"பெருசு கொஞ்சம் வழிவிட்டு ஓரமா நட" போகிற போக்கில் சொன்னவனை இழுத்து ரெண்டு அரை விடலாமென்று தோன்றியது மணிவண்ணனுக்கு. " கொஞ்சம் கூட மரியாதை தெரியாத ஜென்மங்கள்" உரக்க திட்டிக் கொண்டே ரோட்டின் ஓரமாக ஒதுங்கி நடந்தார். "பெருசாமே, பெருசு.. ரொம்ப கொழுப்பு இந்த காலத்து பசங்களுக்கு. அவங்க மட்டும் அப்படியே இருந்துடுவாங்களா?" வேஷ்டியின் நுனியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, இடதுகையில் தொங்கவிட்டிருந்த பையை சரியாகப் போட்டுக்கொண்டு கை கடிகாரத்தில் மணியைப் பார்த்தார். 11 ஆகிவிட்டது. " பேங்க்ல கூட்டம் வந்துரும், பிறகு ஒரு வேலையும் நடக்காது. ", வேகமாக நடந்தார். முட்டி வலித்தது. "பெருசு" ஞாபகம் வர இன்னும் வேகமாக நடந்தார். திடீரென நினைவுக்கு வர சட்டைப் பையை தொட்டுப் பார்த்தார். " அப்பாடி கண்ணாடி இருக்கு. இந்த எழவு இல்லன்னா இன்னும் கஷ்டம்". அவனோட மஞ்ச கலர் சட்டையும், கண்ணாடியும், கலர் கலர் தலையும்..லூசு மாறி இருந்துகிட்டு நான் பெருசாம். "
மணிவண்ணனுக்கு தன் மேல் அலாதி காதல். வயதாக வயதாக தான் இன்னும் அழகாக இருப்பதாக அவருக்கு தோன்றும். எப்பொழுது வெளியே கிளம்பினாலும் பதட்டப் படாமல் நிதானமாக கிளம்புவார். மனைவி சசிகலா கிளம்பி காத்துக் கொண்டிருப்பாள். " இந்த வீட்டுல மட்டும் தான் இந்த கதை. வயசாகுது, என்னவோ போட்டுக்கிட்டோமா கிளம்பினோமான்னு இல்லாம!" எதற்கும் அசரமாட்டார் மணிவண்ணன். கதவை பூட்டும் முன் வாசலில் இருக்கும் கண்ணாடியில், காரில் அமர்ந்ததும் மறுபடியும் ஒருமுறை கார் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து விட்டு தான் கிளம்புவார். நல்ல தீர்க்கமான மூக்கு, சதுரமான முகவெட்டு, நெற்றியில் தழும்பு, அடர்ந்த புருவம், புசுபுசு மீசை. ஒரு போர் வீரனைப் போலத்தான் இருப்பார். ஆனாலும் வயதுக்கேற்ற தளர்வு முகத்திலும் நடையிலும் வரத்தானே செய்யும். நாம் நம்மிடம் பார்க்கததை உலகம் பார்க்கும். நம் வயதை நினைவுபடுத்துக் கொண்டே இருக்கும். "நீங்க ஏன் சார் வெயிட் தூக்கறீங்க, வீட்டுல யாரும் இல்ல? நீங்க இங்க உக்காருங்க, என்னால நிக்க முடியும், சாருக்கு காப்பில ஜீனி போடலாமா?
அத்தனை கேள்விகளும் எரிச்சலூட்டும் அவருக்கு. " இவனுகளா முடிவெடுத்துடுவானுக" கோபத்தில் எந்த கேள்விக்கும் பதில் சொல்லமாட்டார். பேங்க்கில் நல்ல கூட்டம். டோக்கன் வாங்கிக் கொண்டு அமர்ந்தார். 54 வது டோக்கன். 35 வது எண்ணை கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
"எத்தன தடவ தப்பு பண்ணுவ! மறுபடியும் மறுபடியும், போ திருப்பி எழுதிட்டு வா" யாரையோ திட்டிக் கொண்டிருந்தார் கேஷியர். ஏதோ முணுமுணுத்துக் கொண்டே தன் அருகில் வந்து அமர்ந்த இளைஞனைப் பார்த்தார். மஞ்ச சட்டை, கலர்கலர் தலை முடி, அதன் மேல் கருப்புக் கண்ணாடி.
" என்ன ஆச்சு?" கேலியாகத் தான் கேட்டார். பழிவாங்கும் தருணம்.
" சார், எனக்கு இதெல்லாம் வராது சார். அப்பாக்கு வர முடியல. போயிட்டுவான்னாரு. இங்க வந்த ஒன்னும் புரியல சார். எழுதிதரீங்களா?"
மணிவண்ணனுக்கு தேக்கி இருந்த அத்தனை கோவமும் சிரிப்பாக வெடித்தது.
"உங்களுக்கு சிரிப்பா இருக்கு சார்!" அலுத்துக்கொண்ட அந்த இளைஞன், கையில் இருந்த ஃபார்மை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மணிவண்ணனுக்கு பாவமாக இருந்தது. அவன் கையிலிருந்து ஃபார்மை வாங்கி, கிடு கிடு என்று எழுதிக் கொடுத்தார். " அப்பாடி என்று அவரிடமிருந்து அதைப் பெற்றுக் கொண்டு கௌண்ட்டரை நோக்கிச் சென்றான்.
" நன்றி கூடவா சொல்லத் தெரியாது"
கூட்டத்தில் அந்த பையன் காணாமல் போனான். ஒரு அரை மணிநேரம் ஆயிற்று அவர் வேலை முடிய. பாஸ் புக், பேனா எல்லாவற்றையும் பைக்குள் போட்டுக் கொண்டு வெளியே வந்தார்.
இன்றைக்கு நடந்து வந்திருக்க கூடாது. கால் வலி கொஞ்சம் அதிகமாகத் தான்இருக்கு என்று சொல்லிக் கொண்டே வாசலுக்கு வந்தார். வாசலில் அந்த இளைஞன் யாருக்காகவோ காத்திருப்பது போல வண்டியில் அமர்ந்திருந்தான். மணிவண்ணனைப் பார்த்ததும், " சார், நீங்க கிளம்பிடீங்களோன்னு நினைச்சேன். வீட்டுக்கு போய் பணத்த குடுத்துட்டு வேகமா வரேன் சார். ஏறுங்க வீட்டுல விடறேன்."
"வேண்டாம் வேண்டாம் நான் நடந்துடுவேன்."
" ஏன் சார்! கோவமா சொல்றீங்க? வாங்க சார். ஒரு சின்ன உதவி தானே "
"இப்படி சொல்லுவ, அப்பொறம் பெருசுக்கு நடக்கவே முடியல, நான் தான் கொண்டு போய்விட்டேன் ன்னு ரீல்ஸ் போடுவ!"
"போட்டா என்ன சார்! உங்களோடதெல்லாம் வெறும் திண்ணை பேச்சு, எங்களோடது டிஜிட்டல் திண்ணை.. என்ன, உலகம் முழுக்க போய்டும்!"
" அது சரி! எல்லாம் வாய் பேச்சு தான். ஒரு ஃ பார்ம் எழுத தெரியல"
அவன் பதில் சொல்லவில்லை. அவர் ஏறுவதற்காக காத்துக் கொண்டிருந்தான்.
அவர் கால் வலி இந்த உதவியை நிராகரிக்க விடவில்லை.
"கொஞ்சம் மெதுவா போ! தல தெறிக்க ஒட்டாதே" என்றார்.
நிதானமாக அவரை கூட்டி கொண்டு போய் வீட்டில் விட்டான்.
"ரொம்ப நன்றி தம்பி. யாராவது உதவி செஞ்சா நன்றி சொல்லணும்!"
" சரி சரி! அதான் வண்டீல கொண்டு வந்து விட்டேனே சார், வாயால வேற சொல்லணுமா? என்று சொல்லி அவரை கொஞ்ச நேரம் உத்து பார்த்தான்.
"செம டக்கறா இருக்கீங்க சார்! " பெருசு மாதிரியே தெரியல முகத்த பாத்தா. சிரித்துக் கொண்டே சொன்ன அவனை பார்த்து,
"இது என்ன வேஷம், ஜகஜகாசட்டை, ஷூஸ், ஒரு கண்ணாடி, கலர் கலர் தலை முடி.. " என்றார்.
" பாத்தீங்களா, கொஞ்சம் விட்டா உடனே கேட்ருவீங்களே! இது தான் நாங்க! நல்லா இருக்குன்னு நினைச்சு பாருங்க "
"எப்படி பாத்தாலும் நல்லா இல்ல"
" அப்போ அது உங்க பிரச்னை சார்" சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு கிளம்பினான்.
"சரி உன் பேரென்ன?"
"மணீஸ் சார் !"
" மணீஸ்சா!"
"முழு பேரு?
" மணிவண்ணன் சார்.. எனக்கு பிடிக்கவே பிடிக்காத பேரு! அதான் மணீஸ்!"
புரிந்து கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்களில் இவர்களும் ஒன்று.. மணீஸாம் ! தலையில் அடித்துக்கொண்டே மெதுவாக உள்ளே சென்றார்.
" ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க சார், மணீஸ் ன்னு சொன்னா எல்லாருக்கும் தெரியும்" வேகமாக வண்டியில் பறந்து சென்றான்.
பத்திரமாக போக வேண்டும் என்று கவலை பட மட்டுமே அந்த நேரத்தில் அவருக்குத் தோன்றியது.
Leave a comment
Upload