தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு நற்றிணை 39- மரியா சிவானந்தம்

2025902194515768.jpg

காதலி ஆற்றங்கரையில் தனித்திருக்கிறாள் .

காதலனின் நினைவு அவளை வாட்டுகிறது .

அவள் இருக்கும் சூழலும் காதலியின் பிரிவுத்துயரை அதிகரித்ததே தவிர . குறைக்கவில்லை.

காமத்தீயில் அவள் உடல் நலிகிறது.

தொலைவில் இருக்கும் தலைவனிடம் மானசீகமாக பேசுகிறாள்.

அவள் கைகள் யாழினை மீட்டும் போது, நெஞ்சம் நினைவுகளை மீட்டுகிறது .

"என் காமம் பெரிது " என்று பெருமூச்செறிகிறாள் காதலி.'

காதலி கூறுகிறாள் :

"வானில் நிலா உலா வருகிறது . நிலவொளியில் கடலலை பொங்கி எழுகிறது. அலையின் ஓசை எங்கும் ஒலிக்கிறது .

அலைகள் கரையில் மோதி , கடல்நீர் கரையில் சேர்க்கிறது.

மலர்களைச் சுமந்தோடும் ஆற்றின் கரையில் தாழை மரம் மடல் விரிக்கிறது .

அது சோற்றைச் சொரியும் குடை போல பூத்திருக்கிறது .

ஆற்றங்கரை காற்று தாழை மடலில் புகுந்து நறுமணத்தைப் பரப்புகிறது.

அருகிருக்கும் பனை மரத்தில் அடைந்திருக்கும் அன்றில் பறவை தன் துணையை நினைத்து குரல் எழுப்புகிறது.

என் விரலில் பிறக்கும் யாழிசை , இந்த இரவின் துன்பத்தைப் போக்கவில்லை.

நிலவின் ஒளியும் , கடலின் அலையும், தாழையின் மணமும், அன்றில் பறவையின் குரலும் , யாழின் இசையும் என்னில் எழும் காமத்தைக் குறைக்கவில்லை. என் காமம் பெரிது. என் காமத்தைக் களைபவர், உன்னைத் தவிர யாரும் இலர் "" என்கிறாள்.

திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்

பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;

ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற்

பல் பூங் கானல் முள் இலைத் தாழை

சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ,

வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு

மை இரும் பனைமிசைப் பைதல உயவும்

அன்றிலும் என்புற நரலும்; அன்றி,

விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்

யாமம் உய்யாமை நின்றன்று;

காமம் பெரிதே; களைஞரோ இலரே!(நற்றிணை 335)

பெண்ணின் தாபத்தைப் பாடும் இப்பாடலை எழுதிய புலவர் வெள்ளிவீதியார் .

அழகான வர்ணனைகள் நிறைந்த இந்த நெய்தல் திணைக்குரிய பாடலில் , தாழை மடல் விரிந்து மணம் வீசியதை , குடையில் வைத்த சோற்றைக் கவித்தது போன்று இருந்ததாக கூறும் உவமை நயம் அருமை.

மேலும் ஓர் அழகிய பாடலுடன் சந்திப்போம்.

தொடரும்