தொடர்கள்
ஆரோகியம்
அதிசய அமிதாப் - பால்கி

20250818142814152.jpg

இன்றைய அமிதாப் பச்சன் வெறும் பாலிவுட் நடிகர் மட்டுமல்ல. மற்றவருக்கு ஒரு உண்மையான உத்வேகி(inspiration)யாகவும் விளங்குகிறார்.

82 வயதாகும் இவர் சினிமா. சின்னத்திரை (கௌன் பனேகா குரோர்பதி), சமூக வலைத்தளங்களில் பிரசித்தமாக இன்றும் இயங்குகிறார். இந்த வயதில் பெரும்பாலானவர் வீட்டிலோ ஆஸ்பித்திரியில் இறுதிக்காலமென அடைந்து கிடப்பர்.

ஆனால், இங்கோ!!!!

ஒழுக்கமான வாழ்க்கை முறை மற்றும் அவரது நேர்மறையான சிந்தனைகளால் லட்சக்கணக்கானவர்களை ஊக்கப்படுத்துகிறார், உற்சாகப்படுத்துகிறார்..

முதுமை குறித்த நெகிழ்ச்சியான நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ளும் அமிதாப் பச்சன் சொல்வது, "மருத்துவர்கள் இப்போது என்னை உட்கார்ந்தவாரே கால்சட்டை அணிய சொல்கிறார்கள். வயதாகிறதல்லவா!!! நின்றவாரே கால் சட்டை அணிகையில் கீழே விழுந்துவிடும் அபாயம் நிறைய என்பதால்.."

அமிதாப் பச்சனின் கல்லீரல் தற்போது 25% தான் இயங்குகிறது.

1982 கூலி படத்தின் ஷூடிங்க்கின் போது ஸ்டண்ட் செய்கையில் ஏற்பட்ட உயிரே போயிருக்கவேண்டிய விபத்தில் எக்கச்சக்கமாக ரத்தம் வெளியேறிவிட அவருக்கு ரத்த மாற்றம் அவசியமாகிப்போனது.

உலகெங்கிலும் இருந்த அவரது ரசிகர்கள் செய்த பிரார்த்தனைகளுக்கு மதங்கள் கடந்து அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வந்துள்ளார். நேர்ந்து கொண்டது ரசிகர்கள். அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றியது அமிதாப் தான். அப்படித்தான் அவர் சபரிமலையும் சென்று வந்தார்.

200 பேர் ரத்த தானம் செய்திருந்தனர். 60 பாட்டில் சேர்ந்தது. அதில் ஒருவருடயது ஹெபடைடிஸ் பி வைரஸைக் கொண்டிருந்தது, இது அப்போது தெரியாமல் போனது. அதன் தாக்கம் 2005ல் ரெகுலர் உடல் பரிசோதனையில் தான் தெரிய வந்தது. அதற்குள், அந்த தவறு அவரது 75% கல்லீரலைக் கரைத்துவிட்டிருந்தது.

அப்பப்ப உடல் பரிசோதனை செய்யுங்கள்.. அதிலும் இந்த மாதிரியான எதிரி ரொம்பவே படுத்திவிடுவான்” என்று அறிவுரை நமக்கு வழங்குகிறார். தான் பெற்ற துன்பம் இவ்வையம் பெறக்கூடாது என்ற நற்சிந்தனைதான்.

இந்த விபத்துக்குப்பிறகு, தீவிர கட்டுப்பாடான உடல் பராமரிப்பில் முக்கிய கவனம் செலுத்த ஆரம்பித்தார். கூடவே சிந்தனையையும் இணைத்து, ஒரு வலுவான காம்போ, நேர்மறை திசையில் கொண்டு சென்றார். இல்லையெனில் 43 வருஷங்கள் ஓட்டியிருக்க முடியுமா?

சமீபத்தில், தனது ‍x தளத்தில், “ஜப் தக் ஜீவன் ஹை, தப் தக் சங்கர்ஷ் ஹை. சலே சங்கர்ஷ் கர்னே (ஜீவன் உள்ளவரை போராட்டம் இருக்கத்தான் செய்யும். வாருங்கள் போராடுவோம்)” போட, பார்த்தவர் ஆனந்தித்தவர் எண்ணிக்கை பல மில்லியன்.

இந்த எண்பதியிரண்டிலும் கேபீசீ சீசன் 17ஐ ஆண்டு நடத்திவரும் இவருக்கு இது 16 ஆவது சீசன்.இடையில் 2007ல் ஷாருக்கான் கேபீசீயின் மூன்றாவது சீசனை நடத்தியிருக்கிறார். அன்று 65 வயது கெழ போல்ட் என்று எண்ணி இவரை ஓரம் கட்டி விட்டு, அன்றைய தினத்தில் அமிதாப்பை விட 22 வயது குறைந்த இளம் வயதினன் என்று ஷா ருக்கானைப் போட்டு சீசனை தொடர்ந்திருந்தது ஷோ நிர்வாகம்.

, அது எடுபடாமல் போகவே, மேலும் அமிதாப்பின் கணீர் குரல், அப்பழுகுக்கற்ற ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் பாண்டித்தியம் இவரையே திரும்ப அழைத்து வந்துவிட்டது.

சமீப காலத்தில் அவரது உடல் நிலையின் கண்டிஷன் பார்த்து, இந்த வேலைக்கு வேற ஆளப் போடுங்கள், எனக்கு ஓய்வு கொடுங்கள் என்று கேட்டிருந்தும் அது ஏனோ முடியாமலேயே போய்க்கொண்டிருக்கிறது.

அது சரி, இப்போது அவர்கள் வீட்டில், வெளியே வேலைக்கு சென்று சம்பாத்தியம் செய்து வரும் ஒரே நபர் இவர் தான். இந்த வயசிலும் இவருக்கு இன்னும் தன் பொறுப்பு தீர்ந்த பாடில்லை போலும். கஷ்டம் தான்.

அட, போன வருஷம் கூட ரஜினியோடு வேட்டையனில் நடித்து, இந்த இளம் வயதில் தமிழில் என்ட்ரி போட்டிருக்கார் என்றால் பாருங்களேன்.

ஒரே உத்தியோகத்தையே நம்பி இருக்கமுடியுமா இந்த விலைவாசி இருக்கற காலத்தில, அதான் அடுத்த மொழிகளிலும் நடிக்க புகுந்துவிட்டாரோ?

இருப்பினும், இந்த கவலைகளையும் வெச்சிகிட்டு, இந்த வயதிலையும் மற்றவர்க்கு நல்ல எடுத்துக்காட்டாக இருப்பது ஒரு அதிசயம் தான்.

அதிசய அமிதாப்.