தொடர்கள்
கதை
நேர்"காணல்" - முனைவர் என். பத்ரி

20250820065303622.jpeg

அது ஒரு தகவல் தொழில்நுட்ப அலுவலகம். உள்ளே நிர்வாக அலுவலர் பதவிக்கான நேர்காணல் நடந்து கொண்டிருந்தது.

அவன் பெயர் பாஸ்கர். உள்ளே எட்டிப் பார்த்த அவனை ’Yes come in” என்று உள்ளே வரச்சொன்னார்கள். உட்காரச். சொன்னார்கள்.

அவனைப் பேசவே அனுமதிக்கவில்லை. உங்களைப் பற்றிய விவரங்களெல்லாம் உங்கள் விண்ணப்பத்திலேயே இருக்கின்றன.

எதிரே அமைதியாக உட்கார்ந்த பாஸ்கரிடம்.’இங்கே நான்கு பேர்கள் இருக்கிறோம். நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பதவியில் இருப்பவர்கள்.நாங்கள் ஒவ்வொருவரும் எந்த பதவியில் இருக்கிறோம் என்பதை நீங்கள் சொல்ல வேண்டும். இதுதான் உங்களுக்கான நேர்காணல் வினா. உங்களுக்கு ஒரு நிமிடம் நேரம் உண்டு.’’ என்றார் அவர்களில் இருந்த அந்த பருமனான மனிதர்.

பாஸ்கர் அவர்களை அனைவரின் கண்களையும் ஆய்ந்து பார்த்தான். அதில் நடுவில் ஒல்லியாக உயரமாக உட்கார்ந்து இருந்த பெண்மணியை பார்த்து ’மேடம்தான் இந்த அலுவலகத்தின் சீஇஓ’ என்றான்.

’எப்படி?’ என்று கேட்டார்கள்.

அவர்களின் முகத்தில் உள்ள தன்னம்பிக்கையும்,உட்கார்ந்திருக்கும் அமைப்பும் மற்றவர்களை பார்க்கும் தோரணையும் மற்றவர்களை விட அவர்களை உயர்ந்தவராகக் காட்டுகிறது’என்றான் பாஸ்கர்.

அடுத்து இடது கோடியில் முகத்தில் சோகத்துடன் அமர்ந்து கொண்டிருந்த மனிதரைக் காட்டி,’இவர் தான் இந்த கம்பெனியின் மேலாளர்’ என்றான்.

’எப்படி?’ என்று கேட்டதற்கு,’ அவருடைய ஐயோ பாவம் மிக்க முகமும், அதில் உள்ள சோகமும் இங்கு நடக்கும் எல்லா வேலைகளுக்கும் இவர்தான் பொறுப்பு என்று பறைசாற்றுகின்றன’ என்று சொல்லி முடித்தான்.

அடுத்து,’நிர்வாக அலுவலர் யார்?’ என்று கேட்டார்கள்.

இடது கோடியில் அங்கு இருப்பவர்களிலேயே மிகவும் வயதானவராக உட்கார்ந்திருந்த அவரைக் காட்டி, அவர்தான் இந்த கம்பெனியின் நிர்வாக அலுவலர் என்றான் பாஸ்கர்.

‘எப்படி?’ என்று கேட்டார்கள்.

’இந்த நேர்க்காணல் ’நிர்வாக அலுவலர் பதவிக்கானது. அவரைப் பார்த்தால்தான் 60ஐ தொடுபவராகத் தெரிகிறது’என்றான் பாஸ்கர்.

இதில் . இதில் யார் HR ‘என்று சொல்லுங்கள் என்றார் அவர்.

பாஸ்கர்அவர்களில் வலது கோடியில் உட்கார்ந்திருந்த அந்த இளம் பெண்ணைப் பார்த்து,’ இவர்தான் இந்த கம்பெனியின் HR’ என்றான்.

’எப்படி?’ என்று கேட்டதற்கு பொதுவாக HR போஸ்ட்டுக்கு ஓர் இளம் அழகிதான் பொறுப்பாக இருப்பார்கள். அவர்கள்தான் ஒரு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை பொறுமையாக பரிசீலித்து தகுதியானவர்களை நேர்காணக்கலுக்கு வரச் சொல்லுவார்கள் .

எனவே ’அந்த சகோதரியைப் பார்த்தால் அவர் தான் இந்த கம்பெனியின் HR என்று நான் நினைக்கிறேன்’ என்று சொல்லி முடித்தான்.

‘நன்றி. மிஸ்டர் வெங்கட் எல்லாக் கேள்விக்கும் சரியான விடையைச் சொல்லிவிட்டீர்கள்.

‘ஓர் ஐடி துறையில் நிர்வாக அலுவலருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் அனைத்தும் உங்களிடம் இருப்பதாகவே நாங்கள் உணர்கிறோம். எங்களின் கண்களை நோக்கி எங்களின் அகஉணர்வை ஆழமாக படிக்கும் உங்கள் அறிவாற்றல் திறன் அபாரமானது’என்று புகழ்ந்தார்கள்.

நீங்கள் வெளியே ’கொஞ்ச நேரம் காத்திருங்கள். மேற்கொண்டு எங்களுக்குள் பேசி ஒரு முடிவைச் சொல்லுகிறோம்.’என்றார் அந்தக் கம்பெனியின் சீஇ ஒ.

அதற்கு பாஸ்கர்.’ நான் வெங்கட் இல்லை. என்னுடைய பெயர் பாஸ்கர் சார். இங்கிருக்கும் கேண்டீனில் புதியதாக வேலையில் சேர்ந்துள்ளேன். உங்களுக்கு இன்று இந்த லஞ்ச் மெனு ஓகேவா?’ என்று கேட்டு வருவதற்கு என்னை அனுப்பிவைத்தார்கள்.நீங்கள் நேர்காணலுக்கு வந்த நபர் என்று என்னை தவறாக புரிந்துக் கொண்டு இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தீர்கள்” என்றானே பார்க்கலாம்.இதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்துதான் போனார்கள்.

இருந்தாலும் ’அதனால் என்ன? ஒருவர் கேண்டீன் வேலையிலிருந்து அலுவலக வேலைக்கு வரக்கூடாதா என்ன? கொஞ்ச நேரம் வெளியே காத்திருங்கள்.’என்றார் சீஇஓ.

பி.இ. படித்துவிட்டு இத்தனை நாள் வேலைக்காக போராடிக் கொண்டிருந்த அவனுக்கு இன்று எதிர்பார்க்காமல் கலந்து கொண்ட நேர்காணல் பெரிய வேலையை லாட்டரி போல கிடைத்தது அதிர்ஷ்டம் தான்.

வெளியே வந்த பாஸ்கர், அங்கு காத்திருந்த ஆளை (வெங்கட்டாக இருக்கலாம்) பார்த்தும்,பார்க்காமல் நகர்ந்தான்.