தொடர்கள்
கதை
அறிமுகம் - கே.ராஜலட்சுமி

20250820074619748.jpeg

சென்னையிலிருந்து கிளம்பிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டனின் ஹீட் த்ரூ சர்வதேச விமான நிலையத்தை அடைந்த போது லண்டனின் நேரப்படி மணி காலை பத்து. அங்கு பாஸ்டன் செல்லும் யுனைடட் ஏர்லைன்ஸின் பாதுகாப்பு சோதனை வரிசையில் நிற்கும் போது தான் அவன் அவளைப் பார்த்தான். ' சாருவைப் போல் இருக்கே! ' ஆமா நி்ச்சயமா அவளே தான், ‘ என்று மனதில் உறுதி படுத்திக் கொண்டு அவளை நோக்கி நடந்தான்.

வேகமாக அவளை நெருங்கி ' யூ ஆர் சாரு, ஈப் ஐயம் ரைட்' என்று அவளிடம் சென்று கூற, அவள் புன்னகைத்தாள். ஆச்சரியத்துடன் ' ஆமா! ரகு நீங்க எப்படி இங்க? நான் உங்கள இங்க எதிர்பார்க்கவே இல்ல, கிரேட் சர்ப்ரைஸ்' என்றாள். ' நீ தனியா வந்திருக்கியா? நான் உன்ன ப்ளைட்ல பாக்கலையே?' என வினவ ' ஆமா, தனியாத் தான் வந்தேன், நானும் கூட உங்களைப் பார்க்கலே ! , பை தி வே , நான் போர்டிங் பாஸ் வாங்கல இன்னும் ' என்று அவள் கூற ரகு ' நானும் தான், ' சரி, இரண்டு பேருக்கும் ஒண்ணா வாங்கிடறேன்' என்று சொல்லும் போது அவள் மறுக்கவில்லை.

அவனிடம் இருந்து போர்டிங் பாஸ் வாங்கிக் கொண்டவள் அடுத்தடுத்த இருக்கைகள் இருந்ததைப் பார்த்தாள். ' ப்ளைட் கிளம்ப இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கு, காபி சாப்பிடலாமா?' என்று அவன் கேட்க, அவள் தலையாட்டினாள். ' கபேக்குள் நுழைந்து அவன் ' டூ ஸ்மால் கேப்பச்சினோ வித் லேக்டே' என்று கேட்க அங்கிருந்த பெண் ஏழு டாலரைப் பெற்றுக் கொண்டு இரண்டு காபியுடன் ஸ்டிரா மற்றும் ஷுகர் பாக்கெட்டுகள் நான்கை வழங்கினாள். காபியை குடித்து முடிப்பதற்கும் ப்ளைட் கிளம்புவது குறித்த அறிவிப்பு வரவும் சரியாக இருந்தது. இன்னும் அரைமணி நேரம் கழித்தது தான் ப்ளைட் உள்ளே ஏற அனுமதிப்பார்கள்.

எனவே இருவரும் தங்கள் ஹாண்ட் லக்கேஜ்களுடன் பயணிகள் இருக்கையில் அமர்ந்தனர். ' சாரு, எப்படி இருக்கே?', லைப் எப்படி போகுது? உன் கணவர், குழந்தைகள்? என ஆவல் மீறக் கேட்ட ரகுவிடம் அவள் ' ப்ளைட்டில் எட்டு மணி நேரம் ட்ராவல் பண்ணப் போறோம்,, சொல்றேன்' , ' நீங்க சொல்லுங்க! உங்களைப் பத்தி' என்று திரும்பினாள். ' ஏஸ் யூஷுவல் , எல்லாரையும் போலத் தான் ' , நீ சொன்ன மாதிரி ப்ளைட்ல தான் நிறைய நேரமிருக்கே' என்றான். சாருவுக்கு தான் இருபத்தைந்து வருஷம் முன்பு பார்த்த ரகுவிடம் பெரிய மாற்றம் தென்படவில்லை என்றே தோன்றியது, சற்றே தொய்வான நடையைத் தவிர.

இடையில் சாருவிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ' ப்ளைட் கரெக்ட் டைம் தான், அதெல்லாம் நான் ஜாக்கிரதையா வந்துடுவேன், ஏர்ப்போர்ட்டுக்கு அப்பாவும், அபிஷேக்கும் தானே வரா?', இங்க எங்க ஊர்க்காரர் ஒருத்தர மீட் பண்ணினேன், அவரோட தான் பேசிண்டிருக்கேன்' என்று முடித்தாள். ' யார்? ' என்ற ரகுவின் கேள்விக்கு ' என் டாட்டர் வித்யா ' என்று பதில் கூறினாள். ரகுவிற்கும் ஏதோ அழைப்பு வர அவன் சற்று தொலைவில் சென்று பேசிவிட்டு வந்தான்.

இருவரும் விமான நிலைய வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். விமானம் பாஸ்டனை நோக்கி பறக்கத் தொடங்கியதும் ரகு தான் முதலில் தொடங்கினான். ' உனக்கு பழசெல்லாம் நினைவிருக்கா? ' என்றான். ' உண்மைய சொல்லணும்னா, இப்போ உங்களப் பாத்ததும் தான் ஞாபகம் வர்றது. இருபத்தஞ்சு வருஷம் எல்லாத்தையும் மறக்க வச்சுடுத்து' என்றாள்.மிகவும் வெளிப்படையாக பேசும் அவள் இயல்பில் எந்த மாற்றமும் இல்லை என நினைத்துக் கொண்ட ரகு, ' உன் ட்வின் ஸிஸ்டர்ஸ் எப்படி இருக்காங்க?' என்றான். ' இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி ஒருத்தி லண்டன்லயும், இன்னொருத்தி யூ எஸ்லயும் இருக்கா!' என்றவுடன் ' வாட் எபவுட் பேரண்ட்ஸ்?' என வினவ ' அப்பா நோ மோர், அம்மா தான் சென்னையில என்னோட இருக்கா' என்றாள்.

' உம், சரி, அவங்கள்ள யாராவது, ' என்று ரகு இழுக்க, ' லவ் மேரேஜ் தானே! , இரண்டு பேருமே விரும்பியவாளத் தான் கல்யாணம் பண்ணின்டிருக்கா' என்று சாரு சட்டென்று பதிலளித்தாள். ' அப்போ உன்ன மட்டும் தான் ஏமாத்த முடிந்தது போல, ‘' என்றான். ‘அப்படி சொல்ல முடியாது,ரகு, நான் பெரியவ, அதனால் எதிர்பார்ப்பும் கூட, எனக்கும் பொறுப்பு அதிகம், ,அவங்க என்ன விட ஆறு வயசு சின்னவங்க , மேலும் தே வேர் வெரி க்ளியர் இன் டிசைடிங் தெயர் ப்யூச்சர், அன்லைக் மி ' என்று சொல்லி விட்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அந்தக் குரலில் மெலிதாக இழையோடிய வேதனையை அவன் உணர்ந்தான்.

கண்ளை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்ட ரகுவுக்கு அவர்கள் காதல் தோல்வியில் முடிவடைந்த நாள் கண் முன் விரிந்தது. அவளுடன் பழக ஆரம்பித்து இரண்டு வருடங்கள் கழித்து ஒரு நாள் அவனை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினாள். ‘ தம்பி நீங்க வேற , நாங்கள்ளாம் வேறப்பா, வீட்டுக்கு மூத்த பொண்ணாப் பொறந்து இவ இப்படி பண்ணுவான்னு நினைக்கல, எங்களால வெளியல தல காட்ட முடியாது, நீயாவது எங்கள கொஞ்சம் புரிஞ்சிக்கப்பா! ‘ என அழுத்தமாக பேசி மறுத்து விட்டனர். இருவரும் எவ்வளவோ மன்றாடியும் அவர் பொருட்படுத்தவில்லை. சிறிது சிறிதாக அவனை சந்திப்பதை தவிர்த்த சாருவின் முடிவைத் தெரிந்து கொண்ட ரகு தன் வியாபாரத்தில் கவனம் செலுத்தாமல் வீட்டில் அடைந்து கிடந்தான், நாட்களாய், மாதங்களாய்,வருடங்களாய்.

' ரகு! என்ன தூக்கமா? ' என்று சாரு கேட்க, ' இல்ல, சும்மா கண்ண மூடினேன்' , சரி நீ சொல்லு, உன் ஹஸ்பென்ட் என்ன பண்றார்? என்றான். ' அவர் எக்சைஸ் டிபார்ட்மென்ட்ல வேலை பாக்கறார், ஒரே டாட்டர் வித்யா தான் எங்களுக்கு, அவளோட டெலிவரிக்கு தான் வந்திருக்கேன். அவர் முன்னாலேயே போயிட்டார். எனக்கு லீவு கிடைக்கறதே ப்ராப்ளமா இருந்தது. என்ஓசி அது இதுன்னு ஆயிரம் பார்மாலிட்டீஸ்' என்றாள். ' சரி, உங்களப் பத்தி சொல்லுங்க!' என்று வினவ, ' உம், எனக்கு ஒரே பையன், பேர் ராம், என் ஒய்ப் சுமதி ஹவுஸ் ஒய்ப் , ஆறு மாசமா பையனோட தான் இருக்கா, நான் பிஸினஸ் விஷயமா இங்க வந்திருக்கேன், ரிடர்ன் என் மிஸஸ்ஸோட தான்' என்றான்.

பாஸ்டன் விமான நிலையத்தை அடைந்தவுடன், இமிக்ரேஷன் வரிசையில் நின்றனர். பின் ஒன்றாக, பேகேஜ் க்ளெயம் வளையத்தின் அருகே சென்றனர் அவளது லக்கேஜ்களை எடுத்து ட்ராலியில் வைக்க உதவிய ரகு டெர்மினலை அடைந்தவுடன் ' ஓகே சாரு, பை! , சீ யூ ' என்று கூற, அவள் ' ப்ளீஸ் வெய்ட்' ,என் ஹஸ்பென்ட் இங்க தான் இருப்பார், உங்களுக்கு அறிமுகப்படுத்தறேன்' என்று சாரு கூற, ' இல்ல, என் ப்ரண்டு கார் பார்க்கிங்கில எனக்காக வெய்ட் பண்றான் 'என்று வேகமாக கிளம்பினான்.

சரி, நீங்க கொடுத்த நம்பர்ல நான் உங்களுக்கு கால் பண்றேன் ' என்ற அவள் குரல் அவனுக்கு பி்ன்னாலிருந்து கேட்டது. அடுத்த இரண்டு நிமிடத்தில் வந்த அவள் கணவர் மூர்த்தியும், மாப்பிள்ளை அபிஷேக்கும் அவளை நெருங்கினர். ' அட, ஜஸ்ட் இப்போ தான் அவர் போறார் பாருங்க, லக்கேஜ் எல்லாம் அவர் தான் எடுத்து வர உதவினார், உங்களுக்கு அவர அறிமுகம் பண்ணலாம்னு நினச்சேன், அதுக்குள்ள கிளம்பிட்டார், ' என்றாள். ' ‘தெரியும் ‘ என்றார் . ‘ என்ன தெரியுமா? ‘ என்ற சாருவிடம், ‘ இல்ல நீ அறிமுகம் பண்ணுவேன்னு தெரியும் ‘ என்று பதிலளித்துக் கொண்டே சற்றே தொலைவில் பார்க்கிங்கை நோக்கிச் சென்ற ரகுவைப் பார்த்தார் .தான் ரகுவை ஏற்கனவே ஒரு ரயில் பயணத்தில் சந்தித்ததையோ, அப்போது ரகு பேச்சு வாக்கில் தான் ஒரு பெண்ணை நேசித்ததாகவும் அவளை திருமணம் செய்ய இயலாமல் போனதால் திருமணமே செய்து கொள்ளவில்லை என்று சொன்னதையோ சாருவிடம் கூறவில்லை.

தான் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் ரகுவைப் பார்த்ததைப் போல், அவனும் தன்னைப் பார்த்திருப்பான் போலும் என்று நினைத்துக் கொண்டவரை இடைமறித்த சாரு ' அவர் ஒய்ப் ஏற்கனவே பாஸ்டன்ல பையனோட தான் இருக்காளாம் ' என்றாள் ' என்ன ஒய்பா? ' என்று ஆச்சரியமாக கேட்க ஆரம்பித்த மூர்த்தி பல்லைக் கடித்துக் கொண்டார்.' ' ஆமாங்க ' என்ற அவளின் குரலில் மகிழ்வையும், மனநிறைவையும் உணர்ந்தார். அவருக்கு ரகுவின் மேல் ஏற்கனவே இருந்த மதிப்பு பன்மடங்காகியது.