தொடர்கள்
அழகு
சதுப்பு நிலக்காடுகள் மீட்பு - ப ஒப்பிலி

20250820080124811.jpg

அடையாறு ஆற்றங்கரையில் புடவையால் போர்த்தப்பட்ட வேலிகள் மற்றும் மீன் எலும்பு வடிவில் அமைக்கப்பட்ட நீர் வாய்க்கால்கள், ஒரு புதுமையான உயிர்ப்பை உருவாக்குகின்றன—சென்னையின் வெள்ளத்தைக் கையாளும் திறனையும் கடற்கரை உயிர்ச்சூழலையும் மீட்டெடுக்கும் புதிய சதுப்பு நிலக்காடு.

மாநில வனத்துறை அதிகாரிகள், பரவலாக வளர்ந்து இயற்கையை ஆக்கிரமித்திருந்த வேலிக்கருவேலத்தை (Prosopis juliflora) அகற்றி, அதற்கு பதிலாக நான்கு வித இனங்களைச் சேர்ந்த 5,000 சதுப்பு நிலச் செடிகளை நட்டுள்ளனர். இந்த நட்டப்பணி “மீன் எலும்பு வடிவமைப்பு” (fishbone design) முறையில் மேற்கொள்ளப்பட்டது. இது, நீர் செல்லும் வாய்க்கால்களை உருவாக்கி, வெள்ள நீரை கட்டுப்படுத்தவும் செடிகள் வளர்ச்சி பெறவும் உதவுகிறது.

மாநில வனச்செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்ததாவது நட்டப்பகுதி மாடுகள் மேய்வதால் பாதிக்கப்படாமல் இருக்க வண்ணமிகு புடவைகள் கொண்டு வேலிகள் அமைக்கப்பட்டன.

அதிகாரிகள் தெரிவித்ததாவது: “மீன் எலும்பு வடிவில் வாய்க்கால்கள் உருவாக்கப்பட்ட பின், 5,000 சதுப்பு நிலச் செடிகள் நட்டப்பட்டன. அவற்றில் ரைசோஃபோரா மேக்ரோனேடா (250), ரைசோஃபோரா அபிகுலேட்டா (300), அவிசெனியா மரினா (3,450), எக்ஸ்கோசெரியா அகல்லோச்சா (1,000) அடங்கும். இவை அனைத்தும் நன்மங்கலம் தாவரவியல் நர்சரியில் கடந்த ஆண்டு வளர்க்கப்பட்டவை.”

சென்னை மாவட்ட வன அதிகாரி வி.ஏ. சரவணன் கூறியதாவது: “அடுத்த சில ஆண்டுகளில் இந்தக் காடு வலுவாக வளர்ச்சி பெற்று கடற்கரைப் பகுதியில் இயற்கை தடுப்பு சுவராக விளங்கும்.”

இந்த முயற்சி, முன்னதாக சென்னை நதி மறுசீரமைப்பு அறக்கட்டளை (CRRT) மேற்கொண்ட பணிகளோடு இணைகிறது. அவர்கள் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அடையாறு ஆற்றங்கரையில் 57,000 சதுப்பு நிலச் செடிகளை நட்டிருந்தனர்.

ஒரு மூத்த CRRT அதிகாரி குறிப்பிட்டதாவது: “2014ல் தொடங்கிய திட்டம் 2015 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் நட்டம் மேற்கொள்ளப்பட்டு, இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்யப்பட்டது. அது நூறு சதவீத வெற்றியாக அமைந்தது; இன்று அடையாறு பாலம் அருகே இருந்தே அதைக் காண முடிகிறது.”

ஆனால், நிபுணர்கள் எச்சரிக்கையுடன் கூறுகிறார்.... புதியதாக நடப்பட்டுள்ள இச்சதுப்பு நிலக் காடு, வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையில் சோதனையை எதிர்கொள்ளும். ஆற்றின் வாய்க்காலின் விளிம்பில் நடப்பட்டுள்ளதால், வண்டல் மண் சேரும் போது வளர்ச்சிக்கு உதவும். ஆனால் அதிகப்படியான வண்டல்மண் வளர்ச்சியை பாதிக்கவும் செய்யலாம். எனவே மழைக்குப் பிறகு வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து, சேதமடைந்த செடிகளை மாற்றி புதிய செடிகளை நட வேண்டும்.

சரவணன் கூறியது: “அடையாறு சதுப்பு நிலக்காடுகளின் மறுசீரமைப்பு, சென்னையின் கடற்கரை உயிரியல் வளத்தையும் வெள்ள மேலாண்மையையும் வலுப்படுத்தும். இதனால் மீன் இனப்பெருக்கம், உணவு பாதுகாப்பு, கார்பன் சேமிப்பு போன்றவை சாத்தியமாகின்றன. இது சென்னையின் இதயத்தில் மிகப்பெரிய பசுமை மீட்பாகும்.”

2025082008022449.jpg