தொடர்கள்
தொடர்கள்
மஹாபாரத மாந்தர்கள் குறள் வழி - பாண்டவர். - தமிழ் நந்தி

2025081301351748.jpg


பாண்டவர்கள் ஐவரும் தாய் தந்தையின் சொல்லையும்,சான்றோர் வாக்கையும் கேட்டு நடந்தார்கள்; சகோதர ஒற்றுமைக்கு உதாரணமாக திகழ்ந்தனர். நல்லதை கேட்டு நல்லவர்களாக வளர்ந்தனர்.

சிறு வயது தொடங்கி பீமனும் சகோதரர்களும் பல இன்னல்களுக்கு ஆளாகினர். ஆபத்துகளை கண்டு அஞ்சியும் எதிர் நோக்கியும் வாழ்ந்தனர். கௌரவர்கள் கூடி கழித்த தருணங்களிலும் சந்தேகமும், பய உணர்வும் ஆட்டுவித்தன. சிறுவயதில் கௌரவர்களுக்கு பாண்டவர்களிடம் மாறுபாடு போன்ற துரியோதனனுக்கு அஞ்சி வாழநேரிட்டது.

பீமனை கங்கையில் தள்ளி விஷப்பாம்புகளுக்கு இரையாக்க முயல பீமன் தப்பித்தான். பாண்டவர்களை வாரணாவதத்தில் அரக்கு மாளிகையில் தீ விபத்தில் ஒழிக்க நினைத்த முயற்சியும் நிறைவேறவில்லை. தெய்வ அருளாலும், விதுரன் பீஷ்மர் போன்றோரின் உதவியாலும் பிறகு கண்ணனின் கிருபையாலும் ஆபத்துகளில் இருந்து மீண்டனர். வியாசரின் ஆதரவும் தெய்வங்களின் அனுக்கிரகமும் பெற்றிருந்தனர்.

துரியோதனனின் சூழ்ச்சியால் அஸ்தினாபுரத்திலிருந்து விலகிச் சென்ற பின் பெரியோர்களின் துணையால், அவர்களின் ஆலோசனைப்படி நடந்து, பாண்டவர்கள் தம் தனித்திறமை அறிந்து புதியன கற்று, பகைவனின் வலிமையை அறிந்து, திட்டமிட்டு பயணித்தனர்.

பின்னர் பாண்டவர் கௌரவர்களிடமிருந்து பிரிந்த பின் இந்திரப்ரஸ்த்திலும் காட்டு வாழ்க்கையிலும் மகாபாரத யுத்தத்திலும் பாண்டவர் அணியில் இருந்த மன்னர்களுடனும் உறவினர்களுடனும் நல்ல புரிதலும் அதன் மூலம் திட்டமிட்டு செயலாற்றவும் முடிந்தது. அதனால் இந்திரபிரஸ்தத்தில் துரியோதனன் பொறாமை படத்தக்க வகையில் ஆட்சி செய்தனர். பின் கௌரவர்கள் வீழ்ச்சிக்கு பின் தருமன் முடி சூட்ட திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி ஆகியோருடன் நல்லாட்சி செய்தனர். இறுதியில் தருமருடைய ஆட்சிக்குப் பிறகு சொர்க்கம் சென்றனர்.

குறளும் பொருளும்

எந்த அளவுக்கு நல்லவைகளை கேட்கிறோமோ அந்த அளவுக்கு நிறைந்த பெருமை தரும்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும் 416

சில சமயம் நிழலும் தண்ணீரும் கூட கெடுதல் செய்யலாம்; அதுபோல் நம்மவர்களும் தீங்கு செய்யலாம்.

நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்

இன்னாவாம் இன்னா செயின். 881

உட்பகைக்கு அஞ்சி விழிப்புடன் காத்துக்கொள்க; இல்லாவிடில் குயவன் மண்பாண்டத்தை அறுத்தெடுப்பது போல் ஏமாந்த சமயத்தில் உட்பகை ஒருவனை அடியோடு அழித்துவிடும்.

உட்பகை அஞ்சித் தற்காக்க உலைவிடத்து

மண்பகையின் மாணத்தெறும் 883

மூடி வைத்த செப்புப் பாத்திரம் போல், புறத்தே கூடி பழகினார் ஆனாலும் உட்பகை உண்டான குடி தம்முள் மனம் ஒன்றுபடாது.

செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே

உட்பகை உற்ற குடி 887

உள்ளுக்குள்ளே பகை ஏற்பட்டால், எந்த காலத்திலும் அதனால் ஏற்படும் அழிவிலிருந்து தப்ப இயலாது.

ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்

பொன்றாமை ஒன்றல் அரிது 886

தெரிந்தவர்களிடம் கலந்து எதையும் ஆராய்ந்து செய்பவருக்கு, முடிவதற்கரிய பொருள் என்று சொல்லக் கூடியது இல்லை.

தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணி செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல் 462

தம்மால் இயலும் வினை இஃது என்று அறிந்து, தொடர்ந்து இயல்பவர்களுக்கு முடியாதது எதுவும் இல்லை.

ஒல்வது அறிவது அறிந்ததன் கண் தங்கிச்

செல்வார்க்கு செல்லாதது இல் 472

எந்த செயலையும் (போர் செய்பவன் போரின்) வலிமை, தன் வலிமை, எதிரியின் வலிமை, இருதரப்பு துணை வரக் கூடியவர்கள் பலம் சீர்தூக்கி அவ்வினையை செய்ய வேண்டும்

வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்

துணை வலியும் தூக்கிச் செயல் 471