எழுத்து வாழ்க்கை அவனுக்கு சொந்த நாட்டில் எதிர்பாராதவிதமாக அமைந்தது போல் ஐரோப்பாவிலும் எழுத்துப் பணி தொடர்வதாக இருந்தது. லண்டனிலிருந்த மிகப்பெரிய தொழில் அதிபர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால் இந்திய அரசியலும் ராஜீவ் காந்தியைச் சுற்றிச் சுற்றி வந்த போஃபோர்ஸ் பூதமும் அந்த வாய்ப்புக்கான கதவுகளை அடைத்தன.
எதிர்பாராதவிதமாக லண்டனில் பத்து நாட்கள் தங்க வேண்டியிருந்தபோது 7ஆம் நாள் இந்துஜா தொழில் குடும்பத்தில் மூத்த உறுப்பினர் எஸ்.பி.இந்துஜாவை சந்திக்க அனுமதி கேட்டிருந்தான். அவர் இங்கிலாந்தின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்று அறியப்பட்டவர். நண்பர் சொன்னார், ‘நீங்கள் வந்த தினமே அதைச் செய்திருக்கலாமே, இப்போது அவகாசம் குறைவாக இருக்கிறதே’ என்றார். ஆனால் மறுநாள் இந்துஜாவிடமிருந்து பதில் வந்தது. ட்ரஃபால்கர் சதுக்கத்தில் உள்ள தன் வீட்டில் இரவு விருந்துக்கு அழைத்தார். அவனும் மறுநாள் தன் நண்பர் மாலியை அழைத்துக் கொண்டு அவர் வீட்டிற்குச் சென்றான். அது பிரம்மாண்டமான மாளிகை. முன்கூடத்திலேயே அவனை வரவேற்ற எஸ்.பி.இந்துஜா வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்தார். நண்பர் மாலியும் அப்போது உடன் இருந்தார்.
எஸ்.பி.இந்துஜா சொன்னார், ‘உங்களைப் போன்ற ஒருவரைதான் தேடிக் கொண்டிருந்தேன். நான் ஒரு பெரிய புத்தக வெளியிட்டுத் திட்டம் வைத்திருக்கிறேன். அது கலை களஞ்சியம் போன்றது. மொத்தம் 10 தொகுதிகளை திட்டமிட்டிருக்கிறேன். 5 தொகுதிகள் இந்தியாவின் வரலாறு, இலக்கியம், சமயம், ஆன்மிகம் போன்றவற்றை எடுத்துச் சொல்லக் கூடியது. மற்ற 5 தொகுதிகள் ஐரோப்பிய இலக்கியம், நாகரீகம், தத்துவம், பண்பாடு போன்றவற்றை விளக்கக்கூடியது. ஐரோப்பிய பகுதிக்கான எடிட்டர் ஒருவரை தேர்ந்தெடுத்து விட்டேன். இந்திய தொகுதிகளுக்குத் தான் ஒரு எடிட்டர் தேவை. உங்களைப் பற்றிய தகவல்களை Fax யில் தெரிவித்திருந்தீர்கள். நான் உங்களை இந்தியத் தொகுதிகளுக்கு எடிட்டராக நியமிக்க விரும்புகிறேன். நீங்கள் இந்துவை விட்டு அந்தப் பணியை ஏற்க முடியுமா என்று கேட்டார். ‘நீங்கள் நியமித்தால் இந்து முதன்மை எடிட்டர் ரவியின் ஆசிர்வாதத்துடன் அந்தப் பொறுப்பை ஏற்பேன். Hindu to Hinduja is not a problem’ என்றான். எஸ்.பி. இந்துஜா மகிழ்ச்சி அடைந்தார்.
நீங்கள் எப்பொழுது சென்னை திரும்புகிறீர்கள் என்று கேட்டார். அவன் சொன்னான், ‘மறுநாள் ஏர் இந்தியா விமானத்தில்’ என்றான். அவர் சொன்னார், ‘அந்த விமானம் மும்பை வழியாகத்தான் செல்கிறது. நீங்கள் மும்பையில் இறங்கிக் கொள்ளுங்கள், விமான நிலையத்தில் எங்கள் நிறுவனத்தின் பி.ஆர்.ஓ உங்களைச் சந்திப்பார். நீங்கள் அன்று மும்பையில் தங்குங்கள்.
இந்துஜா ஃபவுண்டேசன் தலைவர் ஏ.கே.தாஸ் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். எங்கள் பி.ஆர்.ஓ. உங்களை அழைத்துச் செல்வார். அவரிடமும் என் தம்பி அசோக் இந்துஜாவிடம் பேசிவிட்டு, மறுநாள் நீங்கள் சென்னை திரும்பலாம் என்றார். அதன்படி அவன் மும்பையில் இறங்கினான். இந்துஜா நிறுவன பி.ஆர்.ஓ அவனை ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்து ‘ஐயா நீங்கள் குளித்துவிட்டு, காலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு வாருங்கள், ரிஷப்ஷனில் காத்திருப்பேன் அங்கிருந்து இந்துஜா ஃபவுண்டேசனுக்குச் செல்லலாம்’ என்றார்.
அவனும் குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு ரிஷப்ஷனுக்கு வந்தான். பி.ஆர்.ஓ. அவனை இந்துஜா ஃபவுண்டேசன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே தலைமை அதிகாரி ஏ.கே.தாஸ் என்பவரை சந்தித்த போது அவரது மேஜை மீது அவனைப் பற்றிய எல்லா குறிப்புகளும் கொண்ட கோப்பு இருந்தது. அவன் தன்னைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று. எஸ்.பி.இந்துஜா அவனை அந்த அளவுக்கு தன் கடிதம் மூலம் அறிமுகம் செய்து வைத்திருந்தார். அவனும் ஏ.கே.தாஸும் பேசிக் கொண்டிருந்தபோது எஸ்.பி.இந்துஜாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தாஸ் சொன்னார், ‘சார் வந்துவிட்டார் Energetic ஆக இருக்கிறார் ஜெட் லாக் இல்லை. நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். அலுவலகத்தில் தான் லஞ்ச் ஏற்பாடு செய்திருக்கிறேன் என்றார். அதன் பிறகு இந்திய ஐரோப்பிய கலை களஞ்சியத் திட்டம் இந்துஜாவின் ஞானக்கனவு என்றும் அதற்குத் தங்களைத் தேர்ந்தெடுத்திருப்பதில் மகிழ்ச்சி என்றார். மேலும் சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்.
‘Come on let us have working lunch’ என்று சொல்லி வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு பெரிய டேபிளில் ஊழியர்கள் பதார்த்தங்களைக் கொண்டு வைத்தார்கள். ஏ.கே.தாஸுக்கு தொடர்ந்து பல தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபடியே அவனுக்கு நீங்கள் சாப்பிடுங்கள் என்று சொல்லும் விதமாக சைகை காட்டினார். அவனும் குஜராத் பாணி மதிய உணவில் சில பதார்த்தங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போதும் தொலைபேசியில் பேசிக் கொண்டே இருந்தார். அவன் சொன்னான், ‘மிஸ்டர் தாஸ் We had excellent working lunch, you were working, I was lunching’. தாஸ் சிரித்துவிட்டார். பிறகு சில புத்தகங்களைக் கொடுத்துவிட்டு, இந்திய ஐரோப்பிய கலைக் களஞ்சியத் தொகுதிகளுக்காக நீங்கள் லண்டனிலும், மும்பையிலும் மாறி மாறி பணி செய்ய வேண்டிருக்கும்’ என்றார். அத்துடன் விடைபெறும்போது சொன்னார், ‘நீங்கள் இன்று மாலையோ அல்லது முன்னிரவோ எஸ்.பி.இந்துஜாவின் இளைய சகோதரர் அசோக் இந்துஜாவை அவர் வீட்டில் சந்தியுங்கள். எங்கள் பி.ஆர்.ஓ. அந்த சந்திப்பிற்கும் உங்கள் சென்னை பயணத்திற்கும் ஏற்பாடு செய்வார். அவரும் உங்களுடன் வருவார்’ என்றார். எஸ்.பி.இந்துஜா மும்பைக்கு வரும்போது உங்களைச் சந்திப்பார். இடையில் உங்களுடன் தொலைபேசியில் பேசுவார் என்றார். இந்துஜா நிறுவனத்தின் பி.ஆர்.ஓ. அன்று மாலை அவனை ஓட்டலில் கொண்டு வந்துவிட்டார். ‘‘நீங்கள் ஓய்வொடுத்துக் கொள்ளுங்கள், நான் இரவு 8.00 மணிக்கு வருவேன்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். இரவு 8.00 மணிக்கு அவனுக்கு அசோக் இந்துஜாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவனது சென்னை விமானம் நள்ளிரவில் என்பதைத் தெரிந்து கொண்ட அவர், இப்போது நீங்கள் என்னை சந்திப்பதற்காக சிரமப்பட வேண்டாம், விமான நிலையம் செல்லும் வழியில்தான் என் வீடு இருக்கிறது. அதனால் இரவு 10.00 மணிக்கு மேல் விமான நிலையம் செல்லும் வழியில் என்னை சந்திக்கலாம்’ என்றார்.
அசோக் இந்துஜா அவனுடன் மிகவும் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார். பி.ஆர்.ஓ விமான நிலையம் வரை வந்து அவனை வழி அனுப்பினார். சர்வ தேச கலைக் களஞ்சியத் திட்டம் எப்போது தொடங்கப்படபோகிறது என்று நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான் அவன். அடுத்த சில மாதங்களில் இந்தியாவிற்கு வந்த எஸ்.பி.இந்துஜாவை அவருக்கு நேரடியாக சம்மந்தமில்லாத போஃபோர்ஸ் பூதம் பிடித்துக் கொள்ள மனம் நொந்துப்போன அவர் அடுத்த சில வருடங்களில் காலமானார்.
எஸ்.பி.இந்துஜாவுடன் அவரது கனவுத் திட்டமும் அவரோடு மறைந்து போயிற்று. இப்படித்தான் அரசியல் இலக்கியத்தின் எமனாகிறது. அரசியல் நிரபராதிகளை குற்றவாளிகளாகவும், குற்றவாளிகளை நிரபராதிகளாகவும் மாற்றும் ஒரு மாயாஜாலம். தனக்கு வாய்ப்பு போய்விட்டதே என்று அவன் கவலைப்படவில்லை. ஒரு பெரிய தொழில் அதிபர் தனக்கு ஆதாயமில்லாத சிக்கலில் தவித்தாரே. எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்தவர். ஒரு சர்வதேச கலைக் களஞ்சியத்தை கொண்டுவர முடியாமல் போயிற்றே என்று வருந்தினான். So much so S.P.Indhuja was a person more sined against than sinning. அதுதான் விதியின் குரூர விளையாட்டு.
Leave a comment
Upload