தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை 38 லண்டனில் பிறந்து சென்னை வந்த எழுத்து. - மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்

2025082007260513.jpg

மனிதனோ அவன் படைப்போ வெளிநாட்டிற்கு சென்று வந்தால்தான் உள்நாட்டில் மதிப்பு இருக்கும் போலிருக்கிறது. அவன் படைப்புகள் கடல் கடந்து சென்றதற்குக் காரணம் அங்குள்ள பத்திரிகையாளர்கள், அவனை அரசியல் கட்டுரைகள் எழுதச் சொன்னதுதான். நம்மவர்களுக்கு அனுப்பிய படைப்புகளில் அரசியல்நெடி (வெடி) அதிகம் என்பதனால், இங்குள்ள பத்திரிகைகள் ஏற்றுக்கொள்ளாத படைப்புகளை, லண்டனில் உள்ள ஒரு பத்திரிகை ஏற்றுக்கொண்டது.

அங்கு வெளியான பின் அவற்றை நம்மவர்கள் மறுபிரசுரம் செய்தார்கள், லண்டன் பத்திரிகைக்கு நன்றி தெரிவித்து. லண்டனில் உள்ள யாழ்ப்பாணத் தமிழர் ‘மாலி’ என்கிற மஹாலிங்க சிவம் 1983ல் லண்டனில் குடியேறியவர். இவர் தமிழன், தமிழோசை, அஞ்சல் என்ற Tabloid வடிவப் பத்திரிகைகளை நடத்தி வந்தார்.

அடுத்து ‘டைம்ஸ்’ ஆங்கில இதழ்போல் தமிழில் கொண்டுவர வேண்டுமென்று நினைத்து, Big Ben கடிகாரத்தை இலச்சினையாக வைத்து ‘நாழிகை’ என்றொரு பத்திரிகையை நடத்தி வந்தார். அவன் எல்லா இதழிற்கும் கட்டுரைகள் எழுதி வந்தான்.

அதனால் அவனுக்கு லண்டனில் நிறைய தமிழ் வாசகர்கள் கிடைத்தார்கள். ஒருமுறை சென்னையிலுள்ள நண்பர்கள் இருவருடன், லண்டன் சென்றபோது அவனை விமான நிலையத்தில் வரவேற்க பன்னிரெண்டு வாசகர்கள் வந்திருந்தார்கள். சென்னை நண்பர்கள் திகைத்துப் போனார்கள்.

ஒரு கட்டுரையில் நடிகர் சிரஞ்சீவி அரசியலில் நுழைவார் என்று அவன் எழுதினான். அது 1992ஆம் வருடம்.

சிரஞ்சீவியே அதை அப்போது யோசித்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால் அவன் உள்மனது அப்போதே சொன்னது, ‘அவருக்கு அரசியல் பிரவேசம் உண்டு’ என்று. ஜெயலலிதாவை விமர்சிக்கும் கட்டுரைகளை, நக்கீரன் தவிர பிற பத்திரிகைகள் வெளியிடத் தயங்கிய காலத்தில், லண்டனில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘தமிழோசை’, ‘நாழிகை’ ஆகிய பத்திரிகைகள் வெளியிட்டன.

நாழிகை வெளியிட்ட ஒரு முக்கிய கட்டுரை ‘ஆட்டோசங்கரும் RV யும். ‘RV என்பது ஜனாபதியாக இருந்த R.வெங்கட்ராமன், ஆட்டோ சங்கர் கொலைகாரர். இந்த இருவரையும் எப்படி ஒரே கோட்டில் இணைப்பாய்’ என்று நண்பர்கள் கோபப்பட்டார்கள்.

அவன் ஒப்புகை காட்டியிருந்தது இரண்டு தளங்களில். ஒன்று ஒருவர் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, மற்றவர் அந்தக் குற்றத்தை மன்னிக்கக்கூடிய பதவியிலிருந்தவர். ஆட்டோசங்கர் தன் சுயசரிதையை ஒரு வார இதழில் எழுதிக்கொண்டு வந்தார். R.வெங்கட்ராமனின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளிவந்தது. இரண்டிற்கும் தமிழ்நாட்டில் எதிர்ப்பு இருந்தது. ஆக இந்த Autobiography யும் ஒரு ஒப்புமைதான்.

ஆட்டோசங்கர் சில விஷயங்களை எழுதியிருக்கக் கூடாது என்று சொன்னவர்கள் சிலர். ஆர்.வி. சுயசரிதையிலும் சில சம்பவங்களில் குறைகண்ட அரசியல்வாதிகள் அதற்கு எதிர்ப்பை கிளப்பினார்கள். அவன் எழுதியிருந்தான், ‘மண்ணாண்ட மனிதர் வீட்டில் மண் வாரி வீசினார்கள்’. அடுத்த பதிப்பில் R.V. தன் புத்தகங்களின் வாசகங்களை திருத்த வேண்டுமென்று சொன்னார்கள்.

அப்போது அவன் எழுதினான், ‘புத்தகங்கள் மனிதர்களை திருத்துவதில்லை, மனிதர்கள்தான் புத்தகங்களைத் திருத்த வேண்டுமென்கிறார்கள்.’ ‘ஆட்டோ சங்கரும் ஆர்.வி.யும்’ என்ற கட்டுரை நாழிகை பத்திரிகையில் கவர் ஸ்டோரி. அது அமெரிக்கத் தூதரகத்தில் அவன் பணி புரிந்த போது எழுதியது. அவனைச் சந்திக்க திமுக அரசியல்வாதி க.சுப்பு தூதரகத்திற்கு வந்திருந்தார். மேஜை மீதிருந்த அந்த நாழிகை இதழைப் புரட்டினார். ‘கட்டுரை அருமையாக இருக்கிறதே?’ என்று சொல்லி, அங்கிருந்தபடியே அவனது தொலைபேசியைப் பயன்படுத்தி நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் காமராஜை அங்கு வரவழைத்தார். அந்தக் கட்டுரையை நக்கீரனில் மறு பிரசுரம் செய்யச் சொன்னார். அப்படியே அது மறு வாரம் நக்கீரனில் வெளிவந்தது.

சென்னையில் 2015ல் வெள்ளம் வந்தபோது அவன் எந்த நிறுவனத்திலும் பணியாற்றவில்லை. செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து, சென்னையில் வெள்ளம் சூழ்ந்ததன் காரணம், ஜெயலலிதா அரசாங்கத்தின் மெத்தனப்போக்கு என்பதில் அவனுக்கு உடன்பாடு இருந்தது. எனவே ‘வாங்க, வெள்ளம் வாங்க’ என்று நாடகபாணியில் ஜெயலலிதாவும் சசிகலாவும் பேசிக்கொள்வது போல் ஒரு நீண்ட கட்டுரையை அவன் எழுதியிருந்தான். அதுவும் ‘அரஸ்’ வரைந்த படங்களுடன் நாழிகையில் வெளியானது.

வெள்ளத்தை ஒட்டி இன்னொரு சம்பவம். அப்போது தந்தி டிவி அவனை தன் தொலைக்காட்சியில் செய்தி அறிக்கையின்போது வெள்ளம் பற்றி விமர்சனம் செய்யச் சொன்னது. அவன், ‘இங்கே அரசாங்கமே இல்லை, ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தன் அறையைவிட்டு இன்னொரு அறைக்குச் செல்வதற்குக்கூட மேலிடத்தின் உத்தரவு வேண்டும், மேலிடத்திற்கும் மேலிடம் உண்டு. இப்படி படிப்படியாக தகவல் சென்று உத்தரவு வருவதற்குள் செம்பரம்பாக்கம் ஏரி சென்னையில் நுழைந்துவிட்டது’ என்றான்.

இன்னும் ஏதோ சில விமர்சன வாசகங்களைச் சொன்னான். அதை தந்தி டி.வி. நேரலையில் ஒளிபரப்பியபோது, ஸ்டுடியோவில் இருந்தவர்கள் அவன் புகைப்படத்திற்கு பதிலாக ஓய்வுபெற்ற DGP R.நட்ராஜ் படத்தைக் காண்பித்தார்கள். அடுத்த ஐந்தாவது நிமிடம் தந்தி டிவி தவறான படத்தைப் போட்டதற்காக அவனிடம் மன்னிப்பு கேட்டது. அவன் சொன்னான், ‘எனக்கு ஒன்றும் கவலையில்லை, பாவம் அந்த நடராஜுக்குத்தான் பிரச்சனை’ என்றான்.

இது காலை 8.00 மணிக்கு நடந்த சம்பவம். அடுத்த இரண்டு மணிநேரத்தில் அந்த நட்ராஜ் அஇஅதிமுக&வின் அடிப்படை உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டார். ஜெயலலிதா தன் உளவுத்துறை மூலம் தீர விசாரித்திருந்தால் விமர்சனம் செய்தது, எந்த நபர் என்பது தெரிந்திருக்கும். ஜெயலலிதா சில விஷயங்களில் அவசரக்குடுக்கை. அந்த சம்பவத்திலும் அப்படித்தான்.

ஜெயலலிதா காலத்தில் ‘அம்மா அம்மா’ என்ற பெயர் நிமிடம் தோறும் அஇஅதிமுக வட்டாரங்களில் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டது. எல்லாவற்றிற்கும் அம்மாவின் பெயர். இதை கிண்டல் செய்து ‘அம்மாயணம்’ என்ற தலைப்பில் ஒரு நகைச்சுவை கட்டுரையை, அவன் கதை போல் எழுதியிருந்தான். அதுவும் லண்டன் நாழிகையில் பிரசுரம் ஆன பின்னே, நக்கீரன் மறுபிரசுரம் செய்தது.

‘அம்மா நாமம் வாழ்க’ என்று சொல்லாமல் எந்த அஇஅதிமுகவாதியும் மேடையில் பேசியதில்லை. ஒரு அரசியல்வாதி வீட்டிலும் எல்லாவற்றிற்கும் அந்த வாக்கியத்தைச் சொல்லியே பேசினார். அவரது மகள் அவரை அமெரிக்காவிற்கு அழைத்துச்சென்று சில மாதங்கள் வைத்துக் கொண்டார். பேச்சு பழக்கம் மாறுமோ என்று நினைத்து. மூன்று மாதங்கள் கழித்து அந்த அரசியல்வாதி ஒரு அமெரிக்க தம்பதியை விருந்தினராக அழைத்து வந்திருந்தார்.

அமெரிக்க தம்பதியும், சென்னை வந்த பிறகு வாக்கியத்திற்கு வாக்கியம் ‘அம்மா நாமம் வாழ்க’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த ‘அம்மா’ என்னும் கதையும் ‘ஈழநாடு’ என்ற இலங்கை பத்திரிகையில் வெளிவந்த பிறகே, நக்கீரனில் மறு பிரசுரம் செய்யப்பட்டது.

ஜெயலலிதா காலத்தில் ஒருமுறை லண்டன் பத்திரிகையாளர் அவனைக் கேட்டார், ‘ஜெயலலிதா சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் போட்டியிட்டு இரண்டிலும் வென்றால் என்ன செய்வார்?’ அவன் சொன்னான், ‘நாடாளுமன்றத்திற்குச் செல்வார். அவரது காலணிகள் முதல்வர் நாற்காலியில் வைத்து வணங்கப்படும். காலப்போக்கில் காலணியாட்சியே பரவாயில்லை என்று மக்கள் நினைப்பார்கள்’ என்றான்.

அது அப்படித்தான் ஆயிற்றோ என்று இன்று நினைக்கும்படி இருக்கிறது. என்ன செய்வது? காலத்தின் கோலம் இப்படி.