தொடர்கள்
அனுபவம்
ஆத்தங்கரை அமுதம் - கி.ரமணி

2025082007590215.jpeg

1960களில் கோடை விடுமுறை நாட்களின் போது நெல்லை பக்கத்து நல்லூரில் தாத்தா பாட்டியின் பேரக்குழந்தைகளான நாங்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து சேர்ந்து விடுவோம்.

சாயங்காலம் ஆகிவிட்டது என்றால் எங்கள் பங்கஜம் பாட்டி ரொம்ப பிசியாகி விடுவாள்.

ஆறு மணிக்கு ஒரு செகண்ட் தப்பாமல் எதிர் வீட்டுக் கூடத்து சுவர் கடிகாரம் சங்கீத சப்தத்துடன் ஆறு தரம் ஒலிக்கும். பாட்டி பரபரப்பாகி சமையலறைக்குள் சென்று விடுவாள்.

காலையில் வடித்த சோறு வெண்கலப் பானையில் நிறைய பாக்கி இருக்கும். கையால் அள்ளி எடுத்து ஒரு பித்தளைத் தூக்கில் போடுவாள்.

பானை அடியில் காந்தல் ஒட்டிக் கொண்டிருக்கும். விறகு அடுப்பில் பொங்கிய சோறு என்பதால்.

காந்தலை மட்டும் அப்படியே விட்டு விடுவாள். ஆனால் ஒரு பருக்கையைக் கூட விடாமல் எடுத்து விடுவாள்.

காலையில் தயிர்க்காரி மாலை (அவளுடைய பெயர் தான்!) தேங்காய் சிரட்டையில் (பாதி ஓடு) அளந்து ஊற்றிய பசுந்தயிர் கல் சட்டியில் இருக்கும்.

அதிலிருந்து கொஞ்சம் பித்தளைத் தூக்கில் ஊற்றிக் கொள்வாள். அப்புறம் குடத்தில் இருந்து தாமிரபரணித் தண்ணீர் கொஞ்சம் எடுத்து தூக்கில் ஊற்றி நிரவு வாள்.

மூன்று விரக்கடை (விரல்கள் சேர்ந்த அளவு )கல் உப்பு போடுவாள். தன் வலது கையை தூக்குக்குள் விட்டு பிசைய ஆரம்பித்தாளானால் ஐந்து நிமிஷம் ஆகும்.
வெண்ணை போல் பிசைந்த தயிர் சாதம் ரெடி ஆகிவிடும்.

வீட்டுக்கு கொல்லைப் பக்கம் போய் அசுரனாய் வளர்ந்திருக்கும் கருவேப்பிலை மரத்திலிருந்து கைக்கு எட்டும் இளம் இலைகளைக் கொஞ்சம் உருவி எடுப்பாள்.

ஒரு கை நிறைய எடுத்துக்கொண்டு போய் பித்தளைத் தூக்கில் கொட்டிக் கலக்குவாள்.

தூக்கு முழுக்க தயிர்சாதம் கமகமக்கும். அந்த தூக்குக்கு அரை வட்டக் கைப்பிடியாக பித்தளை வளையம் உண்டு.

காலியான எல்ஜி பெருங்காய டப்பாக்குள் ஏழெட்டு காய்ந்த உப்பு நார்த்தங்காய் ஊறுகாய் துண்டுகளை ஒரு அடி உயர பீங்கான் ஜாடியில் இருந்து, எடுத்துப் போட்டுக் கொள்வாள்.

பெரிய ஈயக்கல் சட்டியில் காலையில் செய்த பருப்புக் குழம்பு பாக்கி இருக்கும்.
வெண்டைக்காய் கத்திரிக்காய்த் தான்கள் சில மிதக்கும். பாட்டி ஒரு குட்டி சென்சஸ் எடுத்து தான்கள் எண்ணிக்கையைத் தன் மனதில் நிறுவுவாள்.
வெண்டைக்காய் கத்திரிக்காய் எல்லாம் நல்லூரில் லேசல் கிடைக்காது. தாத்தா நெல்லை போனபோது ஸ்பெஷலாக எங்களுக்காக வாங்கி வருவார்.

பக்கத்தில் சின்னக் கல் சட்டியில் காலையில் செய்த தண்டுக் கீரைக் கூட்டு பாக்கி இருக்கும். அதை அப்படியே பெரிய கல் சட்டிக்குள் கவிழ்ப்பாள். கலக்குவாள். இந்த கலவையை ஒரு சின்ன வெங்கல வாளிக்கு மாற்றுவாள்.

ஆறு மணிக்கு பாட்டி ரெடி ஆகிவிடுவாள். தயிர் சாதத் தூக்கு ஒரு கையில், வெண்கலக் குழம்பு வாளி இன்னொரு கையில், அதே கைவிரல்கள் இடுக்கில் எல் ஜி நார்த்தங்காய் ஊறுகாய்ப் பெட்டி, எதற்கும் இருக்கட்டுமே..என்று தோளில் ஒரு துண்டு...இவற்றுடன் கிளம்பி விடுவாள்.

வீட்டு வாசல் வந்து, "டேய்! எல்லாம் வாங்க! ஆத்தங்கரைக்கு சாப்பிட போகலாம்." என்று கீச்சுக் குரலில் கத்துவாள்.
பாட்டிக்கு பூஞ்சை உடல்.பிரஷர் உண்டு.

"எனக்கு ரொம்ப பிளஷர் இருக்கு. தெரியுமா?" என்று அடிக்கடி கூறுவாள்.

மெதுவாக வாளி, தூக்கு, எல்ஜி பெட்டி சகிதம் அசைந்து அசைந்து நடக்க ஆரம்பிப்பாள். செருப்பு போடும் பழக்கமே கிடையாது.

மாலை வெய்யில் பாட்டியின் பசும்பால் நிறத்தை ரோஸ் மில்க் போல் சிவக்க வைக்கும்.

பாட்டியின் குரல் கேட்டு எல்லா பேரப்பிள்ளைகளும் கிளம்புவோம். எட்டாவது படிக்கும் நான்,ஏழாவது படிக்கும் தங்கை,எங்களுக்கு கொஞ்சம் சிறியவர்களான சித்தி பிள்ளைகள், மாமா பசங்க,எல்லாரும் ஒன்று சேர்ந்து பாட்டியின் பின் செல்வோம்.

பாட்டி எதிர் வீட்டுக்கும் அதற்கு பக்கத்துப் பாழ் மனைக்கும் நடுவில் இருந்த ஒத்தையடிப் பாதையில் நடப்பாள்.

டெலிபதியில் இதைக் கண்டுபிடித்து விட்டு எங்கிருந்தோ பாய்ந்து வரும் எங்கள் தெரு நாய் டாமி. (வெள்ளை உடல் கருப்புத் திட்டுகள்.)

பாட்டியின் காலடித்தடம் கண்டு பரவசமாகி,நாக்கு தொங்க, மூச்சு இரைக்க,விசுவாசமாக பாட்டியைப் பின்பற்றும்.

டாமிக்கு பின் செல்லும் நாங்கள் அதை முந்த முடியாது. முயன்றால் 'வள்'என்று கோபப்பட்டு வழிமறிக்கும்.

ஒத்தையடிப் பாதை நூறு மீட்டர் நீளம் இருக்கும். இருபுறமும் அடர்த்தியான ஓங்கி நிற்கும், மருத,வேப்ப,மற்றும் பூவரச மரங்கள்,கருவேல முள் செடிகள்.

வழியில் அட்லீஸ்ட் ரெண்டு பாம்புப் புத்தாவது இருக்கும். பெரிய புத்து ரெண்டு அடி உயரம் இருக்கும். அதில் ஏகப்பட்ட வாயில்கள் ஓட்டைகளாக இருக்கும். 'எந்த ஓட்டையில் எந்த பாம்பு இருக்குமோ ' என்று ஒரு பயம் நம்மை ஊடுருவும்.

புத்தருகே வந்தவுடன் பாட்டி "டேய்!சத்தம் போடக்கூடாது பெரியவர் கோவி ச்சுப்பார்" என்று பயம் சேர்ந்த மரியாதைையுடன் புத்துக்கு நமஸ்காரம் செய்வாள். (பெரியவர் என்றால் நாகம்)

ஒத்தையடிப் பாதை முடிஞ்ச உடனே எதிரில் தாமிரபரணி..வலப்பக்கம் நடந்தா தேரடி மாடன் சிலை...அப்புறம் பெருமாள் கோவில் படித்துறை.

படித்துறையில் நாலு படி தண்ணிக்கு மேல் தெரியும். ஆற்றில் ரொம்ப தண்ணி இருக்காது. மேல்படியில் பாட்டி அமர்ந்து பாத்திரங்களை வைப்பாள்.
நதியில் அமைதியான நீரோட்டம் இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலையில் மறையத் துடிக்கும்,ட்யூட்டி முடியும் சூரியனின் சாய்ந்த கதிர்கள்ஆற்று நீரின் மீது வர்ணஜாலமாக மிதக்கும்.

ஒவ்வொருவராக நாங்கள் ஏழு பேரக் குழந்தைகளும் நதியில் கை கழுவிய பின் அரை வட்டத்தில் பாட்டி முன் அமர்வோம்.

சற்று பின்னால் டாமி தன் பின்னங்கால்கள் மடக்கி, முன் கால்களை தரையில் நிறுத்தி, அமர்ந்து,பாட்டியை ஆர்வத்துடனும் பசியுடனும் நோக்கும்.

பாட்டி எங்கள் எல்லோரையும் வலக்கையை நீட்டச் சொல்லுவாள். இடவலமாக ஒவ்வொருவர் கையிலயும் ஒரே மாதிரி லட்டு சைஸ்ல தயிர் சாத உருண்டை வைப்பாள். எல்லாருக்கும் ஒரு துண்டு நார்த்தங்காயும் எல்ஜி பெட்டியில் இருந்து கொடுப்பாள்.

எல்லோரும் எங்கள் வலக்கை கட்டை விரலை ஒரு கொக்கி போல் கீழே நோக்கி வளைத்து கை நடுவில் உள்ள தயிர்சாத உருண்டையின் நடுப்பகுதியில் மேலிருந்து அடிவரை அழுத்தி ஓட்டை போடுவோம்.

பாட்டி கரண்டியில் குழம்பு எடுத்து ஓட்டைக்குள் விடுவாள். அதிருஷ்டசாலி களுக்கு மட்டும்தான் வெண்டைக்காய் கத்திரிக்காய்த் தான் கிடைக்கும்.

" உனக்கு மட்டும் எப்படிடா அடிக்கடி அதிர்ஷ்டம் வருது? " என்று என்னை முறைப்பாள் தங்கை. "பாட்டிக்கு ஆண் பிள்ளைகளைத் தான் அதிகம் பிடிக்கும். சரியான பாரபட்சக்காரி." என்று முணுமுணுப்பாள்.

கீரைக் குழம்புடன் சேர்ந்த தயிர்சாதம், கூடவே ஒரு கடி கடித்த நார்த்தங்காய் ஊறுகாய், எல்லாம் சேர்ந்து வாயில் அமுதம் தயாராகும்.

பாட்டி எங்கள் கையில் சாத உருண்டையை போட்டுக் கொண்டிருக்கும் வரை யாரும் எழுந்து சென்று விட முடியாது. எழுந்தால் பாட்டி கத்துவாள்.

வயிறு முட்ட நாங்கள் சாப்பிட்ட பின் தான் பாட்டி கை ஓயும்.

"சரி.எல்லாரும் எழுந்திருங்க. ஜாக்கிரதையாக ஆத்தங்கரையில் கையலம்பிவிட்டு வீட்டுக்கு கிளம்பும்பணும்." என்பாள்.

நாங்கள் எழுந்த பின் பித்தளைத் தூக்கிலிருந்து தாராளமாக இரண்டு கைப்பிடி சாதம் அள்ளி எடுத்து டாமிக்கு கல் படியில் போடுவாள் பாட்டி.

அந்தக் கணத்துக்காக இவ்வளவு நாழி பொறுமையாய் காத்திருந்த டாமி, பாட்டி நகர்ந்ததும் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து லபக் என்று சாதத்தைத் தின்று அரை நிமிஷத்தில் தரையை நக்கி சுத்தமாக்கி விட்டு வால் ஆட்டும்.

பின் கையில் கொஞ்சம் சாதம் வழித்தெடுத்து ஆற்றில் வீசுவாள் பாட்டி.

ஒரு சிறிய மீன் கூட்டம் பருக்கைகளைத் துரத்தி நொடியில் விழுங்கிப் பின் மறையும்.

மிச்ச சொச்ச சாதத்தை கொஞ்சம் தாமிரபரணி தண்ணீரை கலந்து ஒரே மடக்கில் குடிப்பாள் பாட்டி.

" பாட்டி இது உனக்கு போதுமா? " என்று நாங்கள் கேட்டால் "இதுவே ரொம்ப அதிகம்.வயசாச்சு இல்லையா! பிரஷர் வேற இருக்கு.ஜீரணம் ஆகாது. " என்று அப்பாவியாகச் சிரிப்பாள் பாத்திரங்களை நீரில் அலம்புவாள்.

வெள்ளாட்டுக் கூட்டம் ஒன்று மேய்ச்சல் முடிந்து "ம்ம்மே " என்ற ஒத்திசைந்த குரல்களுடன் அக்கரையில் இருந்து ஆறு கடந்து, இக்கரை வந்து சேரும் முன் பாட்டி எங்களை அவசரப் படுத்திக் கிளப்புவாள்.
("அதுங்க இக்கரை வந்துடுத்துன்னா நாம அதுகளை தாண்டிப் போக முடியாது.")

திரும்ப அதே வழி,ஒத்தையடிப் பாதை, பாட்டி முதலில், அப்புறம் டாமி, அப்புறம் நாங்க, பாம்புப் புற்றுகள்......

கிட்டத்தட்ட இருட்டும்போது வீட்டுக்கு செல்வோம். குழந்தைகள் எல்லாம் ஆங்காங்கே வாசல் திண்ணைகளில் படுப்போம். டாமி எதிர்வீட்டு வாசல் படியில் தான் எப்பவும் தூங்கும்.

குற்றாலத்தில் இருந்து மலைக்காற்று ஜில்லுனு வீசும். உடனே தூங்கி விடுவோம்.

காலை ஏழு மணிக்கு எதிர்வீட்டு கடிகாரம் கடமை தவறாமல் மணி அடிக்க,பால்கார மாலை எங்களை காக்காய் ஓட்டும் குச்சியால் தட்டி, "என்ன இப்படி தூங்குதிய? மணி ஆவுதுல்லா? எல்லாம் எந்திரிங்க. " என்பாள்.

டாமியும் எழுந்து சோம்பலுடன் உடலை முறுக்கி வாலை ஆட்டி மாலையைப் பார்த்து "வள்" என்று குரைத்து அவள் செயலுக்கு தன் ஆட்சேபத்தை எங்கள் சார்பில் காட்டி விட்டு மீண்டும் படுக்கும்..