(கைலாய மலையின் தெற்கு முகம். இந்த படத்தை தரவிறக்கி பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்)
சென்ற வாரம் அஷ்டபத் செல்லும் வரை முடித்திருந்தேன்.
அஷ்டபத்.
எட்டு படிகள் என்று அர்த்தம்.
இதற்கு ஏராள வியாக்கியானங்கள் இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள்.
தெற்கு முகமான கைலாய மலை இந்த இடத்திலிருந்து தெளிவாக தெரிகிறது. முதல் இரண்டு முறை இந்த இடத்திற்கு செல்ல அனுமதி வேண்டும் கடினம் அது இது என்று சால்ஜாப்பு சொல்லி விட்டனர்.
எதற்கும் ஐயன் மனது வைத்தால் தான் முடியும்.
வடக்கு முக கைலாய மலைக்கு நடக்க முடியாதவர்கள், குதிரையிலும் போக முடியாதவர்கள் இந்த அஷ்டபத் என்ற இடத்திற்கு சுலபமாக ஜீப்பில் சென்று அருமையாக தரிசிக்கலாம்.
கூடுதல் ஆறாயிரம் ரூபாய் நம்மூர் காசுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால் பைசா வசூல். ஒவ்வொரு விநாடியும் கைலாய மலையையும் நந்தி பர்வதத்தையும் தரிசிக்கலாம்.
அருகே செல்ல அனுமதி இல்லை. இது தான் இன்னர் கோரா அதாவது உள் பரிக்கிரமா என்று சொல்கிறார்கள். அது மிக மிக கடினமான யாத்திரை. என்னுடைய ஆஸ்திரேலிய நண்ப சியூ இந்த இடத்திற்கு அவர் சீனர் என்பதால் அனாயசமாக சென்று வந்து விட்டார். ஒரே ஒரு ஆள் தனி நபராக. ஏனெனில் அவருக்கு அனுபவம் அதிகம்.
மலையேறுவது தான் அவரது பிரதான தொழில். நமக்கு. இன்ன பிற தொழில் இருக்கிறது. குடும்பம் குட்டி இருந்தால் இந்த ரிஸ்க் எடுக்க முடியுமா தெரியவில்லை. என் பேராசரி நண்பருக்கு இந்த உள் பரிக்கிரமா செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது. பார்க்கலாம். ஐயன் அருள் இருந்தால்.
முதலில் அஷ்டபத்தை தரிசிப்போம்.
ஜைன மதத்தின் முதல் தீர்த்தங்கரா ரிஷப் தேவர் இந்த இடத்திற்கு வந்து தான் எட்டு படிகள் மூலமாக மோட்சம் அடைந்தார் என்று நம்பிக்கை இருக்கிறது.
ரிஷப் நந்தா தான் ஜைன மதத்தை நிறுவியவர். பல லட்சம் ஆண்டுகள் வாழ்ந்து சுமார் ஆயிரத்து இருநூறு அடி உயரம் இருந்ததாக ஜைன மத நம்பிக்கை சொல்கிறது.
அவர் நிர்வாணா அடைந்த இந்த இடத்தில் ஒரு வைரத்தாலும் விலையுயர்ந்த கற்களாலும் ஒரு மாளிகை நிறுவப்பட்டது என்றும் சொல்கிறார்கள். உண்மையில் இந்த எட்டு படிகள் என்பது எட்டு மலைகளை குறிக்கும் என்றும் ஒரு நம்பிக்கை இருக்கிறது.
தெற்கு முக கைலாய மலையை உற்று நோக்கினால் இது சிவபெருமானின் முதுகுத் தண்டை பார்ப்பது போலிருக்கிறது என்றும் சிவனடியார்களின் பார்வை.
இன்னர் கோரா என்பது தார்ச்சனிலிருந்து துவங்கி அஷ்டபத் வழியாகத்தான் செல்கிறது.
34 கி.மீ மலைப் பாதை. இது அவுட்டர் கோரா எனப்படு வெளி பரிக்கிரமா போல சுலபம் இல்லை. பெர்மிஷன் வாங்குவது அடுத்த பிரச்சினை. இது பாறைகள், பனிப் பாறைகள், பனிசறுக்கான இடங்கள் இவையெல்லாம் கடந்து செல்ல வேண்டும். மலையேற்ற பயிற்சி இருப்பது கட்டாயம். உட்பரிக்கிரமா வழியில் மனித ஜீவன்களை பார்க்க முடியாது. கடைகன்னி எதுவும் இல்லை.
இரண்டு சீன மொனாஸ்டிரி என்று சொல்லப்படும் புத்த மடங்கள் இருக்கிறது.
ஆத்ம லிங்கம், சப்தரிஷி குகைகள், பனி லிங்கம் போன்றவற்றை பார்க்கலாம்.
இறைவன் அருள் இருந்தால் அந்த அனுபவத்தை எழுதும் பேறு கிடைக்கும். பார்க்கலாம்.
அஷ்டபத் உள்பரிக்கிரமா போகமலேயே அந்த இடத்திலிருந்து பார்க்கும் கைலாய மலை காணக் கண் கொள்ளா காட்சி.
இதை எழுத்தில் எத்தனை எழுதினாலும் அந்த ஆன்மீக அனுபவத்தை கடத்தும் ஆற்றல் யாருக்கும் வாய்க்காது. ஆனால் அந்த காட்சியின் படங்களும், காணொளிகளும்…..
அஷ்டபத் பரிக்கிரமா செல்கிறார்கள் (நாங்கள் அத்தனை கொடுத்து வைக்கவில்லை. இணையத்திலிருந்து எடுத்த படம்)
அஷ்டபத் இருப்பது சுமார் 4900 மீட்டர்கள். ப்தினேழாயிரம் அடி.
இங்கு இருக்கும் நந்தி பர்வதம் அதாவது நந்தி மலை, பற்றி லாமா கோவிந்தா எழுதிய புத்தகத்தில் குறிப்பிடுகிறார். (The way of the white Clouds)
பள்ளத்தாக்கு வடகிழக்கில் திரும்புமுன் ஆயிரக்கணக்கான அடி திடீரென எழும்பும் ஒரு மலை அப்படியே நந்தி தன் இரண்டு கொம்புகளை உயர்த்தி தன் எஜமானர் சிவ பெருமானைப் பார்ப்பது போலவே இருக்கிறது.
நந்தி மலையில் ஒரு இந்துக் கோவில் இருக்கிறதாம்.
இந்து மத இதிகாசங்களின் படி, சக்ரவர்த்தி ஸ்ம்ராட் பாரத் இந்த கோவிலை கட்டியதாக சொல்கிறார்கள். பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் இவர் தான் முன்னோராம்.
ஜைன மத 200 அடி திகம்பர் சிலைகளும் இங்கே இருக்கிறதாம். (நாங்கள் பார்க்கவில்லை) ஆக, இந்த இடம் இந்து மதம் மற்றும் ஜன மதத்திற்கும் மிகப் புனிதமான இடம்.
இந்த இன்னர் கோரா செய்வது சத்தியமாக சுலபமல்ல. ஒரு வேளை இதை செய்ய வாய்ப்பு கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள்.
யமத்வாரிலிருந்து கைலாயம் செல்லுவது போல் இந்த அஷ்டபத்திலிருந்து இன்னர் கோரா செய்வது சுலபமல்ல.
ஆகச் சிறந்த மலையேற்றம் செய்யக் கூடியவர்களுக்கே இது கைவரப் பெறும்.
துல்லியமாக கைலாய மலை தெரிவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அடிக்கடி மேக மூட்டத்தால் ஐயன் தன்னை மறைத்துக் கொள்வான்.
அஷ்டபத் போக வேண்டும் என்று சொன்னாலே, உள்ளூர் கைடுகள் வானிலை அறிக்கையை பார்த்து விட்டுத் தான் அழைத்துச் செல்வார்கள்.
அதிர்ஷ்டம் இருந்தால் கைலாய மலையின் தெற்கு முகமும், அருகே கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்தி மலையையும் மேகமூட்டமின்றி தெளிவாக பார்க்கலாம்.
முன்னரே சொன்னது போல இந்த இடத்திற்கு செல்வது மிகச் சுலபம். நடக்க வேண்டாம். குதிரை வேண்டாம். வேனில் கொண்டு விட்டு விடுவார்கள்.
(அஷ்டபத் தெற்கு கைலாய தரிசனம் இடத்தில்... அஷ்ட யாத்ரீகர்கள்)
பரிக்கிரமா செல்ல முடியாதவர்கள் இந்த அஷ்ட பத் இடத்திற்கு வந்து கண்ணை விட்டு அகலாத கைலாய மலையானை தரிசிக்கலாம். கூடவே நந்தியையும்.
என்ன ஒன்று வேன்காரர் ஒரு மணி நேரம் ஆனதும் அவசரப்படுத்துகிறார். அவரையெல்லாம் சரிக்கட்டி விட்டு அமர்ந்தால் இரண்டு மூன்று மணி நேரங்கள் கூட இங்கு அமர்ந்திருக்கலாம்.
(அஷ்டபத் இடத்திற்கு வருகை தந்த புத்த பிட்சு ஒருவர். பெயர் தெரியவில்லை. இது போன்ற புனிதமான இடங்களில் இப்படி வரும் சன்னியாசிகளின் பெயர் கேட்பதும் தேவையற்ற ஒன்று. அடியார்களின் அடியாராக வணங்கி விட வேண்டும்)
அருகே சல சலத்து ஓடி வரும் கைலாய மலை ஆறு ஓடுகிறது.
வீடியோவில் பார்க்கலாம்.
அது நமக்கு கிடைக்கும் போனஸ்.
கைலாயமலை போக திட்டமிடுபவர்கள் அஷ்டபத் கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் யாத்திரை செய்யுங்கள்.
தெற்கு முகம் இது வரை காணக்கிடைக்காத காட்சிகள் ஒவ்வொரு வருடமு சுண்டி இழுக்கும் அற்புத தெய்வீக தருணம்.
(இந்த ஆன்மீக அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்த புர்பு மற்றும் என் சிவனடியார் கைடு தாஷியுடன்)
அஷ்டபத் ஒரு குட்டி வீடியோ இங்கே....
அடுத்த வாரம் பரிக்கிரமா போகலாம். கைலாய மலையின் உன்னத நாட்கள். !!!
Leave a comment
Upload