பட்டான் அவன். The Proof of the pudding is in the eating என்பதில் நம்பிக்கை கொண்டிருந்த அவன், வேலையின் பயன் அதன் நோக்கம் நிறைவேறுவதே என்பதை புரிந்து கொண்டிருந்தான். அவன் நிருபராக இருந்தபோது சில சமயங்களில் பஸ் பயணத்தின்போதும், கார் பயணத்தின் போதும் குலுங்கலுக்கிடையே, புரியும்படியாகவும், பிழையில்லாமலும் தாளில் எழுதிப் பழகியவன். இதெல்லாம் இளம் பிராயத்தில் இருந்தே பழக்கமாகியிருக்க வேண்டும்.

விரைந்து செயல்பட்டுப் பழகியதால் அவனால் மெதுவாக வேலை செய்ய முடிவதில்லை. பிறரின் மெத்தனமும் அவனை நோகடிக்கிறது.- கல்லூரிப் பருவத்திலேயே சக மாணவர்கள் அவன் எழுதும் வேகத்தைக் கண்டு, The Machine is writing என்பார்கள். அது மை ஊற்றும் பேனா இருந்த காலம். பால்பாயிண்ட் பேனா சரியாக எழுத வராது. அழுத்தி எழுத வேண்டும். கை வலிக்கும். அது ஜெல் பேனா வராத காலம். அவன் தேர்விற்கு 3 வாரங்களுக்கு முன்னதாகவே புதிய பேனாவை வாங்கி அதன் நிப்பை ஒரு கண்ணாடியில் உரசி உரசி வேகமாகவும், தடையில்லாமலும் எழுதும்படி சீர்ப்படுத்தியவன். மாணவ பருவத்தில் எப்போதும் அவனிடம் இரண்டு பேனாக்கள் இருந்தன. எழுத உட்காரும்போது பேனா மூடியைத் திறந்தால் 3 மணி நேரம் கழித்து வெளியே வரும்போதுதான் பேனாவை மூடுவான். அதுவரை காகிதத்தில் பேனா ஓடிக்கொண்டே இருக்கும் தடையில்லாமல். மாணவப் பருவத்தில் உருவான அந்தப் பழக்கம் நிருபர் பணிக்கு உதவியது. அப்படி ஒரு இயந்திர வேகம் அவனுக்கு பழக்கமாகி இருந்ததற்கு நிருபர் பணியின் நிர்பந்தங்களும் காரணம். இரவோ பகலோ எந்த நேரமும் தயாராக இருந்து மூளையையும் பேனாவையும் வேகமாக ஓட்டியவன் அவன். தொழில் முறையில் அவன் வெற்றிபெற காரணமாக இருந்தது அந்த இயல்புதான்.