தொடர்கள்
ஆன்மீகம்
மகிமை மிகுந்த மஹாளய அமாவாசை…!!! - ஆரூர் சுந்தரசேகர்.

Glorious Mahalaya Amavasya…!!!

"மறந்து போனவனுக்குத்தான் மஹாளய அமாவாசை" என்பார்கள்.’ இந்த சொல்லுக்கேற்ப மூதாதையர்களின் இறந்த திதி தெரியாதவர்கள் அல்லது மறந்து போனவர்கள் வருடந்தோறும் தவறாமல் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களுடைய இருபத்தொரு தலைமுறைகளைச் சேர்ந்த முன்னோர்கள்(பித்ருக்கள்) மோட்சம் பெறுவார்கள் என்பது ஐதீகம்
நம் முன்னோர்கள் பித்ரு லோகம் என்று சொல்லப்படும் தென்புலத்தில் இருந்துகொண்டே நமக்கு அங்கிருந்து நாம் கொடுக்கும் ஒவ்வொரு அமாவாசை தர்ப்பணத்தின் மூலம் எள் மற்றும் நீரினை ஏற்றுத் திருப்தி அடைவார்கள் என்பது உணர்வுப்பூர்வமான நம்பிக்கை. ஆனால் சாஸ்திரத்தின்படி, பித்ருக்கள் பூலோகத்திற்கு வருவதற்கான நேரத்தைப் பற்றி மூன்று விதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மறைந்த நம் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்குப் புறப்படும் நாளே ஆடி அமாவாசை. அடுத்ததாக நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள்தான் புரட்டாசி மஹாளய அமாவாசை எனப்படுகின்றது. மூன்றாவதாகப் பூலோகத்தில் இருந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாளே தை அமாவாசை ஆகும்.

Glorious Mahalaya Amavasya…!!!

மஹாளயம் என்பது ஆன்மாக்கள் லயிக்கும் இடம். இந்த மஹாளய பட்சத்தில் யமதர்மனின் அனுமதியோடு நமது முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு வருகிறார்கள் என்றும் அவர்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் வழியாக நம் இல்லம் தேடி வருவதாகக் கருடபுராணம் கூறுகிறது. வசிஷ்ட மகரிஷி, தசரதர், துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், ஶ்ரீராமர், தர்மர் ஆகியோரும் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.

தர்ப்பணம் குறித்து மஹா பெரியவா:

Glorious Mahalaya Amavasya…!!!

மஹா பெரியவா, மறைந்த நம் தாய் தந்தையருக்கும், முன்னோர்க்கும் கொடுக்கும் தர்ப்பணத்தின் அவசியத்தையும், அதன் பின்னால் உள்ள தெய்வீக ரகசியங்களையும், குறிப்பாக காகங்களுக்கு உணவு அளிப்பதன் முக்கியத்துவத்தையும், பித்ரு தோஷத்தைப் போக்க மஹாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்வதினால் கிடைக்கும் பலன்களையும் வலியுறுத்தினார்.
யாரோ முகம் தெரியாத ஒருவருக்கு வாழைக்காய், அரிசி கொடுப்பதினால் அது நம் முன்னோர்களைப் போய்ச் சேருமா?, மற்றும் எள்ளும் நீரும் இறைத்தல் அவர்களுக்குத் திருப்தி தருமா?
என்ற கேள்விகளுக்கு மனுஷ்யராகப் பிறந்தவர்கள் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ருக்கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சக ஜீவர்களுக்கு நம்மாளானதைச் செய்ய வேண்டும்.

Glorious Mahalaya Amavasya…!!!

'எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே இருக்கின்றன. அல்லது கண் முன்னாலேயே ஒருவர் எடுத்துக் கொள்ளுகிறார். அல்லது சாப்பிடுகிறார். பிதிரர்கள் எங்கேயோ மறு ஜன்மா எடுத்து விட்டார்கள் என்று நீரே சொல்கிறீர். அப்படியிருக்க இங்கே உள்ள வஸ்து அங்கே போய் அவர்களைச் சேருகிறது என்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா?'' -- ஒரு சிலர் வாய்விட்டுக் கேட்கிறார்… அவர்களுக்காக மஹா பெரியவா பதில்…
ஒருவர் பட்டணத்தில் பிள்ளையைப் படிக்க வைத்திருந்தார். காலேஜில் மறுநாள் பரீட்சைக்குப் பணம் கட்டவேண்டியிருக்கிறது. உடனே பையன் அப்பாவுக்குத் தந்தி மணியாடரில் பணம் அனுப்பு என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித் தனியாகத் தான் தெரியும். எப்போதோ தந்தி அடித்திருக்கிறார். சில நேரம் மணி ஆர்டர் அனுப்பியிருக்கிறார். அது என்ன ''தந்தி மணியார்டர் ''?
அவருக்குப் புரியவில்லை. அப்பா தபாலாபீசுக்கு போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத் ''தந்தி மணியார்டர் ''பண்ண வேண்டும் என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஒட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, சரி, உம்முடைய பணம் நாளை போய்ச் சேர்ந்துவிடும். அனுப்பியாகிவிட்டது என்றார். குமாஸ்தா
பணத்தைப் பெட்டியில் போட்டதையும், ஒட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காமலிருப்பதையும் பார்த்த அப்பா..
''என் பணம் இங்கேதானே இருக்கிறது. அதில் ஒட்டை ஒன்றும் போட்டு நீங்கள் அனுப்பவில்லையே. அது எப்படிப் போய்ச் சேரும்?''... அப்பா
''அது போய்ச் சேர்ந்துவிடும்''…குமாஸ்தா .

Glorious Mahalaya Amavasya…!!!

கட்டுக் கடகடஎன்று தந்தியும் அடித்தார். ஏதோ லொட்டு லொட்டென்று சப்தம் பண்ணுகிறான். சேர்ந்துவிடும் என்று சொல்கிறான். ருபாய் இங்கே இருக்கிறது. லொட் லொட்டென்று கட்டையை இங்கே அடித்தால் அங்கே பணம் எப்படிப் போய் சேரும். நான் கொடுத்த பணம் இங்கயே இன்னும் பெட்டியில் இருக்கிறதே '' என்று அப்பாவுக்குச் சந்தேகம். ஆனால் பணம் போய் சேர்ந்து விட்டது.
அதுபோல தர்ப்பணம் கொடுப்பதும் அது மாதிரியே.
நாம் எதைக் கொடுத்தாலும் அதற்கென சட்டப்படி கொடுக்க வேண்டும். சாஸ்திரம் விதிபடி நாம் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிற பிதுர் தேவதைகள் அது யாருக்கு போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்து விடுவார்கள். பிதிருக்கள் மாடாகப் பிறந்தால் வைக்கோலாகவும் குதிரை என்றால் புல்லாகவும் போட்டுவிடுவார்கள். பரமேச்வரன், பிதுர் தேவதைகளுக்கு இப்படி உத்தரவு இட்டு, அதற்கான சக்தியும் தந்திருக்கிறார். எனவே சிரார்த்தம்,மற்றும் தர்ப்பணத்தின் போது கொடுப்பது முறையாக சென்று விடும் என்று சொல்லி முடித்தார் மஹா பெரியவா!!

Glorious Mahalaya Amavasya…!!!

மஹாளய அமாவாசை வழிபாடு:
சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்குத் தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால்
மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, மறைந்த உறவினர், நண்பர் மற்றும் மனிதர்கள் அல்லாத பிற உயிர்களின் ஆத்மாக்களும் நற்கதி அடைவதற்காகத் தர்ப்பணம் கொடுக்கலாம். குறிப்பாக இயற்கைக்கு மாறாக இறந்துபோனவர்களின் ஆத்மா சத்கதி அடைய மஹாளய அமாவாசை வழிபாடு அவசியம்.
மஹாளய அமாவாசை அன்று பித்ருக்கள் வழிபாட்டுடன் குலதெய்வ வழிபாட்டினையும் செய்வது சிறப்பானதாகும். இவ்வாறு வழிபடுவதால் குலதெய்வத்தை வழிபடாத பாவமும், தோஷமும் நீங்கும். நம்முடைய வம்சத்தில் தோன்றிய முன்னோர்களே பெரும்பாலான குடும்பங்களில் குலதெய்வமாக வழிபடப்பட்டு வருகிறது. இதனால் வாழ்க்கையில் உள்ள இருள் நீங்கி, பிரகாசமான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

Glorious Mahalaya Amavasya…!!!

மஹாளய பட்ச மகிமை:
நம் முன்னோர்கள் நம்முடன் இருக்கும் இந்த நாட்களில் நாம் அவர்களை நினைத்து வழிபடுவதைக் கண்டு அவர்கள் மகிழ்ந்து நமக்கு நல்லாசியை வழங்குவார்கள். இந்த நாட்களில் பித்ருக்களை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், நோய், வறுமை முதலானவை நீங்கும் என்கிறது கருடபுராணம். பித்துக்களின் ஆசி ஒருவனுக்கு இருந்தால் அவனைத் தீவினைகள் அண்டாது. தீர்க்க ஆயுளும் செல்வச் செழிப்பும் சந்தோஷ வாழ்வும் கிடைக்கும்.

Glorious Mahalaya Amavasya…!!!

2025 ஆம் ஆண்டிற்கான மஹாளய அமாவாசை செப்டம்பர் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.

நம் முன்னோர்களையும் (பித்ருக்கள்), உற்றார், உறவினர், தெரிந்தவர்கள் என்று அனைத்து காருண்ய பித்ருக்களையும் நினைத்து அவர்களுக்கும் எள்ளும் நீருடன் திதி கொடுத்து, இயன்ற அளவு தான தர்மங்கள் செய்து பித்ருக்களின் பரிபூரண அருளாசியைப் பெறுவோம்!!

Glorious Mahalaya Amavasya…!!!