தொடர்கள்
தொடர்கள்
சினிமாவும் இலக்கியமும் 2. - தி.குலசேக்ர்

20250820072342118.jpg

சினிமா மற்றும் இலக்கியம் என்கிற தலைப்பில் உரை நிகழ்த்துவதற்காக சமீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியிலிருந்து அழைத்திருந்தார்கள். நான் உள்முகமானவன். தேர்ந்த மேடைப்பேச்சாளன் கிடையாது. சிறுபிராயத்திலிருந்து சபைக்கூச்சம். ஆனால் தனிநபர்களோடு உரையாடும் போது எளிதில் அவர்கள் மனங்களை ஈர்த்துவிடுவேன். காரணம் பேச்சாக இருந்தாலும் சரி, எழுத்தாக இருந்தாலும் சரி, நடிப்பாக இருந்தாலும் சரி, இயக்கமாக இருந்தாலும் சரி அந்த விசயத்தினால் உந்தப்பட்டு மனது பரவசமடைந்து விடுகிறபட்சம் அந்த விசயத்தை உள்ளதை விட நூறு மடங்கு சிறப்பாக நிகழ்த்தி விடுவேன். அது நிகழாதபட்சம் சொதப்பல் தான். இந்த நிகழ்வின்போது அப்படியொரு பரவச பிரளயம் நிகழ்ந்தால், நான் தரையில் இல்லை. சிலிர்ப்போடு மழைக்குள் பறக்கும் சக்கரவாகப் பறவையாகிப் போனேன் அன்று. ஆலங்கட்டி மழையாய் விசயங்கள் காட்சி ரூபத்தில் கொட்டத்தொடங்கின. விசயத்தில் தெளிவும், ஞானமும், ஈடுபாடும் வசப்படுகிறபோது அது எந்த சூழ்நிலையிலும் நம் சிந்தனைகளை ரசிக்கத்தக்க விதத்தில் அநாயாசமாக வெளிப்படுத்தி விடுகிறது தான்.

இருபாலர்கள் படிக்கும் கல்லூரி அது. விசாலமான அரங்கு. சுமார் 300 பெண்களும், ஆண்களும் குழுமியிருந்தார்கள். அனைவரும் முதுகலை ஆங்கில இலக்கியமும், அதன் ஆய்வு மாணவ - மாணவியர்கள். நிகழ்விற்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் முனைவர் ரேவதி, பேராசிரியைகள் சிவப்பிரியா, முனைவர் ஜெகதீஸ்வரி, முனைவர் அறிவுச்செல்வி மற்றும் அவர்தம் குழுவைச் சேர்ந்தவர்கள் ஒன்றியைந்து முன்னெடுத்திருந்தார்கள். அந்த மாணவ-மாணவியர்கள் வழங்கிய ஒத்துழைப்பும், வரவேற்பும் சற்றும் எதிர்பார்த்திராதது. ஆச்சர்யத்திற்குரியது. அந்த உரையில் பேசிய மனதிற்கு நெருக்கமான விசயங்களின் சாரமே, இங்கே இப்படியொரு தொடராக உருவெடுத்திருக்கிறது.

என்னுடைய நூறாவது புத்தகம் ‘வித்துகளின் கனா’. உலகின் மிகச்சிறந்த முப்பது திரைநாயகிகளின் ஊடாக சமூகத்தில் ஊடாடும் பெண்ஆண் சமத்துவமற்ற நிலைகளை அலசும் கட்டுரை தொகுப்பு. அதை அப்போது தான் வம்சி புக்ஸ் வெளியிட்டிருந்தது. அதனால் வம்சி பதிப்பகத்தை நிர்வகிக்கும் தோழி கே.வி. ஷைலஜாவின் தோட்டமாகிற பத்தாயத்தில் உள்ள சில அறைகளுள் ஒன்றில் தான் தங்கினேன். அங்கே அன்பு தோய்ந்த கதகதப்பான உணவும் பரிமாறினார்கள். நிகழ்ச்சிக்கு முந்தின நாள் மாலையே அங்கே போய் தங்கிவிட்டேன். மறுநாள் நிகழ்ச்சி நடக்கிற அந்த கல்லூரிக்கு அங்கிருந்த அவரின் உதவியாளரே கொண்டு வந்து விட்டுவிட்டார்.

அரசு கல்லூரி என்றில்லை. அரசின் கட்டிடங்கள் எல்லாமே அதன் பழமையை இழக்காமல் இன்னும் தக்கவைத்துக்கொண்டிருப்பதை காண முடிந்தது. எங்கும் விசாலமான இடங்கள். நிபந்தனையற்று வளர்ந்திருந்த அடர்ந்த மரங்கள். மரங்களில் உள்ள குரங்குகள் தான் முதலில் வரவேற்றன. தோளில் இருந்த ஜோல்னா பையிலிருந்து மேரி பிஸ்கட்டுகள் எடுத்து தந்தேன். சமர்த்தாக வாங்கிக்கொண்டு மரத்திலேறி தின்ன ஆரம்பித்தன. அதற்குள் ஆங்கில பேராசிரியை சிவப்பிரியா என்னை அழைத்துச் செல்ல வெளியே இருந்த செம்மண் நடைபாதைக்கு வந்துவிட்டார்.

20250820072407812.jpg

நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்தோடு துவங்கியது. சினிமாவும் இலக்கியமும் என் இரண்டு கண்கள். எனது கல்லூரி பருவத்தில் எங்கிருந்தோ, யாரோ ஒரு நண்பர் வந்து, வாழ்க்கைப்பயணத்தின் வழியாக இப்போது என் மனதில் ஊன்றியிருக்கிற சில கருத்துகளை அப்போதே சொல்லியிருந்தால், வாழ்க்கை குறித்த புரிதல் பன்மடங்கு மேம்பட்டிருந்திருக்கும் என்று தோன்றும். அப்படித் தோன்ற வைக்கிற காலத்தின் வழி கண்டடைந்த கருத்துகளை தான் இப்போது உங்கள் முன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என்று ஆரம்பித்தேன்.

அடுத்த வாரம்.....