கர்ணன்
ராதேயன், சூரிய குமாரன், தேரோட்டி மகன் என்பன கர்ணனின் பிற பெயர்கள்.
பிறப்பொக்கும் என்றார் வள்ளுவர். பாண்டு மன்னரின் விருப்பத்தோடு குந்திக்கு பிறந்த பாண்டவர்களுக்கு வேண்டுமானால் அது இயைந்து வரலாம்; கர்ணனின் பிறப்பு குந்தியின் கன்னிப்பருவத்தில் (அறியாப் பருவத்தில்) நிகழ்ந்தது. அதிரதன் என்ற தேரோட்டியாலும் அவன் மனைவி ராதையாலும் வளர்க்கப்பட்டான்.
பிறப்பு எவ்வாறாயினும் குறைந்ததா ஊக்கம்? கர்ணன் திறமையோடு வளர்ந்தான். முன்னேறி அஸ்தினாபுரம் அரங்கில் அர்ஜுனனுக்கு சவால் விடுத்தான். துரியோதனன் அவன் திறமையை உணர்ந்து கர்ணனை பிறப்பினால் ஏளனம் செய்த பீமனிடம் "பிறப்புச் செருக்கில் மூழ்கி இருக்கக் கூடாது" என காரணங்களோடு விளக்கி அங்க தேசத்து அரசன் ஆக்கி அங்கீகாரம் கொடுத்தான்.
துரியோதனனுடன் ஆழ்ந்த நட்பு ஏற்பட்டு, கர்ணன் இறுதி வரை நன்றியுடையவனாக இருந்தான். துரியோதனன் பின்னர் பல இன்னல்களை சந்தித்தபோது இயன்ற அளவு ஆறுதலோ, வழிகாட்டுதலோ கூறி துணையாக நின்றான். துரியோதனனும் குருஷேத்திரப்போரில் பல தம்பிகளை கர்ணனுக்காக அனுப்பி இழந்தான். கர்ணன் அர்ஜுனனை கொல்ல சபதம் செய்தாலும் அதில் உறுதியாக இருந்தாலும் பார்க்கவர் (பரசுராமர்) இடம் இருந்து பார்க்கவாஸ்திரம் பெற்றாலும், பிரம்மாஸ்திரத்தோடு சாபத்தையும் பெற்றான்! "பிறப்பு முக்கியம்" என கருதிய பரசுராமரிடம் பிறப்பு குறித்து பொய் கூறியதும் பிற சூழ்ச்சிகளும் திண்ணியராக தடையாக இருந்தன.
கர்ணன் துன்பங்கள் அடுத்தடுத்து வந்த போதும் (உதாரணம் சூரிய பகவான் உபதேசத்தை கேளாமல் இந்திரனுக்கு கவசம் தானம் செய்தது. உதவி செய்தால் கேடு வரும் என தெரிந்து தானம் செய்தான்) துவண்டு விடாமல் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இருந்தான். கவசம் போனாலும், சாபம் பெற்றாலும் ஊக்கம் குறையவில்லை. குந்திக்கும் கொடுத்தான் வரம்!
கர்ணனுக்கு தன் திறமை மீது அலாதி நம்பிக்கை உண்டு. அதனால் 17ஆம் நாள் யுத்தத்தில் சல்லியன் சொல் கேளாமல் நாகாஸ்திரத்தை பிரயோகம் செய்து தோல்வியடைந்தான். மற்றொரு சாபத்தால் கர்ணனின் தேர் மண்ணில் புதைந்தது. விஜயம் என்னும் வில்லை கீழே வைத்துவிட்டு சக்கரத்தை தூக்கி நிறுத்த முயன்றான். சக்கரம் எழாத நிலையில், வரக்கூடாத மறதியால் (பரசுராமரின் சாபத்தால்) அஸ்திரங்களை பிரயோகிக்க இயலவில்லை.
தெய்வீக அஸ்திரங்களால் வீழ்ந்த பின்னரும், வேதியர் வடிவில் வந்த கண்ணனிடம் புண்ணியத்தை தானமாக கொடுத்து, அடுத்த பிறவிகளில் இல்லை என்னாது கொடுக்க வரம் பெற்றதோடு நாராயணனின் காட்சியும் கிடைத்து (விஸ்வரூப தரிசனம் - அர்ஜுனனுக்கு யுத்தத்தின் தொடக்கத்தில் கிடைத்தது) பேறு பெற்றான்.
குறளும் பொருளும்
எல்லா உயிர்களும் பிறப்பில் ஒன்றே; பிற்பாடு செய்யும் தொழில்கள்தான் அவர்களை வேறு படுத்துகின்றன.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான் 972
(தாமரை போன்ற) நீர் பூக்களின் உயரம் நீர்மட்டத்தை (நீரின் அளவை) பொறுத்தது; அதுபோல மக்களின் உயர்வு ஊக்கத்தை பொறுத்தது.
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத்து அனையது உயர்வு 595
மனதில் உள்ள ஊக்கம் ஒருவனுக்கு பெருமையாகும்; அது இல்லாமல் உயிர் வாழ்வது இழிவாகும்.
ஒளி ஒருவர்க்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல் 971
தக்க சமயத்தில் செய்த உதவி உலகை விடப் பெரியது.
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது 102
தினை அளவு நல்லது செய்தாலும், உதவியின் பயனை உணரக்கூடியவர்கள் அதை பனை அளவாக உயர்த்தி பாராட்டுவார்கள்.
திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார் 104
உபகாரத்தின் மதிப்பு உபகாரம் எவ்வளவு என்பதை பொறுத்தது அல்ல; உபகாரத்தை பெற்றுக் கொண்டவனுடைய குணம் எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதுவும் பெரியதாகும்.
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின்வரைத்து 105
ஒரு காரியத்தை செய்ய விரும்புபவர்கள் அதற்கேற்ற உறுதியுடன் இருந்தால் நினைத்ததை முடிப்பார்கள்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்
திண்ணியர் ஆகப்பெரின் 666
அடுக்கடுக்காக துன்பம் வந்தாலும் கலங்காமல் இருப்பவன் துன்பமும் கெடும்.
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கண்படும் 625
உதவி செய்தால் கெடுதல் வரும் என்றால் தன்னை விற்றாவது அந்த கெடுதலை வாங்கலாம். என்றாலும் கொடுப்பதுதான் நல்லது
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அ..து ஒருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து 220
ஊக்கம் தான் நிரந்தரமான உடைமை; சொத்தெல்லாம் நிலைக்காமல் அழிந்து விடும்.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கிவிடும் 592
எப்போதும் ஊக்கம் உடையவர்கள், செல்வம் முதலாய ஆக்கங்கள் போய்விட்டதே என்று கலங்க மாட்டார்கள்.
.ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துஉடையார் 593
எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லும் கர்வம் தான் அற்பத்தனம் /அறிவின்மை.
வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம் யாம் என்னும் செருக்கு 844
மறதி இல்லாமல் இருந்தால் ஆகாத காரியம் என்பதே இல்லை.
அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா
கருவியால் போற்றிச் செயின் 537
யானை அம்புகளால் அடிபட்டாலும் ஊன்றி நிற்கும்; அதுபோல் கெடுதல் வந்தாலும் ஊக்கம் உள்ளவர்கள் தளர மாட்டார்கள்.
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு 597
தாமுரைத்த சூளுரையில் இருந்து தப்பாமல் போரினைச் செய்து மாண்டவர்களை வஞ்சினம் தவறியவர் என்று குற்றம் சொல்பவர் யார்?
இழைத்தது இகவாமை சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற்பவர் 779
நல்ல காரியத்துக்கு என்றாலும் வாங்க கூடாது; மேலுலகம் கிடைக்காது
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று 222
Leave a comment
Upload