தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு நற்றிணை 37 -மரியா சிவானந்தம்

20250817174739224.jpg

இங்கே காதலனுக்காக காத்திருக்கிறாள் அந்தத் தலைவி.

அவன் வரும் வழி பார்த்து அவள் கண்கள் கண்ணீரைச் சொரிகின்றன.

அழுது, அழுது அத்தலைவி சோர்ந்துப் போகிறாள். அவள் நிலை இரங்கத்தக்கதாக இருக்கிறது.

அவளைக் காண்பவர்கள் ,"இவள் காதலன் இனிமேல் எங்கே வரப் போகிறான்?" என்று ஏளனம் செய்கிறார்கள்.

ஊராரின் கேலிப் பேச்சு தோழியின் காதிலும் விழுகிறது.

தோழி மிகுந்த கவலையடைகிறாள். அவளுக்கும் தலைவன் பேரில் வைத்த நம்பிக்கை சரிகிறது.

தன் தலைவியிடம், " நீ இன்னும் அவனை நினைத்து அழுதுக் கொண்டு இருக்கிறாய். அவன் மீண்டு வருவானா ? நீ அவனை நினைத்து அழுது, அழுது இறந்து விடுவாய் போல அல்லவா இருக்கிறது ?" என்று கேட்கிறாள்.

தலைவி அவள் கவலையைப் போக்கும் வண்ணம் ,' நான் தலைவனின் நினைவில் இறப்பதும் இனிமையானது என்றால் அவன் வந்து விடுவான் என்று எதிர்பார்த்து வாழ்வதும் இனியதே" என்று மறுமொழி கூறுகிறாள்

அந்த நெய்தல் நில மங்கையின் நம்பிக்கையும் அதைத் தரும் அவளது காதலும் நம்மை அசர வைக்கிறது.

தலைவி கூறுவாள்

“ புன்னை மரங்கள் பூத்துக் குலுங்கும் நிலத்தின் தலைவன், என் காதலன். என்னை விட்டு பிரிந்துச் சென்ற அவன் வர மட்டான் என்று ஊரினர் பழிச் சொல் கூறுவதைக் கேட்கும் போது என் கண்ணில் நீர் பெருக்கெடுக்கிறது. என் உறக்கமும் தொலைந்து விட்டது. அவன் நினைவில் நான் அழுது, அழுது நான் இறந்துப் போனாலும் அது இனிமையானது தான்.

“சான்றோர் கடமை தவறுவது இல்லை” என்ற உலக வழக்கம் உண்மை என்றால், அவனும் தன் கடமையை உணர்ந்து ஒருநாள் என்னை அடைய வருவான், அவன் மார்பில் நான் சாய்ந்துக் கொள்வேன் என்று நம்பி வாழ்தலும் இனிமையானதுதான்” என்று தோழியைத் தேற்றுகிறாள்,

என்னைப் பொறுத்தவரை அவன் நினைவில் வாழ்வதும், அவன் நினைவோடு இறப்பதும் இனிமையானதுதான், என்னும் தலைவியின் சிறப்பைக் கூறும் நற்றிணைப் பாடல் இது.

நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்,

பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்

சாதலும் இனிதே காதல்அம் தோழி!

அந் நிலை அல்லஆயினும், ''சான்றோர்

கடன் நிலை குன்றலும் இலர்'' என்று, உடன் அமர்ந்து, 5

உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய

தாயம் ஆகலும் உரித்தே போது அவிழ்

புன்னை ஓங்கிய கானற்

தண்ணம் துறைவன் சாயல் மார்பே.(நற்றிணை 327)

இப்பாடலை எழுதியவர் அம்மூவனார் என்னும் புலவர்

மேலும் ஒர் இனிய பாடலுடன் சந்திப்போம்

தொடரும்