தொடர்கள்
பேரிடர்
என்று தணியும் இந்த சினிமா மோகம் -ஜாசன்

2025902110441781.jpg

தமிழ்நாடு பகுத்தறிவாளர்கள் நிறைந்த ஒரு மாநிலம் என்று பெருமை பேசுபவர்கள் ஒரு பக்கம்...

நடிகர்களின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வது, ரேஷன் க்யூவில் கூட நிற்பதற்கு அலுத்துக் கொள்பவர்கள், தனது ஆதர்ச நாயகன் படத்தை காண்பதற்காக அதிகாலை காத்திருப்பான். தமிழ்நாட்டில் பாமரனின் ரசிக மோகம்தான் பல நடிகர்களை முதலமைச்சர் கனவு காண வைக்கிறது.

தமிழ்நாட்டில் சினிமா நடிகராக இருந்த எம்ஜிஆர் முதல்வராக வில்லையா என்ற உதாரணம் தான் நிறைய பேரின் நம்பிக்கை.

எம்ஜிஆர் சினிமா நடிகர் மட்டுமல்ல, திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியின் முக்கிய தலைவர். அவர் திராவிட கொள்கையை நன்கு அறிந்தவர்.

பொது மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை நன்கு தெரிந்தவர் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் தான் ரசிகர்களுக்கு செலவு செய்திருக்கிறார் தவிர ரசிகர்களை எம்ஜிஆர் செலவு செய்ய வைத்ததில்லை.

எம்ஜிஆர் படங்களுக்கு கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் விற்பனை கிடையாது.

இப்போது போல் சிறப்பு காட்சிகள் என்று ஆயிரம், இரண்டாயிரம் என்று டிக்கெட் கொள்ளை கிடையாது.

2025902192558602.jpeg

ஒரு முறை அண்ணா ஒரு கூட்டத்துக்கு போய்விட்டு விழுப்புரம் அருகே ரயில்வே கேட் மூடி இருந்ததால் அவரது கார் நிறுத்தப்பட்டது.

கேட் திறக்கும் வரை இறங்கி நின்று கொண்டிருந்தார்.

அப்போது வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிலர் அந்தக் காரில் கட்டி இருந்த திராவிட முன்னேற்றக் கழக கொடியை பார்த்துவிட்டு அண்ணாவிடம் "நீங்கள் எம்ஜிஆர் கட்சியா ? என்று கேட்டார்கள்.

அண்ணா அவர்களிடம் நான் தான் கட்சித் தலைவர் நான் தான் கட்சி ஆரம்பித்தேன் என்றெல்லாம் சொல்லாமல் "ஆமாம் நான் எம்ஜிஆர் கட்சி தான்" என்று சொன்னார். அதைக் குறிப்பிட்டு பெருமையாக தனது சமூக நீதி இதழில் எழுதினார்.

எம்ஜிஆர் என்பது தமிழகத்தின் மனசாட்சி மக்களின் நாயகன் அதனால் தான் திமுக வெற்றி பெற்றது. ஆட்சிக்கு வந்தது. அவர் வேண்டாம் என்று கருணாநிதி யோசித்தபோது அவருக்கு இறங்குமுகம் ஆரம்பமானது.

எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்து அவர் உயிருடன் இருக்கும் வரை ஆட்சி நாயகனாக அவர் தான் இருந்தார்.

அவர் அடிமட்ட மக்களின் பிரச்சனை தெரிந்து அதற்கேற்றபடி செயல்பட்டார். மாணவர்களுக்கு சத்துணவு, இலவச கல்வி, இலவச காலணி, தாய்மார்களுக்கு இலவச புடவை இப்படி அவர் கொண்டு வந்த நல திட்டங்கள் ஏராளம். அதனால் தான் அவருக்கு வெற்றி நிரந்தரமானது.

எம்ஜிஆரை பார்த்து சூடு பட்ட பூனை போல் முதல்வர் கனவுடன் கட்சி ஆரம்பித்த யாருமே வெற்றி பெறவில்லை.

2025903212351258.jpg

எஸ்.எஸ்.ராஜேந்திரன்,எம்ஜிஆருக்கு முன்பே சட்டமன்ற உறுப்பினர் அவரும் பிரபல நடிகர் தான் , அவருக்கு அவர் உயரம் தெரியும் அவர் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படவில்லை.

2025903212921668.jpg

பாக்கியராஜ், விஜயகாந்த் இப்போது விஜய் என்று எல்லோரும் அரசியல் கனவு காண்பதற்கு காரணம் தமிழ் சினிமா ரசிகர்களின் சினிமா மோகத்தை நம்பி தான். அது மட்டும் போதாது.

2025902110807928.jpg

கரூர் விஷயத்துக்கு வருவோம் முதலில் கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய் அவரது ரசிகர்களை இன்னும் ரசிகர்களாகவே வைத்திருக்கிறார் அவர்களும் கட்சிக்காரர்களாக இன்னும் மாறவில்லை.

அங்கு கூடிய கூட்டம் கூட விஜய் என்ற ஒரு நடிகரை பார்ப்பதற்காக தான் அது நிச்சயம் ஒட்டாக மாற வாய்ப்பே இல்லை.

இந்த உண்மை இன்று வரை விஜய்க்கு தெரியவில்லை பாவம்.

தனி விமானத்தில் வந்தார் ரசிகர்களின் ஆர்ப்பரித்த உற்சாகம் அவரை முதல்வர் கனவு காண வைத்தது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்திய பேட்டியில் ஒரு விஷயம் சொன்னார்.

வந்தவர்கள் கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல கட்டுப்பாடற்ற கூட்டம் ,ரசிகர்கள் மின் கோபுரங்களில் எல்லாம் ஏறுகிறார்கள் என்று அவர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் மின்தடை வேண்டுமென்று எழுதி கேட்டது விஜய் நிர்வாகிகள் தான். நடிகர் விஜயை காண ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு விஜய் கட்சி நிர்வாகிகள் எந்த வசதியும் செய்து தரவில்லை குடிக்க தண்ணீர் கூட கிடையாது.

தண்ணீர் இல்லாமல் மயங்கி விழுந்த ஒரு ரசிகருக்கு தண்ணீர் பாட்டில் தூக்கி வீசுகிறார் விஜய்.

விஜயின் மனிதாபிமானம் இந்த லெவல் தான்.

42 பேர் இறந்து போனதற்கு முக்கிய காரணம் தண்ணீர் குடிக்காதது.

ஒழுங்கான வரைமுறையான கூட்டத்தை கட்டுப்படுத்தி அவர்கள் தேவையை பூர்த்தி செய்யாதது தான்.

"போகாதே என்றேன் அதையும் மீறி விஜய் பார்க்க ஆவலாக என் மனைவி போனாள் இப்போது பிணம் ஆகிவிட்டாள் என்று ஒரு கணவர் அழும் காணொளி காட்சி சொல்லும் விஷயம் இதுதான்.

கூட்ட நெரிசல் குறித்து அடிப்படை அறிவு ரசிகர்களுக்கும் இல்லை முதல்வர் கனவு காணும் விஜய்க்கும் இல்லை.

சம்பவம் நடந்த இடத்தில் நிறைய செருப்புகள் இருந்தன ..... ஒரு தண்ணீர் பாட்டில் கூட இல்லையே என்ற செந்தில் பாலாஜியின் கேள்வி கூட யோசிக்க வைக்கிறது.

அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டம் என்பது காசு கொடுத்து அழைத்து வரும் கூட்டம்.

இது எல்லா திராவிட கட்சிகளுக்கும் பொருந்தும்.

அவர்களை சொகுசு பஸ்ஸில் அழைத்து வந்து பிஸ்கட் தண்ணீர் பாட்டில் குளிர்பானங்கள் உணவு என்று சகல வசதிகளுடன் செய்து பத்திரமாக அழைத்துச் சென்று பத்திரமாக கொண்டு சேர்ப்பார்கள்.

திராவிட கட்சிகளில் கூட்டங்களில் இது போன்ற நிகழ்வுகள் இதுவரை இல்லை.

ரசிகர் மோகம், சினிமா மோகம் இத்தனை உயிர்களை பலி வாங்கி இருக்கிறது. கரூரில் சேர்ந்த கூட்டம் தனக்கு பிரியமான நடிகரை ஒரு முறை நேரில் பார்க்க ஆசைப்பட்டு சேர்ந்த கூட்டம் அவ்வளவுதான் அதை தாண்டி அங்கு யோசிப்பதற்கு எதுவும் இல்லை.

பெங்களூரில் தனக்கு பிரியமான கிரிக்கெட் வீரரை பார்க்கச் சென்று பலரும் சிக்கி இறந்து போனார்கள்.

பாதிப்பை நேரடியாக உணர்ந்தவர்கள் மரணத்தை தழுவுகிறார்கள். அப்படி இல்லாதவர்கள் மீண்டும் ஆர்வத்துடன் இன்னொரு நெரிசலுக்கு தயாராகிறார்கள்.

ஒன்பது குழந்தைகள் இதில் ஆறு பெண்குழந்தைகள் மூன்று ஆண் குழந்தைகள். இவர்களுக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் ? ஆனாலும் அவர்கள் பெற்றோர்களோடு சேர்ந்து இந்த அப்பாவிகளும் பலியானார்கள். அந்த இறப்பின் ஒரு நொடியை அந்த சிசுக்கள் அனுபவித்திருக்கும் கொடுமை நினைத்துப் பார்த்தாலே பயங்கரமாக இருக்கிறது.

விஜயின் கூட்டத்தில் இப்படி தொடர்ந்து மயங்கி விழுந்தவர்கள் என்று ஒரு பட்டியலையே தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.

கரூரில் 116 பேர் மயங்கி விழுந்து இருக்கிறார்கள். விழுப்புரத்தில் 42 பேர்கள், நாமக்கல்லில் 35 பேர்கள், திருச்சியில் 12 பேர்கள், அரியலூரில் 6 பேர்கள் மற்றும் நாகையில் 5 பேர்கள், இப்படி ஏற்கனவே முன் சம்பவங்கள் இருந்தும் முதல்வர் கனவு காண்பவர் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் தனது ரசிகர்களை பலி கொடுத்து விட்டார்.

விஜய் ரசிகர் மன்றம் அரசியல் கட்சியாக மாற அது முழு வடிவம் பெற இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.

அவரது ஆலோசகர்கள் அல்லது வீயூக வகுப்பாளர்களுக்கு விஜய் என்ற பிரபலம் தான் கண்ணுக்குத் தெரிந்ததே தவிர கள நிலவரம் உண்மையில் அவர்களுக்கு தெரியவில்லை என்பதற்கு சாட்சி தான் இந்த உயிர் பலி.

எம்ஜிஆர் ஏழ்மையில் வளர்ந்தவர் என்பதால் அவர் அடித்தட்டு சமூகத்தை அறிந்தவர் என்பதால் தான் அவருக்குஆட்சி அதிகாரம் சாத்தியமாகிவிட்டதே. தவிர சினிமா மோகம் சினிமா ரசிகர்கள் இவற்றால் அல்ல.

அவர் ஏற்கனவே ஒரு கட்டமைப்பு உள்ள ஒரு கட்சியில் இருந்த அனுபவம் அவருக்கு உதவியது. சினிமாவில் எம்ஜிஆர் விட சிவாஜி பிரபலம் , அரசியலில் அவருக்கு தோல்விதான் மிஞ்சியது.

எம்ஜிஆரை சினிமா நடிகர் என்ற அளவுகோலில் பார்ப்பதே தவறு. எம்ஜிஆரை போல் இன்னொரு வெற்றி நாயகர் என் டி ஆர். அதற்கு காரணம் ஆந்திராவில் காங்கிரசுக்கு மாற்று என்று யாரும் இல்லை காங்கிரசின் கோஷ்டி சண்டை மக்களே முகம் சுளிக்கும்படி இருந்தது.

என் டி ஆரின் கடவுள் வேடம் இதெல்லாம் வெற்றி தந்தது. அவருக்குப் பிறகு கட்சி ஆரம்பித்த சிரஞ்சீவி வெற்றி பெறவில்லை.

விஜயகாந்துக்கு முதல்வர் கனவெல்லாம் இல்லை ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கொஞ்சம் பேரை சட்டமன்றத்துக்கு பாராளுமன்றத்துக்கு அனுப்பலாம் என்பதாகத்தான் அவர் திட்டம் இருந்தது. சினிமாவை தாண்டி பல நல்ல திட்டங்களை மக்களுக்கு செய்தவர் விஜயகாந்த்.

விஜய்க்கு அப்படி எந்த பின்புலமும் இருப்பதாக தெரியவில்லை .சிவாஜி, விஜயகாந்த், பாக்கியராஜ், டி ராஜேந்தர், கார்த்திக், சரத்குமார், கமலஹாசன் இவர்கள் அரசியல் வரலாறை விஜயின் ஆலோசகர்கள் அவருக்கு எடுத்து சொல்லியிருந்தால் இந்த 41 பேர் இறந்து போயிருக்க மாட்டார்கள்.

நவீன இளைஞர்கள் சினிமா முகத்தைப் பார்த்து ஓட்டு போடுவதில்லை என்பதுதான் நிஜம்

சினிமா மோகம் என்பது தவறான வழிகாட்டல் என்பதே கரூர் ரசிகர்களுக்கு தெளிவாகப் புரிய வைத்திருக்கிறது .