தொடர்கள்
தொடர்கள்
சினிமாவும் இலக்கியமும் 2. தி.குலசேகர்

2025903153214565.jpeg

முதலில் சினிமா மீது காதல் வந்த வரலாற்றை பார்க்கலாம். அப்போது எனக்கு மூன்று வயது இருக்கும். அய்யம்மா பெயர் ஆவுடை என்கிற பாப்பாத்தி. அய்யப்பா சங்கரநாராயணன் அவரை செல்லமாக அழைக்கிற பெயர் பாப்பாத்தி. அய்யம்மாவிற்கு சினிமா என்றால் உயிர். அய்யப்பாவிற்கு சினிமாவில் ஈடுபாடு இல்லை. அவர் விக்கிரமாதித்தன் கதைகள் போன்ற பெரிய புத்தகங்ளை எடுத்து வைத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தால் அதிலேயே மூழ்கி விடுவார். அய்யம்மா அதாவது பாப்பாத்தி பேச்சிற்கு அவர் மறுபேச்சு பேசி ஒருநாளும் பார்த்ததில்லை. அய்யப்பா செக்கச்செவேர் என்று இருந்ததால் அய்யப்பா அப்படித்தான் அழைப்பார். அவர்களுக்கு இடையே சண்டை என்கிற பேச்சுக்கு ஒருபோதும் இடமிருந்ததில்லை. அய்யப்பா அய்யம்மாவை கம்பீரமாய் தாங்குவார். ஒருவருக்கொருவர் உயிராய் கிடப்பார்கள். ஒருமுறை அய்யம்மாவை அய்யப்பா யாருமில்லாத மாலை நேரத்தில் முத்தமிட்டதை தற்செயலாக பார்த்துவிட்டேன். அவ்வளவு தான். வீட்டில் உள்ள எல்லோரிடமும் போய் பறைசாற்றிவிட்டேன். அய்யம்மாவிற்கு அப்போது வந்த வெட்கத்தை பார்க்க வேண்டுமே?

அப்போதைய மதுரை மாவட்டத்தில், வத்தலக்குண்டு சிறுநகரின் அருகே இருக்கிறது பட்டிவீரன்பட்டி என்கிற அந்த கிராமம். செழிப்பான, வன்முறை அறிந்திராத ஊர். சமயங்களில் விடுமுறை நாட்களில் புதுப்படம் அதாவது, வந்து சில மாதங்கள் ஆகியிருக்கிற நிலையில் உள்ள படங்களை பார்க்க மாட்னி ஷோ நடந்தே சென்றுவிடுவோம். முத்தலாபுரம் வாடிப்பட்டி கிராமமானது, பட்டிவீரன்பட்டியிலிருந்து இரண்டு கிலோமீட்டர். அதை ஒட்டி வருகிற கரடு வழியாக செல்கிற குறுக்குப்பாதையில் சென்று விடுவோம். அப்படிச் செல்கையில் அடுத்த நான்கு கிலோமீட்டர் இரண்டாக சுருங்கிப்போகும். அப்போது அங்கே சந்திரா, கோவிந்தராஜ், பரிமளா என்று சில திரையரங்குகள் இருந்தன. வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் மையச்சாலையில் அமைந்திருந்த சந்திரா சரித்திர பிரசித்தி பெற்றது. நுழைவுவாயில் அருகே இரண்டு பக்கமும் ஆளுயர திண்ணை இருக்கும். சந்திரா என்று கொட்டை எழுத்துகளில் அது நிமிர்ந்து நிற்கிறதை பார்க்கிறபோதே ஆர்வம் தொற்றிக்கொள்ள, மனது பரபரக்க ஆரம்பித்து விடும். அங்கே சென்று படம் பார்த்து வருவது என்பது அந்நாட்களில் அத்தனை பெருமிதமான விசயம்.

ரிலீஸ் படங்கள் பார்க்கிற வாய்ப்பு என்பது மதுரையில் இருக்கிற அம்மா வீட்டிற்கு விடுமுறையின் போது செல்கிறபோது, மாமாக்கள் யாராவது அரிதாக அழைத்துக்கொண்டு போனால் தான் உண்டு. அல்லது பட்டிவீரன்பட்டியிலிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்திலிருக்கிற திண்டுக்கலுக்கு சைக்கிளில் மாட்னி ஷோ போய் பார்ப்போம். இதுவும் அரிதான தருணங்களில் தான் நடக்கும். வீட்டிற்கு தெரியக் கூடாது. வாடகை சைக்கிள் அரை நாளுக்கு எடுக்கிற அளவிற்கு கையில் காசு இருக்க வேண்டும். அதற்கு, நண்பர்களுள் யாருக்காவது உறவினர்கள் வந்திருந்தபோது தந்த காசு, இந்த நேரத்தில் கைகொடுக்கும். மற்ற நேரங்களில் நினைத்து கூட பார்க்க முடியாது. அப்படி அமைகிற மகோன்னத தருணங்களில் சைக்கிளில் டபுள்ஸ் பறக்கும். ஆங்காங்கே மேடுகள் குறுக்கிடும். எதிர்காற்று எதிர்ப்படும். அந்த மாதிரி தருணங்களில் பின்னால் கேரியரில் உட்கார்ந்து கொண்டே, முன்னால் உட்கார்ந்து ஓட்டுகிறவரோடு சேர்த்து பெடலில் கால்வைத்து கட்டைபெடல் போட்டு அழுத்த வேண்டி வரும். அந்த மாதிரி தருணங்களில் தொடை இடுக்கில் அழுத்தி தடுப்புத்தடுப்பாக சிவந்து விடும். ஆனாலும், மனதிற்குள் அப்போது திண்டுக்கலில் இருந்த என்.வி.ஜி.பி திரையரங்கு, சோலைமலை, அருணாச்சலம், அமராவதி திரையரங்குகள் தான் நினைவில் ஓடும். அதுவே, தொடைகளில் சிவந்து போயிருக்கும் அந்த எரிச்சலுக்கு ஒத்தடமுமாகி விடும்.

ஒருமுறை கவிஞர் அறிவுமதியோடு வத்தலக்குண்டில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். ஊர் பக்கத்தில் தான் என்பதால் அங்கே அழைத்துச் சென்றபோது, ‘அடப்பாவி இப்பிடியொரு ஊரை விட்டுட்டு எப்புடிடா வரமுடிஞ்சது?’ என்று செல்லமாக கடிந்து கொண்டார். அப்பட்டமாக அவர் விழிகளில் அந்த ஆச்சர்யகுறியை காண முடிந்தது.

நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த டபிள்.யூ.பி.ஏ சௌந்திரபாண்டியன் பிறந்த ஊர் இது. சமூகநீதி காத்தவர். சுயமரியாதை இயக்கத்தின் முதல் தலைவர். அப்போது அதில் பெரியார் துணைத்தலைவர். அந்நாட்களில் பெயரோடு சாதி பெயரை சேர்த்து எழுதுகிற பழக்கம் இருந்தது. இப்போதும் அந்த பழக்கம் இந்தியா முழுக்க இருக்கிறது. சச்சின் என்பது அவர் பெயர். டென்டுல்கர் என்று நாம் அழைப்பது அவரது சாதிப்பெயர். மோகன்தாஸ் தான் தேசப்பிதாவின் பெயர். காந்தி அவரது சாதிப்பெயர். 1917 –ல் இவரது தலைமையில் சுயமரியாதை இயக்கம் பெயரோடு இருக்கிற சாதி பெயர்களை கெசட்டில் இருந்து நீக்குகிற நிகழ்வை விழாவாகவே நடத்தினார்கள். அவர்களின் சீரிய பங்களிப்பால் தான் தமிழ்நாட்டில் மட்டும் பெயருக்கு பின்னால் சாதி பெயரை யாரும் போட்டுக்கொள்வதில்லை. அப்படி போட்டுக்கொள்வதை அவமானமாக இன்று நினைக்க வைத்ததற்கு பின்புலத்தில் இருந்தவர்களில் முக்கியமானவர். இவர் பெயரில் தான் சென்னையில் பாண்டி பசார் இருக்கிறது. அவருடைய வாழ்க்கை வரலாறை டபிள்யு.பி.ஏ.சௌந்திரபாண்டியன் என்கிற தலைப்பில் நூலாக எழுதியிருக்கிறேன். திண்டுக்கலை மையமாக கொண்டு இயங்கி வரும் புஸ்தகா பதிப்பகம் அந்த நூலை வெளியிட்டிருக்கிறது.

அங்கிருந்து அரைக்கிலோ மீட்டர் தூரத்தில் சின்னக்காளன்பட்டி என்று பேச்சுவழக்கில் அழைக்கிற சின்னக்கவுண்டன்பட்டி இருக்கிறது. அங்கே இருக்கிற டென்ட் கொட்டகையின் பெயர் சாந்தி. அதே பாதையில், அடுத்த அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தேவரப்பன்பட்டி என்கிற குக்கிராமத்தில், வெங்கடேஸ்வரா என்று ஒரு சினிமா கொட்டகை இருந்தது. இப்போது யோசிக்கையில் சாதிகளின் ஊடாட்டம் அங்கே ஊர் பெயர்களை கூட விட்டுவைக்காதபடி ஆக்கிரமித்திருந்ததை உணர முடிகிறது. இப்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள தெரு பெயர்களில் இடம்பெற்றிருந்த சாதிப்பெயர்களை பெரும்பாலும் நீக்கியிருப்பது ஒரு ஆறுதலான விசயம்.

அந்நாளில் வெங்கடேஸ்வரா ரொம்ப பிரபலம். நிரந்தர திரையரங்கென பட்டிவீரன்பட்டியில் ஆறுமுகாவும், அய்யம்பாளையத்தில் அழகேசன் திரையரங்கும் இருந்தன. அழகேசன் திரையரங்கிற்கு அக்கினிநட்சத்திர உச்சிவெயிலில் மாட்னிஷோ போவோம். கிராமங்களில் கல்லூரி செல்கிறவரை வெறுங்கால் தான். செருப்பு முதன்முதலில் அணிந்தது சிவகாசியிலுள்ள அஞ்சாக் கல்லூரியில் சேர்ந்த போது தான். கல்லூரியில் சேருவதற்கு டவுசர் போட்டுக்கொண்டு போன ஆள் நான். மறக்க முடியாத அந்த பால்ய நாட்களின் அப்படியான பரவச தருணங்களில் வெயில் தகித்து தார்ச்சாலையில் உள்ள தார் ஆங்காங்கே கசிந்து இளக்கமாகி இருக்கும். காலில் ஒட்டிக்கொள்ளாமல் பார்த்துப்பார்த்துச் செல்வோம். கல்லோ, முள்ளோ குத்தி விட்டால் சாலையோரம் வளர்ந்திருக்கும் கள்ளிச்செடியின் இலையை பறித்து அதில் வருகிற பாலை இட்டுக்கொள்வோம். சமயங்களில் எங்கே மரநிழல் இருக்கிறதோ அதுவரை வேகமாக ஓடி அங்கே சில நிமிடங்கள் இளைப்பாறிவிட்டு, மறுபடி அடுத்த மரநிழல் நோக்கி செட்டாக ஓடுவோம். சில சமயம் உடன் வரும் அண்ணன்மார்கள் சாலையோரம் விழுந்து கிடக்கும் தென்னம்பாளையில் நிற்க வைத்து இழுத்துச் செல்வதுண்டு. நண்பர்கள் என்றால் ஆளுக்கு கொஞ்சதூரம் என மாறிமாறி இழுத்துச் செல்வோம். இறுக்கமாக பிடித்துக்கொண்டு தென்னம்பாளையில் அப்படி பயணிக்கையில், என்னவோ தேரில் ஏறிச் செல்வது போல இருக்கும். வெங்கடேஸ்வரா சமயங்களில் தடாலடியாக புதிய படங்களை எடுத்துக்கொண்டு வந்துவிடுவார்கள். அதனால் வாரவாரம் வீட்டிற்கு முன்னால் உள்ள வாரச்சந்தை நடக்கிற காமராஜர் திடலை ஒட்டி மூன்று திரையரங்குகாரர்களும் தட்டி வைப்பார்கள். அதில் சில விவரங்கள் ஊதா மசியில் எழுதி இருப்பார்கள். அவை தான் அந்நாளைய கூகுள். அதை வைத்துத்தான் எந்த படத்திற்கு அந்த வாரம் செல்லலாம் என்பது முடிவாகும். புதுப்படம் என்றால் மாட்டு வண்டியிலோ, குதிரை வண்டியிலோ மைக்செட் போட்டு அறிவித்தபடி, நோட்டீஸ் கொடுத்துச் செல்வார்கள். நாங்கள் பின்னாலேயே சிறுவர்சிறுமியர்கள் கைநீட்டியபிடி ஓடிச்செல்வார்கள். கூட்டங்கூட்டமாய் ஓடிச்சென்று நோட்டீஸ் பெற்றுக்கொள்வதென்பது அளப்பரிய சாகசத்திற்கு இணையானது. அப்படியான நோட்டீஸ்களில் சிலவற்றை இப்போதும் பொக்கிசமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன். எதற்கோ? அப்படியொரு சொல்லத்தெரியாதவொரு கிரக்கம்.

அங்கு, பெருநகரங்களில் ஓடி முடித்து, நகரங்களில் ஓடி முடித்த பிற்பாடு தான், எந்த படமும் வரும். ஒவ்வொரு திரைப்படமும், பெருநகரங்களில் ரிலீஸ் ஆகி தோராயமாக ஆறு மாத காலத்திற்குப் பிறகு தான் இங்கே வந்து சேரும். மக்கள் தொகை அதிகமாக இருக்கிற ஊர்களெல்லாம் ஒரு சுற்றுச்சுற்றிவிட்டு, பிற்பாடு தான் இங்கே எட்டிப் பார்க்கும். வாரம் ஒரு படம் அல்லது இரண்டு படம் மாற்றுவார்கள். வாராவாரம் சனிக்கிழமைகளில் படம் மாற்றியதும் அய்யம்மா படம் பார்க்கத் தயாராகிவிடுவார்கள். அய்யம்மாவிற்கு அப்போது எம்பது வயது இருக்கும். இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அய்யம்மா தன்னுடைய சிறுபிராயத்தில் அழகியாக தான் இருந்திருக்க வேண்டும். அவருக்கு நீர் வாதம். யாராவது ஒருவர் துணையில்லாமல் நடக்க முடியாது. வீட்டிற்குள் ஒரு சிறிய மர ஸ்டூலை தூக்கித்தூக்கிப் போட்டு கைத்தடி மாதிரி பயன்படுத்தி குனிந்து கொண்டே தான் குளியல் அறை, சமையல் அறைக்கெல்லாம் செல்வார். புளிக்குழம்பு, கேப்பைக்கழி செய்தால் அவர்கள் கைமணத்தில் வீடே தூக்கும். மற்ற நேரங்களில் செங்கல் என்று அழைக்கப்படும் அந்த விசாலமான கூடத்தில் கிடக்கும் நார்க்கட்டிலில் வந்து உட்கார்ந்து விடுவார். அப்போதெல்லாம் ஓடுகிற மின்விசிறி சத்தமே போடாமல் வருடக்கணக்கில் அசராமல் ஓடும். கருப்பு நிறத்திலான பேக்லைட் பொத்தானை அழுத்தி ஓடவிடுவதென்பதே பரவசம். அந்நாட்களில் மர்பி டிரான்சிஸ்டர் வீட்டில் பாடிக்கொண்டிருக்கும். பிறந்த குழந்தைகளுக்கான பிரதான உணவான அமுல் ஸ்பிரே ஊதாநிற டின்களில் வரும். மாமா வீடுகளுக்கு விடுமுறைக்கு செல்கிறபோது இரவு நேரத்தில் எல்லோரும் தூங்கிய பிற்பாடு ரகசியமாக சூரையாடுவது இந்த அமுல்ஸ்பிரேவை தான். வாய்போட்டு அவசரஅவசரமாக தின்றால் புகையாக வெளியே கொஞ்சம் பாயும். ஒரு சமயம் அதில் கொஞ்சத்தை தாளில் மடித்து டவுசர் பாக்கெட்டில் வைத்ததை மறந்தே விட்டேன். பிற்பாடு அது துவைக்கப்பட்டு, பள்ளிக்கு செல்கையில் தற்செயலாக கைவிடுகிறபோது அது வருகிறது. அந்த தாளை உரித்ததும், அமுல் ஸ்பிரே கல் போல மாறிப்போயிருந்தது. அதை என்ன செய்வதென்று தெரியாமல் வாயில் போட்டுக்கொள்ள, அப்படியொரு சுவை.

வீட்டில் அய்யம்மா கைத்தாங்கலாக வைத்துக்கொள்கிற அந்த ஸ்டூலை செங்கல் வந்ததும், அந்தக் கட்டிலுக்கு அடியில் ஓரமாய் வைத்துக்கொள்வார்கள். சினிமாவிற்கு செல்வதென்றால் அத்தனை தூரம் முக்காலியை தூக்கிப்போட்டு நடக்கவா முடியும். இரண்டடி உயரத்தில் இருந்த என் கழுத்து தான் அவருக்கு தோதான கைத்தடி. அப்போது எனக்கு மூன்று வயது இருக்கும்.. இறுக்கமா பிடித்துக்கொள்வார்கள்.

அவர்கள் வேகத்திற்கு ஏற்றாற்போல மெதுவாக தான் போவோம். அதற்காகவே ஒரு மணி நேரத்திற்கு முன்பே கிளம்பி விடுவோம். தெருக்களில் வீட்டுவாசல் முன் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருக்கிற பெண்கள், ‘பாட்டியும், பேரனும் சினிமாவுக்கு கௌம்பிட்டீங்களாக்கும்..’ என்று வாய் நிறைய சிரிப்போடு கேட்பார்கள். அந்த சிரிப்பை கேட்டதும், அய்யம்மா உள்ளூர அப்படியொரு நாணம் பூக்கும். உதட்டோரம் வெட்கம் லேசாக எட்டிப்பார்க்கும். சினிமா கொட்டகையை நெறுங்கும் போது உற்சாகம் அப்பிக்கொள்ளும். அதன் முகப்போரம் செம்மண்ணாலான ஒரு சிறிய அறை இருக்கும். அதில் கைவிடுகிற அளவிற்கு ஒரு பொந்து இருக்கும். அதன் வழியாக தான் டிக்கெட் வாங்க வேண்டும். பத்திலிருந்து இருபது நபர்கள் தான் நிற்பார்கள். ஆனாலும் அந்த பொந்திற்குள் முண்டியடித்துக்கொண்டு சட்டை கசங்க, சீவிய தலை நட்டுக்கொண்டு நிற்க டிக்கெட் வாங்கிவிட்டு வெளிப்படுவதென்பது, மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டதை போல, மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திவிட்ட உணர்வை தரும். படம் போடப்போகிறார்கள் என்பதை அறிவிக்கும் விதத்தில் மைக்செட்டில் கடைசியாக சிங்காரவேலனே தேவா பாடலை ஒலிபரப்புவார்கள்.

உள்ளே வந்ததும் மணலை உயரமாக குவித்து வைத்து அதன் மீது உட்கார்ந்து உயரத்தை ஈடுசெய்து கொள்வேன். அய்யம்மா கால் மேல் கால் போட்டு வெத்தலை,பாக்கு, சுண்ணாம்பு வைத்து டொக்குடொக்கென இடித்து வாயில் போட்டுக்கொண்டதும் வாயெல்லாம் செக்கச்செவேர் என்றாகி விடும். எனக்கு ஒரு துணி பைக்குள் இருந்து அவ்வப்போது முறுக்கு முதலான தின்பண்டங்கள் எடுத்து தருவார்கள். இடைவேளைக்கு பிறகு சிலைடு போடுவார்கள். நான்கு பாகமாக படம் ஓடி முடியும். சினிமாவிற்கு முதலாளாக புறப்பட்ட நாங்கள், கடைசி ஆளாக வந்து சேருவோம். ஒரு முறை போட்டி காரணமாகவோ, கவனக்குறைவு காரணமாகவோ வெங்கடேஷ்வரா திரையரங்கு தீப்பிடித்து விட்டதாக அதிகாலையில் எழுந்ததும் அந்தச் செய்தி வந்து கதவு தட்டியது. உடனே தெருவில் உள்ள சகாக்கள் அனைவருவாய் அதை நோக்கி மூச்சிறைக்க ஓடுகிறோம். அங்கே சுடுகாடாய் கருகிப்போய் கிடக்கும் அந்த டெண்ட் கொட்டாய் இருந்த இடம் கருமை மண்டிப்போயிருக்கும். தாங்கவே முடியாத வேதனை அது. நெருங்கிய உறவின் துக்க வீட்டிற்கு வந்தது மாதிரியான அந்த உணர்வை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நான் தின்கிற முறுக்கில் சிறுபகுதியை வாங்கித் தின்ற அணில்கள் அங்கே கருகிப்போய் கிடப்பதை பார்க்கிறபோது உலகின் உச்சபட்ச வன்முறையை அதில் உணர்ந்திருக்கிறேன். மறுபடி லைசென்ஸ் எடுத்து, பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு ஆயத்தமாகி மறுபடி அது உயிர் பெற்றெழ ஆறுமாதம் பிடிக்கும். அந்த ஆறு மாதங்களும் அதன் திறப்பு விழாவிற்காக ஒவ்வொரு கணமும் மனது காத்துக்கொண்டிருக்கும்.

பட்டிவீரன்பட்டியில் இருந்த ஆறுமுகா திரையரங்கில் படம் போடப்போகிறார்கள் என்பதை அறிவிப்பதற்காக வெத்தலை வெத்தலை வெத்தலையோ கொளுந்து வெத்தலையோ, சின்னச்சின்ன கொளுந்து வெத்தலையோ பாடலை போடுவார்கள். ஆறுமுகா திரையரங்கு கட்டுவதற்கு முன்னால் அங்கே முருகன் டாக்கீஸ் என்றொரு டென்ட் கொட்டாய் இருக்கும். அங்கே லைசென்ஸ் முடியப்போகிற இறுதி வாரங்களில் ஒரு நாளைக்கு மூன்று படங்கள் போடுவார்கள். விடியவிடிய பார்த்து திளைத்திருந்த அந்த அனுபவம் மறக்கவே முடியாதது.

தொடரும்