ஒரு கலைஞர் தனது துறையில் 50 ஆண்டுகளாக தொடர்ந்து படைப்பாற்றலுடன் இயங்கிக் கொண்டிருப்பதே மிகப்பெரிய சாதனைதான்.
ஏராளமான சாதனைகளை செய்துவிட்டு இதெல்லாம் சாதனை என்று பெருமை பேசாமல் முதல் முழுமையான மேற்கத்திய செவ்வியல் இசை அடிப்படையிலான சிம்பொனியைப் படைத்த இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு காலஇசைப் பயணத்தை போற்றும் விதமாக தமிழ்நாடு அரசு சென்னையில் பாராட்டு விழா நடத்தி அவரை கௌரவப்படுத்தியது.
உலகில் எந்த இசைக் கலைஞருக்கும் ஒரு அரசே பாராட்டு விழா நடத்தியது இல்லை என்று இளையராஜா தமிழக அரசை பெருமைப் படுத்தும் வகையில் பேசினார்.
இந்த நிகழ்ச்சிய ஏற்பாடு முழுவதும் முதல்வரின் நேரடி கண்காணிப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இறங்கி வேலை செய்தார் என்றுதான் விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
சிம்பொனிக் கலைஞர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நடப்பதற்கு முன் தினமே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பாராட்டி பேசினார். சிறப்பு விருந்து தந்து பரிசுகளையும் அளித்து அவர்களை மகிழ்வித்தார்.
ஒரு துணை முதல்வர் தங்கள் மீது காட்டிய அக்கறையையும் அன்பையும் பார்த்து அவர்கள் உண்மையில் நெகிழ்ந்து போனார்கள். அதை சில கலைஞர்கள் அவரிடமே நேரில் சொல்ல அவர் 'கூலாக இது எங்கள் கடமை 'என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
துணை முதல்வர் நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் என்ன செய்திருக்கிறோம் என்பதையும் முதல்வருக்கு தொடர்ந்து அப்டேட் கொடுத்துக் கொண்டு அவர் சொன்ன சில ஆலோசனைகளையும் கேட்டு அதன்படி செய்தார்.
நிகழ்ச்சி நடந்த அன்று காலையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரு உள் அரங்கத்திற்கு வந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனிக்கும் பணியில் இறங்கினார்.
நிகழ்ச்சி ஐந்தரை மணிக்கு தொடங்க இருந்தது. முதல்வர் மு. க .ஸ்டாலின் ஐந்து மணிக்கு வந்து விட்டார். அவர் நேரடியாக அரங்கத்திற்கு செல்லவில்லை.
சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த கமல் மற்றும் ரஜினி தங்கியிருந்த அறைக்கு சென்று அவர்களை சந்தித்து நலம் விசாரித்து விட்டு அவர்களுடன் சில நிமிடம் செலவழித்து விட்டு விழா நாயகன் இளையராஜா தங்கி இருந்த அறைக்கு சென்று அவரை அரசு விருந்தினர் என்ற முறையில் அவரை கௌரவிக்கும் வகையில் முதல்வர் இசைஞானி இளையராஜாவை விழா மேடைக்கு கிட்டத்தட்ட 100 மீட்டர் இருக்கும் அவரை நடத்தி அழைத்து வந்தார்.
இந்த விழாவில் நடந்தது எல்லாமே தமிழக அரசு மற்றும் முதல்வர் இளையராஜாவை எவ்வளவு உயரத்தில் தூக்கி நிறுத்தி அழகு பார்த்து கௌரவப்படுத்தி இருக்கிறார்கள் என்பதின் வெளிப்பாடாகத்தான் அந்த நிகழ்ச்சி இருந்தது. இதை உணர்ச்சிவசப்பட்டு தனது உரையில் வெளிப்படுத்தினார் இளையராஜா.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு இளையராஜாவின் பாடல்கள் பாடிய மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது. எந்தெந்த பாடல்கள் பாட வேண்டும் என்று வரிசைப்படுத்தி தந்தது முதல்வர் தான். இதை கமலஹாசனே பெருமையாக சொன்னார்.
கமல் ரஜினி பாடல்கள் பாடகர்கள் பாடும் போது அந்தப் பாடல் சம்பந்தப்பட்ட காட்சிப்படுத்தலுக்கான பிளாஷ்பேக்குக்கே போய்விட்டார்கள் அந்த இரண்டு உச்ச நடிகர்கள். அது அந்த பாடலை அவர்கள் ரசிக்கும் போது அந்த முகத்தில் இருந்தே வெளிப்பட்டது.
ஒரு கட்டத்தில் "உங்களுக்கு நேரம் ஆகிறதே போல் தெரிகிறது இசை நிகழ்ச்சியை முடித்துக் கொள்ளலாமா "என்று முதல்வரிடம் இளையராஜா கேட்டபோது இல்லை இல்லை தொடரட்டும் "என்றார் முதல்வர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டபோது அவரும் இதே கருத்தை சொல்ல நிகழ்ச்சி தொடர்ந்தது.
திருமதி உதயநிதி ஸ்டாலின் அந்த இசையை நிகழ்ச்சியை மெய்மறந்து ரசித்தார்.
நடுவில் சில பாடல்கள் பற்றி உதயநிதி தன் மனைவியிடம் ஏதோ கருத்து சொல்லிக் கொண்டிருந்தார் அதையும் சிரித்த படி ரசித்தார் திருமதி.
சிம்பொனி இசை நிகழ்ச்சி அங்கு கலந்து கொண்டிருந்த பார்வையாளர்கள் இசை ரசிகர்கள் நேரடியாக அனுபவித்து தாங்கள் பாக்கியசாலிகள் என்று மெய்சிலிர்த்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
சிம்பொனி இசையின் போது தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு தவிர்க்கப்பட்டது. செல்பேசியில் இதை படம் பிடிக்க வேண்டாம் என்று வேண்டுகோளாக பார்வையாளர்களிடம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
விரைவில் நேரடி ஒளிபரப்பு செய்யும் அளவுக்கு திறந்தவெளியில் மீண்டும் இந்த சிம்பொனி ஒலிக்கும் என்று இளையராஜா ரசிகர்களுக்கு உத்தரவாதமும் தந்தார்.
ரஜினிகாந்த் பேசும் போது "இளையராஜா பற்றி குறிப்பிடும்போது இழப்புகள் அவரை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்று சொன்னார் அவர் மனைவி அவர் மிகவும் நேசித்த பவதாரணி ஆகியோர் இறந்த போது கூட அவர் தன் இசைப் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் புதுப்புது இசையமைப்பாளர்கள் வந்ததால் நான் உள்பட பலர் அவர் தொடர்பு எல்லையில் இல்லை. ஆனால் அதெல்லாம் அவரை பாதிக்கவில்லை அவரது இசைப்பயணம் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.
நான் என் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன் என்பது போல் தான் அவர் இயங்கிக் கொண்டிருந்தார் என்று பேசிய ரஜினி சொன்ன இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம்.
நான் என் குடும்பத்தினர் எல்லோருக்கும் நிறைய செய்து விட்டேன். ஆனால் பாஸ்கருக்கு மட்டும் எதுவும் என்னால் செய்ய முடியவில்லை அவருக்காக நீங்கள் ஒரு படம் பண்ணி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் இளையராஜா மற்ற விஷயங்களை பஞ்சு அருணாச்சலமும் பாஸ்கரனும் பேசுவார்கள் என்று சொல்லிவிட்டார். அந்தப் படம் தான் ராஜாதி ராஜா. படப்பிடிப்பு நடப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
நான் இளையராஜாவை நேரில் சந்தித்து சாமி எதுவுமே நடக்கவே இல்லையே என்று நான் கேட்டேன். அப்போது இளையராஜா சொன்னார். எனக்கு அந்த படத்தின் கதை என்ன என்று தெரியாது ஒரு வரி கூட படிக்கவில்லை. அந்தப் படம் 25 வாரம் வரை போய் வெள்ளி விழா படமாக இருக்கும் என்று சொன்னபோது எப்படி சொல்கிறீர்கள் என்று நான் ஆச்சரியமாக கேட்டேன்.
நான் சொல்லவில்லை என் தாய் மூகாம்பிகை சொல்கிறாள். அப்படி அந்தப் படம் சில்வர் ஜூப்ளி போகவில்லை என்றால் நான் ஹார்மோனிய பொட்டியை தொட மாட்டேன். இது சத்தியம் என்றார். நான் உண்மையில் பயந்து விட்டேன். சாமி எப்போதும் சொன்னதை செய்து விடுவார் என்ன செய்வதென்று தெரியவில்லை.
படப்பிடிப்பிலும் நிறைய தடைகள் ஊட்டியில் படப்பிடிப்பு தொடங்கிய இன்று மழை என்பதால் படப்பிடிப்பு ரத்து என்று பாஸ்கர் என்னிடம் சொன்னார். எனக்கு இளையராஜா சொன்னது தான் மனதில் தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் என்னை நானே தயார் படுத்திக் கொண்டேன் நாமே செலவு செய்து எப்படியாவது அந்த படத்தை 25 வாரம் ஓட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் அதற்கெல்லாம் வேலை இல்லாமல் அந்தப் படம் வெற்றி விழா கொண்டாடியது. இளையராஜா சொன்னது எப்போதும் நடக்கும் இதுதான் உண்மை .
இளையராஜாவுக்கு கமல் மீது தனி அக்கறை உண்டு. மற்ற படங்களை விட கமல் படங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி இசை அமைப்பார். அதனால்தான் கமலின் படங்களில் இசை பெரிய வெற்றியை தேடித்தந்து கொண்டிருக்கிறது என்றார்.
இதை கமல் இளையராஜா இருவரும் சிரித்தபடி ரசித்துக் கொண்டிருந்தார்கள். அதே சமயம் இதை வேறொரு மேடையில் ரஜினி சொல்ல ஒரு முறை இளையராஜா அதை மறுத்து இதே தான் கமலும் சொல்வார் நீங்கள் ரஜினிக்கு மட்டும் நல்ல நல்ல பாட்டுகளை இசையமைத்து தருகிறீர்கள் என்பார் உண்மை அல்ல நான் யாரையும் பாரபட்சம் காட்டுவதில்லை எல்லாப் படங்களையும் ஒரே மாதிரி தான் நான் பார்க்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
கமல் தனது உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார். இதற்கு அவரே ஒரு காரணத்தையும் சொன்னார். இளையராஜாவுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி பலமுறை பல மேடைகளில் நான் ஏற்கனவே நிறைய பேசி விட்டேன் என்றார்.
ஹேராம் பாடல் வரியை சற்றுமாற்றி கவிதையாக பாடிவிட்டார் கமல். அதேசமயம் கமல் ரஜினி இருவரும் சமீபத்திய படங்களில் இளையராஜாவை பயன்படுத்தவில்லை என்பதையும் அதையெல்லாம் இளையராஜா பெருசு படுத்தவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது "எல்லோரும் பயணம் செய்யும்போது தூரத்தை கிலோமீட்டர் மைல் என்று கணக்கிடுவார்கள்.
இளையராஜா ரசிகர்கள் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு பயணம் செய்யும்போது 40 ராஜா பாடல்கள் தூரம் என்பார்கள் "என்ற அவரது பேச்சு ரசிக்கும்படி இருந்தது.
முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது "பாராட்டும் புகழும் இளையராஜாவுக்கு புதிதல்ல அவரைப் பாராட்டுவதில் நாம் தான் பெருமை அடைகிறோம். திறமையும் உழைப்பும் இருந்தால் எப்படிப்பட்ட உயரத்தையும் அடையாளம் என்பதற்கு இளையராஜா ஒரு உதாரணம். அவர் நம் இதயத்தை ஆளத் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது.
இளையராஜாவின் இசை தாயாக தாலாட்டுகிறது, காதலின் உணர்வுகளை போற்றுகிறது ; வெற்றிப் பயணத்துக்கு ஊக்கம் அளிக்கிறது; வலிகளை ஆற்றுகிறது. இவர் இளையராஜா மட்டுமல்ல இணையற்ற ராஜா என்று புகழ்ந்து தள்ளினார் முதல்வர் ஸ்டாலின். கூடவே இளையராஜாவிடம் ஒரு கோரிக்கையும் வைத்தார்.
சங்கத்தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் இளையராஜா இசையமைத்து ஆல்பங்கள் வெளியிட வேண்டும்.
எல்லோரும் முதல்வரிடம் தான் கோரிக்கை வைப்பார்கள். நான் தமிழக மக்கள் சார்பாக இளையராஜாவிடம் இந்த கோரிக்கை வைக்கிறேன் என்றார். இது அவர் கடமை என்றும் குறிப்பிட்டார் முதல்வர்.
இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைத்த முதல்வர் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும் என்று அறிவிப்பையும் வெளியிட்டார் முதல்வர்.
70-களில் தொடங்கி இன்று வரை தமிழ் சினிமா இளையராஜாவை தான் நம்பி கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
வேறு ஒருவர் இசையமைத்த படங்களில் கூட இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்படுகிறது. அதுதான் அந்தப் படத்திற்கு பெருமை சேர்க்கிறது என்பதுதான் உண்மை.
இளையராஜா பத்மஸ்ரீ ,பத்மபூஷன் என்று பல மத்திய அரசு பட்டங்கள் அவருக்கு கௌரவத்தை தேடி தந்தாலும் கலைஞர் தந்த இசைஞானி என்ற பட்டம் தான் இன்று வரை நீடித்து நிலைத்து நிற்கிறது.
இப்போது அவர் மகன் முதலமைச்சர் ஸ்டாலின் அரசு சார்பில் விழா நடத்தி கௌரவித்து இன்னொரு வரலாற்று சாதனையும் படைத்து விட்டார்.
இசை இமயம், மக்களின் மேஸ்ட்ரோ......
என்றென்றும் ராஜா. ராஜா ராஜா தான்.
சந்தேகமேயில்லை.
Leave a comment
Upload